இந்த வருடம் என்ன செய்தேன்?

கிருமி களவாடிய வருடம் என்றாலும் தனிப்பட்ட முறையில் என்னால் எவ்வளவு செய்ய முடியும் என்று எனக்கே நிரூபித்த வருடம் என்பதால் 2020ஐ நான் மறக்கவே மாட்டேன். வழக்கத்துக்கு விரோதமாக இந்த ஆண்டு சில ஏமாற்றுக்காரர்கள், சில நம்பிக்கை துரோகிகள், சில அயோக்கியர்களை இனம் காட்டியது. எதற்கும் சலனமடைபவன் அல்லன் என்றாலும் எனக்கு இதெல்லாம் புதிது. இயல்பில் அவ்வளவு எளிதாக ஒருவரை நம்ப மாட்டேன். மிகவும் யோசித்துத்தான் நெருங்குவேன். ஆனால் நம்பிக்கை பிறந்துவிட்டால் மறு சிந்தனையே இராது. அவர்களிடம் மிகவும் வெளிப்படையாக இருப்பேன். இதுவரை அப்படிப்பட்ட என் நம்பிக்கைகள் பொய்த்ததில்லை. இந்த ஆண்டு அது வேறு விதமானது. அதனாலென்ன. வாழ்க்கை திடுக்கிடும் திருப்பங்களாலானது.

O

வருடம் முழுவதும் ஏராளமாகப் படித்தேன். ஏப்ரல் முதல் படப்பிடிப்புகள் இல்லாததால் கணிசமாகப் படிக்க முடிந்தது. Paris Review Interviews தேர்ந்தெடுத்த தொகுப்பு, ஓரான் பாமுக்கின் கருப்புப் புத்தகம், பக்தி வேதாந்த சுவாமியின் ‘கிருஷ்ண’, அருண் ஷோரியின் ‘The world of Fatwas’ காந்தி நூல்களில் ஒரு தொகுதி, சாம வேதம் தமிழ் மொழி பெயர்ப்பு, ருஷ்டியின் Fury, மனுஷ்யபுத்திரன் தினமும் எழுதிய கவிதைகள், பெருந்தேவியின் ‘ஹைன்ஸ் ஹால்’ முரகாமியின் ‘நோர்வீஜியன் உட்’, ‘கினோ’, ஆர். சூடாமணியின் ‘தனிமைத் தளிர்’ இவற்றை குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. ஆண்டிறுதியில் வண்ணநிலவன் கதைகள் முழுத் தொகுப்பை வாசிக்க எடுத்தேன். ஏழு கதைகள் போயிருக்கின்றன. இவை தவிர, என் தனிப்பட்ட எழுத்து நடவடிக்கைகளின் தேவை கருதி வாசித்தவை நிறைய. வழக்கம்போல பஷீர், அசோகமித்திரன், சுரா மூவரிலும் சிலவற்றைத் திரும்ப வாசித்திருக்கிறேன். பி. ஜைனுல் ஆபிதீன் மொழியாக்கத்தில் ஜாமிவுத் திர்மிதீயில் (ஹதீஸ்களின் தொகுப்பு நூல்) முன்னூறு பக்கங்கள் ஆழமாக வாசித்தேன். நியாயமாக முழுக்க முடித்திருக்க வேண்டும். வேறு எதிலோ கவனம் நகர்ந்து, நின்றுவிட்டது. ஆனால், அதிலிருந்து ஒரு நாவலுக்கான கரு கிடைத்தது. கிண்டிலில் வாசித்தவை: பாக்ஸ் கதைப் புத்தகம் (ஷோபா சக்தி), கண்டி வீரன் (ஷோபா சக்தி), மகாகவி பாரதியார் சர்ச்சை (வரா-கல்கி), பாரதிக்கும் எனக்கும் பழக்கம் (வ.உ. சிதம்பரம் பிள்ளை), The Satanic Bible (Anton Szandor LaVey), என் குரல் (மாமல்லனின் ட்விட்டர் குறிப்புகளின் இரண்டு தொகுப்புகள்) நான் கண்ட மகாத்மா (தி.சு. அவிநாசிலிங்கம்), ரசவாதி (பாலோ கொயலோ), ஆரோக்கிய நிகேதனம் (தாராசங்கர் பந்தோபாத்யாய), பிரியத்தின் துன்பியல் (சி. சரவணகார்த்திகேயன்).

இவை அனைத்தையும்விடத் தனியே குறிப்பிட விரும்பும் ஒரு புத்தகம், லஷ்மி சரவணகுமாரின் ரூஹ். உண்மையில் லஷ்மியின் பிற அனைத்து எழுத்துகளைக் காட்டிலும் இது ஒரு படி மேலே. கதை, கலை, கட்டுமானம் அனைத்துமே சரியாகக் கூடி இருந்தது என்றாலும் அவற்றையெல்லாம் விட முக்கியமாக, சூஃபியிஸம் என்னும் சித்தாந்தத்தின் சுருதியை நாவலின் மொழியாக இதில் அவர் உருமாற்றியிருக்கிறார். (நான் சொல்ல வருவது புரிவதற்கு சூஃபியிசம் குறித்த எளிய அறிமுகமாவது தேவை. நாகூர் ரூமியின் புத்தகத்தைப் படிக்கலாம்.) உண்மையிலேயே இது ஒரு அசுர விளையாட்டு.

