எழுதுதல் பற்றிய குறிப்புகள் – ஒரு பார்வை: திருவாரூர் சரவணன்

வணக்கம் பாரா.

புத்தகம் உள்ளங்கை அகலத்திற்கு கச்சிதமாக இருந்தது முதல் ஆச்சர்யம். பிறகு சித்திரகுப்தன் பேரேடின் அளவு முன்மாதிரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

கலையைச் சொல்லித்தர முடியாது. ஆனால் நுட்பங்களை முடியும். பின் அட்டையில் உள்ள இந்த வரிகள்தான் மொத்த சாரம்சம்.

சைக்கிள் கற்றுக் கொடுத்தால் எனக்கு முன்னாலேயே ஏறி ஓட்டிட்டுப் போவ – இப்படிப்பட்ட பங்காளி எனக்கு உண்டு. ஆனால் நீங்கள் முப்பது ஆண்டுகள் எழுத்தில் கிடைத்த அனுபவத்தை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட சொல்லித்தர முன்வந்திருப்பதே அரிதான நிகழ்வு.

1)

2000 – கல்லூரியில் முதல் வருடம். ஆண்டுமலருக்கு நான் கொடுத்த கதையைப் படித்து விட்டு பொறுப்பாசிரியர் அழைத்தார். ‘எல்லோரும் காப்பி அடிச்சு தந்துருக்காங்க. ஆனா நீ சொந்தமா எழுத முயற்சி செஞ்சிருக்க… எந்த வேலை செஞ்சாலும் எழுதுறதை விட்டுடாத.’ இதுதான் என் எழுத்தின் மீது நான் பெற்ற முதல் விமர்சனம்.

எந்த ஒரு செயலுக்கும் தொடர் முயற்சியும், பயிற்சியும் முக்கியம். இதை ஒரு குருநாதர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

எழுதுபவன் பயிற்சியிலேயே இருப்பது முதலை நீரிலேயே இருப்பதற்கு நிகர். ஆரம்ப பால பாடமாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

2)

ஒரு ரயில் பிச்சைக்காரரின் அன்றாடத்தில் ஒரு பகுதியை உற்றுப்பார்த்ததால் கிடைத்த முதல் பிரசுரக் கதையைப் பற்றி சொல்லியுள்ளீர்கள். அதையும் தாண்டிப் பார்த்ததால் ஜெயமோகனின் ஏழாம் உலகம் உருவானதை சொன்னபோதுதான் மிரள வைத்தது.

3)

முதல் சிறுகதைத் தொகுப்பு மூவர் – வெளியீட்டு விழா களேபரங்களையும் அனுபவங்களும் கூட புதியவர்கள் என்ன செய்ய வேண்டும், கூடாது, என்னவெல்லாம் நடக்கலாம் என்று தெரிவித்தது.

4)

தேவையற்ற பலவற்றைப் படித்து நேரத்தை வீணடிக்கிறேனோ என்ற கேள்விக்கு, ராமகிருஷ்ணமட நூலக பொறுப்பாளர் ‘நீயல்ல. அவைதான் உன்னைத் தேர்ந்தெடுக்கின்றன.’ என்ற பதில் என்னைப் போன்றவர்களுக்கு கவலையை போக்கும் வாக்கியங்கள்.

5)

வாசகர்கள் சொந்த விருப்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக விரும்புபவர்கள் இப்படி செய்யக்கூடாது. எதையும் படிக்காமல் நிராகரிக்கக்கூடாது. – சரியான வழிகாட்டல்.

6)

சித்திரகுப்தன் பேரேடு முறையை நாம் கையாண்டால், பல்வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தி குழப்பிக் கொள்வதில் இருந்து விடுதலை கிடைக்கும். அப்புறம் என்ன, எழுதுவதற்கான தயாரிப்புகளில் அந்த நேரத்தை செலவிட்டால் நிச்சயம் பயன்தரும்.

7)

ரகசியப் புத்தகம்

அப்படி ஒன்று என் மனதிற்கு தோன்றவில்லை. அப்போ, நான் இன்னும் எதையும் ஒழுங்கா படிக்கலைன்னு புரிய வைத்தது.

8)

எழுதுவது என்றில்லை, எதையுமே நாளை என்று தள்ளிப்போட்டால் அந்த நாளை ஒரு நாளும் வருவதில்லை என்பது நிஜம். எழுத்து என்பது அன்றாட பயிற்சி. –

9)

அடுத்தவர் அபிப்பிராயத்தை விட எழுதுபவருக்கு திருப்தி தருவதே முக்கியம்.

10)

எழுதுவதற்கு தேவையான மன அமைதி, நிம்மதி, பொருளாதார சுதந்திரம், கடனற்ற வாழ்க்கை இதற்கு உத்திரவாதம் தரக்கூடிய வேலையை நானும் விரும்பினேன். அதனால் எதிலும் நிலைத்திருக்க முடியவில்லை.

12)

எழுதுவதற்கான கருப்பொருளைத் தீர்மானம் செய்த பின், அதைச் சிந்தித்து, உருத் திரட்டி ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்து வைத்துக் கொண்ட பிறகுதான் எழுத முடியும்.

எழுதப்போவது என்னவென்று தெளிவாகி விட்டால் எழுதும் பணி ஒன்றுமே இல்லை. அந்த விவரத் தெளிவுக்கான உழைப்புதான் எழுதுவதன் அடிப்படைத் தேவை. அதுதான் சாகடிக்கும்.

– இதெல்லாம் எழுத்தாளனின் குடும்பத்தினருக்கு தெரியாது. சும்மாதானே உட்கார்ந்திருக்க… இதை செய், அங்கே போ, அதை வாங்கு என்று வேலை வாங்குவார்கள்.

13)

மாயவலை தொடருக்காக நீங்கள் மேற்கொண்ட தயாரிப்புகளைப் பற்றி படித்தால் அபுனைவு எழுதுவதைப் பற்றியே நினைக்காமல் ஒதுங்கிவிடுவார்கள்.

14)

ஒழுங்கின்மையின் உலகைப் பாசாங்கின்றிக் காட்சிப்படுத்துவதே கலையின் முதன்மைச் செயல்பாடாக இருந்து வந்திருக்கிறது. – இந்த வரியைப் புரிந்து கொண்டால் கதையில் 90சதம் உண்மை 10 சதவீதம் கற்பனை என்று நீங்கள் வகுப்பில் தெரிவித்ததற்கு வேறு விளக்கம் தேவையில்லை.

15)

ஏதாவது ஒரு கதை அல்லது கட்டுரையை எழுத முயற்சித்து மனதில் திரட்டி கம்ப்யூட்டரில் ஏற்றிக் கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் ஏதாவது ஒரு வழக்கு கோப்பு வந்து சேரும். அது நான்கைந்து மணி நேரங்களை விழுங்கி அது வேலையை முடித்துக் கொண்டு போய்விடும்.

இங்கே காலியானது நான் தொடங்கிய எழுத்து. இப்படி என்னிடம் எதெல்லாம் சரி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது இந்த புத்தகம்.

16)

புத்தகத்தின் இறுதியில் அலகிலா விளையாட்டு நாவலை நேரில் அறிமுகமில்லாத ஒரு நபர் விருதுக்கு பரிந்துரை செய்திருக்கிறார் என்ற தகவல் எழுதுபவர்களுக்கு மிகப் பெரிய பாடம்.

தெரிந்ததை செய்து கொண்டே இரு. வருவது தன்னால் வரும்.

அலுவலகம், வீடு, உறவுகள், நட்புகள், கையிருப்பு, கடன்கள், கவலைகள் எல்லாம் இல்லாத மனிதர்கள் யாருமில்லை. இவை அனைத்தாலும் பாதிக்கப்படும் முதல் அப்பாவியாக எழுத்து இருந்து விடக்கூடாது என்ற எண்ணம் முக்கியம்.

இந்த வரிகள்தான் இன்றைய மனநிலையில் எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாடம்.

இதே புத்தகத்தை வேறொரு நாள், வேறொரு மனநிலையில் படிக்கும்போது வேறு பல செய்திகளை சொல்லக்கூடும்.

இந்த புத்தகத்தில் நீங்கள் சொல்லியுள்ள பெரும்பாலான விஷயங்கள் எழுதக்கூடிய அனைவருக்கும் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகள் அவற்றுக்கான பொதுவான தீர்வுகளை கொண்டிருக்கின்றன. அதனால்தான் முழுவதும் கவனமாக படிக்கத் தோன்றுகிறது.

கதை எழுதும்போது படிப்பவர்கள் அனைவரும் அதை ஃபீல் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

நன்றி.

எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter