பொலிக! பொலிக! 26

‘சுவாமி, இது எங்களுக்குப் புரியவேயில்லை. இதுவரை நீங்கள் பதினேழு முறை திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பிவிட்டீர்கள். உங்களிடம் என்ன குறை கண்டார் என்று நம்பிகள் இப்படி முகத்திலடித்தாற்போலத் திருப்பி அனுப்புகிறார்?’

ராமானுஜரின் சீடர்களுக்கு ஆறவேயில்லை. வித்யாகர்வம் இருக்க வேண்டியதுதான். ஆனால் இப்படியா? அதையும் இப்படியொரு மகாபுருஷனிடமா காட்டுவார்கள்? ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை. பதினேழு முறை!

‘தயவுசெய்து போதும். இனி நீங்கள் திருக்கோட்டியூருக்குச் செல்ல வேண்டாம் சுவாமி!’ கண்ணீரோடு விண்ணப்பித்துக்கொண்டார்கள்.

‘இல்லை. அவரிடம் ரகஸ்யார்த்தம் கேட்க எனக்குத் தகுதி வரவில்லை என்று நினைக்கிறேன். பிழை அவர்மீதில்லை’ என்று சொல்லிவிட்டு ராமானுஜர் நகர்ந்துவிட்டார். ஆனால் அவருக்கும் அந்த உறுத்தல் இருந்தது. அப்படி என்ன பிழை செய்துவிட்டேன்? ஒவ்வொரு முறை செல்லும்போதும் இன்னொரு சமயம் வரச் சொல்லிவிடுகிறார். வந்ததற்கும் சந்தித்ததற்கும் அடையாளமாக ஒருவரி போதனை. அதைத் தவிர வேறில்லை.

நான்காவது முறை ராமானுஜர் விடாமல் திருக்கோட்டியூருக்குப் போனபோது ‘அகங்கார மமகாரங்களை ஒழிக்க வலுவில்லாவிட்டால் ஆத்மஞானம் இல்லை’ என்றார் நம்பி. ஆத்மஞானம் இல்லாது போனால் போகங்களின் மீதான இச்சை போகாது. இச்சை இருந்தால் இறை அன்பு இல்லை. பரம்பொருள்மீது அன்பு குவியாவிட்டால் பற்று நீங்காது. பற்று நீங்காவிட்டால் பரமனுக்கு அர்ப்பணமாகமாட்டோம். அப்படி அர்ப்பணமானால்தான் காமம் விலகும். காமம் விலகினால் வைணவ மனநிலை கைகூடும். அது கூடினால் சத்சங்கம் சேரும். சத்சங்கமே பாகவத சம்பந்தத்துக்குப் படி. பாகவத சம்மந்தமே பகவத் சம்பந்தத்தின் வாயில். அது கிடைத்துவிட்டால் மற்ற சிறு பலன்கள் ஒரு பொருட்டாகாது. சிறு பலன்களில் வெறுப்பு வந்தால், பெரும் பலனாகப் பரமனின் அடிமை ஆவான். அவனையே சரணமடைவான். அப்படிச் சரணாகதியடைந்த ஒருவனே திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்கத் தகுதி பெறுவான். அத்தகுதி யாருக்கு வாய்க்கிறதோ, அவருக்கே ரகஸ்யார்த்தம் வாய்க்கும்.

இதை முதல்நாளே மொத்தமாகச் சொல்லியிருந்தால் குருகைப் பிரானின் நோக்கம் அன்றே ராமானுஜருக்கு விளங்கியிருக்கும். அவர் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒவ்வொரு வரியாகச் சொல்லி அனுப்பியதுதான் விசித்திரம்.

மொத்தமாகச் சேர்த்து யோசித்துப் பார்த்தார் ராமானுஜர். அடடா! சரணாகதியைத்தானே ஆசாரியர் வலியுறுத்துகிறார்!

சன்னிதியில் நெடுநேரம் கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார். ‘அரங்கப் பெருமானே! சரணாகதியைத் தவிர வேறெதையும் நான் அறியேனே? உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம் என்றல்லவா ஒப்புக்கோடுத்திருக்கிறேன்? ஆசாரியருக்கு இதை யார் எடுத்துச் சொல்வார்கள்? அவரது கருணைக் கண் எப்போது என்மீது திறக்கும்?’

அன்றைக்குத் திருவரங்கம் கோயிலுக்குத் திருக்கோட்டியூரில் இருந்து நம்பியின் சீடர் ஒருவர் வந்திருந்தார்.

‘சுவாமிகளே, நீங்கள் ஒவ்வொருமுறையும் நம்பிக்கையுடன் திருக்கோட்டியூருக்கு வருகிறீர்கள். ஆசாரியர் ஒவ்வொருமுறையும் தங்களைத் திருப்பி அனுப்புகிறார். தாங்களும் சளைக்காமல் மீண்டும் வருகிறீர்கள். எங்களுக்கெல்லாம் இது எவ்வளவு சங்கடமாக உள்ளது தெரியுமா?’ என்று கேட்டார் அவர்.

‘எம்பெருமான் இன்னும் ஆசாரியருக்கு அனுமதி தரவில்லை போலிருக்கிறது. அவர்மீது பிழை இல்லை ஐயா!’

உண்மையில் முதல்முறை ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பிய உடனேயே குருகைப் பிரானுக்கு அரங்கனின் அனுமதி கிடைத்துவிட்டது.

