தேறாதிருக்கச் செய்தல்

சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லும் பாரம்பரியம் உள்ளபடியால் சொல்லிவிடுகிறேன். எத்தனைப் பேர் வாயில் விழுந்து புரளப் போகிறேனோ.

இந்த கொரோனாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எவ்வளவு தடை உத்தரவு வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் தேர்வுகளை ரத்து செய்வது, தள்ளிப் போடுவது, பார்த்து எழுதலாம் என்று அறிவிப்பது – இதெல்லாம் மாணவர்களின் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைப்பது தவிர வேறல்ல. டிஜிட்டல் இந்தியா என்று டமாரம் அடித்துக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் வரை தடையற்ற இணையத்தைக் கொண்டு செல்ல முடிந்துவிட்டால் தேர்வுகள் ஒரு பிரச்னையே இல்லை.

தேர்வுகளை ரத்து செய்வது அல்லது தள்ளிப் போடுவது அல்லது பார்த்து எழுத அனுமதிப்பது என்பது மாணவர்களின் உற்சாகம், தன்னம்பிக்கை, ஆரோக்கியமான கனவுகள் அனைத்தையும் சர்வ நாசம் செய்யப் போவது உறுதி. இந்த ஓரிரண்டு ஆண்டுப் பழக்கம் பிறகு வாழ்நாள் முழுதும் அவர்களை சோம்பித் திரிய வைக்கும். எப்போது எந்தத் தேர்வு எதிரே வந்தாலும் அது எப்போது ரத்தாகும் என்று எதிர்பார்க்கச் செய்யும். விளையாட்டல்ல. இப்போதே ஒரு சில மாணவர்கள் படிக்காவிட்டால் ஒன்றுமில்லை என்று பேசிக்கொள்வதைப் பார்க்கிறேன். மிகவும் அச்சமாக உள்ளது. ஒரு தேர்தல் நடத்த முடிகிற அரசால் கவனமாகத தேர்வுகள் நடத்த முடியாதா? அட, ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியே ஒரு கேள்வித்தாள், தனித்தனியே ஒரு நாள் தேர்வு என்று வைத்தால்கூட என்ன கெட்டுவிடும்? ஒரு வருடத்தையே தேர்வு வருடமாக அறிவித்து, 365 நாளும் தேர்வு நடத்தினால்கூடத் தவறில்லை. ஓட்டுப் போட வருவது போலத் தனியே வந்து தேர்வெழுதிவிட்டுப் போனால்தான் என்ன?

வெற்று வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் ஆயிரம் பேசலாம். ஆனால் இந்தப் பிள்ளைகள் நாளை சான்றிதழ்களுடன் வேலை தேடிப் போகும்போது எந்த நிறுவனம் இந்தக் கல்வி ஆண்டுகளின் மாணவர்களை வேலைக்கு எடுக்கும் என்று எண்ணுகிறீர்கள்? ஃபேஸ்புக் புரட்சிப் போராளி டிரெஸ்ஸை அவிழ்த்து வைத்துவிட்டு, யதார்த்தத்தை சிந்தித்துப் பார்த்தால் இது புரியும்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் செமஸ்டர் தேர்வுகளைப் புத்தகம் பார்த்து எழுதலாம், இணையத்தில் தேடி பதில் கண்டறிந்து எழுதலாம் என்று அறிவித்திருப்பதாக இன்று ஒரு செய்தி பார்த்தேன். அது வெறும் போட்டோஷாப் என்று யாராவது சொன்னால் சந்தோஷப்படுவேன். உண்மைதான் என்னும் பட்சத்தில் ஒரு தலைமுறையையே இவர்கள் ஊற்றி மூடத் தயாராகிவிட்டது உறுதி என்றாகிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி