ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25

வேலை கிடைத்து, போய்க்கொண்டிருப்பதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சுமார் ஆறு மாத காலம் கனிமரா மற்றும் தேவநேயப் பாவாணர் நூலகங்களில் வாழ்ந்துகொண்டிருந்தேன். காலைப் பொழுதுகளில் பத்திரிகை, சினிமா அலுவலகங்களுக்குச் சென்று வாய்ப்புத் தேடுவதும் பிற்பகல் இந்த நூலகங்களில் வந்து அமர்ந்து படிப்பதுமாக நாள்கள் கழிந்துகொண்டிருந்தன. கன்னிமரா நூலகத்தில் அப்போது அறிமுகமான சவரிமுத்து என்கிற ஒரு கடைநிலை ஊழியர் (இவரைக் குறித்து ‘தாயி’ல் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.) காந்தி மண்டபத்தில் உள்ள ஒரு நூலகத்தைப் பற்றிச் சொன்னார். காந்தியின் எழுத்துகளைப் படிக்கவேண்டுமானால் அங்கே செல்வதுதான் சரி என்று எனக்கு வழி காட்டியவர் அவர்தான்.

அப்போது ஏன் எனக்கு காந்தியைப் படிக்கத் தோன்றியது என்று தெரியவில்லை. படித்த படிப்பை முடிக்கவில்லை. நிறையப் பாடங்களில் தோற்றிருந்தேன். அதை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைக்கும் முயற்சியில் ஒன்றன் மீது ஒன்றாக ஏராளமான பொய்களை ஒரு மாளிகை கட்டும் பொறுமையுடன் கட்டவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் பொய்களுக்காகவே மணிக்கணக்கில் யோசிப்பவனாக இருந்தேன். திடீர் திடீரென்று சுய வெறுப்பும் சுய இரக்கமும் பொங்கும். பெரும்பாலும் அது மதிய நேரத்தில்தான் இருக்கும். நூலகங்களில் புத்தக அடுக்குகளின் நடுவே நின்றுகொண்டு பழுப்பேறிய புத்தகங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு அழுவது பிடித்திருந்தது. படிப்பதற்காக நூலகம் போவது போக, அழுவதற்காகவே போகிறவனாகவும் ஆனேன். அந்நாளில்தான் கனிமராவில் சத்திய சோதனையைப் படித்தேன். காந்தியைக் குறித்து லூயி ஃபிஷர் எழுதிய புத்தகத்தை அங்கேதான் படித்தேன். நவஜீவன் பிரசுராலயம் வெளியிட்டிருந்த காந்தியின் எழுத்துகள் அடங்கிய ஒரு சிறு மொழிபெயர்ப்பு நூல் தற்செயலாகக் கிடைக்க, அதையும் படித்த பின்புதான் காந்தியை முழுக்கப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்க வேண்டும். நூலகத்தில் அறிமுகமான சவரி முத்து என்னை காந்தி மண்டப நூலகத்துக்குப் போகச் சொன்னார்.

சிறு வயது முதல் காந்தி மண்டபத்துக்குப் பலமுறை சென்றிருந்தாலும் அங்கே ஒரு நூலகம் இருப்பது தெரியாது. பிரதான மண்டபத்துக்குச் சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக ஒரு சிறிய கட்டடத்தில் அந்த நூலகம் இயங்கியது. அந்த நூலகத்தை நோக்கமாகக் கொண்டு அங்கு வருவோர் யார் என்று தெரியாது. அந்நாளில் காந்தி மண்டபத்துக்கு வருபவர்களில் காதலர்களே மிகுதி. சென்னையின் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்து, காதலர்கள் அமைதியாக அமர்ந்து காதலிக்க காந்தி மண்டபத்தினும் சிறந்த இடம் வேறில்லை. மண்டபத்தைச் சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கும். ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு காதல் ஜோடி எப்போதும் அமர்ந்திருக்கும். காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஆறு மணிவரை எந்நேரம் போனாலும் காதலர்களைப் பார்க்கக்கூடிய ஒரே இடம் அதுதான். யார் பார்ப்பது பற்றியும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நாள் முழுவதும் பேசி விவாதிப்பதற்கு அவர்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும்.

மரத்தடிகளை அவர்கள் கைப்பற்றிவிடுவதால் படிப்பதற்காக வரும் அண்ணா பல்கலைக் கழக, அழகப்பா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மண்டபத்துக்குள்ளே இருக்கும் சொற்பொழிவு அரங்கில் மூலைக்கு மூலை அமர்வார்கள். தரையில் நீள நீளமான நோட்டுப் புத்தகங்களை விரித்து வைத்துக்கொண்டு எதையாவது எழுதிக்கொண்டோ, படம் வரைந்துகொண்டோ இருப்பார்கள். காந்தி மண்டபத்தையே படிப்பகமாகக் கொண்டு பல ஆசிரியர்கள் டியூஷன் வகுப்புகளும் நடத்திப் பார்த்திருக்கிறேன். தினமும் மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை நான்கைந்து டியூஷன் மாஸ்டர்கள் அங்கே இருப்பார்கள். அவர்களிடம் படிப்பதற்குச் சில மாணவர்கள் வருவார்கள். இவர்களையும் தவிர, ஓய்வு பெற்று வீட்டில் இருக்க முடியாதவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், கவலைப்படுவதற்கென்றே இடம் தேடி வருபவர்கள் என்று காந்தி மண்டபத்துக்கு வருவோர் பல விதமானவர்கள். எங்கோ கஞ்சா குடித்துவிட்டு அங்கே வந்து நாளெல்லாம் படுத்து உறங்குவோரும் உண்டு.

மதிய வேளைகளில் இவர்களைக் குறி வைத்து, சில கிழவிகள் கூடையில் எலுமிச்சை சாதப் பொட்டலம் எடுத்து வந்து விற்பார்கள். மண்டபத்துக்கு வெளியிலேயே தள்ளு வண்டிக் கடைகள் இருக்கும் என்றாலும் இந்தக் கூடை சாதத்துக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு பொட்டலம் சாதம் பத்து ரூபாய். நானும் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். எலுமிச்சை வாசனை அவ்வளவாக இருக்காது என்றாலும் அது எலுமிச்சை சாதம்தான். தொட்டுக்கொள்ள ஊறுகாய் இருக்கும். மாலை வேளை என்றால் வறுத்த வேர்க்கடலை, பட்டாணி.

இப்படிப்பட்ட நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு ஒரே பிரச்னை, எப்போதாவது அங்கே வந்துவிடும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். அரசு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்யும் ஒருநாள் சென்னைச் சுற்றுலாத் திட்டத்தில் காந்தி மண்டபம் ஓரிடமாக இருக்கும். திடீரென்று ஒரு பேருந்து வந்து நின்று, இருபத்தைந்து, முப்பது பேர் மொத்தமாக இறங்கி வருவார்கள். அவர்களுக்குச் சுற்றிக்காட்ட வரும் கைடுகள் மகாதேவ தேசாயைக் காட்டிலும் காந்தியை அறிந்தவர்களாக இருப்பார்கள். வாய் ஓயாமல் அவர்கள் காந்தி குறித்தும் காந்தி மண்டபத்தின் அருமைகள் குறித்தும் சொல்வதைப் பலநாள் கேட்டிருக்கிறேன். இந்த சுற்றுலாப் பயணிகளின் கையில் பெரும்பாலும் காமரா இருக்கும். மரத்தடிக் காதல் பெண்கள் அச்சமயங்களில் முகத்தை மூடிக்கொண்டு காதலிப்பார்கள். அல்லது எழுந்து காமராஜர் நினைவில்லத்துக்கோ, ராஜாஜி நினைவில்லத்துக்கோ போய்விடுவார்கள். ஆனால் அங்கெல்லாம் காந்தி மண்டபம் அளவுக்கு நிழல் வெளி கிடையாது. மரங்கள் கிடையாது. தவிர, அந்தளவு சுத்தமாகவும் இருக்காது.

அப்படிக் காதலுக்கும் படிப்புக்கும் தடை வரும்போதுகூட அவர்களில் யாரும் எழுந்து நூலகத்துக்குள் வந்ததில்லை.

காந்தி மண்டப நூலகம் சிறியதுதான். ஆனால் காந்தியைக் குறித்து அறிவதற்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் அங்கே உண்டு. கெடுபிடிகள் இல்லாத, சுதந்தரமான இடம். அமைதியாக அமர்ந்து படிக்க முடியும். எப்போதாவது சில ஆய்வாளர்கள் வருவார்கள். மற்றபடி பேப்பர் படிக்க வருபவர்கள்தான் மிகுதி. படித்துவிட்டு அவர்களும் எழுந்து வெளியே மரத்தடிக்குச் சென்று படுத்துக்கொண்டு விடுவார்கள். சுமார் மூன்று மாத காலம் நான் அந்த நூலகத்துக்கு தினமும் சென்றேன். அப்போது தமிழ் மொழிபெயர்ப்புகள் அதிகம் வந்திருக்கவில்லை. என்னுடைய ஆங்கில அறிவு அவ்வளவு ஒன்றும் சிறப்பானது இல்லை. எனவே இருந்த தமிழ் நூல்களில் பெரும்பாலானவற்றைப் படித்துவிடுவது என்று திட்டம் வைத்துக்கொண்டு படித்தேன். ஓரளவு நினைத்ததைச் செய்தேன் என்றுதான் நினைக்கிறேன். பின்னாளில் காந்தியின் மொத்த எழுத்துகளையும் வாங்கிப் படிக்க (இன்னும் முடிக்கவில்லை) அன்று அந்த நூலகத்தில் வாசித்தவையே தூண்டுகோல்.

இதற்கெல்லாம் சில வருடங்கள் கழித்து காந்தி மண்டபத்துக்கு மீண்டும் தொடர்ந்து செல்லவேண்டி வந்தது. முந்தைய முறை சென்றபோது இருந்த மன அழுத்தங்களும் அச்சமும் அப்போது இல்லை. ஓரளவு எழுதத் தொடங்கியிருந்தேன். மொழியைச் செம்மைப்படுத்திக்கொள்வதற்காக நிறையப் படிக்கவேண்டும் என்று திட்டம் வைத்துக்கொண்டு நானும் ஆர். வெங்கடேஷும் என் சரித்திரம் போன்ற புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்வோம். இருவரும் மாற்றி மாற்றிப் படித்து அது குறித்து விவாதிப்போம். அதுவும்கூட ஓரளவு சரியாகவே நடந்தது என்று நினைக்கிறேன். ஆனால் எழுதுவதற்காக காந்தி மண்டபம் போனபோதுதான் ஒன்றும் நடக்காமல் போனது.

படிக்கச் சென்றபோது பெரிய அளவில் பாதிக்காத காந்தி மண்டபத்துக் காதலர்கள் எழுதச் சென்றபோது மிகவும் தொந்தரவு செய்தார்கள். வக்கு இருப்பவர்கள் காதலிக்கிறார்கள்; அது இல்லாதவர்கள் காதல் கதை எழுத முயற்சி செய்கிறார்கள் என்று தோன்றும். அப்படித் தோன்றிவிட்டால் மனம் சோர்ந்துவிடும். இப்போதுகூட ஏதேனும் கதையில் அல்லது தொலைக்காட்சி சீரியல் பணியில் காதல் காட்சி எழுதவேண்டி வந்தால் உடனே காந்தி மண்டபக் காலம் நினைவுக்கு வந்துவிடும். அன்று நான் பார்த்த காதலர்களுள் எத்தனைப் பேர் திருமணம் செய்துகொண்டார்கள், எத்தனைக் காதல் காந்தி மண்டபத்துடன் நிறைவு பெற்றது என்று தெரியாது. எப்படியானாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை அமைந்திருக்கும். என்னைப் போல அந்நாளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் அமையாமல் போகாது. ஆனால் அப்போதும் அவர்கள் அந்த நூலகத்துக்குள் ஒரு நாளும் நுழைந்து பார்த்திராதது குறித்து நினைப்பார்கள் என்று தோன்றவில்லை.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!