O

இந்த வருடம் எழுதியவற்றுள் மிகுந்த மன நிறைவளித்தது, ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம். இது பல்லாண்டுக் காலத் திட்டம். இந்தக் கட்டாய ஓய்வு வருடம் அதைச் சாத்தியமாக்கியது. இதற்குக் கிடைத்த வாசகர் எதிர்வினையும் மிகுந்த மகிழ்ச்சியளித்தது. சுமார் ஐம்பது கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் 30-35 பிரசுரித்திருக்கிறேன். இறவானுக்குப் பிறகு ஒரு நாவலை இரண்டு முறை எழுதத் தொடங்கி கணிசமான பக்கங்கள் சென்ற பின்பும் நிறுத்திவிட்டு, மீண்டும் ஒன்றைப் புதிதாக எழுத ஆரம்பித்தேன் (கபடவேடதாரி). ஜனவரி முதல் அது பிரசுரமாகும்.

அச்சுப் புத்தகமாக ஒன்றுகூட வரவில்லை. இது கடந்த இருபது வருடங்களில் முதல் முறை. தமிழ் பதிப்புத் துறையின் எதிர்காலம் சார்ந்து நிறையக் குழப்பங்கள் உருவாகியிருக்கின்றன. நிதானமாக, அமைதியாக, நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆறுதலாக கிண்டில் புத்தக வாசிப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. வெளிப்படையாகச் சொல்வதென்றால், ஊரடங்கு மாதங்களில் சொகுசு குன்றாமல் வாழத் தேவையான மொத்த வருமானமும் கிண்டில் மூலம் மட்டுமே கிடைத்தது.

O

கிருமி அளித்த தரிசனங்களுள் தலையாயது, மனிதனின் தேவைகள் வெகு சொற்பம் என்பது. இந்த வருடம் எனக்கு இது மாபெரும் பாடம். கொரோனாவுக்கு முன்பு எனக்கு இருந்த மாதச் செலவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வீடடங்கி இருந்த நாள்களில் ஆனது. அப்படியானால் அதுவரை செய்த செலவெல்லாம் அநாவசியமே அல்லவா?

ஊரடங்கு நாள்களில் வாரம் ஒரு முறை கறிகாய் வாங்கச் செல்வேன். ஒரு வாரத்துக்குரிய காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்துவிடுவேன். அதேபோல ஒரு வாரத்துக்குத் தேவையான பனீர். என் மனைவி மாதம் ஒருமுறை மளிகைப் பொருள்கள் வாங்குவார் (பாதாம் அந்தக் கணக்கில் சென்றுவிடும்) அவ்வளவுதான். இந்த இரு காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் நாங்கள் வெளியே போகவில்லை. எனவே,

1. சட்டை பேண்ட்களுக்கு இஸ்திரி போடும் செலவு இல்லை
2. வண்டிக்கு எரிபொருள் நிரப்பும் செலவு இல்லை
3. சினிமா, உணவகம் உள்ளிட்ட கேளிக்கைகள் எதுவும் இல்லை
4. வெளியூர்ப் பயணங்கள் இல்லை
5. அதிர்ஷ்டவசமாக மருத்துவச் செலவுகள் இல்லை

யோசித்துப் பார்த்தால் காய்கறி, மளிகை, பால் நீங்கலாக மின்சாரம், இண்டர்நெட், தொலைபேசிக் கட்டணங்கள் மட்டும்தான் இந்நாள்களில் நான் செய்த செலவு. ஒரு தண்ட செலவையாவது கண்டுபிடிக்க வேண்டுமென்றால், போகாத அலுவலகத்துக்கு வாடகை கொடுக்க வேண்டியிருந்ததைச் சொல்லலாம். ஆனால் அது தவிர்க்க முடியாதது. சிக்கனம் என்று திட்டமிடாமலேயே சிக்கனமாக இருக்கக் கற்றுத் தந்திருக்கிறது இந்த வருடம்.

O

தொழில் ரீதியில் மிகுந்த மனச் சோர்வளித்த ஆண்டு இது. கொரோனாவின் முதல் பலியாக பிப்ரவரி இறுதியில் கல்யாணப் பரிசு நெடுந்தொடர் முடித்துக்கொள்ளப்பட்டது. 1800க்கும் மேற்பட்ட எபிசோடுகள் கண்டு, அதன் பின்னும் சலிக்காமல் ஓடிய தொடர். (இதன் முதல் 30-40 எபிசோடுகள் நான் எழுதவில்லை. அதன்பிறகு எழுதத் தொடங்கி இறுதி வரை நானேதான் எழுதினேன். நடுவே 2017ல் என் அப்பா காலமானபோது இரண்டு மாதங்கள் விடுப்பில் இருந்தேன்.) எவ்வளவோ சரிவுகளை, ஏற்றங்களை வழி நெடுகக் கண்டது. உண்மையில் கல்யாணப் பரிசுக்கு எழுதிய அனுபவத்தை மட்டுமே ஒரு புத்தகமாக எழுத முடியும். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி அளித்த தொடர் அது. ஒரு கட்டத்தில் ஹீரோயினே இல்லாமல் இரண்டு மாதங்கள் கதையை நகர்த்தியிருக்கிறோம். ஹீரோயின் ஏன் இல்லை என்று யாருமே கேட்கவில்லை. அதை கவனிக்கக்கூட இடம் தராமல் அப்படியொரு பரபரப்பான திரைக்கதை அமைத்து (குமரேசன்) அடித்து விளையாடியிருக்கிறோம். அது நிறுத்தப்பட்ட விதம் என்னால் தாங்கவே முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்கு மேலாக எழுதிக்கொண்டிருந்த கண்மணி, கொரோனாவுக்குப் பிறகும் தொடர்ந்தது. ஆனாலும் அதற்கும் அகால மரணமே விதித்திருந்தது. ஆகஸ்டில் இருந்து சித்தி 2க்கு எழுத ஆரம்பித்தேன். வாணி ராணிக்குப் பிறகு மீண்டும் ராடன். மீண்டும் ராதிகா சரத்குமார். இந்த டிசம்பரில் இன்னொரு புதிய அழைப்பு வந்திருக்கிறது.

கொரோனா ஓய்வுக் காலம் ஓடிடி தொடர்களின் பக்கம் மக்களை மொத்தமாகச் சாய்த்துவிடும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. நானும் அதை நம்பினேன். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. தொலைக்காட்சித் தொடர்களின் ரேட்டிங் சென்ற வருடத்தைப் போலவேதான் உள்ளது. ஸ்லாட் லீடர்ஷிப் மட்டும் அவ்வப்போது மாறுகிறதே தவிர பார்வையாளர்கள் குறையவில்லை.

O

வழக்கம் போலத் திரைப்படங்கள் அதிகம் பார்க்கவில்லை. பார்த்தவரையில், ஐயப்பனும் கோஷியும் பிடித்தது. என் மனைவி வற்புறுத்தியதன் பேரில் இன்னொரு மலையாளப் படம் பார்த்தேன். பெயர் மறந்துவிட்டது. லட்சத் தீவுகளில் நடக்கும் கதை. அதுவும் நன்றாக இருந்தது. சூஃபியும் சுஜாதையுமில் சில காட்சிகளை மட்டும் திரும்பத் திரும்பப் பார்த்தேன். குறிப்பாக ஒற்றை விரலில் சூஃபி சுற்றிச் சுழலும் காட்சி. என் வாழ்வையல்லவா காட்சிப்படுத்திவிட்டார்கள்! அமேசான் ப்ரைமில் ஒரே ஒரு சீரிஸ் பார்த்தேன் (ஃபர்காட்டன் ஆர்மி). நெட்ஃப்ளிக்ஸில் ரஜனீஷ் பற்றிய தொடரில் பாதி பார்த்தேன். அவ்வளவுதான். இதனிடையே இரண்டு வெப் சீரிஸுக்கு எழுத வாய்ப்பு வந்தது. வேலை ஆரம்பித்ததே தவிர வேகம் எடுக்கவில்லை. காரணம், ஊரடங்கு. பொருளாதாரச் சரிவு. ஆனால் திட்டம் இன்னும் இறக்கவில்லை. எல்லாம் சரியாக நடந்தால் 2021ல் விவரம் சொல்கிறேன்.

O

இந்த வருடம் சில மாதங்கள் தவறினேனே தவிர, வீட்டில் இருந்த நாள்களில் பெரும்பாலும் ஒழுங்காக டயட் கடைப்பிடித்தேன். கொள்ளை நோய்க் காலத்தில் அதுதான் ஆரோக்கியத்தைக் காப்பாற்றியது. ஆனால் நடை நின்றுவிட்டது. அது மிகவும் அநியாயம். 2021ல் தினமும் ஒழுங்காக ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதைப் போலவே நாவல், சீரியல், எழுத்துப் பயிற்சியாகச் செய்யும் ஃபேஸ்புக் குறிப்புகள் போன்ற கமிட்மெண்ட்கள் நீங்கலாக தினமும் 300 சொற்கள் அளவுக்கு எதையாவது எழுதிவிட்டுத்தான் படுக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கிறேன்.

இந்தக் கிருமிக் காலம் மிகவும் அலுப்பாக இருக்கிறது. வரும் ஆண்டிலாவது இது முற்றிலும் ஒழிந்துவிடாதா என்று அடிக்கடி நினைக்கிறேன். எவ்வளவு மரணங்கள்! மரணத்தின் மீதிருந்த மரியாதையே போய்விட்டது.

ஒவ்வோர் ஆண்டும் இக்கட்டுரையை முடிக்கும்போது சென்னை புத்தகக் காட்சியில் சந்திப்போம் என்று எழுதி நிறைவு செய்வேன். இந்த ஆண்டு அது இல்லை. நண்பர்கள் அனைவரும் நோயற்று நலமாக வாழப் பிரார்த்தனை செய்து நிறைவு செய்கிறேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter