அவர் அப்போதுதான் சிம்பொனி முடித்து, திரும்பி வந்திருந்தார். அடையாறு பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. சிம்பொனி கிம்பொனியெல்லாம் எனக்குப் பிரமாதமில்லை. ராஜாவைப் பார்க்க ஒரு தருணம். போதும். புறப்பட்டுவிட்டேன்.
ஆனால் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று வினோதமாக இருந்தது. ராஜாவின் மொழி, அவர் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பதைச் சரியாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை. அவராக விளக்கிச் சொன்னாலொழிய மற்றவர்களுக்குப் புரியும் சாத்தியமும் இல்லை.
அவரும் பல நிமிடங்கள் விதவிதமாக என்னென்னவோ சொல்லி, தனது இசைக்கோலத்தை விளக்கப் பார்த்தார். ம்ஹும். ராயல் ஃபில்ஹார்மனிக் கலைஞர்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டு, அவர்கள் எப்படியெல்லாம் பாராட்டினார்கள் என்று சொன்னார். ம்ஹும்.
நம்ம ஆள் ஏதோ பெரிதாகச் செய்திருக்கிறார் என்கிற ஒருவரிக்குமேல் யாருக்குமே எதுவும் ஏறவில்லை. எதையோ தீவிரமாக விளக்க முயற்சி செய்து முழுதும் தோற்று, இறுதியில் அவர் கைகூப்பிவிட்டார். எல்லோரும் சாப்பிடப் போய்விட்டார்கள். ராஜா மேடையை விட்டு நகருமுன் ‘சார் ஒரு நிமிடம்’ என்றேன். நின்றார்.
ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்றேன். அதுதான் அவ்வளவு எடுத்தாகிவிட்டதே என்றார்.
இல்லை, இது எனக்கே எனக்காக என்றேன். அவருக்குப் புரியவில்லை. சிரித்தார். சிரித்த கணத்தில் புகைப்படக்காரர் எடுத்துவிட்டார். உண்மையில் என் அற்ப சந்தோஷங்களில் ஒன்றாக இன்றளவும் இது இருக்கிறது. இந்தப் படம் என்னைத் தவிர உலகில் வேறு யாரிடமும் கிடையாது. ஒரே ப்ரிண்ட். போட்ட ப்ரிண்ட்டை லேமினேட் செய்து வைத்துவிட்டேன். தீர்ந்தது.
என் வீட்டில் நான் இரண்டு பேரின் புகைப்படங்களை மட்டும்தான் என் எழுதும் மேசைக்கு அருகே வைத்திருக்கிறேன். ஒன்று பாரதி. இன்னொன்று ராஜா. கவிதையில் அவன் செய்ததை இசையில் இவன் செய்திருக்கிறான் என்ற எண்ணம் இன்றுவரை மாறாமல் அப்படியே இருக்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்குப் போகவேண்டும் என்று பலமாக திட்டமிட்டு டிக்கெட்டெல்லாம் வாங்கியும் போகமுடியாமல் ஆகிவிட்டது. நாளை ஜெயா டிவியில் பார்த்துதான் தீர்த்துக்கொள்ளப் போகிறேன்.
இன்று பார்த்த முன்னோட்ட நிகழ்ச்சி, என் மகிழ்ச்சியை வெகுவாகக் கிளறிவிட்டபடியால் இந்தக் குறிப்பை எழுதி, இதுவரை உலகம் பார்க்காத இளையராஜாவின் இந்தப் புகைப்படத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கலாம் என்று தோன்றியது.
இனி, இது உங்களுக்கும்.
பின்குறிப்பு: அன்று என்னுடன் வந்த புகைப்படக்காரர், இன்று பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் கோபிநாத்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
நன்றி.. வருகிற மூன்று நாட்களும் பூரிக்கப் போகிறீர்கள் என்பது நிச்சயம். உங்களுடன் சேர்ந்து நாங்களும் பூரிக்க ஐபோனுக்கு நிறைய வேலை கொடுங்கள்.. #சொல்லி இருக்கிறீர்கள்.
//அவர் அப்போதுதான் சிம்பொனி முடித்து, திரும்பி வந்திருந்தார். //
🙂 🙂 🙂 🙂
Proof of Pudding is in eating 🙂 🙂 🙂
நிகழ்ச்சியில் எஸ்பிபி இளைத்து காணப்படுகிறாரே.. முதலில் சரண் இளைத்தார். தற்போது இவர்.. அவர்களிடம் உங்களை ஆலோசனை கேட்கச் சொல்லும் எண்ணம் எல்லாம் எனக்கில்லை.. இருந்தாலும் சொல்லனும்னு தோணுச்சு.. சொன்னேன். #பத்திரமா பாத்துக்குகங்க..
எளிமையான விஷயத்தை சுவாரசியமாக்கி, தன்னிலையிலும் அனுபவத்தை விளக்கி… உங்கள் பதிவு அலாதி ருசி
தேவாரம் இசை கோர்ப்பு முடிந்தவுடன் இந்த நிக்ழ்ச்சி என நினைக்கிறேன்…….என் யூகம் சரியா?
என்னவோ நானே நேரே வந்து ராஜாவைப் பார்த்தது போல் உணர்ந்தேன். நன்றி.
இதைப் படிக்கும் ரசிகர்கள் முடிந்த வரை ராஜாவின் பாடலை தகவிரக்கம் செய்யாமல் ஒலிப் பேழைகளை வாங்கி இசை நூலகம் அமைக்குமாறு இந்தப் பொங்கல் நாளில் வேண்டிக்கொள்கிறேன்.
You are very right. Barathiyaar and Raja are god’s kids. Unfortunately, Barathi did not live long enough and did not get the recognition as much as Raja did.
I am proud to have lived in the same time as in one of these 2 genius.
Thanks a lot for registering this. I respect you a lot for this.
இந்த படத்தை இணையதள வாசகர்களுக்கு முன்னமே பார்த்து இந்த புகை படத்துடன் சேர்த்து உங்களை நான் ஒரு புகைப்படமும் எடுத்து வைத்திருக்கிறேன் 🙂 .
https://www.facebook.com/photo.php?fbid=2259130237376&set=a.2259123757214.134672.1222003428&type=3&theater
அன்று உங்களுடன் வந்த அந்த பு கைப்படக்காரர் இன்று பிரரபலமான ஒளிப்பதிவாளர் .ஓகே ! பாடல் வரிகள் பா ராகவன் இசை இளையராசா … என்று விரைவில் வருமோ தேன் கிண்ணம் .