காதலன், யுகேஜி-தேர்ட் க்ரூப்

'அப்பா, இந்த சீனிவாசன் ஏந்தான் இப்படி பண்றானோ தெரியல.’

‘என்னடா கண்ணு பண்றான்?’

‘இதுவரைக்கும் மூணுபேரை லவ் பண்ணிட்டான்.’

‘யார் யாரு?’

‘நித்யப்ரீதா, சம்யுக்தா, தீப்தி.’

‘ஓ! பெரிய பிரச்னைதான்.’

‘அவன் சம்யுக்தாவ லவ் பண்றது எனக்குப் பிடிக்கலை.’

‘ஏண்டா செல்லம்?’

‘அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.’

‘ரொம்ப நியாயம்.’

‘எனக்குவேற லெட்டர் குடுக்கப்போறேன்னு சொல்றாம்பா.’

‘என்ன லெட்டர்?’

‘லவ் லெட்டர்தான்.’

‘அடேங்கப்பா’

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே சமையல் அறையிலிருந்து என் மனைவியின் குரல் ஒரு வெட்டுக்கிளியின் வேகத்தில் படபடத்துக் கடந்தது. ‘குடுத்தான்னா பத்திரமா வாங்கி எடுத்துண்டு வா.’

‘எதுக்கு?’ என்றேன் சுவாரசியமாக.

என்னவோ காரியமாக இருந்தவள், கையைத் துடைத்தபடி வெளியே வந்தாள். ‘பின்ன? படிக்கத் தெரியாதவளுக்கு எழுதத் தெரியாதவன் குடுக்கற லவ் லெட்டர் முக்கியமில்லியா?’ என்று கேட்டாள்.

ரொம்ப வாஸ்தவம். C-A-T CAT, B-A-T BAT, R-A-T RAT முடிந்து இப்போதுதான் மூன்று சொல் வாக்கியங்களுக்கு வந்திருக்கிறார் சாவித்ரி மிஸ். சீனிவாசன் தன் கடிதத்தில் என்ன எழுதுவான்?

சில நிமிடங்கள் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று பின்னந்தலையில் அடித்துக்கொண்டேன். அடச்சே. இதென்ன பிரமாதம்? I Love You என்பதும் மூன்று சொல் வாக்கியமே அல்லவா? ஒரு வெள்ளைத்தாளில் நாலைந்து Mகளை இணைத்தாற்போல் போட்டு ஒரு மேரு மலை உண்டாக்கி நடுவே ஒரு சூரியனை உதிக்கவிட்டு, இந்தப் பக்கம், அந்தப்பக்கம் இரண்டு மரங்களை நட்டு, கீழே ஒரு நதியை ஓடவிட்டு, அதில் ஓடம் மிதக்கவிட்டு, மிச்சமுள்ள இடங்களில் டோராவையும் புஜ்ஜியையும் திரியச் செய்து பிள்ளைகள் வெகு எளிதில் க்ரீட்டிங் கார்டுகள் உருவாக்கிவிடுகிறார்கள். கார்டில் ஒரே ஒரு வரி. எழுதி, கீழே தன் பெயரைப் பொறித்து யுகேஜி-தேர்ட் க்ரூப் என்று எழுதிவிட்டால் தீர்ந்தது விஷயம்.

நிச்சயமாக சீனிவாசன் சொன்னபடி செய்துவிடுவான் என்றுதான் எனக்குத் தோன்றியது. ஆனால் என் மனைவிக்கு என்னைக் காட்டிலும் சிறுவர் உலக அறிவு சற்று அதிகம். ‘L-O-V-E லவ்க்கு அவனுக்கு ஸ்பெல்லிங் தெரியாது. மிஸ் இன்னும் சொல்லித் தரலை’.

