தேவநேசன்களின் வம்ச சரித்திரம்

சில ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கினோம். அக்வாகார்டு என்னும் நிறுவனத்துடையது. அன்று புதிதாக அறிமுகமாகியிருந்த ‘ரோபோட்’ என்னும் மாடல். வாங்கும்போது பதினைந்தாயிரமோ என்னமோ விலை.

நான் வாங்கிய நேரம்தான் காரணமாயிருக்கவேண்டும். அக்வாகார்டு நிறுவனத்தின் அந்த மாடல் மிகப்பெரிய ஃபெய்லியர் மாடலானது. என்னைப் போல் வாங்கிய அத்தனை பேரும் ஏதாவது குறை சொல்லி அதை தூஷித்துக்கொண்டிருந்தார்கள் என்பது மெல்ல மெல்லத் தெரிய ஆரம்பித்தது.

ஆனாலும் வாங்கிவிட்ட பிறகு என்ன செய்ய இயலும்? சர்வீஸ் செண்டருக்கு மாதம் மும்மாரி போன் செய்து அழைத்துக்கொண்டே இருப்பது என் மனைவியின் பொழுதுபோக்குகளுள் ஒன்றானது. தண்ணீர் ஏறவில்லை. அடியில் உப்பு படிகிறது. சர்வீஸ் லைட் எரிந்துகொண்டே இருக்கிறது. கொடகொடவென்று சத்தம் கேட்கிறது. சுத்திகரிக்கப்பட்டுவிட்டதாக சிக்னல் கொடுக்கப்பட்ட பிறகும் தண்ணீரில் தூசு தெரிகிறது.

இன்னபிற குறைபாடுகள் முதலில் மிகுந்த அதிர்ச்சியளித்தாலும் காலப்போக்கில் பழகிவிட்டது. அக்வாகார்டு விளையாட்டு என்பது வீட்டுக்குப் பழகிப் போன ஒன்றாகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் சுமார் 108 அழைப்புகளுக்குப் பிறகு எப்படியும் சர்வீஸ் செண்டரில் புகாரை ஏற்றுக்கொண்டு ஒரு நம்பர் கொடுத்துவிடுவார்கள். அதன்பின் சம்மந்தப்பட்ட ஏரியா சர்வீஸ் மேனேஜருக்கு போன் செய்யத் தொடங்கினால் பத்திருபது முறைகளுக்குப் பிறகு அவர் லைனுக்கு வருவார். வந்து பார்ப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஏழெட்டு தினங்கள் காத்திருக்கச் செய்வார். அதற்குள் மேலிடப் புகார்கள், கண்டன அறிக்கைகள், சாபங்களால் நிறுவனத்தாரைக் குளிப்பாட்டி முடித்திருப்போம்.

சற்றும் எதிர்பாராத ஒரு தேவ கணத்தில் அக்வாகார்டு சர்வீஸ் மேன் வாசலில் வந்து நிற்பார். மேடம், புகார் வந்திருக்கிறது.

அத்தருணத்தில்,

* மின்வெட்டு இல்லாதிருந்தால்
* மோட்டார் ரிப்பேர் ஆகாதிருந்தால்
* வந்த சர்வீஸ்மேனுக்கு ‘ரோபோட்’ மாடல் குறித்துத் தெரிந்திருந்தால்
* அவரது தோள்பையில் உரிய பழுதுபார்க்கும் கருவிகள் மறக்காமல் எடுத்து வைக்கப்பட்டிருக்குமானால்
* வாரண்டி கார்டு, ஏஎம்சி கார்டு ஒளிந்துகொண்டு பூச்சாண்டி காட்டாதிருந்தால்

பழுது சரிபார்க்கப்பட்டுவிடும். அடுத்த ஓரிரு மாதங்களுக்குப் பிரச்னை இராது.

ஆனால் பெரும்பாலும் வருகிற சர்வீஸ்மேனுக்கு ‘ரோபோட்’ என்னும் மாடல் குறித்துத் தெரிந்திருக்காது. அக்வாகார்டு கம்பெனியில் வாரமொருமுறை புதிய சர்வீஸ் இஞ்சினியர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இந்த ரோபோட் மாடலை மட்டும் அறிமுகப்படுத்திய முதல் மாதத்திலேயே ஊத்திமூடி ஏறக்கட்டி, அவர்களும் மறந்துவிட்டார்கள்.

இதுவரை சுமார் ஐம்பது சர்வீஸ்மேன்களையும் பத்துப் பன்னிரண்டு சர்வீஸ் மேனேஜர்களையும் பார்த்துவிட்டோம். என் மனைவி தொலைபேசியில் அழைத்தால் கதறிக்கொண்டு காணாமல் போய்விடுகிறவர்கள். ஒவ்வொருவரும் பதவிக்கு வந்ததுமே நிறுவனத்தார் முதற்கண் என் மனைவியின் தொலைபேசி எண்ணைத்தான் தருவார்கள். இந்த நம்பரில் இருந்து ஒரு நாரீமணி அழைப்பார். அழைத்தால் எடுக்காதே என்று சொல்லிவிட்டுத்தான் அப்பாயின்மெண்ட் ஆர்டர் தருவார்கள் என்று கேள்வி.

தேவநேசன் என்னும் சர்வீஸ் மேலாளராகப்பட்டவர் (இது ஒரு நபரின் பெயர் மட்டுமல்ல. குருதிப்புனலில் வரும் சின்னசுவாமிஜி மாதிரி பொறுப்பாளியின் பெயராகிவிட்டது.) சலிக்காமல் எத்தனை முறை அழைத்தாலும் எடுக்காதிருப்பதில் விற்பன்னர். அலுவலக நேரத்தில் அழைத்தால்கூட பக்கத்து சீட் பெண்மணியிடம் மொபைலைக் கொடுத்து, ‘சார் வீட்ல இல்லிங்க’ என்று சொல்லச் சொல்லுமளவு மன உளைச்சலுக்கு ஆளான பரிதாபகரர்.

வேறு வழியில்லை. அவர்களை நாங்களும் எங்களை அவர்களும் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும் என்பது என்னப்பன் இட்டமுடன் எந்தலையில் எழுதிவைத்த விதி.

சென்ற வாரமும் அக்வாகார்டு படுத்துவிட்டது. ஒருவாரமாக வீட்டில் கேன் தண்ணீர்தான். இரு தினங்களாக கேனுக்கும் தட்டுப்பாடு. டீசல் பற்றாக்குறையால் தண்ணீர் கேன் வண்டிகள் வரவில்லை. அப்படியே வரும் தண்ணீர் கேன்களைக் கடைக்காரர்கள் ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும்தான் தருவேனென்று அடம்பிடிப்பதால் அசோகமித்திரன் நாவல் சித்திரிக்கும் நிலைமைக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்திருந்தேன்.

இந்நாள்களில் இடைவிடாமல் தேவநேசனுக்கும் சர்வீஸ் செண்டருக்கும் மாற்றி மாற்றி போன் செய்து வெயிலின் கொடுமையை மேலும் அவர்களுக்கு உக்கிரமாக்கிய பாவத்தைத் தேடிக்கொண்டேன்.

சனியனைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு கம்பெனியின் நீர் சுத்திகரிப்பானை வாங்கித் தொலைத்தால்தான் என்ன?

முடியவே முடியாதாம். கூப்பிடும்போதெல்லாம் பழுது நீக்கித் தரவேண்டியது தேவநேசனின் கடமை. ஏஎம்சி போடும்போது மட்டும் எத்தனை குழைந்தார்கள்? வரட்டும். வந்து செய்யட்டும்.

மல்லுக்கட்டுதல் என்பது முதலில்தான் சிரமம் தரும். பழகப்பழக அது ஒரு வீர விளையாட்டாகிவிடும் போலிருக்கிறது.

Share

13 comments

  • சர்வீஸ் எஞ்சினியர் என்றால் யார் தெரியுமா? அவர்கள் படும் கஷ்டம் அறிவீரா? தோற்றுப்போன மாடல்களை அவர்கள் தோள்மேல் தாங்கும் சொல்லொணாத் துயரத்தின் ஊற்றுக்காலாவது உணர்வீரா? பெரும்பாலான நேரங்களில் நீங்கள் சொல்வதை வைத்தே டெக்னிகல் விவரங்களைத் தெரிந்துகொண்டு தாங்கள் சொல்வதுபோல் சொல்லும் அவர்களின் தனித்திறத்தைத் தரம்பிரித்துக் கண்டீரா?

    மேட்டிமைத் தனத்துடன் குறை சொல்வது எளிது. வாழ்ந்து பார்த்தால்தான் அந்த வாழ்க்கையின் வலி தெரியும்.

  • உங்களுக்கு நீர் சுத்திகரிப்பான், எங்களுக்கு ட்ரெட்மில், மற்றவர்களுக்கும் இதேபோல் ஏதோ ஒன்று, ப்ராடக்ட் மாறும், பிரச்னைகள் மாறும், சர்வீஸ்மேன்கள் மாறுவார்கள், ஆனால் சேவைத்தரமும் அதை எதிர்கொள்ளும் மனைவியர் மனப்பாங்கும் மாறவே மாறாது, அதான் ஒலகம் :>

  • சுரேசரே, நீர் எஞ்சினியர் என்று தெரியும், எப்போது சர்வீஸைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டீர்? :>

  • என் தொழில்வாழ்வு சர்வீஸ் எஞ்சினியர் என்ற அவலத்துடன்தான் தொடங்கியது. கடந்துவந்த பாதையை பாரா போல் மறப்பவன் அல்ல யான்.

  • நேசன்கள் தேவுவது சஹஜம். ஜோசியர்கள் போலவே அவர்களும் நாம் சொல்வதையே அப்படியே விளக்குவது வாஸ்தவம் தான்.

    கேள்விகள்:
    1. நீங்கள் இன்னும் ப்யூரிட்டுக்கு மாறவில்லையா?
    2. மூன்றே பின்னூட்டங்கள் மட்டும் இருக்கும்போதே, 4 comments என்று காட்டுவது எதனால்?
    3. நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின்… என்பது போல ஏதேனும் நுகபிநியா?

  • எங்க வீட்டில் அக்வாகார்ட் அக்கடா னு மூலையில் தூங்குகிறது . சர்வீஸ் செண்டர் போனை எடுப்பதேயில்லை 

  • இதனால் சர்வ மகாஜனங்களுக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால் …..

    இனிமே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு இதுமாதிரி ஏதேனும் பொருள் வாங்கி அது வாரண்டி காலத்துக்குள் ரிப்பேரும் ஆனால் “மேட்டிமைத் தனத்துடன்” குறை சொல்லாமல் “சர்வீஸ் எஞ்சினியர் என்றால் யார் என்று தெரிந்து, அவர்கள் படும் கஷ்டம் அறிந்து தோற்றுப்போன மாடல்களை அவர்கள் தோள்மேல் தாங்கும் சொல்லொணாத் துயரத்தின் ஊற்றுக்காலாவது உணர்ந்து பெரும்பாலான நேரங்களில் நாம் சொல்வதை வைத்தே டெக்னிகல் விவரங்களைத் தெரிந்துகொள்ளும் அவர்களின் தனித்திறத்தைத் தரம்பிரித்துக் கண்டு” வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்.

    ஹ்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல போங்க !

  • Dear PaRa,

    Please make sure to write this as a product review in sites like “mouthshut”, it will reach more people. If you are looking for an alternate water purifier, please try MORF India. We’ve been using it for the past 5 years. Good product and service.

    Regards
    Shriram

  • தினமும் அடையும் ஒரு பெரும் இம்சையை கூட காமெடியாக்க உங்களால் எப்படி முடிகிறது ? வீட்டில் மனைவி கோபத்துடன் கொண்டு வரும் பிரச்சனயை இப்படி தான் காமெடி பண்ணி சமாளிப்பீர்களா ? என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணிட மாட்டீங்களே என்று இல்லத்தரசி தினமும் உங்களை கேட்பதை போன் தோன்றுகிறது.

  • பாரா, தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்னும் இந்தியாவில் முழுமை பெறவில்லை. எந்த இயந்திரம் வாங்கினாலும் இதே பிரச்சினை உண்டு. வெளி நாட்டில் இத்தகைய இயந்திரங்கள் இல்லை. அவர்களுக்கு தெரியும் இது ஒரு நிரூபிக்க படாத ஒரு முயற்சி என்று. தண்ணீரின் “PH ” குறைக்க எவ்வளவோ சிறந்த வழிகள் உண்டு. உதாரணம் பானை. படிக்க முடியாத எத்தனையோ கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள். ஏன் இதை மட்டும் எழுதுவதற்கு முன்னால் வாங்கினீர்?

  • இதன் மூலம் கிடைக்கும் படிப்பினைகள் எந்த ஒரு பிராண்டட் ஐடெம் என்றாலும் அதிலும் எதாவது ஒன்று பெய்லியர் மாடல் வரவே செய்யும் . எனவே பிராண்டட் ஐடெம் என்று கண்ணை மூடிக்கொண்டு வாங்காமல், டெக்னிகல் உதவி தேவைப்படும் எந்த ஒரு பொருளையும் சம்பந்தப்பட்ட துறையின் சர்வீஸ் நபரிடம் சென்று அதிகம் ப்ராப்ளம் ப்ரீ ஆக உள்ள மாடல் மற்றும் பிரான்ட் பற்றி ஆலோசனை கேட்டு வாங்கவும். புதிதாக வந்த எதையும் உடனே வாங்குவதை தவிர்க்கவும் ஒரு ஆறுமாதம் கழித்து அதை வாங்கியவர்களின் கருத்தை கேட்டு வாங்கினால் பண நஷ்டத்தையும் , மன உளைச்சலையும் தவிர்க்கலாம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி