பொலிக! பொலிக! 88

அவன் விக்கிரம சோழனுக்கு மகனாகப் பிறந்தவன். தனது பாட்டனான குலோத்துங்க சோழனின் பெயரையே அவனும் ஏந்தியிருந்தபடியால் ஓர் அடையாளத்துக்காக இரண்டாம் குலோத்துங்கன் என்று அழைக்கப்பட்டான். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு ராஜாதி ராஜ சோழன், அவனுக்குப் பின் இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், அதி ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்கிரம சோழன் என்று தடதடவென ஆட்சிகள் மாறிக்கொண்டே வந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு சோழர்கள் மீதிருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்திருந்தது.

அந்தச் சமயத்தில் விக்கிரம சோழனுக்குப் பிறகு மன்னனான இரண்டாம் குலோத்துங்கன், தனது உடனடி மூதாதையர்களைக் காட்டிலும் ஓரளவு நல்ல நிர்வாகி என்று பெயர் பெற்றிருந்தான். அவனது காலத்தில் சோழ தேசத்தில் போர்கள் கிடையாது. தந்தை விட்டுச் சென்ற பேரரசின் எல்லைகளைக் காத்து வந்தால் போதும் என்று நினைத்தான். யுத்தங்களில் ஆர்வம் கொண்டிருந்த சோழர் பரம்பரையில் அவன் மட்டும்தான் அந்த விருப்பமே இல்லாதிருந்தவன்.

மாறாக, மதம் அவனது பெரும் பலவீனமாக இருந்தது. சைவ மதம். அதைத் தவிர இன்னொன்று தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பிராந்தியங்களில் தழைக்கக்கூடாது என்று நினைத்தான் குலோத்துங்கன்.

‘நாலூரான், எப்போதும் என் மனம் தில்லையைச் சுற்றிச் சுற்றியே வருகிறது. எப்பேர்ப்பட்ட ஆலயம் அது! அதன் பிரம்மாண்டத்தையும் பேரழகையும் இன்னும் பெருகச் செய்ய என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்!’

நாலூரான் வைணவர்தாம். ஆனாலும் அவருக்கு அமைச்சர் பதவி முக்கியம். அதிகாரம் அதனினும் முக்கியம். எனவே கூசாமல் பதில் சொன்னார், ‘மன்னா, தில்லை நடராசர் ஆலய வளாகத்திலேயே கோவிந்தராஜருக்கு சன்னிதி ஒன்று இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால் அந்தச் சன்னிதி அங்கொரு இடைஞ்சல்தான். தில்லையம்பலத்தான் திருக்கோயிலில் கோவிந்தன் எதற்கு?’

அப்படித் தூக்கிக் கடலில் எறியப்பட்டவர்தாம் கோவிந்தராஜப் பெருமாள். அவரைத்தான் ராமானுஜர் திருமலை அடிவாரத்துக்கு எடுத்துச் சென்று கோயில்கொள்ளச் செய்தார்.

குலோத்துங்கனுக்கு இந்த விவரம் தெரியவந்தபோது கோபம் வந்தது. நான் மன்னன். அது தெய்வமல்ல; கல்லென்று முடிவு செய்து தூக்கிக் கடலில் போடுகிறேன். நீ யார் அதைக் கடவுள்தான் என்று நிறுவுவதற்கு?

ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு வைணவ சித்தாந்த அடிப்படையில் ஓர் உரை எழுதியதும் பாரதமெங்கும் சுற்றி வந்து பல சைவ பண்டிதர்களை வாதில் வென்றதும் காஷ்மீரத்து மன்னனையே வைணவனாக்கி வைத்துவிட்டு வந்ததும் அவனுக்கு மிகுந்த ஆவேசத்தை அளித்தன.

‘அமைச்சரே, இந்த ராமானுஜர் உண்மையிலேயே அத்தனை பெரிய ஆளா?’ என்று நாலூரானிடம் கேட்டான்.

‘எத்தனை பெரிய ஆளானால் என்ன மன்னா? பெரிய கடவுள் சிவன் தான் என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?’

‘யார், ராமானுஜரா? ஏற்பாரா?’

‘யாரானாலும் ஏற்கத்தான் வேண்டும். உண்மை அனைவருக்கும் பொதுவானதல்லவா?’

மன்னனை மகிழ்விக்கப் பேசுகிற வார்த்தைகள். தன் இருப்பின் உறுதித் தன்மையை நிரந்தரப்படுத்திக்கொள்கிற முயற்சி.  நாலூரான் எப்படி அப்படி மாறிப் போனாரென்று திருவரங்கத்தில் பேசாத வாயில்லை. அரங்கனின் அடியாராக அவர்களுக்கு ஒரு காலத்தில் அறிமுகமான மனிதர். எப்படி மன்னனின் அடிமையாகிப் போனார்?

‘நல்லது அமைச்சரே. என்ன செய்யலாம் சொல்லுங்கள். சிவனே பெரியவன் என்று ராமானுஜர் ஏற்கவேண்டும். தேவை ஒரு நல்ல உபாயம்.’

குலோத்துங்கன் ஏற்கெனவே இந்தக் காரியத்தை வேறு பலரிடம் செய்துகொண்டிருந்தான். ‘சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை’ என்று ஒவ்வொரு வைணவத் தலைவரிடமும் எழுதிக் கையெழுத்து வாங்குகிற வெறி அவனுக்கு இருந்தது. அதையே ராமானுஜரிடமும் செய்யலாம் என்று நாலூரான் சொன்னார்.

‘அருமை. கூப்பிடுங்கள் நமது தூதர்களை!’

ஓலை தயாரானது. தூதுவர்கள் வந்தார்கள். நாலூரான் அதை அவர்களிடம் கொடுத்து, ‘நேரே திருவரங்கம் செல்லுங்கள். சேரன் மடத்தில் ராமானுஜர் இருப்பார். மன்னர் உத்தரவு என்று சொல்லி இந்த ஓலையைக் கொடுங்கள். படித்துவிட்டு அவர் ஒரு ஓலை எழுதித் தருவார். அதை வாங்கிக்கொண்டு வந்து மன்னனிடம் சேருங்கள்.’

மறுநாள் அதிகாலை சோழனின் தூதுவர்கள் திருவரங்கத்தை வந்தடைந்தார்கள். உடையவர் அப்போது குளிப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தார். முதலியாண்டானும் வில்லிதாசரும் உடன் சென்றிருக்க, மடத்தில் கூரத்தாழ்வான் இருந்தார். ராமானுஜரின் பூர்வாசிரம சகோதரியின் மகனான நடாதூர் ஆழ்வான் இருந்தார். வேறு சில சீடர்கள் இருந்தார்கள்.

உறங்கி எழச் சற்றுத் தாமதமாகிவிட்ட குற்ற உணர்ச்சியுடன் நடாதூர் ஆழ்வான் அப்போதுதான் மடத்தை விட்டுக் கிளம்பி ஆற்றங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார்.

இதென்ன வினோதமாக இந்தக் காலை நேரத்தில் மன்னனின் ஆட்கள் குதிரையில் வருகிறார்கள்? எங்கோ எச்சரிக்கை மணி அடித்தது. எனவே நைச்சியமாகப் பேச்சுக் கொடுக்கப் பார்த்தார் நடாதூர் ஆழ்வான்.

‘ஏதேது, திருவரங்கத்துக்கு நல்ல காலம் வந்துவிட்டது போலிருக்கிறதே? மன்னரேவா தங்களை இங்கு அனுப்பிவைத்திருக்கிறார்?’

‘ஆம். நாங்கள் ராமானுஜரைத் தேடி வந்திருக்கிறோம். எங்கே அந்த சேரன் மடம்?’

நடாதூர் ஆழ்வாருக்குப் புரிந்துவிட்டது. இது விபரீதம். விடிகிற நேரத்தில் வந்து நிற்கிற விபரீதம். இவர்கள் கண்ணில் உடையவர் பட்டுவிட்டால் பெரும் பிரச்னை. என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று உள்ளுக்குள் பதறியபடி யோசித்து, சட்டென்று ஒரு வழி கண்டார்.

‘சேரன் மடம்தானே? வாரும்.’ என்று சொல்லிவிட்டு அழைத்துக்கொண்டு மடத்துக்கு வந்தார். ‘ஒரு நிமிடம் இங்கே இருங்கள். உடையவர் உள்ளேதான் இருக்கிறார். எழுந்துவிட்டாரா என்று பார்க்கிறேன்’ என்று உள்ளே போனார்.

‘கூரேசரே.. அபாயம் வந்துவிட்டது.!’

கணப் பொழுதில் மடத்தில் இருந்த அத்தனை பேருக்கும் விஷயம் புரிந்துவிட்டது. வெளியே காத்திருப்பவர்கள் ராமானுஜரைக் காணாமல் திரும்ப வழியில்லை. அவர் நிச்சயமாக மன்னனின் ஆணையை ஏற்கப் போவதில்லை என்னும் பட்சத்தில் கைது செய்து இழுத்துச் செல்வதே அடுத்தக் கட்டமாக இருக்கும். என்ன செய்யலாம்?

கூரேசர் சற்றும் யோசிக்கவில்லை. ‘பேச அவகாசமில்லை. நானே ராமானுஜரென்று சொல்லிக்கொண்டு அவர்களோடு போகிறேன். உடையவர் திரும்பி வந்தால் உடனே அவரை ஊரை விட்டு வெளியேறிவிடச் சொல்லுங்கள். சீடர்களில் சிலர் அவரோடு போகட்டும். காவி ஆடை வேண்டாம். அது காட்டிக் கொடுத்துவிடும். வெண்ணுடை அணிந்து அவர் கிளம்பட்டும்.’

படபடவென்று கூரேசர் உத்தரவிட்டுக்கொண்டிருந்தபோது, மடத்தின் பின்புற வாயிலில் பெரிய நம்பியின் குரல் கேட்டது.

(தொடரும்)

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading