* அச்சுப்புத்தக வாசிப்பு அநேகமாக இல்லாமல் போய்விட்டது. காசு கொடுத்து வாங்கியவற்றுள் பலவற்றை இன்னும் எடுக்கவேயில்லை. ஆனால் நிறைய புத்தகங்களை மின் நூல் வடிவில் படித்து முடித்தேன். இனி புத்தகக் காட்சியில் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இது மின்நூல் வடிவில் வரும் சாத்தியம் உண்டா என்று ஒரு கணம் யோசித்துவிட்டே வாங்குவது என்று முடிவு செய்திருக்கிறேன். [மின் நூல்கள் வாங்குவதில் நிறையப் பணம் மிச்சம் பிடிக்க முடிகிறது என்பது துணைக் காரனம்]
* எப்போதும்போல் வருடம் முழுதும் எழுதியிருக்கிறேன். மொத்தமாக இந்த ஆண்டு நான்கைந்து நாள்கள் எழுதாமல் இருந்திருந்தால் அதிகம். ஆண்டுத் தொடக்கத்தில் சிறுகதை எழுதுவதில் இருந்த வேகம் யதி ஆரம்பித்ததும் ஓடிவிட்டது. எழுதியவற்றுள் மாலுமியும் ஆதி வராகமும் என் அளவில் மிகவும் திருப்திகரமாக இருந்தன.
* யதியை எழுதி முடித்ததைத் தனிப்பட்ட முறையில் மாபெரும் விடுதலையாக உணர்ந்தேன். ஆண்டு முழுதும் புத்தியை முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டு தூக்கத்திலெல்லாம் சொற்கள் ஓடிக்கொண்டே இருந்தன. பொதுவாக, எழுதுவது எனக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம். சொல்லுக்குச் சொல் நிறுத்தி ரசித்து ரசித்து எழுதுவேன். ஆனால் இந்நாவல் ஒரு பிசாசினைப் போல என்னைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே போனது. முடிக்கும்வரை, எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்க்கவேயில்லை. ஒரு நாவலை நாம் எண்ணிய வடிவில் எழுதி முடிக்கும்போது உண்டாகும் திருப்திக்கு நிகரே கிடையாது. அடுத்தவர் கருத்தெல்லாம் அப்புறம். என் திருப்தியே எழுத்தில் எனக்கு முக்கியம்.
* ஆறாண்டுக் காலமாக எழுதிக்கொண்டிருந்த வாணி ராணி தொலைக்காட்சித் தொடரை ஒரு வழியாக நிறைவு செய்து முற்றும் போட்டேன். இன்னும் ஓராண்டுக்கு முன்னதாக இது முடிந்திருந்தால் இன்னும் அழகாக, கட்டுக்கோப்புடன் நிறைவுற்றிருக்கும். இருப்பினும் கடைசிக் காட்சி வரை ஒழுக்கமாகவே எழுதினேன். தேசிய அளவில் இத்தனை நீண்ட காலம் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு முதலிலிருந்து இறுதிவரை எழுதியவர் வேறு யாருமில்லை என்கிறார்கள். மகிழ்ச்சி.
* வழக்கத்துக்கு அதிகமாக இந்த ஆண்டு படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் 96 தவிர வேறெந்தப் படமும் நினைவில் இல்லை. கடுப்பு மேலோங்கும் பொழுதெல்லாம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துச் சிரித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். சமீப வருடங்களில் இந்தளவு கவலை மறந்து சிரிக்க வைத்த இன்னொரு படம் எனக்கு வாய்க்கவில்லை. [இந்தப் படத்தை சுமார் 50 முறையும் 96ஐ சுமார் 20 முறையும் முழுதாகப் பார்த்திருப்பேன். நடிகையர் திலகத்தில் ஒரு கண்ணில் மட்டும் இரண்டு சொட்டு நீர் வரும் காட்சியை மட்டும் சுமார் 30 முறை.]
* பேலியோ டயட் தொடர்கிறது. முன்னளவு நூறு சதவீத விசுவாசியாக இல்லை என்றாலும் கூடியவரை டயட் கடைப்பிடிக்கிறேன். மாதத்தில் 25 தினங்களாவது ஒழுக்கமாக இருக்கிறேன். ஆனால் நடை ஒழுக்கம் போய்விட்டது. #100daysrunningchallengeல் பங்குபெற்றவரை ஒழுங்காகத்தான் நடந்துகொண்டிருந்தேன். அதன்பின் கெட்டுவிட்டது. சில நாள் சரியாக நடக்கிறேன். சில நாள் முடிவதில்லை. புத்தாண்டில் நாள் தவறாமல் குறைந்தது ஐந்து கிலோ மீட்டராவது நடக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
* வாணி ராணிக்காக சன் விருது, பூனைக்கதைக்காக வாசகசாலை விருது.
* வேலைக்கு நடுவே சும்மா பொழுதுபோக்காக ஃபேஸ்புக்கில் எழுதியவற்றைத் தொகுத்து கிண்டிலில் ஒரு புத்தகமாகப் போட்டேன். [பதினான்காம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்] இது நம்ப முடியாத அளவுக்கு வரவேற்பும் விற்பனையும் கண்டது. ஃபேஸ்புக் தவிர வேறு எங்கும் இதற்கு விளம்பரம் கிடையாது, மதிப்புரைகள் கிடையாது, ஒன்றும் கிடையாது. அதுவும் கடந்த ஐந்தாறு மாதங்களில் இதைப் பற்றி நான்கூடப் பேசவில்லை. ஆனாலும் ஆண்டிறுதிக் கணக்கெடுப்பில் இந்நூல் பெற்றிருக்கும் விற்பனை திகைக்கச் செய்துவிட்டது. ஒரு புன்னகையைத் தட்டியெழுப்பக்கூடிய எதையும் மக்கள் நிராகரிப்பதில்லை.
* ஐந்தாண்டுகளாகத் தொடரும் கல்யாணப் பரிசு தொடரின் இரண்டாம் பாகத்துக்கும் நானே தொடர்ந்து எழுதுகிறேன். புதிதாக, ‘கண்மணி’ ஆரம்பமாகியிருக்கிறது. யதி எழுதி முடித்ததைக் கொண்டாடும் பொருட்டு சிறு நாவலொன்றை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இப்போதைய தலைப்பு Fake Id. இது மாறுதலுக்குட்பட்டது.
* சென்ற ஆண்டு நேரடி மின் நூல்களாகக் கொண்டு வர நினைத்து முடியாமல் போன மூன்று புத்தகங்களை 2019ல் கொண்டுவந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். இனி என்ன எழுதினாலும் முதலில் கிண்டில் மின் நூல். அப்புறம்தான் அச்சு.
* வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். நான்காம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் காட்சியில் சந்திப்போம். யதிக்கு முன்னுரை எழுதியவர்களில் யாரையாவது அங்கே சந்திக்க நேர்ந்தால் ‘மாலுமி’ சிறுகதைத் தொகுப்பை அன்பளிப்பாகத் தருவேன். மற்றவர்கள் காசு கொடுத்து வாங்கினால் ஆட்டோகிராஃப் போட்டுத் தருவேன்.