இந்த வருடம் என்ன செய்தேன்? – 2017

இப்போதெல்லாம் ஒரு வருடத்துக்கும் இன்னொரு வருடத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. ஒரு கட்டத்துக்கு அப்பால் வாழ்க்கையே இந்த மாதிரி தன்னியல்பான வடிவம் எய்திவிடும் போலிருக்கிறது. துயரங்களின் அளவு மட்டும் சிறு வித்தியாசம் காட்டுகிறது. ஒரு வருடம் அதிகமாக. இன்னொரு வருடம் சற்றுக் குறைவாக.

ஒன்றும் பிரச்னையில்லை. வாழ்வது ஒன்றும் அத்தனை சிரமமானதல்ல.

  • இந்த வருடம் சில மரணங்கள் என்னை மிகவும் பாதித்தன. என் தந்தை, அசோகமித்திரன், முத்துராமன். மூவருமே என் வாழ்வில் தனி ஆதிக்கம் செலுத்தியவர்கள். வேறு வேறு விதமாகத்தான் என்றாலும் தவிர்க்க முடியாதவர்கள். முன்னெப்போதும் இப்படி மூன்று முழுத் துயரங்கள் மொத்தமாக இருந்ததில்லை என்று நினைக்கிறேன். எப்படியோ மீண்டேன்.
  • வருட மத்தியில் வந்த ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு நிறைவை ஒட்டி எழுதிய பொலிக பொலிக தொடரும் வருடக் கடைசியில் எழுதி முடித்த பூனைக்கதை நாவலும் மிகுந்த மன நிறைவைத் தந்தன. எண்ணிப்பார்த்திராத வகையில் ஏராளமான புதிய வாசகர்களை அறிமுகப்படுத்திய ருசியியல், இத்தலைமுறை வாசகர்களின் ஆர்வமும் அக்கறையும் சார்ந்த சில எளிய தரிசனங்களை அளித்தன.
  • இந்த ஆண்டு முழுதும் வாணி ராணி எழுதினேன். அதைத் தவிர வேறு சின்னத்திரைத் தொடர்கள் எதையும் ஒப்புக்கொள்ளவோ எழுதவோ இல்லை. இதன்மூலம் கிடைத்த கூடுதல் நேரத்தில் நிறைய படித்தேன். அதர்வ வேதத்தை முழுமையாக ஒருமுறை வாசித்ததும் ராமானுஜரின் ஶ்ரீபாஷ்ய உரையை முக்கால்வாசி முடித்ததும் என்னளவில் பெரிய விஷயம். புரியாத பல விஷயங்களைத் தனியே எழுதி வைத்திருக்கிறேன். மீண்டும் சிலமுறை முட்டிக்கொண்டால் புரியும்.
  • படிக்க நினைத்து, தொடக்கூட முடியாமல் போனது கும்பகோணப் பதிப்பு மகாபாரதம். அடுத்த வருடம் படிக்க வேண்டும்.
  • சென்றவருடம் வாசிக்க ஆரம்பித்து மொழிபெயர்ப்பு இம்சைகளால் பாதியில் கடாசிய சில நாவல்களை இந்த வருடம் முடித்தேன். முக்கியமாக ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு, பனி. இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன [மொழிபெயர்ப்பல்ல]. மிகவும் எதிர்பார்த்து வாசித்த ஹாருகி முரகாமி, மிகவும் ஏமாற்றினார். பெற்ற புகழ் அளவுக்குப் பெரிய கலைஞனெல்லாம் இல்லை என்று தோன்றியது. ஒரு அசோகமித்திரன், ஒரு சுந்தர ராமசாமி  தரத்துக்கு ஐம்பது கிலோமீட்டர் நெருக்கத்தில்கூட இல்லை.
  • உணவுக் கட்டுப்பாடும் எளிய நடைப்பயிற்சியும் இந்த ஆண்டும் தொடர்கின்றன. சென்ற வருடத்தைப் போல எடையிழப்பு பெரிதாக இல்லை என்றாலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதே போதுமானதாக உள்ளது.
  • இந்த வருடம் பலமுறை முயன்று தோற்றது ஒரு விஷயத்தில் மட்டும். அது கார் ஓட்டுவது. ஒழுங்காக ஓட்டக் கற்றுக்கொண்டு லைசென்ஸ் வாங்கிய பிறகும் வண்டியை எடுக்க ஏதோ ஒரு தயக்கம் உள்ளது. இது ஒரு மனத்தடைதான் என்று தெரியும். ஒழுங்காக தினமும் ஓட்டினால் சரியாகிவிடும் என்பதும் தெரியும். இருந்தாலும் செய்யாமல் இருக்கிறேன். முறைப்படி கற்றுக்கொள்ளாமலேயே நீச்சலடிப்பில் தேர்ச்சி பெற்றவன் நான். கார் ஓட்டுவது அதைவிடச் சிரமமா என்ன? இருக்காது என்றே நினைக்கிறேன். அடுத்த வருடம் இதை வென்றுவிடுவேன்.
  • கிண்டிலில் எழுத்தாளர்கள் நேரடியாக மின் நூல்களை வெளியிட அமேசான் வழி செய்ததை அடுத்து சில எளிய பரிசோதனைகளை மேற்கொண்டேன். இது முற்றிலும் எதிர்பாராத புதிய திறப்புகளை அளித்தது. பல புதிய வாசகர்கள், மின் நூல் விற்பனை, உடனடி ராயல்டி என்று மகிழ்ச்சியளித்தது. சில எழுத்தாள நண்பர்களுக்கு இதனை அறிமுகம் செய்து வைத்தேன். மாமல்லன் இதனை ஓர் இயக்கமாகவே முன்னெடுக்கத் தொடங்கி விக்கிரமாதித்தன், ரமேஷ் பிரேதன், எஸ்ரா என்று பலரை கிண்டிலுக்கு இழுத்து வந்தது பெருமகிழ்ச்சியளித்தது. வரும் ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். அதிகரிக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்கூட.
  • அச்சு நூல்கள் வாங்குவதற்கான செலவில் கிட்டத்தட்ட சரிபாதியே மின்நூல்களை வாங்கி வாசிக்க ஆகும். தமிழில் வாசிப்பு அருகி வருவதன் பல்வேறு காரணங்களில் அதிக விலையும் ஒன்றென்றால், அதைக் குறைக்க இம்முயற்சி உதவும். அடுத்த வருடம் ஒரு சில நேரடி மின் நூல்களை வெளியிட்டு அதன்பின் போதிய இடைவெளியில் அவற்றை அச்சு நூலாகக் கொண்டுவர எண்ணியிருக்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். ஜனவரி 10 முதல் நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சியில் சந்திப்போம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter