நெற்றியில் குறியோடு நீலநகரவாசியாகவே மாறிவிட்ட சாகரிகாவைப் பார்த்து கோவிந்தசாமியின் நிழல் பதறுகிறது. சாகரிகாவோ அதை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. அவளிடம் தன் காதலை நினைவூட்டி கோவிந்தசாமியின் நிழல் கெஞ்சி கூத்தாடுகிறது. ”இதென்ன கோலம். வா. நம் உலகுக்குச் செல்லலாம்” என மன்றாடுகிறது. எதுவும் அவளிடம் எடுபடவில்லை. ”நான் புறப்படும் போது அதை ஒரு பாலிதீன் கவரில் கட்டி குப்பைக் கூடையில் போட்டு விட்டல்லவா வந்தேன்” என அவன் காதலைத் துச்சமென எறிந்து ஏளனம் செய்கிறாள். எந்த உலகத்திலும் காதலில் ஏமாறுபவர்கள் ஆண்களாக மட்டுமே இருக்க வேண்டும் என சிருஷ்டிப்பது அயோக்கியத்தனமில்லையா?
அந்தரங்கமற்ற உலகமான நீலநகரத்தில் உரையாடல் மொழி என்பதே கிடையாது. எழுத, எழுத பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு சேவை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நம் உலகிலும் அப்படியான ஒரு சேவை இருந்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே “கிளுகிளுப்பு”!
கோவிந்தசாமிக்கு உதவுவதில் சூனியம் காட்டும் உறுதி பின்னர் அவன் நிகழ்த்தப் போகும் அதிரடிகளுக்கான அஸ்திவாரம் என்றே தோன்றுகிறது. தன் முயற்சிகளுக்கு இம்மக்கள் பேசும் மொழியை அறிந்து கொள்வது அவசியம் என நினைக்கும் சூனியன் அதற்காக தன் குறி இழந்து நீலநகரவாசியாகி விடுகிறான். குறி அறுத்துப் பொருத்துவதில் மொழி அறிதல் முடிவடைகிறது. சாகரிகாவை வீட்டில் சந்தித்த போது அவள் வெண்பலகையில் என்ன எழுதினாள் என்பதை வாசிக்கும் சூனியன் விக்கித்துப் போகிறான். அவன் மட்டுமல்ல நாமும் தான்! புதுவித ரெசிபியோடு அத்தியாயம் நிறைவடைகிறது.
சூனியன்கள் உலகத்தில் பெண் குறி குறித்த விவரணைகளாக வரும் பத்தி தனித்து நிற்பதாகவே தெரிகிறது. தவிர்த்திருக்கலாம்.
கோவிந்தசாமியும், நிழலும் ஒன்று தான் என கடந்த அத்தியாயம் வரை தோன்றினாலும் கோவிந்தசாமியின் நிழலிடம், “ நீ வெறும் நிழல் தான்” என சூனியன் ஓரிடத்தில் சொல்வதும், கோவிந்தசாமியின் குறி கறியானதும் கோவிந்தசாமியும், அவன் நிழலும் ஒன்றா? என்ற சந்தேகத்தை உண்டு பண்ணி விடுகிறது. அதேபோல, சுங்கச்சாவடியில் கிடக்கும் கோவிந்தசாமியின் கதி என்ன? கோவிந்தசாமியும், சாகரிகாவும் நீலநகருக்குள் வந்த மார்க்கம் என்ன? நீலநகர வாசியாக சூனியன் மாற முடிவெடுத்ததற்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா? என அடுக்கடுக்கான கேள்விகளும் எழும்பி நிற்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சில கேள்விகளை விட்டுச் செல்வதும், அதற்கான திறப்பை அடுத்தடுத்த அத்தியாயங்களில் நிகழ்த்துவதும் கபட வேடதாரியை தொடர வைக்கிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.