ஒரே ஒரு அறிவுரை

எலும்புகளை ஒரு சட்டியில் போட்டு வைத்திருந்தார்கள். அவை சூடாக இருந்தன. எட்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவாக இருந்து, பிறகு பிரேதமாகி, இப்போது ஒரு சிறு மண் சட்டிக்குள் அவர் எலும்புத் துண்டுகளாக இருந்தார். சாம்பல் குவியலில் இருந்து பொறுக்கியெடுத்தவர் கைகள் சுட்டிருக்கும். காரியம் முடியவே ஆறு மணிக்குமேல் ஆகிவிட்டபடியால் உடனடியாக இடத்தைக் காலி பண்ணவேண்டியிருந்தது. சுடுகாட்டு ஊழியர்களுக்கும் வீடு வாசல் உண்டு. பணிக்கு அப்பால் வாழ்க்கை உண்டு. பிணங்களோடு புழங்கினாலும் அவர்களும் வாழத்தான் வேண்டும்.

இடது கைய பால்ல நனைச்சிக்கோங்கோ. அப்படியே ஒவ்வொரு எலும்பா எடுத்து அந்தப் பானைல போடுங்கோ.

நான் இடது கையைப் பாலில் நனைத்துக்கொண்டேன். மண் சட்டியில் கை வைத்தேன். எலும்புகள். அனைத்துமே விரலளவு நீளத்தில்தான் இருந்தன. எடுத்துச் சென்று கடலில் சேர்க்கத் தோதாக உடைத்திருப்பார்களாயிருக்கும். அப்பா வலியற்ற வெளியில் இருந்து பார்த்திருப்பாரா? உடைக்காதே அது என் எலும்பு என்று மௌனமாகச் சொல்லியிருப்பாரா? வாழ்நாள் முழுதும் எத்தனையோ வேலை மாற்றங்கள், வீடு மாற்றங்கள். இதுவும் மாற்றம்தான் என்று உணர்ந்திருப்பாரா? ஆனால் கட்டாய வெளியேற்றம். அதில் சந்தேகமில்லை. அவருக்கு வாழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். படுத்துக்கொண்டே இருந்தாலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கவேண்டும். வாழ்வின்மீது அப்படியொரு தீரா ருசி.

ம், எடுங்கோ.

நான் சட்டிக்குள் கையைவிட்டுத் துழாவிப் பார்த்தேன். எது அப்பாவின் விரல் எலும்பாயிருக்கும்? எது கழுத்தெலும்பாயிருக்கும்? வருடக்கணக்கில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருந்த மனிதரின் நெஞ்செலும்பு, தோலைத் தாண்டித் தெரிய ஆரம்பித்திருந்ததை நினைத்துக்கொண்டேன். அப்பா தன் நெஞ்சைத்தான் பொக்கிஷம்போல் பாதுகாத்து வந்தார். இருபது வருடங்களுக்கு முன்னர் வந்த நெஞ்சு வலியின் விளைவு. மருத்துவமனையில் ஒருவாரம் படுத்திருந்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது சார்பிட்ரேட் என்ற மாத்திரையை ஒரு சிறு பிளாஸ்டிக் கவரில் போட்டு, ஸ்டாப்லர் பின் அடித்து இடுப்பு பெல்ட்டில் சேர்த்துக் கட்டிக் கொண்டார்.

மிஸ்டர் பார்ஸார்தி, இந்த மாத்திரை எப்பவும் உங்களோட இருக்கணும். எப்ப நெஞ்சு வலிக்கற மாதிரி இருந்தாலும் சட்டுனு ஒண்ண எடுத்து நாக்குக்கு அடில போட்டுருங்க. உடனே கெளம்பி ஹாஸ்பிடல் வந்துருங்க.

டிஸ்சார்ஜின்போது டாக்டர் சொல்லி அனுப்பியதை அவர் சிரத்தையாகக் கடைப்பிடிக்க முடிவு செய்தார். மறுநாள் குளித்துவிட்டு வந்து வேட்டி கட்டி பெல்ட்டைப் போட்டதும் மறக்காமல் மாத்திரை கவரை எடுத்து சொருகிக்கொண்டார். காலை வாக்கிங் கிளம்பும்போது இடுப்பைத் தொட்டுப் பார்த்துக்கொள்வார். வெளியே எங்கு போனாலும் இடுப்பில் பெல்ட் இருக்கும். அதில் சார்பிட்ரேட் கவர் இருக்கும். வேட்டி கட்ட மறந்தாலும் பெல்ட் கட்ட மறந்ததில்லை.

மாத்திரைகளால் ஆனது அவர் உலகம். இதயத்துக்கானவை. சிறுநீரகங்களுக்கானவை. நீரிழிவுக்கானவை. ரத்தக் கொதிப்புக்கானவை. நரம்புத் தளர்ச்சிக்கானவை. பொதுவான சத்து மாத்திரைகள். உறக்கத்துக்கொன்று. உலவிக்கொண்டிருக்க ஒன்று. உணவுக்கு முந்தைய மாத்திரைகளும், உணவுக்குப் பிந்தைய மாத்திரைகளும். ஒரு நாள் என்பது மூன்று வேளைகளால் ஆனது. மூன்று வேளை என்பது இருபத்தியேழு மாத்திரைகளால் ஆனது. உணவு அவருக்குப் பொருட்டில்லை. கரைத்த அரை தம்ளர் ரசம் சாதம் போதும். ஆனால் மாத்திரைகள் முக்கியம்.

இவ்ளோ மாத்திரை எதுக்குப்பா? விட்டுத் தொலையேன்? இனிமே இதெல்லாம் உன் உடம்புக்கு உதவும்னு எனக்குத் தோணலை.

என்றோ ஒருநாள் சொன்னேன். புன்னகை செய்தார். அவரால் என்னையும் விடமுடியாது; மாத்திரைகளையும் விடமுடியாது என்று எனக்குத் தெரியும். மாத்திரையாவது பல ஆண்டுகள் அவரை உயிரோடு இருக்கவைத்தன. நான் பத்து காசுக்குப் பெறாதவன். மானசீக பலம் என்பதைத் தாண்டி வேறெதையும் தராதவன். அவரை எழுப்பி நிமிர்த்தி டாய்லெட்டுக்கு அழைத்துச் செல்லவும் வக்கற்றவன். என் தம்பி செய்வான். சலிக்காமல் செய்வான். அசிங்கம் பார்க்கமாட்டான். நாற்றம் பொருட்படுத்தமாட்டான். சற்றும் ஒத்துழைக்காத அவரது உடலை ஓர் இரும்புக் கழிபோல் கையாளத் தெரிந்தவன். ஒரு நாளில் இருபது முறை கழிப்பறைக்கு அழைத்துப் போவான். ஒரு கையால் நிமிர்த்திப் பிடித்துக்கொண்டு மறு கையால் சவரம் செய்துவிடுவான். உடம்பெங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட புண்களைத் துடைத்து மருந்து போட்டு, அது கலையாதிருக்க மேலுக்கு பவுடர் போட்டுப் படுக்கவைப்பான். நாலு ஜோக்கடித்து சிரிக்கவைத்துவிட்டு ஆபீசுக்குக் கிளம்பிப் போவான்.

நினைத்துப் பார்த்தால் எனது இயலாமை சில சமயம் சங்கடமாக இருக்கும். அப்பா என்கிற மனிதரை என்னால் படுத்த கோலத்தில் ஏற்க முடியாததே காரணம் என்று தோன்றுகிறது. நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ஒரு விரைவு ரயிலைப் போலத்தான் என் மனத்தில் அவர் பதிந்திருக்கிறார்.

அவர் இறந்த தகவல் அறிந்து அவரிடம் படித்த மாணவர்கள் பலபேர் வீட்டுக்கு வந்திருந்தார்கள். டெரர் சார் உங்கப்பா. என்னா விரட்டு விரட்டுவாரு! அவருகிட்ட வாங்கின அடியெல்லாம் மறக்கவே முடியாது சார். அன்னிக்கி அவர கண்டாலே பிடிக்காது எங்களுக்கெல்லாம். ஆனா இப்ப நெனச்சிப் பாக்குறோம் சார். அந்த அடி அன்னிக்கி அவர் அடிச்சி கத்துத் தரலன்னா இன்னிக்கி நாங்க திங்கற சோறு எங்களுது இல்ல.

அப்பா டெரர்தான். சந்தேகமில்லை. தன்னிடம் படித்த மாணவர்களுக்கு மட்டுமில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் அப்படித்தான் இருந்தார். அவர் இருக்கும் இடத்தில் அடுத்தவர் குரல் அவ்வளவாகக் கேட்காது. அனைத்திலும் ஒரு ராணுவ ஒழுங்கு எதிர்பார்த்துக் கடைசி வரை போராடித் தோற்றவர் அவர். ஏதோ ஒரு கட்டத்தில் என் ஒழுங்கீனங்களை ரசிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் சொல்லிக் கொடுத்த அனைத்திலும் அவசியத்துக்கேற்ற மாறுதல்கள் செய்து, என் வாழ்வை நானே வடிவமைக்கத் தொடங்கியபோது முதலில் அவர் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. இருந்துட்டுப் போகட்டுமே, என்ன இப்ப?

மனோகர் அப்போதெல்லாம் அடிக்கடி என் வீட்டுக்கு வருவான். பதினைந்து வயது இருக்குமா அப்போது? அன்று எனக்கு அவந்தான் நண்பன். அவன் ஒரு பெண்ணை அப்போது தீவிரமாகக் காதலித்துக்கொண்டிருந்தான். அவள் பெயர் மீரா. டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் பழக்கம்.

டேய் ராகவா, ஒரு ஹெல்ப் பண்ணுடா. அவகிட்ட என் லவ்வ எப்படி சொல்றதுன்னு தெரியல. கவிதையா ஒண்ணு எழுதிக் குடுடா. அது ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கறேன்.

என்னையும் மதித்து ஒரு படைப்பைக் கேட்ட முதல் மனிதன் அவன். பின்னாளில் எத்தனையோ பத்திரிகை ஆசிரியர்கள், திரைப்பட இயக்குநர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் எழுதக் கேட்டதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி அவன் தான்.

அதற்கென்ன கவிதைதானே. எழுதினால் போயிற்று.

அன்றிரவே ஒரு எண்சீர் விருத்தம் எழுதினேன். நாலைந்து முறை படித்து திருத்தங்கள் செய்து, பிரதியெடுத்து மறுநாள் அவனிடம் கொடுத்தேன்.

ரொம்ப தேங்ஸ்டா.

அன்றிரவு என் மூலப்பிரதியை என் தம்பி பார்த்துவிட்டான். அம்மா, இந்த அக்கிரமத்த பாத்தியா? இவன் கெட்ட கேட்டுக்கு லவ்வு பண்றானாம் லவ்வு.

வீடு உக்கிரமடைந்த தினம் அன்று. யார் அந்த மீரா? எத்தனை நாள் பழக்கம்? படிக்கிற வயதில் எதற்கு இந்த அசிங்கமெல்லாம்? மானம் போயிற்று. மரியாதை போயிற்று. நீயெல்லாம் ஒரு மகனா? உன்னை இனி இங்கு வைத்திருப்பதே சரியில்லை. வம்சத்திலேயே இல்லாத கொலை பாதகத்தைச் செய்திருக்கிறாய். அப்பா வரட்டும், இன்று இருக்கிறது கச்சேரி.

அம்மா ஊருக்கே கேட்கிறபடி கத்தித் தீர்த்தாள். என்னை ஒரு வினாடி பேச அனுமதித்திருக்கலாம். மீரா எனக்குத் தெரிந்த பெண் தான். ஆனால் அவளை நான் காதலிக்கவில்லை. மனோகரின் காதலுக்கு ஒரு சிறு கவியுதவி மட்டுமே நான் செய்திருக்கிறேன்.

சொல்லியிருப்பேன். சொன்னால் நம்புவாளா என்று சந்தேகமாக இருந்ததால் அமைதியாகவே இருந்துவிட்டேன். குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது மனத்துக்குத் தெரிந்துவிட்டால் நமக்குக் கொந்தளிப்பு கிடையாது.

அன்று அம்மாவை சமாதானப்படுத்த அக்கம்பக்கத்துப் பெண்களெல்லாம் தேவைப்பட்டார்கள். என் தம்பி மிகவும் மெனக்கெட்டான். யார் யாரோ எனக்கு அறிவுரை சொல்லிவிட்டுப் போனார்கள். அப்பா பேரைக் கெடுக்காதே. கௌரவமான கல்வியாளர். வாத்தியார் பிள்ளை மக்காக இருந்தால் பரவாயில்லை. ஆனால் பொறுக்கி என்று பேரெடுத்துவிட்டால் சிக்கல்.

இரவு அப்பா வீட்டுக்கு வந்ததும் என் ரஃப் நோட் அவர்முன் எடுத்து வைக்கப்பட்டது. கடைசிப் பக்கத்தைப் பாரீர். அதிலுள்ள கவிதையைப் பாரீர். இந்தக் கயவனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று முடிவு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.

அப்பா அந்தக் கவிதையைப் படித்தார். என்னை ஒரு பார்வை பார்த்தார். பயமாக இருந்தது. நோட்டை மூடி வைத்துவிட்டு, டிபன் ரெடியா என்று போய்விட்டார்.

மறுநாள் காலை நான் சீக்கிரம் எழுந்துவிட்டேன். அப்பா வாக்கிங் கிளம்பும் முன் படிக்கிற பாவனையில் மொட்டை மாடிக்குப் போய்விடுகிற உத்தேசம். பின்புறம் பல் துலக்கிக்கொண்டிருந்தபோது அப்பா வந்தார். மீண்டும் பயமாக இருந்தது.

நீதான் எழுதினியா.

ஒரு கணம் யோசித்திருப்பேன். பொய் இவரிடம் செல்லாது என்று தோன்றியது. எனவே ஆமாம் என்று சொன்னேன்.

மேற்கொண்டு மனோகரைப் பற்றியும் அவனது காதலைப் பற்றியும் சொல்ல ஆயத்தமாவதற்குள் அவர் சொன்னார். விருத்தம் நல்லா வருது ஒனக்கு. ஆனா அங்கங்க சந்தம் இடிக்கறது. அத மட்டும் பாத்துக்கோ.

எடுங்கோ சுவாமி. தயங்கிண்டே இருந்தா காரியம் நடக்காது.

இரண்டு எலும்புத் துண்டுகளை எடுத்துப் போட்டுவிட்டு அடுத்ததில் கையை வைத்தபோது அப்பா கூப்பிட்டார்.

ராகவா, உன் பெண்டாட்டி தைரியசாலிதான். ஆனா அந்த தைரியத்துலயே தொடர்ந்து அபத்தமா பண்ணிண்டே இருக்காத. பாத்துக்கறதுக்கு நீ இருக்கன்ற தைரியம் அவளுக்கு அப்பப்பவாவது வரணும்.

அப்பாதான் சொல்கிறாரா? ஆனால் அந்தச் சொற்கள் அவருடையவைதான். சந்தேகமில்லை. ஒரு விபத்தில் கால் உடைந்து மாதக்கணக்கில் படுத்திருந்தபோது அவர் சொன்னது. வண்டி ஓட்றப்ப நிதானமா ஓட்டு. யாரையும் யாரும் முந்த முடியாது. அதுக்கு அவசியமும் இல்ல. வேகமா போறது முக்கியமில்ல. போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்றதுதான் முக்கியம்.

எலும்பு உடைந்து கட்டுப்போட்ட என் காலை அவரது கரம் தன்னியல்பாக வருடிக்கொண்டிருந்ததைக் கண்டேன். கட்டின் கனத்தால் அப்போது ஸ்பரிசம் உணரமுடியவில்லை. இப்போது அது வலித்தது. மயானத்து வேலையாள் துண்டுகளாக உடைத்தபோது அவருக்கு வலித்திருக்குமா?

பானையை ஒரு துணியில் சுற்றி முடிந்தார்கள். ஒரு மூட்டையாகக் கையில் கொடுத்தார்கள்.

வழில எங்கயும் நிக்காதிங்கோ. நேரா கடற்கரைக்குப் போயிடுங்கோ. முழங்கால் ஜலத்துல நின்னா போதும். பின்பக்கமா போடணும். திரும்பிப் பாக்கப்படாது. போட்டுட்டு அப்படியே முக்கு போட்டுட்டு வந்துடுங்கோ.

மடியில் அப்பாவை வைத்துக்கொண்டு காரில் அமர்ந்தபோது அவர் சொன்னார். நீ எழுதறவன். உன் அவுட்லெட் ஒனக்குத் தெரியும். அவளுக்கு அவுட்லெட் நீ ஒருத்தன் தான். அவ என்ன சொன்னாலும் கேட்டுக்கோ. திட்டினா பொறுத்துக்கோ. திருப்பித் திட்டாத. என்ன கோவம் வந்தாலும் கைய மட்டும் நீட்டாத. பொண்டாட்டிய அடிக்கறது மாதிரி ஒரு அசிங்கம் இந்த உலகத்துலயே கிடையாது. அதவிட பெரிய பாவம் வேற எதுவும் கிடையாது.

தனது வலுமிக்க பிரம்படிகளால் தான் உத்தியோகம் பார்த்த அத்தனை பள்ளிக்கூடங்களிலும் அவர் இன்றுவரை நினைவுகூரப் படுகிறவர். நானும் அடி வாங்கியிருக்கிறேன். பள்ளி நாள்களில் விரட்டி விரட்டி அடித்திருக்கிறார். எல்லாம் ஆங்கில இலக்கணப் பிழைகள் சார்ந்த அடிகள். ஆனால் ஐம்பத்து எட்டாண்டுக்கால மணவாழ்வில் அம்மாவை அவர் அடித்ததோ, வலிக்குமளவுக்குத் திட்டியதோ இல்லை. ஒருநாளும் இல்லை.

வாழ்நாளில் அப்பா எனக்கு அளித்த ஒரே அறிவுரை அதுதான். என்ன ஆனாலும் மனைவியைக் கைநீட்டாதே.

இல்லப்பா. இருவது வருஷமாச்சு. இன்னிக்கு வரைக்கும் அப்படி செஞ்சதில்ல.

தெரியும். இனிமேலயும் கூடாது. அடிக்கற அளவுக்குக் கோவம் வருதுன்னா, அது உன் தப்ப மறைக்கப் பாக்கற முயற்சின்னு அர்த்தம். உடனே நீ என்ன தப்பு பண்ணன்னு தேட ஆரம்பிச்சிடு.  வீட்டுப் பொண்ண கைநீட்டி அடிச்சா குடும்பம் உருப்படாது. ஒண்ணு தெரிஞ்சிக்கோ. ஒன்ன விட உன் பொண்டாட்டிதான் குடும்பத்துக்கு முக்கியம்.

சோழிங்கநல்லூர் டிராஃபிக் தாண்டி கடற்கரையை அடையும்போது முற்றிலும் இருட்டிவிட்டது. கடலுக்குச் செல்லும் பாதையைத் தடுப்புப் போட்டு மறைத்திருந்தார்கள். வண்டியைவிட்டு இறங்கி, தடுப்பை நகர்த்திவிட்டுச் செல்லவேண்டியிருந்தது. கடல் காற்று மிகவும் சூடாக இருந்தது. கையில் அப்பாவும் சூடாகத்தான் இருந்தார். இயல்பாகவே அவருக்கு சூட்டு உடம்பு. கொதிக்கக் கொதிக்க காப்பி குடிப்பார். கை பொறுக்க முடியாத கடும் சுடுநீரில்தான் குளிப்பார். எப்படித்தான் அந்தச் சூட்டைப் பொறுக்கிறாரோ என்று எப்போதும் தோன்றும். மந்திரம் சொல்லி, தர்ப்பைப் புல்லால் பாத்தி கட்டிய நெஞ்சில் நெருப்பை வைத்து, பிரம்மாண்டமான பயோ கேஸ் அடுப்பறைக்குள் அவரை அனுப்பியபோது அந்த தகன அறையின் முப்புறங்களில் இருந்தும் சீறி வந்த பெருநெருப்பைக் கண்டேன். அது அவரைத் தீண்டும்முன் பலத்த சத்தமுடன் அறைக்கதவு மூடப்பட்டுவிட்டது.

சரி போ அப்பாவுக்குச் சூடு பிடிக்கும் என்று எண்ணிக்கொண்டபடி பின்புறமாக அவரைக் கடலில் சேர்த்தேன். குளித்தெழுந்தபோது கடலும் சூடாக இருந்தது தெரிந்தது.

வீட்டுக்கு வந்து குளித்து, சாப்பிட்டதும் நான் முதலில் தேடியது அப்பாவின் சார்பிட்ரேட் மாத்திரையைத்தான். அது கிடைக்கவில்லை. வேறு பலப்பல மாத்திரைகளின் ஆதிக்கத்தால் அவர் அநேகமாக சார்பிட்ரேட்டை மறந்திருப்பார் என்று தோன்றியது. இருபதாண்டுக் காலமாக ஒரு சிறிய கவருக்குள் போடப்பட்டு அவரது இடுப்போடு  இருந்த மாத்திரை. அவருக்கு அடுத்த ஹார்ட் அட்டாக் வரவேயில்லை. சார்பிட்ரேட்டைப் பயன்படுத்தும் சந்தர்ப்பமும் வரவில்லை. மிக நிச்சயமாக கார்டியாக் அரெஸ்டால்தான் அவர் இறந்திருக்க முடியும். அந்தக் கணத்து வலியைக் கூட அவர் தெரியப்படுத்தவில்லை.

உறங்குவது போலத்தான் இல்லாமல் போயிருந்தார்.

Share

1 comment

  • ஒரே வரி ..excellent..
    சந்தம் So அவருக்கும் கவிதைெரிந்திருக்…

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி