நான்கு சந்துகளுக்கு அப்பால்

பொதுவாக நான் புத்தகங்களைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அறிமுகமாக நாலு வரி எழுதினால் அதிகம். அதற்குமேல் சொல்ல என்னிடம் எப்போதும் ஏதும் இருப்பதில்லை. காரணம், வாசிப்பது என்பது என் பிரத்தியேக சந்தோஷம். என் அனுபவம் மற்றவர்களுக்கும் நேரும் என்று சொல்லுவதற்கில்லை. ஆஹாவென மக்கள் வியந்து பாராட்டிய பல புத்தகங்களை நாலு பக்கம் கூட வாசிக்க முடியாமல் கடாசியிருக்கிறேன். அதேபோல, எனக்கு மிகவும் பிடித்த பலவற்றை உலகம் நிராகரித்திருக்கிறது. இதனாலேயே நான் விமரிசனங்களையும் மதிப்புரைகளையும் பொருட்படுத்துவதில்லை; நானும் செய்வதில்லை. என் தாயும் என் மனைவியும் என் குழந்தையும் எனக்கு எப்படியோ அப்படித்தான் என் படிப்பு சார்ந்த அனுபவங்களும். அடுத்தவருக்கு அது அநாவசியம். இவ்விஷயத்தில் என் சுயலாபம் ஒன்றே என் குறிக்கோள்.

சமீபத்தில் நான் மிகவும் மதிக்கும் சிலர் சாரு நிவேதிதாவின் எக்சைல் நாவலைப் பற்றிப் போகிற போக்கில் சொன்ன சில கருத்துகள் அதைப் படிக்கத் தூண்டின. ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். அந்தச் சிலரில் ஒருவர்கூட அதை நன்றாக இருப்பதாகச் சொல்லவில்லை. ‘அவர் எப்போதும் எழுதுவதைத்தான் இதிலும் எழுதியிருக்கிறார். பாதிக்குமேல் அவர் வலைத்தளத்திலேயே வந்திருக்கிறது’ என்று ஒருவர் சொன்னார். ‘சாருவின் உலகில் நாலைந்து சந்துகளுக்குமேல் கிடையாது. அதில் ஒன்று பிரான்ஸ் சந்து. இன்னொன்று நாகூர் சந்து. மூன்றாவது டெல்லிச் சந்து. நாலாவது பெட் ரூம் அல்லது பாத்ரூம்’ என்றார் இன்னொருவர். வேறொருவர் சொன்னதுதான் இன்னும் விசேடம். ‘அவர் தன்னைப் பற்றித்தான் எழுதுகிறார். ஆனால் எதுவுமே உண்மை என்று தோன்றுவதில்லை.’

பன்னெடுங்காலத்துக்கு முன்னர் லாசரா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ஒரு வரி: ‘ஆமாம், என்னிடம் சொல்ல ஒரே ஒரு கதைதான் இருக்கிறது. என்ன அதனால்? அதையே இன்னும் நான் சொல்லி முடிக்கவில்லையே?’

இதனாலெல்லாம்தான் நான் எக்சைலைப் படித்துவிட முடிவு செய்தேன். உண்மையில் நான் சமகால நாவல்களை வாசிப்பதை நிறுத்திச் சில வருடங்களாகின்றன. சென்ற வருடம் பஷீரை முழுவதுமாகப் படித்துவிட்டு, இனி வேறு எதையும் தொடக்கூடக் கூடாது என்று எண்ணியிருந்தேன். என்னமோ தோன்றி, எடுத்துவிட்டேன்.

ஜீரோ டிகிரிக்குப் பிறகு வந்த சாருவின் எந்த ஒரு நாவலிலும் காணக்கிடைக்காத அம்சம் இதில் இருக்கிறது. அது அராஜகத்துக்கும் அப்பாவித்தனத்துக்கும் இடையே ஒளிந்திருக்கும் ஒருவித கவித்துவ திருடன் போலிஸ் ஆட்டம். (உதா: ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதுவரை நான் செய்த தவறுகள் எல்லாமே என்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டவை.’)இது நாவலெங்கும் விரவிக் கிடக்கிறது. அதே போல, அபிப்பிராயங்களின் கூர்முனைத் தாக்குதல், அதிர்ச்சி மதிப்புடன் நின்றுவிடாமல் மேலே கடந்து சென்று சிந்திக்கச் செய்கிற விதம். (உதா:’ஒரு நபரை குருநாதராக வரித்துவிட்டால் அதற்குப் பெயர் அடிமைத்தனம்தானே?’)

இந்தச் சிந்தனை, சாருவுக்கு நேரெதிர் திசையில்கூட நமது பயணத்தை வகுத்துக் கொடுக்கலாம். அது பிரச்னையில்லை. சிந்திக்க வைக்கிறதா இல்லையா என்பதுதான் வினா.

நாவல் என்பதற்கான சநாதன வடிவ ஒழுங்கு இதில் கிடையாது. அப்படி ஒன்று இருந்தால் இது செத்துவிடும். இந்த ஒழுங்கு மீறலின் சாத்தியங்களைக் கனவில் கண்டெடுத்து, மரணத்துக்குப் பிந்தைய பேயலைச்சலின் இடையிடையே தூவிச் செல்வது போன்றதொரு மாயத்தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார் சாரு. அதை முன் ஜென்மத்தில் இருந்தபடிக்கு தூர தரிசனம் செய்து பார்க்கிற வேட்கையே இதன் வடிவமாக உருக்கொண்டிருக்கிறது.

பார்ட்டிகள், குடி மேளா, சமையல் குறிப்புகள், சாமியார்கள், சித்தர்கள், பெண்கள், படுக்கை, பரோட்டா, யோகா, நாகூர் இட்லி, தியானம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பற்பல சங்கதிகள் அனைத்துடனும் ஆத்மார்த்தமாகத் தொடர்புகொள்ள விழையும் ஒரு ஜீவனின் வாழ்வனுபவம் இது. நிறைவேறாத ஒரு பெருங்கனவை யதார்த்த வாழ்வில் தேடிப் பெற முடியாத இயலாமை சார்ந்த வெறுப்பின் உச்சத்தில், தரிசனம்போல என்னவாவது சித்திக்காதா என்கிற எதிர்பார்ப்பு.

இது பிடிக்கவில்லை என்பவர்களின் பிரச்னை அநேகமாக ஒன்றுதான். இந்நாவலின் மையப்புள்ளி அவர்களுக்கு வசப்படவில்லை. எனக்கென்னவோ அது இந்நாவலின் முதல் அத்தியாயத்தின் கடைசி வரிகளிலேயே கிடைத்துவிட்டது.

கதை, கலை, வடிவம், ஒழுங்கு, உண்மை, தரிசனம் என்று என்னென்னவோ சொல்கிறோம். என்னைக் கேட்டால் அனைத்தையுமே உதறித் தள்ளிவிட்டு இதனோடு ஒரு ஓட்டம் ஓடிப் பார்க்கலாம். எனிமா கொடுத்து மனத்தை சுத்திகரித்துக் கொட்டுகிற மாபெரும் முயற்சியாக இது எனக்குப் பட்டது. எங்குமே குழப்பமோ, சலிப்போ தராத மொழி ஒரு தக்கையை ஏந்திச் செல்லும் நதிநீர் போல் நம்மை எடுத்துக்கொண்டு பயணம் செய்கிறது. எங்குமே அது கவிழ்த்துவிடுவதில்லை. அதனாலேயே நாவலை வாசிப்பது ஒரு பண்டிகை கொண்டாடும் உற்சாகத்தை அளிக்கிறது.

தேகம், ராசலீலா போன்ற சாருவின் முந்தைய நாவல்கள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. ஜீரோ டிகிரியை  விரும்பிப் படித்தேன். அதற்குப் பிறகு எக்சைல்தான் கவர்ந்திருக்கிறது.

பிகு1: எக்ஸைல் என்றுதான் நான் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஷிஃப்ட் எஸ் அடிக்க சோம்பேறித்தனப்பட்டு எக்சைல் என்றே தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.

பிகு2: இந்நாவல் வெளிவரும் முன் இதற்கு முன்பதிவு செய்து காத்திருந்த என் நண்பர் கவிராஜனை ட்விட்டரில் வாரு வாரென்று வாரியிருக்கிறேன். அது இப்போது நினைவுக்கு வருகிறது. கவிராஜன் என்னை மன்னிக்க வேண்டும். காத்திருந்து வாசிக்க வேண்டிய நாவல்தான் இது.

எக்ஸைல் வாசிக்க

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி