இந்த வருடம் என்ன செய்தேன்?

பல இம்சைகளின் மொத்தக் குத்தகை ஆண்டாக இருப்பினும் இந்த வருஷம் சில உருப்படியான காரியங்களைச் செய்திருக்கிறேன் என்னும் திருப்தி இருக்கிறது.

பல்லாண்டுக் கால உடலெடைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டேன். பேலியோ குழும நண்பர்கள் உதவியால் 111 கிலோவாக இருந்த எனது எடை நான்கு மாதங்களில் 88க்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் புதிய உணவு முறை மாற்றம் மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்திருக்கிறது. மதில் மீதிருந்த சர்க்கரை அளவு, உச்சத்தைத் தொடப் பார்த்த ரத்தக்கொதிப்பளவு இரண்டும் சீராகி பரம ஆரோக்கியமாக உள்ளேன். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மகத்தான சாதனை.

பல நாள் கனவான காரோட்டக் கற்பது இவ்வருடம் சாத்தியமாகி, ஒரு கார் வாங்கினேன். ஆனால் வாங்கியதில் இருந்து கடும் வேலை நெருக்கடி இருந்தபடியால் பெரிதாக ஓட்டத் தொடங்கியபாடில்லை. ஜனவரிக்குப் பிறகு மெதுவேக வண்டியோட்டற் கலையில் ஒரு மைக்கல் ஷூமேக்கராகிவிட முடிவு செய்திருக்கிறேன்.

கிண்டிலில் வாசிக்கும் வழக்கம் வந்து, முன்னைக்காட்டிலும் அதிகம் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இவ்வருடம் சுமார் எழுபது புத்தகங்கள் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இது தவிர, சென்ற வருடம் தொடங்கிய பஷீர் வாசிப்பை முழுதாக முடித்து, மகாத்மா காந்தி நூல் வரிசையில் ஆறு முடித்திருக்கிறேன். சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஏமாற்றமளித்தன. முரகாமி, ஓரான் பாமுக்கையெல்லாம் தமிழில் படிப்பது கொலைக்கொடூரம். இனி இத்தகு பரதேசிப் புண்யாத்மாக்களை ஆங்கிலத்தில் மட்டுமே வாசிப்பதென முடிவு செய்திருக்கிறேன். நமது ஆங்கில ஞானம் குற்றம் குறைகளைக் கூடியவரை மறைத்து வைக்கும். அதனால் மீண்டும் ரத்தக்கொதிப்பு உண்டாகாமல் இருக்கும்.

2013 ஜனவரியில் ஆரம்பித்த வாணி ராணி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நண்பர்கள் ஓ.என். ரத்னம் (இயக்குநர்), குமரேசன் (திரைக்கதை ஆசிரியர்) இருவருடனும் தொடக்கம் முதலே ஒத்த அலைவரிசை வாய்த்துவிட்டபடியால் வேலையானது வெண்ணெய் தடவிய வாழைப்பழமாகப் போகிறது. ஆயிரத்தி இருநூறு எபிசோடுகளைத் தொட்டுக் கடக்கும் ஒரு சீரியலுக்கு ஒரு எபிசோட் விடாமல் வசனம் எழுதிய ஒரே தமிழ் எழுத்தாளன் அநேகமாக நானாக இருப்பேன். ராடனுக்கு நன்றி.

நிறையப் படிக்க வேண்டியிருந்ததாலும் கொஞ்சம் உடம்பைக் கவனிக்கவேண்டியிருந்ததாலும் மூன்றாண்டுகளாக எழுதிக்கொண்டிருந்த கல்யாணப் பரிசை இந்த ஆண்டு விட்டேன். விட்டதனால் நிறையப் படித்தேன். உடம்பையும் குறைத்தேன்.

தமிழகப் பொதுத்தேர்தல் சமயம் தினமலரில் எழுதிய ‘பொன்னான வாக்கு’ மிகப்பெரிய அளவில் பேரெடுத்துக் கொடுத்த பத்தி. வண்டியை சிக்னலில் நிறுத்தினால்கூட ‘சார் நீங்கதானே தினமலர்ல எழுதறவரு?’ என்று கேட்க பக்கத்து பைக்கில் நல்லவர்கள் இருந்தார்கள். பல அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் தினசரி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அன்றன்றைய கட்டுரையைப் பற்றிப் பேசியது, சண்டை போட்டது, விவாதித்தது எல்லாம் சுவாரசியமான அனுபவம். முன்பு நிலமெல்லாம் ரத்தம் எழுதிக்கொண்டிருந்தபோது இப்படி நேர்ந்தது. மீண்டும் இப்போது.

ஆண்டிறுதியில் தி இந்துவில் ஆரம்பித்திருக்கும் ருசியியல் இதே அனுபவத்தை வேறு தளத்தில் வழங்கத் தொடங்கியிருக்கிறது. சென்ற ஆண்டு எந்தப் பத்திரிகைத் தொடரும் எழுதவில்லை. இந்த வருடம் இந்த இரண்டு. என்னை ஊசி வைத்துக் குத்தாத குறையாக இத்தொடர்களை எழுத வைத்தவர் என் மனைவி. இம்மாதம் எழுதி முடித்த ஐ.எஸ் பற்றிய புத்தகத்துக்கும் தூண்டுகோல் அவரே. அடுத்தடுத்த இரு நூல்களுக்குத் திட்டமும் செயல்திட்டமும் தயார். விரைவில் ஆரம்பித்துவிடுவேன். இந்த மாதிரியெல்லாம் மனைவி அமைய நீங்கள் அடுத்த ஜென்மத்தில் பாராகவனாகப் பிறப்பது தவிர வேறு வழியில்லை.

இந்த வருடம் படங்கள் ஏதும் பார்க்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே படம் பார்க்கும் வழக்கம் குறைந்து வருகிறது. நேரமில்லை என்பது எளிய காரணம். விருப்பமில்லாது போகிறதோ என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அப்படியே பார்க்க உட்காருகிற படங்களைக் கூட பத்திருபது நிமிடங்களுக்குமேல் பார்க்க முடிவதில்லை. இருப்பினும் இந்த வருடம் இரண்டு படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி வைத்தேன். இதெல்லாம் வருமா என்று தெரியாது. எழுதி முடித்தேன் என்பதுதான் எனக்கு முக்கியம்.

தினசரி வேலைகளை முடித்துவிட்டுப் படுக்கப் போகிறபோது ஒரு பாசுரம் என்ற கணக்கில் திருமங்கை ஆழ்வாரைத் தொடர்ந்து படித்தேன். ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்புது தரிசனங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் இந்தப் பிரகஸ்பதி. தமிழ்க் கவிஞர்களுள் ஒரு மாபெரும் சாகசதாரியென மங்கை மன்னனைச் சொல்வேன். (என்னளவில் அவர் கவிஞர்தாம். புலவரல்லர்.) மொத்தமாக மனப்பாடமாகிவிடாதா என அவ்வப்போது ஏக்கம் வரும். ஆனால் சிறு வயதில் இருந்த மனப்பாட சக்தி இப்போது போய்விட்டது.

அடுத்த ஆண்டு என்னை இன்னும் சற்று செப்பம் செய்துகொள்ளச் சில திட்டங்கள் கைவசமுள்ளன. எப்போதும் என் திட்டங்களைப் பொறுமையாகப் பரிசீலித்து, எடிட் செய்து, தேவைப்பட்டால் ரீரைட் செய்யும் எம்பெருமான் இப்போதும் செதுக்கிச் சீரமைப்பான். என்னை கவனித்த நேரம் போகத்தான் அவன் உலகைக் கவனிக்கிறான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

நண்பர்கள் யாவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். ஜனவரி 6ம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் காட்சியில் சந்திப்போம். இந்த வருடம் நாலைந்து நாள்களாவது கண்டிப்பாக அங்கு செல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

Share

Add comment

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!