சாலைக் கவிதை

எல்லா சாலைகளிலும்
ஏதோ பணி நடக்கிறது
எல்லா சாலைகளையும்
ஒருவழி ஆக்கியிருக்கிறார்கள்
எல்லா சாலைகளிலும் பாதி தொலைவில்
பாதை மாற்றி விடுகிறார்கள்
போக வேண்டிய இடத்துக்கு
நேரெதிர் திசையில் நெடுந்தூரம் சுற்றிக்காட்டிவிட்டு
எல்லா சாலைகளும்
எங்காவது கொண்டு சேர்த்துவிடுகின்றன
முடிவற்ற பெருஞ்சுவராக நீளும்
நீலத் தகடுகள்
எல்லா சாலைகளையும்
இரண்டாகப் பிளக்கின்றன
தகடுக்கு மறுபுறம்
ஆட்கள் வேலை செய்கிறார்கள்
மறுபுறத்தின் எதிர்ப்புறம்
ஆட்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்
எல்லாம் மக்களுக்காகத்தான்
அவர்கள் நெரிசலில் சிக்காமல்
வெக்கையில் வாடாமல்
மேடு பள்ளங்களில் உருண்டு புரளாமல்
கணப் பொழுதில்
எங்கிருந்தும் எங்கும் செல்லத்தான்
எல்லா சாலைகளிலும்
என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள்
எனக்குத் தெரியும்,
எல்லா சாலைகளும்
ஒரு நாள் சரியாகும்
அன்று நான்
சாலைத் துறவு மேற்கொண்டிருப்பேன்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!