வண்டி வருது என்பது திரை / சிறுதிரைத் துறைகளில் அடிக்கடிப் புழங்கும் இரு சொற்கள். யாரையோ எங்கோ அழைத்துச் செல்ல கார் அனுப்பப்பட்டிருக்கிறது; வந்துகொண்டிருக்கிறது; சில நிமிடங்களில் வந்துவிடும் என்பது இதன் பொருள். ஆனால், இதைச் சொல்லத் தொடங்கி குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகாமல் எந்த வண்டியும் என்றும் எங்கும் வந்ததில்லை. என் தனிப்பட்ட அனுபவம், ‘வண்டி வருது’ என்று நான் சொல்லத் தொடங்கினால், அதிலிருந்து இரண்டு மணி நேரத்தில் அது வந்துவிடும். ஒரு முறை வண்டி வருது என்று சொல்லிவிட்டுக் குளிக்கப் போனால், சீவி சிங்காரித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு, ஆதித்யாவில் ஒரு காமெடிக் காட்சி பார்த்துவிட்டு செருப்பைப் போட்டுக்கொண்டால் சரியாக இருக்கும். நூற்றாண்டு வழக்கம். இதெல்லாம் மாறாது.
இந்த வண்டி வருது கான்ஸெப்டை இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பப்படும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் சிரத்தையாகக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. நண்பர் ஒருவர் நேற்றே தொற்று உறுதி செய்யப்பட்டு லேப்டாப், மொபைல், துணிமணியெல்லாம் எடுத்து பேக் செய்துகொண்டு தயாராக இருக்கிறார். நேற்று மாலையே புறப்பட்டுவிட்டது வண்டி. அவர் நேற்றிரவு சாப்பிட்டு முடித்து, தூங்கி எழுந்து, பல் விளக்கி, குளித்து, காலை டிபனையும் முடித்துவிட்டு இன்னும் தயாராகத்தான் இருக்கிறார். வண்டிதான் வந்தபாடில்லை. இப்போது மதிய உணவை சமைத்து டிபன் பாக்ஸில் எடுத்துக்கொள்ளும் உத்தேசத்தில் இருப்பதாகச் சொன்னார்.
கவலைப்படாதீர்கள்; கிருமி அலுத்துப் போய் விலகிப் போய்விடும்; பிறகு வண்டி வரும் என்று பதில் சொன்னேன்.