யதியை எழுதத் தொடங்குகிறேன். 2009ல் என் அப்பாவின் புத்தகச் சேமிப்பை ஒரு நாள் அளைந்துகொண்டிருந்தபோது ஜாபால உபநிடதம் என்ற பழம்பிரதியொன்று கண்ணில் பட்டது. அது எத்தனை காலப் பழசு என்றுகூடத் தெரியவில்லை. முதல் சில பக்கங்கள் இல்லாமல், பழுப்பேறி, செல்லரித்து, தொட்டால் உதிரும் தருவாயில் இருந்தது அந்நூல். அப்பா வேதாந்த நாட்டம் கொண்டவரல்லர். அப்படியொரு பிரதியை அவர் தேடி அடைந்திருக்க முடியாது. யாரோ கொடுத்திருக்க வேண்டும். அல்லது எப்படியோ அவரிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் மிகத் தொடக்க காலத்து அச்சில் சமஸ்கிருத மூலமும் எளிதில் புரியாத தமிழ் அர்த்தமும் [பெரும்பாலும் சமஸ்கிருதச் சொற்களையே தமிழ் லிபியில் அர்த்தம் என்று தந்திருந்தனர்.]கொண்ட மிகவும் ஒல்லியான புத்தகம். புரட்டினாலே உதிர்ந்துவிடுகிற பக்கங்களை கவனமாகத் திருப்பிப் படிக்க ஆரம்பித்தேன். மிஞ்சினால் இருபது நிமிடங்கள் படித்திருப்பேன். எனக்கு அது சரியாகப் புரியவில்லை. ஆனால் ஜாபால உபநிடதம் என்ற பெயரும் அதன் இறுதிப் பகுதியில் விவரிக்கப்பட்டிருந்த துறவற ஒழுக்க நியமங்களும் திரும்பத் திரும்ப நினைவில் இடறிக்கொண்டே இருந்தன.
ஒரு துறவியாகிவிட வேண்டும், காற்றைத் தவிர இன்னொன்றில்லாத பெருவெளியில் தனித்துத் திரியவேண்டும் என்று முன்னொரு காலத்தில் கனாக் கண்டதுண்டு. அது வாழ்வின் குரூரங்களிலிருந்து தப்பித்துச் செல்ல அன்று எனக்குத் தோன்றிய வழி. ஒரு பொறியாளன் ஆவது போல, டாக்டராவது போல, வழக்கறிஞராவது போலத் துறவியாவது என்பதும் ஓர் இயலாகவே எனக்குள் பதிந்திருந்தது. எங்கெங்கோ அலைந்து பல சன்னியாசிகளை, சித்தர்களை, காவி அணிந்த வெறும் பிச்சைக்காரர்களைச் சந்தித்து என்னென்னவோ பேசியிருக்கிறேன். சில்லறை சித்து ஆட்டங்களைக் கண்டு, வியப்புற்று வாயடைத்து நின்றிருக்கிறேன். ராமகிருஷ்ண மடத்துத் துறவியொருவர் முக்கால் மணி நேரம் பற்பல வேதாந்த விஷயங்களைப் பேசி, இதில் உனக்குப் புரிந்த ஏதாவது ஒரு வரியைச் சொல் என்றபோது, ஒரு சொல்கூடப் புரியாத என் மொண்ணைத்தனத்தை எண்ணி இரவெல்லாம் கதறி அழுதிருக்கிறேன். சானடோரியம் மலை உச்சிக்குச் சென்று தியானம் செய்ய அமர்ந்து கொள்ளி எறும்புக் கடிபட்டு உடம்பெல்லாம் வீங்கி அவதியுற்றிருக்கிறேன். வாழ்வினின்று தப்பி ஓடுவதல்ல; பெருங்காதலுடன் ஒட்டுமொத்த மானுட சமூகத்தையும் அள்ளி அரவணைக்கும் பக்குவமே துறவு என்பது புரிந்த காலத்தில் எனக்கொரு மகள் பிறந்திருந்தாள். இதே புரிதல் தலைகீழாக நிகழ்வதன் விளைவாகவே இன்றைய பட்டுக்காவி சன்னியாசிகள் பிறக்கிறார்கள் என்பதும் புரிந்தது.
எக்காலத்திலும் நான் துறவியாகப் போவதில்லை என்பது தெளிவாகப் புரிந்த பின்பு துறவு நிலை குறித்து நிறையப் படிக்க ஆரம்பித்தேன். அதன் முக்கிய விளைவாக, துறவிகளைத் தேடிச் செல்லும் வழக்கம் நின்றுபோனது. பிரமிப்புகளும் மயக்கங்களும் இல்லாமல் போயின. ஜீவநதிகளைப் போல் மண்ணெங்கும் ஓடிக் கலந்த அத்தகைய பிறவிகள் சரஸ்வதியைப் போல நிலம் நுழைந்து முகம் மூடிக் கொண்டுவிட்டார்கள். தேங்கியிருப்பதெல்லாம் அறமற்ற வெறும் நிறம்.
முற்றிலும் உதிர்ந்து இல்லாமலே போய்விட்ட அப்பாவின் சேகரமான அந்த ஜாபால உபநிடதத்தின் வேறு பிரதி எங்காவது கிடைக்கிறதா என்று வெகு காலம் தேடினேன். கிடைக்கவில்லை. அது அதர்வ வேதத்தின் உபநிடதம் என்று ஓரிடத்திலும் அனுமனுக்கு ராமன் உபதேசித்தது என்று வேறொரு இடத்திலும் படித்தேன். அமரர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஜாபால உபநிடதம் யஜுர் வேதத்தைச் சார்ந்தது என்று எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. வேதங்களையும் [அலைகள் வெளியீடு] உபநிடதங்களையும் [ராமகிருஷ்ண மடம் வெளியீடு] தமிழில்தான் படித்தேன். இதில் உள்ள சிக்கல் என்னவெனில், படிப்பதில் பெரும்பகுதி புரியாது. புரிந்த பகுதிகள் என்று நான் எண்ணிய பலவற்றையும் தவறாகவே புரிந்துகொண்டிருப்பதைப் படிப்படியாக அறிந்தேன். அதைப் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்கள் சுட்டிக்காட்டித் திருத்தியிருக்கிறார்கள். சந்தேகமின்றி நான் மொண்ணைதான். அதனாலென்ன? இன்னும் முட்டி மோதிக்கொள்ள வாழ்க்கை நீண்டுதான் கிடக்கிறது.
சென்ற ஆண்டு நண்பர்கள் மாயவரத்தான் மற்றும் சீமாச்சு உதவியால் எனக்கு வாசிக்கக் கிடைத்த யாதவ பிரகாசரின் [ராமானுஜரின் பூர்வாசிரம குரு – பின்னாளில் ராமானுஜரின் சீடர் ஆனார்.] யதி தரும சமுச்சயம் [ஆங்கில மொழியாக்கம்] ஒரு விதத்தில் ஜாபால உபநிடதத்தின் மறு வடிவமாகத் தோன்றியது. வேதகால ரிஷிகள் துறவறம் குறித்துப் பேசிய அனைத்தையும் யாதவ பிரகாசர் தமது பிரதியில் தொகுத்திருக்கிறார். துறவிலக்கணம் என்று அதில் சொல்லப்பட்டிருக்கும் எது ஒன்றும் இன்று நடைமுறையில் இல்லை. அந்நூல் சுட்டிக்காட்டும் விதமான ஒரு துறவியும் இன்றில்லை.
ஆனாலும் இந்த மண்ணில் துறவிகளுக்கு மதிப்பிருக்கிறது. தொழவும் பழிக்கவும் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள். நான்கு விதமான சன்னியாச ஆசிரமங்கள் இன்னமும் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த நான்கில் ஒன்றையேனும் அணுகிக் கடக்காமல் எந்த ஒரு சராசரி இந்தியனின் வாழ்வும் நிறைவடைவதில்லை. விமரிசனத்துக்காகவேனும்.
யதி, சன்னியாசிகளின் உலகில் உழலும் கதை. நாமறிந்த காவி, நாமறிந்த ஆளுமைகள், நமக்குத் தெரிந்த துறவிகளின் வாழ்வுக்கும் செயலுக்கும் அப்பால் உள்ள, எங்கோ ஓடி ஒளிந்துகொண்ட ஒரு ஜீவநதியின் சத்தியத் தடம் தேடிப் போகிறேன். ஆனால் வேறு வழியில்லை. தெரிந்ததைக் கடந்துதான் தெரியாதது நோக்கிச் செல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக்கொண்டு காற்றில் கத்தி வீசியபடியே நடக்கிற அனுபவம். எழுத்து மட்டுமா, வாழ்வும் அதுவேயல்லவா? செய்ய நினைத்திருப்பது பெரும்பணி. எண்ணியவண்ணம் இது நடந்தேற இறையருள் கூடவேண்டும்.
ஒரே கண்ணியில் பொருத்தப்பட்ட மூன்று பெரும் மக்கள் கூட்டத்தின் வாழ்வைத் தனித்தனி நாவல்களாக எழுத ஒரு நாள் ஓரெண்ணம் தோன்றியது. சரஸ்வதி நதிக் கரையோரம் அதர்வ வேதம் தோன்றிய காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில் பிறந்த தலைமுறை வரை நீளும் பெருங்கதை. மூன்றும் தனித்தனிக் கதைகள்தாம். வேறு வேறு காலம், வேறு வேறு விதமான வாழ்க்கை, வேறு வேறு மனிதர்கள். யதி அதில் ஒரு நாவல். சென்ற ஆண்டே இதை எழுத ஆரம்பித்தேன். ஆனால் சற்றும் தொடர்பில்லாமல் பூனைக்கதை முந்திக்கொண்டு வந்துவிட்டது. என் கட்டுப்பாட்டை மீறி எழுத்து இழுத்துச் செல்லும் பக்கமெல்லாம் போய்த் திரிவது ஓர் அனுபவம். எழுதிக்கொண்டே இருப்பதொன்றே என் நோக்கமும் வேட்கையும் என்பதால் இது குறித்தெல்லாம் வருந்துவதேயில்லை.
எனவே யதி தன் பயணத்தை இங்கு தொடங்குகிறான். மார்ச் 19 திங்கள் முதல் தினசரித் தொடராக தினமணி இணையத்தளத்தில் நீங்கள் இதை வாசிக்கலாம், கருத்துரைக்கலாம், விமரிசிக்கலாம், சக பயணியாக உடன் வரலாம். இலக்கற்ற நீண்ட பெரும் பயணங்களில் முகங்களல்ல; குரல்களே வழித்துணை.