அசோகமித்திரன் – மூன்று குறிப்புகள்

அசோகமித்திரனைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு ம.வே. சிவகுமார் மூலம் கிடைத்தது. ‘ஒரு வருஷம் டைம் ஃப்ரேம் வெச்சிக்கடா. வேற யாரையும் படிக்காத. அசோகமித்திரன மட்டும் முழுக்கப் படி. சீக்கிரம் முடிச்சிட்டன்னா, ரெண்டாந்தடவ படி. அவரப் படிச்சி முடிச்சிட்டு அதுக்கப்பறம் எழுதலாமான்னு யோசிக்க ஆரம்பி’ என்று சிவகுமார் சொன்னார்.

உண்மையில் அசோகமித்திரனை முழுக்கப் படிக்கும் ஒருவருக்கு எழுதலாம் என்ற எண்ணம் இருந்தால் அது சற்று வடியும். அவரளவு எளிமை, அவரளவு உண்மைக்கு நேர்மை, அவரளவு சூசகம், அவரளவு செய்நேர்த்தி மிக அபூர்வம்.

கணையாழியில் என் முதல் கதை வெளியானபோது, அதை அவர் படித்துப் பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஒரு பிரதியுடன் அவர் வீட்டுக்குச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு கதையைக் கொடுத்தேன். ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தார். சிரித்த மாதிரி இருந்தது. ஆனால் சிரித்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கதையைப் படிக்க ஆரம்பித்தார்.

அது இரண்டு பக்கக் கதைதான். படித்து முடிக்க இரண்டு நிமிடங்கள் போதும். ஆனால் அவர் ஐந்து நிமிடங்களுக்குமேல் அதைப் படித்துக்கொண்டிருந்தார். முடித்ததும் நிமிர்ந்தார். இப்போது பளிச்சென்று சிரித்தார்.

‘நல்லாருக்கா சார்?’

‘நிறைய எழுதிண்டே இரு’ என்று சொல்லி, புத்தகத்தை என் கையில் திருப்பிக் கொடுத்தார். அவரது ஆசியும் கதை குறித்த விமரிசனமும் அந்த ஒரு வரிக்குள் முடிந்துவிட்டன.

பின்பொரு சமயம் அவரது ஒற்றன் நாவலில் வருகிற ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அந்தப் பாத்திரம் ஒரு நாவலாசிரியன். அயோவா நகரத்தில் ஒரு சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்கு வந்துவிட்டு, அறைக்கதவை மூடிக்கொண்டு நாவல் எழுதுகிற பாத்திரம். அயோவாவில் இருந்த காலம் முழுதும் அவன் அறையைவிட்டு வெளியே வரவே மாட்டான். தனது நாவலுக்காகப் பிரமாதமாக ஸ்கெட்ச் எல்லாம் போட்டு, ஒரு சார்ட் வரைந்து ஒட்டி வைத்திருப்பான். எந்த அத்தியாயத்தில் என்ன நடக்கிறது, யார் யார் வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்பது வரை அந்த சார்ட்டில் இருக்கும்.

அப்படியொரு சார்ட் தன்னால் தயாரிக்க முடியாதது பற்றி அசோகமித்திரன் வருத்தப்படுவார்.

அந்த அத்தியாயத்தின் இறுதியில் அந்த நாவலாசிரியன் தனது நாவலை எழுதியும் முடிப்பான்.

நான் அசோகமித்திரனிடம் கேட்டேன், ‘அது உண்மையா சார்? அப்படி ஒரு மனிதன் நாவலை சார்ட்டுக்குள் அடைத்தானா? சார்ட்டில் குறித்தவற்றை நாவலுக்குள் கொண்டு வந்தானா? அது நடந்த சம்பவம்தானா?’

‘ஆமாமா. அவன் அப்படித்தான் எழுதினான் அன்னிக்கு. அது ஒரு வார் நாவல். என்ன ஒண்ணு, அது சரியா அமையல.’

மீண்டும் ஒரே வரி. அனுதாபமும் விமரிசனமும் ஒருங்கே தெரிகிற வரி.

எழுத ஆரம்பித்த புதிதில் இரண்டு பேர் எனக்கு இங்கே பேருதவி புரிந்திருக்கிறார்கள். ஒருவர் அசோகமித்திரன். இன்னொருவர் இந்திரா பார்த்தசாரதி. மிகவும் சுமாராக எழுதக்கூடிய ஒரு சிறுவனாகத்தான் நான் இந்த இரு பெரியவர்களுக்கும் அறிமுகமானேன். ஆனால் பெருந்தன்மையுடன் இந்த இரண்டு பேருமே என்னை அன்று அரவணைத்தார்கள். உன்னோடெல்லாம் உட்கார்ந்து பேசினால் நேரம் வீண் என்று என்றுமே அவர்கள் கருதியதில்லை.

குருமார்கள் சொல்லித்தருவதில்லை. தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். எனக்கு அசோகமித்திரனும் இந்திரா பார்த்தசாரதியும் அப்படியொரு வாய்ப்பை அன்று வழங்கினார்கள்.

தமது கட்டுரைகள் அனைத்தும் ஒழுங்காகத் தொகுக்கப்பட்டு, நேர்த்தியான நூலாக வரவேண்டும் என்று அசோகமித்திரன் விரும்பினார். கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்த புதிதில் அந்தப் பணியை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர் விரும்பியபடி ‘இண்டக்ஸ்’ உடன் கூடிய அவரது கட்டுரைத் தொகுப்புகள் இரு பாகங்களைக் கொண்டுவந்தோம். இண்டக்ஸ் உண்டாக்கும் பணியைச் செய்தவர் பத்ரி. சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் அளவுள்ள வால்யூமுக்கு இண்டக்ஸ் தயாரிப்பது என்பது பைத்தியம் பிடிக்க வைக்கிற வேலை. ஆனால் அசோகமித்திரன் அதை மிகவும் விரும்பினார். அம்மாதிரியான ஒரு நூலுக்கு அது அவசியம் என்று கருதினார். அவர் எண்ணியபடியே அத்தொகுப்புகள் வெளிவந்தன.

பிழை திருத்தி, எடிட் செய்யும்போது மொத்தமாக வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எந்த ஒரு தமிழ் எழுத்தாளரும் எக்காலத்திலும் ஆணவம் கொள்ளவே முடியாமல் கதவை இழுத்து மூடச் செய்கிற ஒரு வேலையை அவர் செய்திருப்பது புரிந்தது. தன் வாழ்நாளெல்லாம் தேடித் தேடிப் படித்தறிந்த எத்தனையோ மகத்தான விஷயங்களைப் பற்றி உள்ளார்ந்த அக்கறையுடன் அவர் அந்தக் கட்டுரைகளில் விவரித்திருந்தார். கலை, இலக்கியம், சினிமா மட்டுமல்ல. வாழ்வை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் அல்லது தொட்டுச் செல்லும் அனைத்தைக் குறித்தும் அவர் ஒருவரியாவது எழுதியிருப்பது புரிந்தது.

அசோகமித்திரன் எழுத்தைப் பற்றி ஒரு சொல்லில் என்னால் குறிப்பிட முடியும். பரிவு.

இது ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான பரிவாக உள்ளதாலேயே அவர் எக்காலத்துக்குமான, எல்லா தலைமுறைக்குமான கலைஞனாகிப் போகிறார்.

(மார்ச் 31 அன்று விருட்சம் அழகியசிங்கர் நடத்திய அசோகமித்திரன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் வாசிப்பதற்காக எழுதியது. துரதிருஷ்டவசமாகக் கூட்டத்துக்கு என்னால் செல்ல முடியவில்லை. இக்கட்டுரையைக் கூட்டத்தில் என் நண்பர் பத்ரி வாசித்தார்.)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி