காரணமோ, நோக்கமோ ஒன்றுமில்லை. போகலாம் என்று திடீரென்று தோன்றியதும் கிளம்பிவிட்டேன். மூன்று மணிநேரப் பேருந்துப் பயணத்தில், எப்போதும்போல் பசுமையின் பல வண்ணங்களைத்தான் ரசித்துக்கொண்டிருந்தேன். நெல் வயல்களிலேயே எத்தனை வண்ணமாறுதல்கள்! ஃபோட்டோ ஷாப்பில் இத்தனை விதங்களை உருவாக்க முடியாது என்றே தோன்றியது. மிக நுணுக்கமான வண்ண வித்தியாசங்களை அடுத்தடுத்த பாத்திகள் காட்டிக்கொண்டே செல்கின்றன. எப்போதும் பயணம் செய்யும் பறவைகள் என்னைக்காட்டிலும் அதிகம் கவனித்திருக்கும்.
ஒன்பது வருடங்களுக்குமுன் கடைசியாகச் சென்றிருந்தேன். கண்டிப்பாக கிராமம் இல்லை. நகரமும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வடிவத்தில் நிறைய கடைகளும் ஏராளமான மனிதர்களும் அலுமினியப் பாத்திரம் ஏந்தி வெறும் காலுடன் நடந்து செல்லும் காவி உடுத்திய ஏகாந்திகளுமாக அப்போது என்னை வரவேற்ற இடம் பெரிய மாறுதல்களுக்கு உட்படவில்லை. கடைகள் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கின்றன. காவிகள் அதிகரித்திருக்கின்றன. அலுமினியத் தட்டுகளுக்கு பதில் எவர்சில்வர் தட்டுகள்.
மதியப் பொழுதுகளில் ரமணாசிரமத்திலும் சேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமத்திலும் இலவச உணவு போடுகிறார்கள். நகரின் நாயகர்களை மொத்தமாக அங்கே பார்க்கமுடிகிறது. சாப்பிட்டுவிட்டு வரிசையில் நின்று கையலம்பி, நீர் அருந்தி வெளியே வந்து படுத்துக்கொண்டுவிடுகிறார்கள். பசியாறுவதைக் காட்டிலும் பெரிய தவமில்லை போலிருக்கிறது.
நிறைய வெளிநாட்டவர். எதைத்தேடி வருகிறார்கள் என்று சரியாக அனுமானிக்க இயலவில்லை. இந்தியாவுக்குப் போனால் திருவண்ணாமலைக்குப் போகாமல் வராதே என்று யாரோ அச்சுறுத்தி அனுப்பிவைத்திருப்பார்கள் போலிருக்கிறது. கோபுரத்தடி மாடுகளையும் தேரடி நாய்களையும் ஷகிலா போஸ்டர்களையும் ரமணாசிரமத்து மயில்களையும் டிஜிட்டல் கேமராவில் க்ரமமாகப் படம்பிடித்துக்கொள்கிறார்கள். பத்து ரூபாய் ருத்திராட்ச மாலையும் தமிழ்த்திரை பதிபக்திப் பத்தினிகள்போல் குங்குமமும் அணிந்து அங்குமிங்கும் உலவுகிறார்கள். கண்மூடி தியானத்தில் உட்காருகிறார்கள். எழுந்து நகர்ந்து நின்று மினரல் வாட்டர் போத்தலிலிருந்து இரண்டு மிடறுகள் விழுங்கிவிட்டு ஹரி ஓம் என்கிறார்கள்.
இத்தனை சிரமத்துக்கு ஏதாவது கிடைக்கவேண்டும்.
நண்பர் பவா செல்லதுரை, திருவண்ணாமலையைச் சுற்றி சுமார் ஐயாயிரம் வெளிநாட்டவர் நிரந்தரமாகவே தங்கியிருப்பதாகச் சொன்னார். விசா பிரச்னையெல்லாம் மெய்ஞானப் பாதையில் இல்லை என்று நினைக்கிறேன்.
எவ்வித திட்டமும் நோக்கமும் இன்றி இப்படி திடும்மென்று புறப்பட்டு எங்காவது போய்வருவது நன்றாகவே இருக்கிறது. முன்பொரு சமயம் இம்மாதிரி இலக்கற்றுப் புறப்பட்டு சுமார் ஏழு அல்லது எட்டு பேருந்துகள் மாறி ஆந்திர மாநிலம் ஏலூரு வரை சென்று திரும்பியது நினைவுக்கு வந்தது.
ஏலூர் பயணத்தின்போது உணவுதான் பெரிய பிரச்னையாகிவிட்டது. சாப்பிட்ட எதுவோ ஒத்துக்கொள்ளாமல் மூன்றுநாள் வயிற்றால் போனது. திருவண்ணாமலைக்கா போனாய்? கண்டிப்பாக ஓர் அதிர்வு இருந்திருக்குமே என்று நண்பர்கள் கேட்டார்கள்.
சந்தேகமில்லை. நமது போக்குவரத்துக் கழகங்களின் அருட்கொடைகளும் அசோகர் போட்ட சாலைகளும் அதனைக்கூடவா செய்யாது?