‘நம்பி! ராமானுஜர் தகுதிவாய்ந்த பாத்திரம். நீர் அவருக்கு ரகஸ்யார்த்தங்களை தாராளமாகச் சொல்லிக் கொடுக்கலாம்!’ என்று அவரது உட்செவியில் கேட்ட குரல் அரங்கனுடையதேதான். ஆனாலும் அவர் தயங்கினார். ஏனெனில் காலமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் ஆளவந்தார் அவரைத் தனியே அழைத்து ஒரு விஷயம் சொல்லியிருந்தார். ‘ரகஸ்யார்த்தங்கள் சக்தி மிக்கவை. யாரையும் பரிசோதித்துப் பாராமல் போதித்துவிடாதே! தகுதியற்ற ஒருவருக்கு அவை தப்பித்தவறிக்கூடப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது!’

ராமானுஜர் முதல் முறை திருக்கோட்டியூருக்கு வந்து சென்ற பிறகு குருகைப் பிரான் ஒரு சமயம் திருவரங்கத்துக்குப் போனார். சன்னிதியில் வைத்துப் பெருமானிடம் இதனை விண்ணப்பித்துக்கொண்டு, ‘எம்பெருமானே! ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம் என்று நீ சொல்கிறாய். ஆனால் பரிசோதித்துப் பாராமல் பாடம் சொல்ல வேண்டாம் என்று என் ஆசாரியர் சொல்லியிருக்கிறார். ஆசாரியர் சொன்னதைத்தான் நான் கேட்க முடியும். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

திருக்கோட்டியூர் நம்பியின் ஆசாரிய பக்தி அப்படிப்பட்டது. அரங்கனே உத்தரவு கொடுத்தாலும், ஆசாரியரின் உத்தரவுக்கு அப்புறம்தான் அது. அவருக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியவேண்டியிருந்தது. ராமானுஜரின் தீவிரம். ஒப்புக்காக ஒருதரம் வந்து கேட்டுவிட்டுப் போகிற நபராக இருந்துவிட்டால்?

ஆனால் அவர் அப்படி இல்லை.

பதினாறு முறை ஏமாந்து, பதினேழாவது முறையும் ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்றபோது நம்பிக்கு அது விளங்கிவிட்டது. அன்று சரணாகதி நிலையை அடைவதற்கான கடைசிக்கு முந்தைய படியைத் தமது ஒருவரிப் பாடமாக அவர் சொல்லி அனுப்பியபோதே, அடுத்த வருகையில் காரியம் கைகூடிவிடும் என்று தமது மானசீகத்தில் ஆசீர்வதித்துத்தான் அனுப்பியிருந்தார். ராமானுஜருக்கு அது எப்படித் தெரியும்?

திருவரங்கம் சென்று திரும்பிய நம்பியின் சீடர், நடந்ததைத் தமது ஆசாரியரிடம் எடுத்துச் சொன்னார். ‘சுவாமி, ராமானுஜர் மிகவும் மனம் நொந்திருக்கிறார். தாங்கள் இனியும் அவரைச் சோதிக்க வேண்டாமே?’

நம்பி கண்மூடி வெகுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு கண்களைத் திறந்து புன்னகை செய்தார்.

‘சரி, வரச் சொல்லுங்கள். ஆனால் பரிவாரங்களுடன் அல்ல. தண்டும் பவித்திரமுமாகத் தனியாகத்தான் வரவேண்டும்!’

தண்டும் பவித்திரமும் மட்டுமே துறவியின் சின்னங்கள். உறங்கும்போதும் உடனிருப்பவை. மற்ற எதனோடும் அவருக்கு உறவு கிடையாது. தவிரவும் ரகஸ்யார்த்தம் என்பது அனைவருக்கும் வினியோகிக்கிற பிரசாதமல்ல. தகுதி முக்கியம். தெய்வானுக்கிரகம் முக்கியம். அது நியமிக்கப்படுவது. பெரும் தவத்துக்குப் பிறகு மட்டுமே சித்திக்கும் வரம்.

செய்தி கிடைத்ததும் ராமானுஜர் பரவசக் கூத்தாடினார். ‘என்ன தவம் செய்தேன்! என்ன தவம் செய்தேன்! ஆசாரியர் ஒப்புக்கொண்டுவிட்டாரா? உண்மையாகவா? இப்பிறவியில் இதனைக் காட்டிலும் பெரும்பேறு வேறு சாத்தியமில்லை. நான் புறப்பட்டுவிட்டேன் என்று சொல்லுங்கள்!’

தகவல் கொண்டு வந்தவரிடம் சொல்லி அனுப்பிவிட்டு ராமானுஜர் பெரிய நம்பியிடம் ஓடினார். விஷயத்தைச் சொல்லி மகிழ்ந்து அவர் பாதம் பணிந்தார்.

‘போய் வாருங்கள் ராமானுஜரே! ஆனால் உம்மைத் தனியே வரச் சொல்லியிருக்கிறார்! கவனம்.’

தலையசைத்து வணங்கி விடைபெற்ற ராமானுஜர் மடத்துக்கு வந்ததும் முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் அழைத்தார்.

‘புறப்படுங்கள். நாம் இப்போதே திருக்கோட்டியூர் செல்கிறோம்!’ என்றார்.

(தொடரும்)

Share
By Para

Recent Posts

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி