மீன் வளர்க்கலாம் என்று ஆஸ்வல்ட் முடிவு செய்தது. வின்னிக்குப் பொழுதுபோவது கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் குட்டி மீனொன்று துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
‘வா, வின்னி. நாம் மீன் வாங்கி வரலாம்’ என்று தன் செல்ல நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு வளர்ப்பு மீன் கடைக்குப் போனது ஆஸ்வல்ட்.
‘எங்களுக்கு அழகான மீன் ஒன்று வேண்டும். உற்சாகமாக, எப்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் மீன்!’ என்றது ஆஸ்வல்ட்.
கடைக்காரப் பெண்மணி புன்னகை செய்தாள். ‘ஓயெஸ்! நீங்கள் விரும்பும்விதமான ஒரு மீன் இருக்கிறது. படு சுட்டி. பிறந்து சில நாள்கள்தான் ஆகின்றன. ஆனால் நல்ல வளர்த்தி!’ என்று சொன்னபடி ஒரு தொட்டிக்குள் திரிந்துகொண்டிருந்த குட்டி மீனைக் காட்டினாள்.
ஆஸ்வல்ட் உற்சாகமாகிவிட்டது. ‘சொல் வின்னி. இதற்கு என்ன பெயர் வைக்கலாம்?’
‘ஃப்ளிப்பி’ என்று கத்தியது வின்னி.
‘சூப்பர்! நல்ல பெயர். ஃப்ளிப்பி!’
அவர்கள் குட்டி மீனை குடுவையில் ஏந்திக்கொண்டு திரும்பினார்கள். ‘ஓ, ஆஸ்வல்ட். ஒரு முக்கியமான விஷயம். இதற்கு நிறைய சாப்பிடக் கொடுக்காதீர்கள். ரொம்ப வேகமாக வளரும் மீன் இது!’ கடைக்காரப் பெண்மணி கவுண்ட்டரில் இருந்தபடி கத்தினாள். சிரித்தது ஆஸ்வல்ட்.
வழியில் ஆஸ்வல்டின் நண்பர்களான ஐஸ்க்ரீம் ஜானி, ஹென்றி, டெய்ஸி ஆகியோர் எதிர்ப்பட, அவர்களிடம் தாங்கள் வாங்கியிருக்கும் குட்டிமீனைப் பெருமையுடன் காட்டியது ஆஸ்வல்ட். ‘கண்டிப்பாக என் வீட்டுக்கு வாருங்கள். ஃப்ளிப்பியுடன் ஜாலியாக விளையாடலாம்.’
‘ஆமாம், ஆமாம்!’ என்று புதிய தோழமை கிடைத்த மகிழ்ச்சியில் வின்னியும் சுற்றி ஓடித் துள்ளிக் குதித்தது.
மறுநாள் காலை ஆஸ்வல்டின் வீட்டுக்கு ஹென்றி வந்தான். ‘குட் மார்னிங் ஆஸ்வல்ட். உன் ஃப்ளிப்பியைப் பார்க்க வந்தேன்.’
‘ஓ, வெல்கம்.’ என்று மகிழ்ச்சியுடன் குடுவையில் இருந்த ஃப்ளிப்பியின் அருகே அழைத்துச் சென்றது ஆஸ்வல்ட்.
புதிய விருந்தாளியைப் பார்க்க வெறும் கையுடனா வருவார்கள்? ஹென்றி, ஃப்ளிப்பிக்கு உணவுப் பொட்டலம் எடுத்து வந்திருந்தான். ஆஸ்வல்டின் அனுமதியுடன் அதைத் தொட்டிக்குள் உதிர்க்க, தாவிக் குதித்து லபக் லபக்கென்று கவ்விப் பிடித்து உண்டு மகிழ்ந்தது ஃப்ளிப்பி.
‘ஐ. எவ்வளவு அழகாக சாப்பிடுகிறது!’ என்று வியந்தது வின்னி.
அவர்கள் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஃப்ளிப்பிக்கு ஆஸ்வல்ட், வின்னியைப் போலவே ஹென்றியையும் ரொம்பப் பிடித்துவிட்டது. ஹென்றி குடுவையின் அருகே வந்தபோது கண்ணாடிச் சுவருக்குள் தன் உதட்டைப் பதித்து அவனுக்கு ஒரு முத்தம்கூடக் கொடுத்தது.
மீண்டும் அடுத்த வாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு விடைபெற்றான் ஹென்றி.
மறுநாள் ஆஸ்வல்டின் புதிய மீனைப் பார்க்க டெய்ஸி வந்தாள். ஆஸ்வல்டும் வின்னியும் அப்போதுதான் தூங்கி எழுந்திருந்தார்கள். டெய்ஸியை அழைத்துக்கொண்டு அவர்கள் ஃப்ளிப்பியின் குடுவை அருகே சென்றபோது ஆச்சரியப்பட்டார்கள். அட, என்ன இது? ஒரே ராத்திரியில் இந்த ஃப்ளிப்பி இத்தனை பெரிதாகிவிட்டதே!
குடுவையில் அதனால் நகரக்கூட முடியவில்லை. இடித்துக்கொண்டு படுத்திருந்தது ஃப்ளிப்பி.
‘ஓ! என்ன கஷ்டம்! வின்னி, சற்று பெரிய குடுவையாக எடு!’
உத்தரவிட்டது ஆஸ்வல்ட். வின்னி ஒரு பெரிய குடுவையை நீருடன் கொண்டு வர, குட்டி குடுவையில் இருந்த ஃப்ளிப்பியை அதில் தூக்கிப் போட்டது ஆஸ்வல்ட்.
‘இதுதான் சரி! இப்போது பார் ஆஸ்வல்ட். எத்தனை சந்தோஷமாக நீந்துகிறது உன் ஃப்ளிப்பி!’ என்று சொன்னபடி தான் கொண்டுவந்திருந்த மீன் உணவைத் தொட்டிக்குள் உதிர்த்தாள் டெய்ஸி. ‘பாவம், ராத்திரியெல்லாம் நகரமுடியாமல் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்! நல்ல பசி இருக்கும்.’
மூன்றாம் நாள் ஐஸ் க்ரீம் ஜானி ஃப்ளிப்பியைப் பார்க்க வந்தபோது அது இன்னமும் பெரிதாக வளர்ந்துவிட்டிருந்தது. ஆஸ்வல்டுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்ன வின்னி இது! தினமும் ஓரடி வளருகிறதே!’
‘ஆமாம். எனக்கும் புரியவில்லை. கடைக்காரம்மா சொன்னதுபோல் நாம் இதற்குக் குறைவான உணவு கொடுக்கவேண்டும். வருகிற விருந்தினர்களெல்லாம் பாக்கெட் பாக்கெட்டாகக் கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்!’
‘ஜானி, இதற்கு அதிகம் சாப்பிடக் கொடுக்காதே. ரொம்ப வளர்கிறது!’ என்றது ஆஸ்வல்ட்.
‘அப்படியா? நம்பமுடியவில்லையே! நான் கொஞ்சம் கொடுக்கிறேன். நாளை பார்க்கலாம்!’ என்று கொஞ்சூண்டு உணவு மட்டும் போட்டுவிட்டு விடைபெற்றான் ஜானி.
கவலையுடன்தான் அன்று படுக்கச் சென்றார்கள் ஆஸ்வல்டும் வின்னியும். விடிந்து அவசரமாக எழுந்து வந்து பார்த்தபோது அவர்களுக்கு மூச்சே நின்றுவிடும்படி ஆகிவிட்டது. குட்டி மீன் ஃப்ளிப்பி பூதாகாரமாக அந்தப் பெரிய குடுவைக்குள் நீந்த இடமே இல்லாமல் இடித்துக்கொண்டு நசுங்கிக் கிடந்தது.
‘ஓ நோ! ரொம்ப ஆபத்து. உடனே நமது தண்ணீர்த் தொட்டியைத் தயார் செய். இதற்கு அந்த இடம்தான் சரி’ என்றது ஆஸ்வல்ட்.
சில நிமிடங்களில் ஃப்ளிப்பி ஆஸ்வல்டின் குளியல் தொட்டிக்குச் சென்று சேர்ந்தது. அப்பாடா! இனி கவலையில்லை. நன்றாக நீந்தலாம்! ஆனாலும் இந்த வேகத்தில் வளர்ந்தால் கட்டுப்படியாகாதே என் கண்ணே.
நான்காம் நாள் திரும்பவும் ஹென்றி வந்தபோது தண்ணீர்த் தொட்டி கூட அதற்குப் போதவில்லை. இன்னும் பெரிதாக வளர்ந்துவிட்டது. ‘இனி தாக்குப் பிடிக்க முடியாது வின்னி. நாம் இதைக் கொண்டுபோய்விட்டுவிடுவதுதான் நல்லது’ என்றது ஆஸ்வல்ட்.
வின்னிக்கு நெஞ்சு கொள்ளாத வருத்தம். ஆனால் வேறு வழி?
அவர்கள் ஒரு பெரிய தண்ணீர்ப் பையைத் தயார் செய்து அதில் ஃப்ளிப்பியைத் தூக்கிப் போட்டார்கள். தங்களுடைய பெட்டி வண்டியில் அதை எடுத்து வைத்து இழுத்துக்கொண்டு போனார்கள்.
‘எங்கே போகிறோம் ஆஸ்வல்ட்?’ என்றது வின்னி.
‘வேறு எங்கே? மீன் கண்காட்சிக்குத்தான்!’
கண்காட்சி அமைப்பாளர் அவர்களை வரவேற்று விவரம் கேட்டார். ‘இது நாளுக்கு நாள் ரொம்பப் பெரிதாக வளர்ந்துகொண்டே இருக்கிறது மேடம்!’ என்றது ஆஸ்வல்ட்.
‘அப்படியா? ரொம்ப சாப்பிடுகிறதோ?’
‘இல்லை. ஆனால் என்ன சாப்பிட்டாலும் உடனே வளர்ந்துவிடுகிறது!’
‘விசித்திரம்தான். சரி, குளத்தில் கொண்டு விடுங்கள்’ என்றார் அந்தப் பெண்மணி.
ஆஸ்வல்டும் வின்னியும் ஃப்ளிப்பியை எடுத்துச் சென்று கண்காட்சி வளாகத்தில் இருந்த பெரிய குளத்தில் விட்டார்கள். துள்ளிக்குதித்து நீந்த ஆரம்பித்தது ஃப்ளிப்பி.
‘சாரி ஃப்ளிப்பி! உன்னை வைத்துக்கொள்ளுமளவு என் வீட்டில் பெரிய தொட்டி இல்லை. நீ இதே வேகத்தில் வளர்ந்தால் இந்தக் குளம் கூட உனக்குப் போதாமல் போய்விடும். அப்புறம் கடலுக்குத்தான் கொண்டுபோய் விடவேண்டி வரும்!’ என்றது ஆஸ்வல்ட்.
அடுத்தவாரம் அவர்கள் கண்காட்சிக்குத் திரும்பச் சென்றார்கள். ‘வின்னி நமது ஃப்ளிப்பி எப்படி இருக்கிறதோ தெரியவில்லை!’
மீன் கண்காட்சியில் பல மீன்கள் வண்ணமயமாகத் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன. திறமைசாலி மீன்கள், பார்வையாளர்களுக்கு விளையாட்டுகள் பல செய்துகாட்டி மகிழ்வித்துக்கொண்டிருந்தன. வரிசையில் கட்டக்கடைசியாகத் துள்ளி வந்தது ஒரு பிரம்மாண்டமான குண்டு மீன்!
‘ஆ! அங்கே பார் வின்னி! நம்முடைய ஃப்ளிப்பி!’ கத்தியது ஆஸ்வல்ட்.
‘அட ஆமாம்! இத்தனை பெரிதாகிவிட்டதே!’ என்று வியந்தது வின்னி.
சர்ர்ர்ரென்று ஸ்லைடரில் சறுக்கிக்கொண்டு வேகமாக வந்த ஃப்ளிப்பி, குளத்தில் சொய்யாவென்று குதித்து தண்ணீரை வாரி இறைத்தது. பார்வையாளர்கள் உற்சாகமாகக் கைதட்டினார்கள். குளத்தைச் சுற்றிச் சுற்றி நீந்தியும் குதித்தும் கும்மாளமிட்டும் வந்த ஃப்ளிப்பி, ஆஸ்வல்டும் வின்னியும் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்ததும் *&*^%&*%! என்று சந்தோஷமாகக் கத்தியது.
‘ஓ, நம்மை அதற்கு நினைவிருக்கிறது!’ என்றது வின்னி.
‘மறக்குமா பின்னே? நம் நண்பர்கள் எல்லோரும் அதற்கு உணவு கொடுத்துக் கொடுத்து வளர்த்துவிட்டார்கள். நாம் மட்டும்தானே அதைப் பட்டினி போட ஆசைப்பட்டோம்?’ என்றது ஆஸ்வல்ட்.
[கதை: Annie Evans. ஆஸ்வல்ட் சீரிஸ் சிடியில் பார்த்தது. ஒரு பயிற்சிக்காக எழுதிப் பார்த்தேன். கடைசி வரி மூலக்கதையில் கிடையாது.]
உங்களை பாத்தா ஒரு கோபக்காரர்னு நல்லா தெரியுது. ஒரு சீரியஸான எழுத்தாளர்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா உஙகளுக்குள்ளேயும் ஒரு குழந்தை மனசு ஒளிஞ்சிக்கிட்டிருக்கிறது இதைப் படிச்சப்புறம் தான் தெரியுது. டாம் & ஜெர்ரி கூட ரசிச்சி பாப்பீங்க போல தெரியுது.
ராஷித் அஹமத்: நிச்சயமாக நான் கோபக்காரன் இல்லை. பொதுவாக எனக்குக் கோபம் அதிகம் வராது. சொல்லப்போனால் வரவே வராது. மனித சுபாவங்களில் சற்றும் அர்த்தமற்ற ஒன்று கோபம் என்பது என் அபிப்பிராயம். கோபங்கள் அதிகம் சாதித்ததில்லை. ஆனால் ஆக்கபூர்வமான சில எதிர்வினைகளின்மூலம் தேவைப்படும் இடங்களில் எப்போதும் என் எதிர்ப்பைப் பதிவு செய்துவந்திருக்கிறேன். கோபமற்ற எதிர்ப்புணர்வு பெரும்பாலும் வெற்றி தரும். இது என் அனுபவம். நிற்க. குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்கள், நான் குழந்தையாக இருந்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. என் மகள் நிமித்தம் பார்க்கத் தொடங்கியதுதான். ஒரு கட்டத்தில் அவற்றுக்கு ரசிகனாகிவிட்டேன். குறிப்பாக இந்த ஆஸ்வல்ட் சீரிஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். டோரா, மிஸ்டர் பீன், சோட்டா பீன், இப்போது நிஞ்சா ஹட்டோரி என்று என் மகள் பார்க்கிற அனைத்து சீரியல்களையும் நானும் பார்க்கிறேன். பிடித்தவற்றைத் தனியே சிடி வாங்கியும் பார்க்கிறேன். சித்திரக் கதைகளும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், பழைய பூந்தளிர் கபீஷ் சீரீஸ் போன்றவை எனக்கு விருப்பமானவை. கடைசியாக நண்பர் விஷ்வா அன்புடன் அளித்த ரத்தப்படலம் காமிக்ஸை நான்கு நாள்களில் படித்தேன். என்ன ஒரு அற்புதமான அனுபவம் அது! நீங்களும் இவற்றைப் படிக்கலாம். இத்தகு சீரியல்களைப் பார்க்கலாம். நிச்சயம் பிடிக்கும். சமயத்தில் சில தரிசனங்களும் அகப்படும்.
மச்சம் சார் உங்களுக்கு 😉
தலைவா ! Home page ல் இருக்கும் பெரிய blank சதுரத்தில் உங்க போட்டோவை போடுங்க.
நன்று….உங்கள் தளம் புது பொலிவுடன் இருக்கிறது…இன்னும் வளரட்டும்..!!!!
தங்கள் அன்பான பதிலுக்கு நன்றி பாரா சார். பார்த்தீர்களா இந்த தலைமுறை குழந்தைகள் அதிஷ்டக்கார குழந்தைகள் கேபிள் டிவி, பிளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் என்று பல வசதிகளை அனுபவிக்கின்றன ஆனால் நாமெல்ல்லாம் வெறும் காமிக்ஸ் புத்தகங்கள் தான் படித்திருக்கிறோம். தாங்கள் குறிப்பிட்ட அத்தனை காமிக்ஸ்களும் நானும் படித்தவை. அதனால் என்படிப்பை சிறிது கோட்டை விட்டேன். ஆனால் அதை படித்து தான் என் தமிழறிவு/மொழியறிவு வளர்ந்தது என்பது உண்மை. அவற்றில் ஒரு புத்தகத்தை பாதுகாத்து வைத்திருந்து என் மகளிட்ம் கொடுதேன். ஆனால் அவள் அதை புரட்டிகூட பார்க்காமல் சுட்டி டிவி பார்க்க உட்கார்ந்து விட்டாள்.
OMG.. Para Sir – this template is horrible in navigation.
Pl bring the “Next” button link to End portion of the blog post.
ஜகன்:
எனக்கு ஒரு பிரச்னையும் தெரியவில்லையே. ஒவ்வொரு மேட்டரின் அடியிலும் கண்டின்யூ ரீடிங் என்ற லிங்க் இருக்கிறது. அது அந்த மேட்டரை முழுதாகப் படிப்பதற்கு. பக்கத்தின் அடியில் உள்ள மோர் லிங்க், அடுத்த மேட்டரை நோக்கி நகர்வதற்கு.
ஆஸ்வால்ட் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நளினமான காரக்டர். பேரனுடன் ஆரம்பித்தது இந்தக் கார்ட்டூன்கள். இப்பொழுது பேத்திகளுடன் வளர்கிறது. பகிர்தலுக்கு மிகவும்
நன்றி. நீங்கள் ……caillou, Pokaiyo(english)……………series…….,Youtube il
பாருங்கள். குழந்தைகளின் புரிதல் இன்னும் மேம்படும்.