மணிப்பூர் கலவரம் – புத்தக மதிப்புரை: கார்த்திகேயன் வெங்கட்ராமன்

கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் துவங்கிய பொழுது செய்தித்தாள்களில் அது தொடர்பான செய்திகளை வாசித்ததுண்டு. அப்போதெல்லாம் அந்தக் இனக் குழுவின் பெயரை எப்படி உச்சரிப்பது? மீட்டியா, மீத்தீயா? அல்லது மெய்ட்டியா என்பதிலேயே எனக்கு குழப்பம் இருந்தது. அதுபோக ஒரு குழுவுக்கு ஆதரவான மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மற்றொரு குழு போராட்டம் நடத்துகிறது என்ற அளவில்தான் எனது அடிப்படைப் புரிதல் இருந்தது. நாளாக நாளாக கலவரத்தின் வீரியம் குறித்த செய்திகளை தாமதமாகவேணும் செய்தித்தாள்களின் வழியே படிக்க நேர்ந்த பொழுதுதான் இந்த விஷயம் ரொம்பச் சிக்கலான அடிப்படைகளைக் கொண்டது என்ற எண்ணம் ஏற்பட்டது. தற்போது இந்த நூலை வாசித்து முடித்த பின்னர்தான் அது சாதாரண சிக்கல் அல்ல; எளிதில் தீர்க்க முடியாத இடியாப்பச் சிக்கல் என்பது மிகத் தெளிவாக புலப்படுகிறது.

அடிப்படையில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த நூலில் பாரா அவர்கள் குறிப்பிட்டு இருப்பது போல இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில் இருக்கக்கூடிய மாநிலங்கள் குறித்த அடிப்படையான தகவல்கள் கூட மற்ற பகுதிகளில் உள்ளவருக்கு பெரிதாகத் தெரிவது இல்லை என்பதுதான் எதார்த்தம். நம்மையே எடுத்துக் கொண்டாலும் நமக்கு அண்டை மாநிலங்கள் அல்லது வட மாநிலங்கள் சார்ந்த தகவல்கள் (உதா: முதல்வர் பெயர், ஆளுங்கட்சி உள்ளிட்டவை) ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்தில் சிறு அளவு கூட வடகிழக்கு மாநிலங்கள் பற்றி தெரிந்து கொள்வதில் இருக்காது என்பதுதான் உண்மை. நமக்கு அப்படி இருந்தால் பரவாயில்லை; காலங்காலமாக ஒன்றிய அரசுகள் கூட தொடர்ந்து அப்படியானதொரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அப்பிராந்தியங்களிடம் நடந்து கொண்டால் என்ன ஆகும் என்பதற்கு தற்போதைய நேரடி சாட்சியம் தான் மணிப்பூர் கலவரம்.

ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த கலவர சூழலின் பின்னணியில் இனம், மதம், ஜாதி அல்லது அரசியல் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் இருக்கக்கூடிய மிகத் தீவிரமான பிரச்சனைகளை, அதன் பல்வேறு அடுக்குகளை, தலைசுற்ற வைக்கும் சிடுக்குகளை எல்லாம் இந்தப் புத்தகத்தில் மிகத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார் பாரா அவர்கள்.

17 ஆம் நூற்றாண்டில் மணிப்பூரை ஆட்சி செய்த ககெம்பா மன்னர் பற்றிய கதையிலிருந்து துவங்கி, அவருக்கும் அவரது சகோதரர் ஷலுங்பா இருவருக்கும் இடையிலான பகையின் காரணமாக வங்காள முஸ்லிம்கள் மணிப்பூருக்குள் நுழைவது, பின்னர் அவர்களே ‘மெய்தி பங்கல்’ என்னும் பெயருடன் மணிப்பூர்வாசிகளாக மாறுவது, பதினெட்டாம் நூற்றாண்டில் மணிப்பூருக்குள் ஹிந்து மதம் நுழைதல், மணிப்பூரைக் கைப்பற்றும் பர்மா, பின்னர் பர்மாவை போரில் வென்று மணிப்பூரை தன் வசப்படுத்தும் பிரிட்டிஷ், இறுதியாக இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு மணிப்பூர் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்படுதல் என 300 ஆண்டு கால ஓட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களானது இந்த நூலின் பக்கங்களின் வழியே பாரா அவர்களை எழுத்துத் திறமையினால் நமக்கு அற்புதமாக காட்சிப்படுத்தப்படுகிறது. இந்தப் பயணத்தில் வில்லியம் பெடிக்ரூ, குல்ஹோ தம்சாங் என வரலாறு வெகுவாக அறியாத பல்வேறு நபர்களின் செயல்களும் சேர்த்தே நமக்கு சுட்டப்படுகிறது.
இன்று பற்றி எரியும் மணிப்பூரின் சூழலுக்கு காரணமான மெய்தி மற்றும் குக்கிகளின் வசிப்பிடம், மொழி, நிலம், போதைப் பொருள் வருவாய் மற்றும் பொருளாதாரம் என அனைத்துக் காரணங்களையும், அதன்வழியான உப காரணங்கள் மற்றும் விளைவுகள் அனைத்தையும் ஆழமாகவும் அகலமாகவும் தனது எழுத்தின் வழியே நமக்கு பாரா அவர்கள் இந்நூலின் பல்வேறு அத்தியாயங்களில் மிகத்துல்லியமாக படம்பிடித்துக் காட்டுகிறார்.

அத்தோடு மெய்தி, குக்கி, நாகா மற்றும் மெய்தி பங்கல் (முஸ்லிம்கள்) என எல்லா இனக் குழுக்களின் உள்ளேயும் உண்டான தீவிரவாத குழுக்களின் ஆரம்ப கட்ட வரலாறும் இத்துடன் சேர்த்தே சொல்லப்பட்டிருப்பது, இந்த பிரச்சனையின் வெவ்வேறு கோணங்களை முழுதாக ஆராய்ந்து உணரத் துணைபுரிகிறது.

குறிப்பாக மே மாதம் தொடங்கி மணிப்பூர் கலவரங்கள் தொடர்ந்து நடந்து வந்த பொழுதிலும், இந்த விவாகரத்தினை மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, முதல்வர் பிரேன் சிங், மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கையாண்ட விதத்தை குறித்தும் எழுதியுள்ளார். அதிலும், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் செய்திருக்க வேண்டிய ஒரு நிலையைச் சுட்டிக்காட்டி அவர் எழுதும்போது வாசிக்கும் நமக்குமே உண்மையில் மனம் வருந்தத்தான் செய்கிறது.

இறுதியாக, Pa Raghavan அவர்கள் இந்த சிரமமான சப்ஜெக்டை கையாண்ட விதம். அதைத் தனியாக பாராட்டி சொல்வதற்கெல்லாம் தேவை இருக்காது. ஏனென்றால் எனக்கு அவர் ‘மாஸ்டர்’. இவ்வகை எழுத்துக்களுக்கு தமிழில் முன்னோடி என்று கண்ணை மூடிக்கொண்டு அவரைச் சொல்லலாம். மணிப்பூர் பிரச்சனை குறித்து மட்டுமல்ல, மணிப்பூர் என்ற ஒரு வடகிழக்கு பிராந்திய மாநிலத்தைப் பற்றிய உங்கள் அறிவை விரிவு செய்யவும் இந்த புத்தகம் கண்டிப்பாக உதவும் . தமிழில் இது போன்ற ஒரு புத்தகம் வெளிவந்திருப்பது தமிழில் வாசிக்கும் நாம் அனைவரும் பெருமை படத்தக்க ஒரு விஷயம்.

மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி