கடவுளை ஒருபோதும் வெல்ல முடியாத சாத்தான் அவனுடைய அதிஉயர் படைப்பான மனிதனை தன்னுடைய இலக்காக்கி கொள்வதும், தன் மரணத்தின் போது மனிதன் பூமிக்கு விட்டுச் செல்கின்ற ஒரே ஒரு எச்சத்தை தன்னுடைய கொண்டாட்டத்தின் அடையாளமாக சூனியர்கள் உருவகித்துக் கொள்வதும் சுவாரசியமான கற்பனை.
அதாவது மனிதன் என்பவனுக்கு முற்றிலும் எதிரானவன் சூனியன் என்கின்ற பிம்பம் ஏற்படுகின்றது. ஆனால் துரோகம் என்பது மட்டும் சூரியனுக்கும் மனிதனுக்கும் ஒரே உணர்வையும் அர்த்தத்தையும் தருவது ஏன்?
பனிக்கத்தி, சனிக்கோள் மற்றும் அதை சுற்றிய வளையங்கள், என்பவற்றுக்கான உருவகங்கள், பிசாசுக்காவல் என்பன வாசகரை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
பதின்ம வயது குழந்தைகளுக்கான சாகசக் கதைகளின் சாயல் சற்று தெரிந்த போதிலும், தத்துவார்த்தமான சில இடங்கள் சற்று முதிர்ச்சியான வாசிப்புக்குரியவையாகவும் இருக்கின்றன. ஒரு கதையை கணிப்பதற்கு இரண்டு அத்தியாயங்கள் மிகவும் குறைவு என்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இன்னும் சற்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில் திடீரென்று தோன்றிய நீல நகரம் பரபரப்பான திருப்புமுனையாக அமைந்து மூன்றாவது அத்தியாயத்துக்கான ஆவலையும் தூண்டிவிட்டது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.