எல்லோருக்கும் வெளியே போகத் தேவை இருக்கிறது. அவசியம் இருக்கிறது. யாரும் வெட்டி இல்லை. சும்மா இருப்பவர்களுக்கும் வேலை தேடும் வேலையாவது அவசியம் இருக்கத்தான் செய்யும். துரதிருஷ்டவசமாக இந்நாள்கள் நம்மை வீட்டுக்குள் இருக்கச் சொல்கின்றன. கொடூரம்தான். வழக்கம் மாறும்போது வரக்கூடிய மனச்சிக்கல்கள் நிச்சயமாக இருக்கும். ஆனால் உயிர் பிரச்னைக்கு முன்னால் இதெல்லாம் பெரிதா என்று ஒவ்வொருவரும் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று முழுவதும் கண்ட சில வீடியோ, புகைப்படங்கள், இரவு சிறிது நேரம் பார்த்த தொலைக்காட்சி செய்திகள் இதனை எழுத வைத்தன. சாலைகளில் வழக்கமான போக்குவரத்து இருக்கிறது. கடைகள் அனைத்தும் திறந்திருக்கின்றன. எல்லாக் கடைகளிலும் மக்கள் இருக்கிறார்கள். இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி. தொற்றைப் பற்றியவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே இருக்கிறது.
அரசுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் எப்போதும் உண்டு. அது இந்த உயிர்க்கொல்லிக் கிருமியின் காலத்துக்குப் பிறகும் இருக்கும். அப்போது அதனைச் செய்துகொள்ளலாம். இந்த நேரத்தில் இவ்வளவு அலட்சியமாக வெளியே சுற்றுவதன் மூலமும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கிண்டல் செய்வதன் மூலமும் பாதுகாப்பு சார்ந்த அறிவுரைகளைக் கண்டுகொள்ளாதிருப்பதன் மூலமும் நாம் அரசாங்கத்தைப் பழிவாங்கவில்லை. நம்மை நாமேதான் ஏமாற்றிக்கொள்கிறோம். கிருமி நெருங்காதவரை ஒன்றுமில்லை. நெருங்கித் தொட்டுவிட்டால் குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தாரின் உயிருடன் நீங்கள் உடனடியாக விளையாடத் தொடங்கிவிடுகிறீர்கள் என்று அர்த்தம். கிருமியை இன்னும் அறிவியல் கட்டுப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் நம்மை நமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் அல்லவா?
நான் வசிக்கும் இடத்துக்குச் சுமார் ஐம்பது மீட்டர் நெருக்கத்திலேயே ஒரு வீட்டில் வசிப்பவர்களை குவாரண்டைன் செய்திருக்கிறார்கள். கதவு சன்னல்கள் இழுத்து அடைக்கப்பட்டிருக்கின்றன. எப்போதும் யாராவது இருக்கும், பேசும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் இல்லம் அது. இன்று உள்ளே யாராவது இருக்கிறார்களா, இல்லையா என்றே தெரியவில்லை. தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டதா அல்லது கண்காணிப்பில்தான் இன்னமும் இருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை. ஒரே வீதிக்குள் தனித்தீவாகிவிட்டது அந்த இல்லம். பிராந்தியவாசிகள் வீதியில் இறங்கவே அச்சப்பட்டுக்கொண்டு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள் .
இத்தனை நெருக்கத்தில் வந்தால்தான் சிந்திக்க முடியுமா? அப்போதுதான் உயிர் பயம் வருமா? இத்தாலியில் இன்று மட்டும் எழுநூறு பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். ஸ்பெயின் அந்த எண்ணிக்கையைத் தொட்டுவிடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டது. வளர்ந்த நாடுகள், வெள்ளையர்கள், பணக்காரர்கள் என்றெல்லாம் கிருமி பார்ப்பதில்லை. அரசு உத்தரவை அலட்சியப்படுத்தியதன் விளைவு இது.
இதற்குமேல் எழுத இதில் ஒன்றுமில்லை. உயிரோடு இருக்க வேண்டுமானால் வீட்டோடு இருங்கள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.