எம்.எம். அப்துல்லா எழுதிய ஒரு குறுங்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதில் க்ரெடிட் கார்ட் உபயோகிக்காதீர்கள் என்று சொல்லியிருந்ததையும், அதை மறுத்து இலவசக் கொத்தனார் எழுதியிருந்ததையும் கண்டேன். பொதுவாக இந்தப் பொருளாதார விஷயங்கள் எனக்குத் தொடர்பில்லாதவை. சரியாக அல்ல; தவறாகக் கூடக் கருத்து சொல்ல லாயக்கில்லாதவன் நான். நீங்கள் கவனித்திருக்கலாம். பண மதிப்பு இழப்பு நிகழ்ந்த சமயத்திலோ, ஜிஎஸ்டி வந்தபோதோ அவை குறித்து நான் ஒன்றுமே சொன்னதில்லை. ஆதரிப்பு / எதிர்ப்பு இரு நிலைகளில் எது ஒன்றையுமே எடுக்க வக்கற்றவன் அப்படித்தான் இருக்க வேண்டும். என்ன முட்டிக்கொண்டாலும் எனக்கு இந்த விவகாரங்கள் புரிவதில்லை என்பதுதான் காரணம். பொருளாதார விவகாரங்களில் யார் தம் கருத்தைச் சொன்னாலும் அது சரி என்பது போலவே தோன்றும். எதிர்க்கருத்தை உடனே கேட்டால் அதுவும் சரி என்று தோன்றும். இது ஒரு வியாதி. இறுதிவரை என்னை இது விடப் போவதில்லை.
எனக்குப் புரிந்ததெல்லாம் ஒன்றுதான். மனிதன் உயிர் வாழக் காற்றும் காசும் அவசியம்.
ஆனால் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் என் சொந்த அனுபவத்தை முன்வைத்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். க்ரெடிட் கார்ட் உபயோகிக்காதீர்கள் என்று அப்துல்லா சொல்லியிருப்பது எனக்குத் தவறாகப் படுகிறது. அது அபாயகரமானதல்ல. சொல்லப் போனால் க்ரெடிட் கார்ட் உபயோகிக்கத் தொடங்கிய பின்புதான் என் செலவுகள் ஒரு கட்டுக்குள் வரத் தொடங்கின. இதனைச் சிறிது விளக்குகிறேன்.
க்ரெடிட் கார்ட் உபயோகிக்கத் தொடங்கும் முன்னர் நான் எங்கெங்கே என்னென்ன செலவுகள் செய்துகொண்டிருந்தேன் என்பதற்கு என்னிடம் கணக்கு இருந்ததில்லை. இவ்வளவு வந்திருக்கிறது – இத்தனை செலவு செய்திருக்கிறோம் என்று குத்து மதிப்பாகத்தான் தெரியும். ஆண்டுக்கு ஒருமுறை ஆடிட்டரிடம் போகும்போது மட்டும், ஆண்டு முழுவதும் செய்த செலவுக்குக் கைவசம் உள்ள பில்களைத் தேடித் தொகுத்து எடுத்துச் செல்வேன். பெரும்பாலும் அது செலவு செய்த தொகையில் சரி பாதிக்கும் கீழாகத்தான் இருக்கும். பல பில்கள் தொலைந்திருக்கும். ஆடிட்டர் உத்தேசமாக ஒரு கணக்குப் போட்டு அந்த வருடாந்திர சடங்கை ஒருவாறு முடித்து வைப்பார்.
க்ரெடிட் கார்டில் செலவு செய்யத் தொடங்கிய பின்பு எனக்கு பில்களைச் சேகரிக்கும் தலைவலி இல்லாமல் போனது. கடந்த சில வருடங்களாக 99% செலவுகளை இதன் மூலமாகவே செய்கிறேன். இதனால் எனக்குக் கிடைக்கும் லாபங்கள் இவை:
1. கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
2. செய்யும் செலவுக்குக் கணக்கு எழுதி வைக்கும் தலைவலி இல்லை.
3. எவ்வளவு செலவழித்திருக்கிறோம் என்று ஒவ்வொரு செலவின்போதும் மெசேஜ் வந்து எச்சரிக்கிறது. உடனே குறிப்பிட்ட செலவு தேவையா என்று சுய பரிசோதனை நிகழ்ந்துவிடுகிறது.
ஒரு நடு வர்க்க மனிதனுக்கு இந்தச் சுய பரிசோதனை மிகவும் அவசியம். அது இருக்காது, கணக்கின்றிச் செலவழிப்பதே நம் இயல்பு என்பது போல அப்துல்லா சொல்கிறார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. வருமானம் நேரடியாக வங்கிக்குச் செல்லும்; செலவு க்ரெடிட் கார்ட் மூலம் நிகழும் என்பது வழக்கமாகிவிட்டால் ஆடம்பரங்களுக்கு இடமே இராது.
காய்கறி, பேப்பர்க்காரர், பால்காரர், வீட்டு உதவியாளர் சம்பளம் நீங்கலாக மற்ற அத்தனை செலவுகளையும் (மளிகை உள்பட) நான் க்ரெடிட் கார்ட் மூலம் மட்டுமே செய்கிறேன். ஆன்லைன் பில் பேமெண்ட் அனைத்தும் அதன் மூலமாக மட்டுமே நிகழ்கிறது. மின்சார வாரியம் மட்டும் க்ரெடிட் கார்ட் பேமெண்ட்டுக்குத் தனியே ஒரு வசூல் நிகழ்த்துவதால் அதை மட்டும் நெட் பேங்கிங் மூலம் செய்வேன். மற்றபடி எல்லாமே இதில்தான்.
சென்ற ஆண்டு Amazon Pay க்ரெடிட் கார்டு எனக்கு என். சொக்கன் மூலம் அறிமுகமானது. பழைய கார்டை வைத்துவிட்டு இனி செய்யும் செலவுகளை Amazon Pay கார்டு மூலமே செய்யச் சொன்னான். இதன்மூலம் ஒவ்வொரு செலவுக்கும் Cash back உண்டு என்றும் சொன்னான். அப்போது அதை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஏதோ ஐந்து பத்து ரூபாய் வரும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு சராசரிக் குடும்பத்தின் முழு மாதச் செலவுகளையும் க்ரெடிட் கார்ட் மூலமே செய்யும்போது இந்த Cash back தொகை பெரிதாகவே வந்தது. Amazon Pay கார்ட் உபயோகிக்கத் தொடங்கிய பின்பு இன்றுவரை நான் கிண்டிலில் வாங்கும் எந்தப் புத்தகத்துக்கும் கைக்காசு செலவழிக்கவேயில்லை. அவனே தரும் Cash back வசதி மூலமாகவே புத்தகங்கள் வாங்குகிறேன். ஒவ்வொரு மாதமும் குறைந்தது 500 ரூபாய் இந்த வகையில் எனக்குச் சேகரமாகிறது.
க்ரெடிட் கார்ட் வைத்திருப்பது அநாவசிய செலவுகளுக்கு வழி வகுக்கும் என்கிற வாதம் எனக்குச் சரியாகப் படவில்லை. தவறிப் போய்க் கொஞ்சம் அதிகப்படி செலவு வந்தாலும் கார்டே அதில் ஒரு சிறு பகுதியை ஏற்கும் என்பதே என் அனுபவம்.
பிகு:- கெடு தேதிக்கு மூன்று நாள் முன்னதாக நான் பணம் செலுத்திவிடுவது வழக்கம். மேற்படி வசதிகளை அனுபவிக்க இந்த ஒரு பொறுப்பை நாம் ஏற்கத்தான் வேண்டும். தேதி தவற விட்டால் வட்டி போட்டுக் கொன்றுவிடுவான்.