யதி – வாசகர் பார்வை 1 [உஷாந்தி கௌதமன்]

யதியின் முதலாவது அத்தியாயத்தில் ஒரு புதரைப் பற்றிய வர்ணனை வரும். ஒரு புதரில் வேறு வேறு செடிகள் எங்ஙனம் கிளைகளின் அடர்த்தியில் கூட சரியாகப் பிரிந்து இணைந்து ஒரே மரம் போல உருவாகியிருக்கும் என்று. இந்தக் கதையில் வருபவர்களும் அப்படித்தான். யாருக்குமே ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லை. ஆனாலும் ஒன்றே போல ஒரு நூற்பின்னல் கொண்டு இணைக்கப்பட்டிருப்பார்கள்.

மொத்தக் கதையும் நான்காவது சகோதரனான விமலின் பார்வையில்தான் நகர்கிறது. கடவுளைக்கூடத் தன்னைக் கட்டுப்படுத்தும் தளையாக எண்ணித் துறந்து, சுதந்திரமே மூச்சுக்காற்றாகக் கொண்டு வாழ்பவன் அவன். மொழியின் குழந்தை, ஆயிரக்கணக்கான மக்களைத் தன் மொழியினால் கட்டுப்படுத்திக்கொண்டு தான் மட்டும் கட்டற்று வாழ்பவன். அவனின் சுதந்திரம் எல்லைகளற்றது. எல்லைகளற்ற மகிழ்ச்சிப் பெருவெளியே அவன் இலக்கு. அத்தனை ஆனந்த லாகிரிகளுக்குள்ளும் திளைத்து எழுந்தும் பற்று என்ற ஒன்றை மட்டும் ருசிக்க விரும்பாதவன் அவன். ஒரு சதம் கூட அவனுக்கென்று இல்லாமல், ஆனால் தன்னைத் தேடி வருபவர்களுக்கு எல்லாமும் கொடுக்க அவனால் முடிகிறது. சாமான்யர்களான நமக்கும் கடவுள் என்பவர் இதைத்தானே செய்கிறார்? ஆனால் அவன் தேடல்களை விரும்பியோ விரும்பாமலோ விரிவு படுத்திய ஒரு புதிர் தான் அண்ணா என்கிற விஜய். இந்தக் கதையின் நீட்சிக்கான நூல்கண்டு விஜய்தான். அவனைக் குறித்த எண்ணங்களோடும் பல சமயங்களில் அவனின் விருப்பங்களோடும்தான் சகோதரர்களின் பாதைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

முதலில் அவன்தான் வீட்டை விட்டு விலகிச் செல்கிறான். தன்னுடைய தேடலின் சில கதவுகளைச் சிறியவன் விமலுக்கு மட்டும் திறந்து காட்டி ஒரு தொடர்ச்சியை விட்டுச்சென்றபடி. இரண்டாவது, வினய்யும் அண்ணனைப் பின்தொடர்ந்து சென்று தான் பாதை மாறுகிறான். விமல் கூட இரண்டு நாள் அபின் மயக்கத்தில் இருந்தாலும் அண்ணனைத் தேடிச்சென்றுதான் தொடர்ந்த சம்பவங்களால் கட்டுகளைத் துறக்கத் தீர்மானிக்கிறான். ஆனால் அதன் பிறகு தனித்தனியே சிந்தனையின் பேருருவப் பெருவெளியின் அடி நுனி தேடி சகோதரர்களின் தனித்த பயணங்களில் அவ்வப்போது அவன் நுழைந்து பாதை மாற்றுகிறான். விமலைத் தவிர. ஏனோ அவன் இவனை சந்திக்கவே இல்லை என்ற ஒரு புள்ளியில் அவர்கள் இறுதியில் சந்திப்பார்களா அவன் இவனை மட்டும் ஏன் தவிர்க்கிறான் என்ற கேள்வி வாசகர்கள் மனத்திலும் எழுந்துகொண்டே இருக்கிறது.

ஓர் இடத்தில் வினய்யின் கேள்விக்கு சொரிமுத்து சொல்வார், நீ இங்கே மனிதனாகவும் இன்னொருவன் கடவுள் உத்தியோகம் பார்த்துக்கொண்டும் இருக்கிறான் என்று. நீ நம்பும் வரையில் உன்னால் சித்தன் ஆக முடியாது என்று. விஜய் கூட அப்படித்தான். தன்னை ஒரு கடவுளாக்கிக்கொண்டு சகோதர்களை வடிவமைக்க நினைகிறான் என்று எனக்கு தோன்றியது. கடவுளைக்கூட கட்டாகக் கொள்ளாத விமல் அவனுக்கு அந்த இடத்தில் பெருத்த சவாலாய்ப் போயிருப்பான். ஏனெனில் விஜயின் யோக சாதனைகள் இல்லாமலே, அவையெல்லாம் தேவைப்படாமலே கடவுள் என்ற பாத்திரத்தில் அவன் சரியாகவே பொருந்தியிருப்பதாக எனக்குப்பட்டது. சித்தனாகியும் குடும்பத்தை முதுகில் சுமந்தும் சுமக்காமலும் திரியும் விஜய், வீட்டை விட்டு வெளியேறி, செய்ததை விட ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாத செடிகளை வைத்து குடும்பம் என்ற புதரை வளர்த்து அதற்குள் தனக்குள் தனித்து வாழ்ந்த அவர்களது அன்னை மஹா யோகி என்று நீங்கள் சொன்ன இடத்தில் மயிர்க்கூச்செறிந்து விட்டது.

விமல் மட்டுமல்ல; என்னைப் பொறுத்தவரை விஜயை விடப் பெரிய யோகியாக வினய் இறுதியில் கோரக்கர் சமாதியைச் சென்றடையும் வரை இருந்தான் என்று தோன்றியது. அவனிடம் எந்த ஒளிவு மறைவும் இருக்கவில்லை, உலகத்தைக் குறித்து எந்த சிந்தனையும் கூட அவனுக்கு இருக்கவில்லை – அந்தக் குற்றவுணர்வை தவிர. சுயம்பு போல சுயமாகவே முளைத்தவன் அவன். அவனே அத்தனை பேருக்கும் குருவாக இருக்க கூடுமே; அவன் ஏன் குருவைத் தேடுகிறான் என்று எண்ணினேன். ஆனால் இறுதியில் அவன் மொழிகளிலேயே புரிந்தது, அவனால் தேங்கியிருக்க முடியாது, அலைச்சலே அவன், தேடலே அவன். ஆனால் எத்தனை தெளிவோடு இருந்தாலும் இவனுக்கு மனதில் யாரோ ஒருவர் தேவைப்படுகிறார்கள் என்று எனக்கு தோன்றியது. முன்னர் சித்ரா, பின்னர் இடாகினி வடிவில் மீண்டும் அவள், அண்ணா விஜய், காமரூபிணி தேவி , குரு இப்படித் தன்னைப் பூரணப்படுத்த ஒருவர் தேவை என்று அவன் என்னுமிடத்திலேயே விமல் அவனை ஜெயிக்கிறான் என்று தோன்றுகிறது.

அடுத்தவன் வினோத். இவன் எனக்குக் குழப்பமாகவே இருந்தான். மற்ற மூன்று சகோதரர்களும் ஈர்த்துக் கொடுத்த ஆச்சர்யத்தை இவன் எனக்கு உண்டாக்கவில்லை. ஒரு வெறித்தனமான கிருஷ்ண பக்தன்.சிவனைத் தேடி, கிருஷ்ணனைக் கண்டவன் இறுதியில் பத்மா மாமியை அழைத்துச் செல்ல முடிவு செய்தபோது, இவன் பற்றற்ற மனநிலைக்கு அருகில் கூடச் செல்லவில்லை என்று தோன்றியது.

சித்ரா, பத்மா மாமி, கேசவன் மாமா என எல்லாருமே குடும்ப இழைகளில் ஒவ்வொரு நூல்களாக அவர்கள் அளவில் ஒரு ஞானத்தைக் கண்டடைந்துதான் இருக்கிறார்கள். மேலோட்டமாய்ப் பார்த்தால் எல்லோருமே வெறும் மனிதர்கள், நெருங்க நெருங்கத்தான் அவர்களின் இன்னொரு பரிமாணமே வெளிப்படுகிறது. பல சமயங்களில் அருகில் இருப்பவர்களுக்கு அவர்களின் அந்தப் பரிமாணங்கள் புரிவதே இல்லை. சிவனைக் கிருஷ்ணனாகக் கண்ட வினோத் போல உறவுகள் என்ற குறுகிய வடிவமைப்புக்குள் அவர்களின் பரிணாமங்களை அடக்கிக்கொண்டு விடுகிறோம். இத்தனை பெரிய யோகியான விஜய்யையே தோற்கடித்த அம்மா, கேசவன் மாமாவுக்கு வெறும் அக்கா தானே. அவர் வேறு எந்தக் கோணத்திலும் பார்த்ததில்லையே. ஒருவேளை அவரால் அப்படியெல்லாம் சிந்திக்க முடியாது என்பதால் அளவு கடந்த பாசம் மூலம் அவரது செய்கைகள் குருவை பூஜிக்கும் சிஷ்யன் போல மாற்றி இயற்கை சமன் செய்ததோ?

ஆனாலும் கேசவன் மாமாவும் சித்ராவும் பாவம் என்று தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.

இறுதி அத்தியாயத்தில் விஜய் வருவான் வருவான் என்று ஆவலாகக் காத்திருந்தேன். அவன் வந்த வடிவை சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை. அவன் ஏன் விமலை சந்திக்காமலே இருந்தான் என்று விமல் சொன்ன போதும் அப்படியே ஏற்க முடிந்தது. எல்லாவற்றுக்கும் முடிவை எதிர்பாராதீர்கள், புதிர்களே சுவாரசியம் தரும் என்று ஆரம்ப அத்தியாயங்களில் எங்கோ விமல் சொன்ன ஞாபகம். யதி என் அறிவுக்கும் முதிர்ச்சிக்கும் மிக மிக அதிகம்தான். பல விடயங்கள் புரிந்தும் புரியாததுமாய் இருந்தது உண்மை. அவை எனக்கான தேடலை ஆரம்பித்து வைத்ததாக எடுத்துக்கொள்கிறேன்.

இறுதியில், விஜய் வந்தபோது அவன் எப்படி இருந்தானோ அப்படியே சகோதரனைத் தான் அவனுக்கு நல்லது என்று நினைக்கும் வடிவில் மாற்ற நினைப்பவனாகவே இருந்தான். விமல் அவனாகவே இருந்தான். வினய்யும் வினோத்தும் கூட தங்கள் சுயத்தில் இருந்து மாறவில்லை. மாபெரும் சந்நியாசிகள் ஐவரின் வாழ்க்கையை அம்மா உட்பட, தினம் காத்திருந்து படித்தது மிகப்பெரும் அனுபவம் எனக்கு.

கருணாகரன் யாரைக்கொல்ல வந்தான்? எவ்வளவு யோசித்தும் என் புத்திக்கு எட்டவே இல்லை.

இறுதியில் திரும்பத் திரும்பப் படிப்பேன், புரியும். அப்படியும் புரியாது போனால் தான் என்ன? என்று விமல் பாணியில் சொல்லிக்கொண்டேன்.

இன்னொரு கேள்வியும் இருக்கிறது. நாய்களை ஏன் துறவிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். மனிதனோடு அவை சகஜமாக அண்மித்துப் பழகும் என்பதால் பிறர் கவனம் கவராமல் செய்தியைக் கொடுக்க அது நல்ல ஊடகம் என்பதாலா? இல்லை வேறேதும் காரணம் இருக்கிறதா?

நன்றி. அருமையானதொரு வாசிப்பனுபவத்தை கொடுத்ததற்கு.

– உஷாந்தி கௌதமன்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி