ஆண்டறிக்கை

இந்த வருடம் என்ன செய்தேன்? – 2021

 

இவ்வளவு விரைவாக நகர்ந்தோடிய வருடத்தை இதற்கு முன் கண்டதில்லை. இத்தனைக்கும் வருடம் முழுதும் வீட்டிலேயேதான் இருந்திருக்கிறேன். எந்த வெளியூர்ப் பயணமும் இல்லை. வாழ்வில் பெரிய மாற்றங்கள், திருப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை. குருப் பெயர்ச்சி அதைச் செய்யும், சனிப் பெயர்ச்சி இதைச் செய்யும் என்று சோதிட மாமணிகள் சொன்ன எதுவும் நடக்கவில்லை. வழக்கமான செயல்பாடுகள், அதே படிப்பு, அதே எழுத்து. ஆனாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆண்டு முடிந்துவிட்டாற்போல இருக்கிறது.

O

வருடத் தொடக்கம் சாதாரணமாகவே இருந்தாலும் மார்ச் இறுதியில் கோவிட் தாக்கியது. எனக்கும் என் மனைவிக்கும் ஒரே சமயத்தில் வந்ததால், பெரும்பாடாகிவிட்டது. பாடு எங்களுக்கல்ல. இந்த வருடம் ப்ளஸ் டூ எழுதும் எங்கள் மகளுக்கு. மனத்தளவில் அவள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக என் மனைவி மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டார். நோயை அனுபவித்துவிடலாம். ஆனால் வேதனை முகத்தில் வெளிப்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது சிரமம். அவரளவுக்கு என்னால் முடியவில்லை. கொஞ்சம் படுத்தினேன் என்றுதான் நினைக்கிறேன். ஒருவாறு சமாளித்து, மீண்டோம்.

O

வருடம் முழுதும் நிறையப் படித்தேன். நிறைய எழுதினேன். நோய்க் காலத்தில் அந்நினைவை ஒழிக்க நிறையக் குறுங்கதைகள் எழுதினேன். கிட்டத்தட்ட நூறு கதைகள் என்பது என்னைப் பொறுத்தவரை நம்ப முடியாத செயல். என்னால் ஒரு பெரிய நாவலுக்கான களத்தை எடுத்துக்கொண்டு அணு அணுவாக ஆராய்ந்து, அங்குலம் அங்குலமாக முன்னேற முடியும். ஆயிரம் பக்கமானாலும் சலிக்காமல் எழுதிவிடுவேன். ஆனால் அடுத்தடுத்து நூறு வேறு வேறு கருப்பொருள்களைத் தொட்டு, எழுதுவது சவாலாக இருந்தது. உற்சாகமூட்டிய வாசகர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். ‘முன்னூறு வயதுப் பெண்’ அவர்களால் மட்டுமே சாத்தியமானது.

O

#byngeவில் கபடவேடதாரியும் மீண்டும் தாலிபனும் எழுத நேர்ந்தது, இதர பிரச்னைகளின் பக்கம் மனம் திரும்பாதிருக்க உதவி செய்தது. கபடவேடதாரியில், அப்பட்டமான யதார்த்தத்தை மாயாஜாலக் கதை மொழியில் எழுதியதும்; மீண்டும் தாலிபனில், மாயாஜாலக் கதைகளையும் விஞ்சும் வாழ்வை அப்பட்டமான யதார்த்தமாகக் காட்சிப் படுத்தியதும் வினோதமான அனுபவம். எழுத்தின் சாத்தியங்களுக்கு எல்லையே கிடையாது. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்து கடப்பதற்கு எழுதுவது தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கிறேன்.

இந்த ஆண்டு உயிர்மை தவிர வேறு பத்திரிகைத் தொடர்கள் ஏதும் எழுதவில்லை. உயிர்மையில் எழுத ஆரம்பித்திருக்கும் ‘வீட்டோடு மாப்பிள்ளை’ எனக்கே புதிய அனுபவம். தன் வரலாற்றைத் தொட்டுக்கொண்டு எழுதப்படும் புனைவு அது. எவ்வளவு சதம் உண்மை; எவ்வளவு புனைவு என்கிற ரகசியம்தான் அதன் சுவாரசியமே. இந்தத் தொடருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் பாராட்டும் மிகுந்த உற்சாகமளிக்கின்றன. சமீபத்தில் என் அலுவலகத்துக்கு வந்திருந்த நாவலாசிரியர் அபுல் கலாம் ஆசாத், உயிர்மையைத் திறந்ததும் முதலில் அதைத்தான் படிக்கிறேன் என்றார். வேறென்ன வேண்டும்?

O

படித்த நூல்களுள் சிறந்ததென்று தோன்றுவது, சுந்தர ராமசாமி உடனான அனுபவங்களை விவரித்து சி. மோகன் எழுதிய ‘சுந்தர ராமசாமி: சில நினைவுகள்’. சி. மோகனை இவ்வளவு நாள்களாகப் படிக்காதிருந்துவிட்ட வருத்தமுடன், கிண்டிலில் வெளியான அவரது அனைத்துப் புத்தகங்களையும் வரிசையாகப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். நித்ய சைதன்ய யதி குறித்த ஜெயமோகனின் அறிமுக நூலையும் (அனுபவங்கள் அறிதல்கள்) ரசித்துப் படித்தேன். சென்ற புத்தகக் காட்சியில் வாங்கிய காஃப்கா கடற்கரையில் (என் இலக்கிய எதிரி எழுதியது), வண்ணநிலவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு (நற்றிணை) இரண்டையும் நீண்ட அவகாசம் எடுத்துக்கொண்டு நிதானமாகப் படித்து முடித்தேன். எப்படியாவது படித்து முடித்துவிட நினைத்து, நேரமின்மையால் முடியாமல் போனது, முத்துலிங்கம் கட்டுரைகள் முழுத் தொகுப்பு (இரண்டு பாகங்கள்). அடுத்த ஆண்டு அதுதான் முதலில். ஆண்டிறுதியில் இரண்டிரண்டு நாள் அவகாசத்தில் இரண்டு நாவல்களை வாசித்து முடித்தது (மூத்த அகதி, வாதி) என்னாலேயே நம்ப முடியாத சாதனை.

இவை தவிர, வாசித்ததில் உடனே நினைவுக்கு வரும் சில பழைய புத்தகங்கள்: சைவ தூஷண பரிகாரம் (ஆறுமுக நாவலர்), அகத்தியர் வைத்திய காவியம், போக முனிவர் சரக்கு வைப்பு எண்ணூறு, மலையாள மாந்திரீக போதினி, இஸ்மத் சுக்தாய் கதைகள், இந்திய சீனப் போர் (நெவில் மாக்ஸ்வெல்), நரகம் (டான் பிரவுன்), வீழ்ச்சி (ஆல்பெர் காம்யு), ரமண மகரிஷி (பாலகுமாரன்), அஸ்தினாபுரம் (ஜோ டி குரூஸ்), இந்தியப் புதையல்-ஒரு தேடல் (பால் பிரண்டன்), கூவம்-அடையாறு-பக்கிங்காம் (கோ. செங்குட்டுவன்), இலக்கியமும் இலக்கியவாதிகளும் (வண்ணநிலவன்).

O

எழுத்துப் பயிற்சி வகுப்புகள் – 2020லேயே ஆரம்பித்திருக்க வேண்டியது. பாடத் திட்டம் உருவாக்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் இந்த ஆண்டுதான் சாத்தியமானது. Bukpet சார்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி, முதல் அணிக்கான வகுப்புகளை ஆரம்பித்தேன். இருபத்தைந்து மாணவர்கள். முப்பது மணி நேர வகுப்புகள். அது வெற்றிகரமாக நடந்து முடிந்து, இரண்டாவது அணி இப்போது பாதிக் கிணறு தாண்டியிருக்கிறது. இந்த வகுப்புகளுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எடிட்டராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் எவ்வளவோ பேருக்குச் சொல்லித்தந்தவைதான். ஆனால், முறைப்படுத்தி, வகுப்புகளாகப் பிரித்து நடத்தும் அனுபவம் சுவாரசியமாக உள்ளது.

இந்த வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை மனத்தில் கொண்டுதான் ‘எழுதுதல் பற்றிய குறிப்புகள்’ நூலை எழுத ஆரம்பித்தேன். அதையும் இந்த ஆண்டு நிறைவு செய்ய முடிந்தது திருப்தியாக உள்ளது.

O

சென்ற வருடம் வரை டயட்டிலும் உடற்பயிற்சிகளிலும் கவனமாக இருந்தேன். கோவிட் வந்து அனைத்தையும் விழுங்கிவிட்டது. இரண்டையும் விட்டதால், கஷ்டப்பட்டு இறக்கி வைத்திருந்த எடையெல்லாம் அநியாயமாக ஏறிவிட்டது. ஆண்டிறுதியில் மனம் திருந்தி, மகுடேசுவரனை (இதில் மட்டும்) மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு தினமும் ஒழுங்காகக் காலை ஒரு மணி நேரம் நடக்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் இதை ஒன்றரை மணி நேரமாக்கும் எண்ணம் உள்ளது. புத்தகக் காட்சி முடிந்த பின்பு மீண்டும் பேலியோவிலும் இறங்கிவிடுவேன். குறைக்கும் வழி தெரிந்தவன் ஏறியது குறித்துக் கவலை கொள்ளான்.

O

எப்போதும் போல இந்த வருடமும் பெரிதாக சினிமா பார்க்கவில்லை. மகளுக்காக ஸ்பைடர்மேன் சென்று வந்தேன். அமேசானில் சார்பட்டா பார்த்தேன். பிறகு 83. மூன்றுமே பிடித்தது. அவ்வளவுதான். படிக்காமல் சேர்ந்துகொண்டே போகும் புத்தகங்களைப் பார்க்கும்போது இதர அனைத்துச் செயல்களுமே அநாவசியம் என்று தோன்றுகிறது. ஜீரோ டிகிரி விழா தவிர வேறு எந்தக் கூட்டத்துக்கும் செல்லவில்லை. நான்கைந்து நண்பர்களைத் தவிர வேறு யாரையும் சந்திக்கக் கூட இல்லை. என் அலுவலகத்துக்குச் சென்று வருவதும், புத்தகங்களை ஃபைனல் செய்வதற்கு ஒரு முறை ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் சென்று வந்ததும்தான் இந்த ஆண்டின் பயணங்கள்.

வருகிற செய்திகளைப் பார்த்தால் அடுத்த ஆண்டும் வீட்டோடு கிடக்க வேண்டிய ஆண்டாகத்தான் இருக்கும் போலத் தெரிகிறது. ஒரு பெரிய நாவலுக்கான எண்ணம் உருவாகியிருக்கிறது. ஏராளமாகப் படிக்கவும் ஆய்வு செய்யவும் வேண்டியிருக்கிறது. வேண்டுவதெல்லாம் ஒன்றுதான். உட்கார்ந்து எழுதுவதற்கு இடைஞ்சல் இல்லாத ஒரு வாழ்க்கை.

O

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தகக் காட்சியில் சந்திப்போம். இந்த வருடப் புத்தகக் காட்சி இரண்டு காரணங்களுக்காக எனக்கு முக்கியமானது. ஆறு புதிய புத்தகங்கள் வருவது ஒன்று. என்னுடைய ஐம்பத்தைந்து புத்தகங்கள் மொத்தமாக ஒரே அரங்கில் கிடைக்கவிருக்கின்றன என்பது அடுத்து. சரியாக ஓராண்டுக் காலத்தில் இதனை சாத்தியமாக்கிய ஜீரோ டிகிரி நண்பர்கள் ராம்ஜி, காயத்ரி, வித்யா, விஜயன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி