ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24

2008ம் ஆண்டு தொழில் நிமித்தம் குரோம்பேட்டையில் இருந்து கோடம்பாக்கத்துக்குக் குடி போனேன். குரோம்பேட்டையில் இருந்தது சொந்த வீடு. கோடம்பாக்கத்தில் வாடகை வீடு. அது குறித்த சிறு வருத்தம் அப்போது இருந்தாலும் ஓரிரு மாதங்களில் மனம் சமாதானமாகிவிட்டது. காரணம், கோடம்பாக்கத்தில் எதையும் நினைத்த மறு கணமே செய்ய முடிந்ததுதான். முக்கியமாக, பயணம்.

குரோம்பேட்டையில் இருந்து நகர மையத்துக்கு வருவது என்பது ஊருக்குப் போவதைப் போன்ற ஒரு செயல். உதாரணமாக, என்றாவது கடற்கரைக்குச் செல்லலாம் என்று நினைத்தால் அன்றைக்குக் காலையே அதற்குத் திட்டமிட வேண்டும். மாலை நான்கு மணிக்குக் கிளம்பினால் ஐந்தரைக்குப் போய்ச் சேர முடியும். கடற்கரையில் ஏழு மணி வரை இருந்துவிட்டுக் கிளம்பினால் வீடு வந்து சேர ஒன்பது மணியாகும். சமயத்தில் அதற்கு மேலும் ஆகலாம். ஒரு நாளின் முழு பிற்பகுதியை அதற்காக ஒதுக்கினால் மட்டுமே ஒன்றரை இரண்டு மணி நேர ஓய்வைக் கடற்கரையில் அனுபவிக்க முடியும். அதுகூடப் பரவாயில்லை. தி நகரில் கடைகளுக்குப் போகவேண்டும் என்றால் முழு நாளை அதற்காக ஒதுக்கிவிட வேண்டும். சினிமாக்களுக்குப் போவதோ, வேறு எதற்காகவாவது நகரத்துக்குள் வருவதோ ஒரு தனி வேலையாகத் தோன்றும். இதனாலேயே அனைத்தையும் தள்ளிப் போடுவது அல்லது உள்ளூரிலேயே முடித்துக்கொள்வதற்கு என்ன வழி என்று தேடுவது வழக்கமானது.

ஆனால் கோடம்பாக்கத்துக்குக் குடி போனபின்பு, எங்கு போவதென்றாலும் அது அதிகபட்சம் பத்து நிமிடத் தொலைவுக்குள்ளேயே இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. எனக்குப் புவியியல் சார்ந்த அறிவு மிகவும் குறைவு. திசைக் குழப்பம், தூரக் குழப்பம், வழிக் குழப்பங்கள் இப்போதும் உண்டு. சுருக்கு வழி என்று யார் எதைச் சுட்டிக் காட்டினாலும் என் மனம் பழகிய பாதையிலேயே எப்போதும் செல்வேன். அது எவ்வளவு சுற்று வழியானாலும் சரி. இதனாலேயே குரோம்பேட்டையில் இருந்தபோது இயல்பாக ஆகக்கூடியப் பயண தூரங்கள் எனக்கென்று சிறப்பாக ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் கூட்டிக் கொடுக்கும். கோடம்பாக்கம் சென்றபின் இந்தத் தொல்லை இல்லாமல் போனது. எனது வழக்கமான கிறுக்குத்தனங்களையும் உள்ளடக்கியே பத்து நிமிடத் தொலைவில் எந்த இடத்தையும் அடைந்துவிட முடிந்தது.

கோடம்பாக்கம் முன்னொரு நாளில் வடபழனி, சாலிக்கிராமம், விருகம்பாக்கம், வளசரவாக்கம் வரை உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும். அதனை ஒரு சினிமாப் பேட்டையாகச் சொல்லும் வழக்கம் இன்றுவரை உள்ளது. எனக்குத் தெரிந்து இன்றைய கோடம்பாக்கத்தில் சில சினிமாக்காரர்கள் குடியிருக்கிறார்களே தவிர அதனை ஒரு திரைப்பட நகரமாகச் சொல்ல முடியாது. பெரும்பாலான சினிமாக்காரர்கள் வடபழனிக்கு அந்தப் பக்கம்தான் வீடு கட்டி வாழ்கிறார்கள். புகழ்பெற்ற ஸ்டுடியோக்களாக இருந்து இன்று அடையாளம் இழந்து போன அனைத்தும் வடபழனி, சாலிக்கிராமம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில்தான் உள்ளன. டைரக்டர்ஸ் காலனி என்றொரு பகுதி கோடம்பாக்கத்தில் இருந்தாலும் அங்கே இயக்குநர்கள் யாரையும் நான் கண்டதில்லை. ஒட்டுமொத்தமாக சினிமா வாசனையே இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காகச் சில யூனியன் அலுவலகங்கள் மட்டும் உள்ளன. ஸ்டண்ட் யூனியன், டான்ஸ் யூனியன் இந்த மாதிரி.

தி நகர் அளவுக்குக் கோடம்பாக்கத்தில் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் கிடையாது. பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து எழுதி வைக்கப்பட்ட சரித்திரம் இருந்தாலும் வியந்து சொல்லுமளவுக்கு ஒரு நல்ல உணவகம் கிடையாது. பக்கத்துப் பேட்டையான மேற்கு மாம்பலத்தின் மெஸ் கலாசாரமாவது இங்குண்டா என்றால் அதுவும் இல்லை. மேம்பாலத்தின் அடியில் மசூதிக்கு அருகே ஒரு டட்டா உடுப்பி ஓட்டல் உண்டு. ஓரளவு தரமான சிற்றுண்டி அங்கு கிடைக்கும். தொண்ணூறுகள்வரை கோடம்பாக்கத்தின் ஒரே உருப்படியான உணவகம் என்றால் அதுதான். ஈழ எழுத்தாளர் எஸ்.பொ. இங்கே வசித்த காலத்தில் அவரைச் சந்திப்பதற்கு என் நண்பர்கள் ஆர். வெங்கடேஷ் மற்றும் யுகபாரதியுடன் செல்வேன். டட்டா உடுப்பியில் இரண்டு இட்லி சாப்பிட்டு காப்பி குடித்துவிட்டு அவரது ‘மித்ர’ அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். வயது பேதமில்லாமல் எங்களுடன் அவ்வளவு பேசுவார். (எஸ்.பொவின் பிரம்மாண்டமான வாழ்வனுபவத் தொகுப்பு நூலான ‘வரலாற்றில் வாழ்தல்’ உருவாக்கத்தில் யுகபாரதியின் பங்கு மிகப் பெரிது.) கோடம்பாக்கத்தில் வசித்த மிகப்பெரிய ஆகிருதியாக என்னால் அவரை மட்டுமே நினைவுகூர முடிகிறது. அவருக்குப் பிறகு ரகுமான்.

பெரிய பேட்டைதான். ஆனால் நல்ல மருத்துவமனைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், மால்கள் எதுவும் கிடையாது. இருந்த ஒரு லிபர்ட்டி திரையரங்கமும் இன்று இல்லை. பேர் சொல்ல ஒரே ஒரு வெங்கீசுவரர் ஆலயம் இருக்கிறது. புராதனமானது. மற்றபடி எந்த சிறப்பான குறிப்பிடலுக்கும் இடம் தராத பிராந்தியம். 1997க்கு முன்னால் சாமியார் மடத்துக்கு எதிரே ஒரு பூங்காவுடன் கூடிய ஆவின் பாலகம் இருந்தது. மரங்கள் அடர்ந்த அழகான இடம். உட்கார்ந்து பேச வசதியாக இருக்கும். பிறகு ஆவின் இடம் பெயர்ந்தது. பூங்காவும் இல்லாமல் போய் அங்கே பிரவுன் ஸ்டார் ஓட்டலும் அட்சயா ஓட்டலும் வந்துவிட்டன.

ஆனபோதிலும் சென்னை நகரின் மற்ற அனைத்துப் பேட்டைகளைக் காட்டிலும் கோடம்பாக்கத்தை எனக்குப் பிடிக்கும். ஏனெனில் எதெல்லாம் இல்லை என்று சொன்னேனோ அது எதையுமே அங்குள்ளவர்கள் இதுவரை ஒருமுறைகூட உணர்ந்திருக்க மாட்டார்கள். அவை அனைத்துமே நான்கு திசைகளிலும் ஐந்து நிமிட தூரத்தில் உண்டு. என்ன ஒன்று பின்கோடு மட்டும் வேறாக இருக்கும்.

எட்டாண்டுக் காலம் கோடம்பாக்கத்தில் குடியிருந்தேன். பிறகு குரோம்பேட்டைக்குத் திரும்பி வந்துவிட்டேன். ஆனாலும் கோடம்பாக்கத் தொடர்பை விடத் தோன்றவில்லை. குடியிருந்த வீட்டையே அலுவலகமாக வைத்துக்கொண்டேன். நகரத்தின் மையப் பகுதி என்றாலும் பாரம்பரிய மரபுகளையும் கலாசாரத்தையும் விடாமல் காப்பாற்றுகிற மக்கள் நிறைந்த பிராந்தியம். அங்கே என் அலுவலக வாசலில் ஒரு சிறிய கோயில் உண்டு. நாகவல்லி அம்மன் கோயில். ஆடி மாதம் வந்துவிட்டால் பகுதியே அமர்க்களப்படும். வீதியை அடைத்துப் பந்தல் போட்டுத் திருவிழா நடத்துவார்கள். கோடம்பாக்கம் என்பதால் கலை இயக்குநர்களின் சகாயம் இல்லாதிருக்குமா? ஆளுயர அம்மன் சிலையை அட்டையில் செய்து தருவார்கள். ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கைகள் என்று எதிலும் குறைவிருக்காது. அனைத்திலும் உச்சம், ஆடித் திருவிழாவின் இறுதியில் நடக்கும் சாமியாடி உற்சவம். கோடம்பாக்கம் முழுவதிலும் இருந்து பெண்கள் அந்தத் திருவிழாவுக்கு வந்து கூடுவார்கள். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து இரவு பத்தரை, பதினொன்று வரை போகும். ஒரு பக்கம் சாமியாடும் பெண்களின் கூட்டம் என்றால் மறுபுறம் அதைக் காண வந்திருக்கும் பக்தர்களின் கூட்டம். விதவிதமான அம்மன்கள் வேறு வேறு பெண்களுக்குள் புகுந்துகொண்டு ஆடித்தீர்த்து அருள்வாக்கு சொல்வார்கள். இதில் எப்போதும் எனக்கு வியப்புத் தரும் விஷயம் ஒன்றுண்டு. எந்த அம்மனும் அடுத்த அம்மனுக்குக் குறுக்கே வராது. ஒரு பெண் சாமியாடி முடித்த பின்புதான் அடுத்த பெண் ஆடத் தொடங்குவார். கையில் மைக் வைத்திருக்கும் பூசாரி ஒவ்வொரு பெண்ணிடமும் வந்து, ‘அம்மா நீ யாரு? எந்த ஊரு அம்மன்? எதுக்காக வந்திருக்க?’ என்று இண்டர்வியு செய்வார். தமிழகம் முழுவதிலும் இருந்து அம்மன்கள் அந்த ஒரு நாளில் கோடம்பாக்கத்துக்குத் தவறாமல் வருவார்கள்.

கோயில் திருவிழாக்கள் அனைத்துமே பசித்தோருக்கு உணவிடுவதை ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டவை. கோடம்பாக்கம் நாகவல்லி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் பிரசாதத் திருவிழாவும் சேர்ந்து நடக்கும். இதில் சில நாள்களில் கறி விருந்தும் இருக்கும்.

இந்தக் கோயிலுக்குச் சிறிது தொலைவிலேயே, அம்பேத்கர் சாலையைக் கடந்தால் காளிபாரி கோயில் என்றொரு வடக்கத்தியப் பாணி காளி கோயில் இருக்கிறது. ரங்கராஜபுரத்து சாய்பாபா கோயிலுக்கு நெருக்கம். உண்மையில் அம்பேத்கர் சாலைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவர்களுக்குக் காளிபாரியும் இந்தப் பக்கம் இருப்பவர்களுக்கு நாகவல்லியும்தான் காவல் தெய்வங்கள். இந்த இரு கோயில்களில் நடக்கிற அளவுக்கு சிரத்தையான தினசரி பூஜை புனஸ்காரங்களும் வருடாந்திரத் திருவிழாக்களும் சென்னையில் பிற கோயில்களில் நடக்குமா என்பது சந்தேகம். அவ்வளவு அழகாகச் செய்வார்கள்.

ஒரு காலத்தில் கோடம்பாக்கம், நவாபுகளின் குதிரை லாயமாக இருந்த பிராந்தியம் என்று சொல்வார்கள். இன்றைக்கும் லாயம்தான். குதிரைகளின் இடத்தைக் கிருமி ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

Share