அதனாலென்ன? சன் ம்யூசிக் அல்லது கலைஞரின் இசையருவி கண்டிப்பாகக் கற்றுத் தந்திருக்குமே. இல்லை. சமீபத்திய பாடல்களில் ஸ்பெல்லிங்கோடு யாரும் எழுதியிருக்கவில்லை. எண்பதுகளில் வெளிவந்த ஒரு பாடலில் இருக்கிறது. எல் ஓ வி ஈ லவ்வ்வ்வ்வ்வ், லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், லவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று கதாநாயகன் சிங்கப்பூர் அல்லது மலேசிய எருமைக் குட்டை ஒன்றின் ஓரமாக அலைந்தபடி சித்தம் கலங்கிப் பாடுகிற பாடல்.

அந்தப் பாடலை இப்போது கலைஞரின் இசையருவி ஏனோ ஒலிபரப்புவதில்லை. தீராத விளையாட்டுப் பிள்ளையில் வந்தாலொழிய சன் ம்யூசிக்கில் வராது, இப்போதைக்கு.

‘அவன் ரொம்பக் கெட்டவன்பா. பின்னால உக்காந்துண்டு குடுமிய பிடிச்சி பிடிச்சிவேற இழுக்கறான் தெரியுமா?’

அவள் சீனிவாசனை விடுவதாக இல்லை. என்ன சொல்லிப் பேச்சை முடிக்கலாம் என்று யோசித்தேன்.

‘ஏண்டா கண்ணு, உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தாவேணா, முடிய பிடிச்சி இழுக்கறான்னு மிஸ்கிட்ட சொல்லேன்.’ என்று கவனமாக முதல் விஷயத்தை மறைத்துவிட்டு பிந்தையதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சொன்னேன்.

‘இதையெல்லாம் மிஸ்கிட்ட சொல்ல முடியாது.’

‘ஏன்?’

பதில் வரவில்லை. மீண்டும் சம்யுக்தாவை சீனிவாசன் காதலிப்பதாகச் சொன்னதன் மீதான தனது கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினாள்.

‘அவளே பாவம், அடுத்த வருஷம் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்டுக்கு இங்க இருக்கப்போறதில்லை.’

‘அடக்கடவுளே, ஏன் என்னாச்சு?’

‘அவப்பாக்கு கேரளால ஆபீஸ் போட்டுட்டாங்களாம். அவ போயிடுவா.’

‘அச்சச்சோ? ஒனக்கு ரொம்பக் கஷ்டமாயிடுமேடா கண்ணு.’

‘ஆமா..’ என்று சில வினாடிகள் சுய சோகத்தில் தன்னை மறந்து இருந்தவள், சட்டென்று ‘போன் நம்பர் வாங்கிண்டுட்டேன். நாங்க டெய்லி டெய்லி போன்ல பேசிப்போம்.’

‘ஓ, சூப்பர்.’

‘நெக்ஸ்ட் சம்மர் லீவுக்கு நாம கேரளா போலாமாப்பா?’

‘கண்டிப்பாடா கண்ணு. சம்யுக்தாவையும் நம்ம வீட்டுக்கு வரசொல்லு.’ என்றேன். உண்மையில் சீனிவாசனை வரச்சொல்லேன் என்றுதான் கேட்க நினைத்தேன். வீணாகக் குழந்தையைச் சீண்டுவது போலாகிவிடுமோ என்று தயங்கித்தான் சட்டென்று புத்தி பெயரை மாற்றியது.

ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் எனக்கு அறிமுகமான காதல் என் குழந்தைக்கு இன்றைக்கு யுகேஜியில் அறிமுகமாகிவிட்டது. நான் ஒன்றும் செய்வதற்கில்லை. என் நண்பர்கள் சிலர் வீட்டில் டிவி இணைப்பை அறவே துண்டித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதே பிரச்னைதான். சமீபத்தில் பெங்களூர் சென்றபோது சொக்கன் வீட்டில் டிவி இல்லை என்பதை கவனித்தேன்.

இது ஓர் அபத்தமான ஏற்பாடு என்றே எனக்குத் தோன்றுகிறது. சீப்பை ஒளித்துவைத்தல். என் வீட்டிலிருந்து குழந்தையின் பள்ளிக்கூடத்துக்கு தினமும் ஸ்கூட்டரில் காலை அவளைக் கொண்டுவிடுவேன். சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுதான். அந்தத் தொலைவுக்குள் வழியில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன், கமலா, விஜயா, கிருஷ்ணவேணி திரையரங்க போஸ்டர்கள் சுமார் ஐம்பதாவது வந்துவிடும். எல்லாமே பெரிய பெரிய வண்ண போஸ்டர்கள். எல்லா போஸ்டர்களிலும் யாராவது யாரையாவது காதலிக்கிறார்கள். கட்டிப்பிடிக்கிறார்கள். முத்தம் கொடுக்கிறார்கள். கொஞ்சுகிறார்கள். ஒன்றும் செய்ய முடியாது.

நான் என் இளவயதுகளில் நின்று பார்த்திருக்கிறேன். என் குழந்தை ஸ்கூட்டரில் போகிறவாக்கில் பார்க்கிறது. சீனிவாசன் ஒருவேளை தியேட்டருக்குச் சென்றே பார்த்திருக்கலாம்.

என் குழந்தைக்கு நான் இன்னும் சினிமா தியேட்டரை அறிமுகம் செய்துவைக்கவில்லை. இப்போதைக்கு டிவி மட்டும்தான். அவளுக்குத் தெரிந்து சினிமா என்றால் டிஸ்கஷன். அப்பாவின் அறையில் யாராவது இரண்டு மூன்று பேர் எப்போதும் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பதுதான் சினிமா. பெரிய திரை அவளுக்குத் தெரியாது. அறையில் பேசப்படும் கதைகள் அங்கே எப்படிப் பரிமாணம் பெறுகின்றன என்பது பற்றி அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

அவள் டிவியில் சினிமா பார்ப்பதுமில்லை. விஜய் படம் மட்டும் பிடிக்கும். ‘ஃபைட் சீன்ல கூட பயப்படவே மாட்டேம்பா. விஜய் ஃபைட் பண்ணா அதுகூட காமெடியா, ஜாலியா இருக்கும்’ என்பாள். ஒன்றிரண்டு விஜய் படங்கள் மட்டும் பார்த்திருக்கிறாள். மற்றபடி திரை இசை சானல்கள்தான் அவளுக்குப் பொது அறிவைத் தருகின்றன என்று நினைக்கிறேன். சுட்டி டிவியும் போகோவும் போரடிக்கத் தொடங்கியிருக்கலாம்.

சீனிவாசன் இதிலே இன்னும் கொஞ்சம் பரிமாண வளர்ச்சி பெற்றிருக்கலாம். அவன் நிறையப் படங்கள் பார்க்கிற வாய்ப்புப் பெற்றிருக்கலாம். எதிர்பாலினம் என்பதே தான் காதலிப்பதற்குத்தான் என்று கருதியிருக்கலாம். துரதிருஷ்டவசமாக அவனால் மூன்று பேரிடம் மட்டும்தான் அதை வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

என்னுடைய கவலையெல்லாம், என் மகள் இல்லாவிட்டால் வேறு எந்தக் குழந்தையேனும் சீனிவாசனைப் பற்றி சாவித்ரி மிஸ்ஸிடம் புகார் சொல்லிவிடப் போகிறதே என்பதுதான். அல்லது குழந்தைகள் தம் தாயிடம் விஷயத்தைச் சொல்லி அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறி, சம்பந்தப்பட்ட சீனிவாசனின் பெற்றோருக்கு இது இப்போதே போய்ச்சேர்ந்தால் வேறு வினையே வேண்டாம்.

அடிப்பதும் மிரட்டுவதும் தண்டிப்பதும் பெரிய விஷயமல்ல. காதல் என்பது கசமுசா என்று இப்போதே அவன் மனத்தில் மிக ஆழமாகப் பதிந்துவிடுமல்லவா? சற்றும் களங்கமில்லாமல், தன் புத்தியில் அர்த்தம் உதிர்த்து ஏறி உட்கார்ந்த ஒரு சொல்லை இப்போது உச்சரித்துக்கொண்டிருப்பவன், அது என்னவோ ஒரு கெட்ட விஷயம் என்பதுபோல் ஒரு கருத்தாக்கத்தை உள்வாங்கிப் பிரயோகிக்கத் தொடங்கிவிட்டால்?

சீனிவாசனின் பெற்றோர் தினசரி நூறு முறையாவது அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு ‘ஐ லவ் யூ, ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொஞ்சுவது ஒன்றே இதற்கான சரியான தீர்வு என்று நினைக்கிறேன். லவ் யூ என்பது எதிர்பாலினத்துக்கு மட்டுமே உரியது என்கிற எண்ணத்தை மட்டும் இப்போது அகற்றினால் போதும்.

தண்டனைகளோ கண்டிப்போ பத்து பைசா பிரயோஜனமில்லாதவை. சந்தர்ப்பம் கிடைத்தால் சீனிவாசனின் பெற்றோரிடம் இதனைப் பக்குவமாகச் சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அந்தக் குழந்தையைப் போட்டுச் சாத்திவிடுவார்களோ என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது.
 

Share

21 comments

 • பாரா, 
  எங்கள் வீட்டில் தொலைக்காட்சியை வெட்டியதற்குக் காரணம் இதுவல்ல. டிவி இருந்தால் எல்லோருக்கும் கன்னாபின்னா என்று நேரம் வீணாவதுதான்.
  எனக்குப் பிரச்னையில்லை, அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டால் உலகத்தை மறந்துவிடுவேன். ஆனால் என் மனைவி தன்னையும் அறியாமல் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்கிறவர். அப்புறம் அவரே ‘அச்சச்சோ, எவ்ளோ டைம் வீணாகுது’ என்று பதறுவார். கடைசியில் டிவி வேண்டாம் என்கிற முடிவை அவரேதான் எடுத்தார். எனக்கு அது இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என்பதால் நான் எதுவும் சொல்லவில்லை.
  நங்கையைப் பொறுத்தவரை, குழந்தைகள் அதிகம் டிவி பார்க்காமல் இருப்பதுதான் நல்லது என்று எல்லோரும் சொல்கிறார்கள். வெறுமனே திரையைப் பார்த்துக்கொண்டு நேரம் செலவிடும்போது க்ரியேட்டிவிட்டி வளராதாமே (எனக்குத் தெரியாது, எங்கேயோ படித்ததைச் சொல்கிறேன்). அதற்காக நாங்கள் டிவியை வெட்டவில்லை. ஆனால் எப்படியோ, நங்கை இப்போது டிவி பார்க்காமலிருக்கப் பழகிவிட்டாள். இனி வீட்டில் டிவி வந்தாலும் ‘நான் உன்னமாதிரி கதவச் சாத்திண்டு புக்தான் படிப்பேன்’ என்கிறாள்.
  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 • தானே தெரிந்துகொள்ளும் பக்குவம் வரும் வரை.. நம்மால் ஊட்டப்படுபவை பக்குவமாகத்தான்/பொதுவாகத்தான் இருக்க வேண்டும்..:) கையில் புழுவை / பூச்சியை எடுக்கும் குழந்தையை அய்யே..ச்சீ கீழ போடு என்று நாம் பதறி சொல்லும்போதே அது அந்த குழந்தையின் மனதில் அருவெருப்பாகவே பதிந்து விடுகிறது.
  //லவ் யூ என்பது எதிர்பாலினத்துக்கு மட்டுமே உரியது என்கிற எண்ணத்தை மட்டும் இப்போது அகற்றினால் போதும்//
  மிக்க சரி .

 • >>>> இதென்ன பிரமாதம்?…………….
  ………………….என்று எழுதிவிட்டால் தீர்ந்தது விஷயம்.<<<<
  அடப்பாவமே… யுகேஜி படிக்கிற புள்ளை இதெல்லாம் செய்யுதா?
  நான் ஒன்னாப்புல பக்கதூட்டு பொண்ணுக்கு கிஸ்ஸு கொடுத்திருக்கேனே! :p

 • //விஜய் ஃபைட் பண்ணா அதுகூட காமெடியா, ஜாலியா இருக்கும்//
  குழந்தைகளுக்குக்கூட தெரிந்திருக்கிறது!

 • எவ்வளவு அப்டேட்டாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்(படி)க்கும்போது வியப்பாக இருக்கிறது! கற்றுக் கொண்டே இருக்கிறேன்…..

 • ஏ க்ளாஸ்.
  BTW, நான் பரங்கிமலை பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளியில் ஒண்ணாவது சேர்ந்தபோது, முதல்நாளே சபீதாவை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். நீண்ட நெடிய காதல் அது. மூன்றாம் வகுப்பு வந்தபோதுதான் சபீதா மோகம்(?) விலகி, கவிதாவை காதலிக்க தொடங்கினேன்!
  பி.கு : இப்பதிவுக்கு பின்னூட்டம் இடாவிட்டால் ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதாவுக்கு ஆன மாதிரி கைவிரல்கள் மடங்கிவிடும் என்று தோன்றியது. விரல்கள் எனக்கு முக்கியம் என்பதால் வேறு வழியில்லை 🙁

 • காதலன், யுகேஜி-தேர்ட் க்ரூப்
   
  Looks like a title of new serial in Vijay TV or a book from Kizhaku 🙂

 • “எதார்த்தமே உன் மறுபெயரென்பது பாராவா?”

  இதை நான் வழிமொழிகிறேன் .

 • முதலில் இந்த பதிவின் சுட்டியை எனது மனைவிக்கு இமெயிலில் அனுப்பினேன். எனது மகன் எல்.கே.ஜி படிக்கிறான் என்கிற காரணத்தால் என்னால் இன்னும் உணர்வுப்பூர்வமாக இதனை ரசிக்க முடிந்தது. உங்களுடைய தெளிவு எல்லா பெற்றோர்களுக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அருமையான பதிவு! வாழ்த்துகள்!
   

 • என்னோட முதல் காதல் ஆரம்பிச்சபோ என் வயசு 16.  எனக்கு ரெண்டாவது காதல் வந்தபோ என் வயது 22. இன்னைக்கு வரை,  அதுக்கு மேல எனக்கு காதல் வரல.  பெண்கள் பலருக்கு காதல் அவ்வளவு சீக்கிரம் வர்ரதில்லன்னு நினைக்குறேன்.  இந்த பதிவ வாசிக்கும் முன்ன என்னோட முதல் காதல் தான் மிக  இளமையான காதல்னு நினைச்சேன்.  இந்த பதிவு எனக்கு எதார்த்தத்தை புரிய வைக்குது. 

 • இந்த கட்டுரை அல்லது இதே போல் ஒன்றை வெகு ஜன ஊடகங்களில் எழுதினால் அதிகம் பேரை சென்றடையுமே 🙂 

 • mona nu oru ponnu, lisa nu oru ponnu iruppathaal en magan (2nd std) vaaraayo monalisanu nethu school-l padiyathaga avanga ammmavidam sollikkondirunthaaan.!! 

 • எல்.கே.ஜி யில் படிக்கும் மகன் இருப்பதால் நடந்திருக்கும் காட்சியை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது… நீங்கள் சொல்லுகிற மற்ற காரணம் எல்லாம் இருந்தால் கூட கண்டிப்பாக இதற்க்கு ஒரு காரணம் நம் வீட்டில் இருக்கும் டி.வி பெட்டியும் தான். எங்கள் வீட்டில் டி.வி இருந்தாலும் கூட சன் மியுசிகோ அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை இப்போது தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும் படங்களின் விளம்பரத்தை நிகழ்ச்சியை விட அதிகமாக மார்க்கெட் செய்யும் தமிழ் சேனல்கள் எதையும் பார்ப்பதில்லை. புதிய பாடல்கள் எதையும் ஒரு குடும்பதினர் அனைவரும் சேர்ந்து பார்க்கும் நிலை இல்லாத போது எப்படி சிறு குழந்தையுடன் உட்கார்ந்து பார்ப்பது? எனக்கு தெரியவில்லை நான் தான் பழைய பஞ்சாங்கமாக பேசிக் கொண்டு இருக்கின்றேனா என்று… ஆகவே எங்கள் அகில் பார்ப்பது வெறும் கார்ட்டூன் சேனல்கள் மட்டும்… அதிலும் கூட டாம் ஜெர்ரியை பார்த்து முத்தம் கொடுப்பது, நாயும் நாயும் காதல் செய்வது எல்லாம் காண்பித்தாலும் நேரடியான வக்கிர சிந்தனையை தூண்டுவதாக இல்லை என்று எனக்கு தோன்றுகிறது…
  மாறாக நானும் என் பையன் அகிலும் நிறைய பாடல்களை ரேடியோவில் கேட்கிறோம், "மாலை நேரம் " என்ற பாடலில் வரும் "மழை தூவும் காலம்" என்ற வார்த்தையை அதுவே " காதல் தூவும் காலம்" என்று பாடி என்னை வெறுப்பேற்றிக் கொண்டு இருக்கின்றது. அது காதல் இல்லையடா மழை என்று சொன்னாலும் கூட வேண்டுமென்றே காதல் என்று பாடுகிறான். இப்போது நானே கண்டுகொள்ளுவதில்லை. விஜய் பாடல்கள்  அனைத்தும் கூட சேர்ந்து பாடுகிறோம், நானும் வார்த்தைகள் சரியாக இல்லை என்றால் லாலலா என்று மாற்றி போட்டு பாடுவேன், அகிலும் அப்படியே பாடுகிறது. குழந்தை பாட்டு கற்று கொள்ள வேண்டும் என்ற என்னுடைய தீராத ஆசையால்தான் இதை செய்கிறேன் என்று ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். 
  சத்யம் தியேட்டரில் ஒரு ஐந்தாறு படங்கள் பார்த்திருப்போம் – எல்லாம் கார்டூன் படங்கள் – வால் ஈ, ஐஸ் ஏஜ் போன்ற படங்கள் மட்டும். வடிவேலுவை பிடிக்கிறது அகிலுக்கு, என்ன சொல்லுகிறார் என்றெல்லாம் புரிகிறதா என்று எனக்கு தெரியவில்லை. 
  ஒரு குரங்கு பல்டி அடித்து அம்மா இதை விக்ரம் சொல்லிக் கொடுத்தான் என்று சொல்லுகிறான். ஆன்ட்டி பார்த்துக் கொண்டு இருக்கும் போது எப்படிடா விக்ரம் இதை சொல்லிக் கொடுத்தான் என்றால் சிரிப்பே பதில். எல்.கே.ஜியில் எப்படி ஆன்ட்டியின் கண்ணில் மண்ணை தூவி பல்டி அடிக்க கற்று கொள்ளுகிறார்கள் என்பது ஆச்சர்யமே. சின்ன பள்ளி தான் ஆகவே யாராவது ஆன்ட்டி கண்ணில் மாட்டாது இருப்பது கொஞ்சம் கஷ்டம்…
  என்றைக்கு அகில் வந்து கிளாஸில் இருக்கின்ற பெண்ணுக்கு லெட்டர் கொடுத்து மாட்டுமோ என்பது என்னுடைய ரகசிய கவலைகளில் ஒன்றாக இன்றிலிருந்து இடம் பெற்று விடும் 🙂
  ஜெயா.

 • குழந்தைகள் உலகம் சுவாரசியமானது….இதைவிட அழகாக எப்படி எழுதுவது? அட்டகாசம் சார்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter