பூனை சொன்ன கதை – நாடோடி சீனு

அன்பின் பா.ரா,

வணக்கம். இந்தக் கடிதம் எதற்கென இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். நிச்சயமாக இதனை ஒரு வாசகர் கடிதம் என்றோ இல்லை வாசகர் விமர்சனக்கடிதம் என்றோ கூட எடுத்துக்கொள்ளலாம். அதற்கான மொத்த உரிமையும் உங்களுக்கு இருக்கிறது.

இன்றைக்குத்தான் பூனைக்கதை படித்து முடித்தேன். படித்து முடித்தபின் எழும் நினைவுகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து அதனை வார்த்தைகளாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இத்தருணத்தில் என்னருகிலும் அந்தக் கரிய பூனை அமர்ந்திருப்பதைப் போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. அதன் திரண்ட விழிகள் பலநூறு வருடத்துக் கதை கூறுகின்றன. அப்படியே அள்ளி எடுத்து அதன் முதுகை லேசாகத் தடவிக் கொடுக்கலாமா இல்லை நமக்கேன் வம்பு என கண்டுகொள்ளாது விட்டுவிடலாமா என்ற இருவேறு உணர்ச்சிகளுக்கு நடுவே என் எழுத்துக்களுக்கு கருப்பு மை தீட்டிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள் நான் வேண்டாம் என்று நினைத்தாலும் அந்தப் பூனையின் கரிய நிறம் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது. சற்றே புன்முறுவல் புரிகிறீர்கள் இல்லையா. அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு அடுத்ததாக நான் சொல்லப்போகும் வரிகள் சற்றே அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ அளிக்கலாம். அல்லது உங்கள் சமநிலையை குலைக்காமலும் போகலாம். ஒருவேளை அதிர்ச்சியோ வருத்தமோ அடைவீர்கள் என்றால் முன்னதாகவே மன்னிப்பு ஒன்றை சமர்பித்து விடுகிறேன்.

சரி இப்போது கேள்விக்கு வருகிறேன். ‘பாரா நீங்கள் நாவல் எழுதுவீர்களா’ என்று கேட்டால் எப்படி உணர்வீர்கள். பூனைக்கதையின் அட்டை படத்தைப் பார்த்தபோது அப்படித்தான் உணர்ந்தேன். உங்களை ‘பத்தி எழுத்தாளன்’ என்றே இதுநாள் வரையிலும் நினைத்திருந்தேன். கதைகள் எழுதுவீர்கள் என்றாலும் அது சின்னத்திரைக்காக மட்டுமே என்று நினைத்தது என் தவறுதான். ஆனால் பாருங்கள் சமயங்களில் நம்தவறு பிறரையும் வருத்தப்படச் செய்துவிடுகிறது. நான் செய்த தவறைப்போல.

நீங்கள் எழுதி நான் படித்த அத்தனை புத்தகங்களிலும் சரி அல்லது புத்தகக் கண்காட்சியில் கண்ட உங்களுக்கான விளம்பரங்களிலும் சரி நீங்கள் எழுதிய சிறுகதைகளோ அல்லது நாவலோ பிரதானமாகத் தெரியாதது என் குற்றம் மட்டும் அல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். பூனைக்கதையை நான் தேர்வு செய்ததன் அடிபடைகூட பா.ரா வின் எழுத்துக்களை பாரா தாண்டி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். படித்தும் முடிதுவிட்டேன். ஒரு நாவலின் முடிவு இன்னோர் நாவலில் சென்று சேர்க்குமா என்றால்? நிச்சயம் ஆம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. உங்கள் அத்தனை நாவல்களையும், சிறுகதைகளையும் ஒருமுறையேனும் படித்துப்பார்க்க வேண்டும். அதற்கான வித்து என்னுள் விழுந்தது நிச்சயமாக பூனைக்கதையின் மூலமாகத்தான்.

உங்கள் வாசகர்களிடம் சொல்வதற்கென சில தகவல்கள் என்னிடம் இருக்கின்றன அதை முடித்துவிட்டு மீண்டும் உங்களிடம் வருகிறேன்..

[பூனைக்கதைக்கு நாடோடி சீனு எழுதிய மதிப்புரையை முழுதாக இங்கே வாசிக்கலாம்.]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி