எனக்கு ப்ரூஃப் ரீடர் தேவையில்லை

இன்றைய பதிப்புத் துறையில் நான் காணும் மிகப் பெரிய பிரச்னை ப்ரூஃப் ரீடிங். அந்தப் பணி, அதன் மேன்மையை முற்றிலும் இழந்து, சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஆண்டுக்குப் பலநூறு தமிழ் நூல்கள் வெளியானவண்ணம் உள்ளன. மக்களும் வாங்கிப் படிக்கிறார்கள். அது குறித்துப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். சில புத்தகங்கள் விருது பெருகின்றன. சில விற்பனையாகின்றன. நூலக ஆணை இதர சௌகரியங்கள் இருக்கவே இருக்கின்றன. அனைத்தையும் மீறி சில புத்தகங்கள் பிறந்த சில நாள்களில் இறக்கவும் செய்கின்றன.

மெய்ப்புத் திருத்தல் என்கிற ப்ரூஃப் ரீடிங் கலை எடிட்டிங்கைவிடச் சிரமமானது. மொழி அறிவு, சொற்றொடர் அமைப்பு முறைகள், இலக்கணத் தெளிவு போன்ற நுட்பங்கள் ஒரு புறம் என்றால், கண்ணும் சிந்தையும் ஓயாமல் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய உழைப்பு அதற்கு நிகராக வர வேண்டியது.

இன்று ப்ரூஃப் ரீடர் என்று சொல்லிக்கொள்வோரில் எத்தனை பேருக்குத் தமிழ் இலக்கணம் சுத்தமாகத் தெரியும் என்று தெரியவில்லை. அத்தனை சுத்தமெல்லாம்கூட அவசியமில்லை. ஒற்றுப் பிழைகள், சொற்றொடர் அமைப்புப் பிழைகள், எழுவாய் பயனிலைப் பிழைகளை சுத்தமாகக் களையக்கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பிழைகளைக் கண்டறியத் தெரிந்தோர்கூடப் பிரதியை முழுமையாகப் படிப்பதில்லை. போகிற போக்கில் கண்ணில் படுகிற ஒன்றிரண்டு பிழைகளை மட்டும் சிவப்பு மையால் சுழித்துவிட்டு, வேலை முடிந்ததாகச் சொல்லிவிடுகிறார்கள்.

இரண்டுமே சிக்கல். மொழியறிவில்லாதிருப்பது. பிரதியை ஒழுங்காகப் படிக்காமல் பஜனை செய்வது. இதன் விளைவுகள் அபாயகரமானவை.

முதலாவது, எழுத்தாளரின் மீது வாசகருக்கு நம்பிக்கை வராது. வாசகருக்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் ஒரு பிழைபட்ட பிரதி, வரிகள்தோறும் நெருடிக்கொண்டே இருக்கும். உள்ளே ஊன்றிப் படிக்க விடாது. இது ஒரு சைக்காலஜி. ஏதோ சரியில்லை என்று தூக்கி வைத்துவிடுவார்கள். இன்னொரு முறை அந்த நூலாசிரியரின் புத்தகத்தை அவர் எடுப்பாரா என்று சொல்ல முடியாது.

இரண்டாவது பிரச்னை பதிப்பாளர்களுக்கு இதனால் வரக்கூடிய அவப் பெயர். ஒரு பதிப்பாளர் தாமே அனைத்துப் புத்தகங்களையும் சொல் சொல்லாகப் படித்துத் திருத்தம் செய்துகொண்டிருக்க முடியாது. ஒரு மெய்ப்புத் திருத்துநரை நம்பிப் பொறுப்பை ஒப்படைக்கத்தான் முடியும். அவரது சோம்பேறித்தனத்தால் பிழைகள் மலிந்த ஒரு புத்தகம் வெளியாகிவிட்டால், பதிப்பாளருக்குத்தான் கெட்ட பெயர் போய்ச் சேரும். என்ன வேலை பாக்கறான் என்று ஒரு வரியில் நிராகரித்துவிடும் வாய்ப்புகள் அதிகம். இது தொடருமானால், அவரது தொழிலே ஆட்டம் காணத் தொடங்கும்.

மூன்றாவதும் மிக முக்கியமானதுமான சிக்கல், ஒரு பிழைபட்ட பிரதி, ஒரு தலைமுறைக்கே தவறான மொழியைக் கற்பிப்பதாகும். இது மன்னிக்கவே முடியாத பெரும் தவறு. இவ்வாறு பிழைகள் மலிந்த ஒரு பிரதியைத் தூக்கி நிறுத்துவதற்காகத்தான் ஒற்று இல்லாவிட்டால் பரவாயில்லை, சந்தி சரியில்லாவிட்டால் பரவாயில்லை, சொற்றொடர் அமைப்பெல்லாம் முக்கியமில்லை; கூற வரும் பொருளை மட்டும் பார் என்று எழுத்தாளர்களும் சப்பைக்கட்டு கட்டத் தொடங்குவார்கள்.

சிதைந்த மொழி என்பது ஒரு சமூகம் சிதைந்துகொண்டிருப்பதன் மிக நேரடியான உதாரணம். அப்படியே விட்டால், இல்லாது போன மொழிகளுள் ஒன்றாக நமது மொழியும் சேரும். மொழியினும் முக்கியமான அடையாளம் ஒன்றில்லை. அந்த அடையாளத்தை இழந்து முகமற்ற சமூகமாக மாறுவதற்குத்தான் இன்றைய ப்ரூஃப் ரீடர்கள் பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள்.

அவர்களைத் திருத்த நம்மால் இயலாது. அது சாத்தியமும் இல்லை. நாம் செய்யக்கூடியது என்ன?

எழுதுபவர்கள் பிழையின்றி எழுதப் பழகுவதுதான் இதற்கு எளிய தீர்வு. அதற்கு, எது பிழை என்பது முதலில் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் இலக்கணப் பிரதிகள் அனைத்தையும் கரைத்துக் குடித்திருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு இலக்கணப் பாட நூல்களைச் சரியாகக் கற்றாலே போதும். அதைக் கற்கவும் நேரமில்லை என்றால் எழுதுகிற ஒவ்வொரு சொற்றொடரையும் வாயைத் திறந்து சொல்லிப் பார்த்து, உச்சரிப்பதைக் காதால் ஊன்றிக் கேட்டு, பிறகு அதனை எழுத்தில் கொண்டு வருவது. இது முற்றிலும் சரியான முறை அல்ல. ஆனால் தமிழின் கட்டமைப்புக்குத் தொண்ணூறு சதமானம் உதவக்கூடிய வழி.

என் மாணவர் ஒருவர் எதையாவது எழுதிக் காட்டுவார். பிழைகளைச் சுட்டினால், ‘சார், இன்னும் கரெக்‌ஷன் போடல. அப்படியே டைப் பண்ணது சார்’ என்பார்.

மனத்தில் மொழி சுத்தமாக இருக்குமானால் தட்டச்சு செய்யும்போது மட்டும் எப்படிப் பிழைபட வரும்? மொழி பயிலாதது ஒரு குற்றம் என்றால் சரியாகத் தட்டச்சு செய்யப் பயிலாத இன்னொரு குற்றமும் இதில் இணைந்துவிடுகிறது. அனைத்துக் குற்றங்களையும் நான் செய்வேன்; ஆனால் என் எழுத்து தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டே தீரவேண்டும் என்பது நியாயமே அல்ல.

இனி வரும் காலத்தில் ப்ரூஃப் ரீடர்கள் அநேகமாக இருக்க மாட்டார்கள். அரைகுறையாகத் திருத்தங்கள் செய்யும் மென்பொருள்கள் சில வரும். ஏற்கெனவே சில மென்பொருள்கள் உள்ளன. இன்னும் வரும். அவைதாம் நம் பிரதிகளுக்கு மெய்ப்புப் பார்க்கும். அது போதும் என்று நினைப்பீர்களானால், நமக்கு பதிலாக எழுதிக் கொடுக்கும் மென்பொருள்களும் வரும். ஏற்கெனவே சாட் ஜிபிடி போன்ற சில கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துவிட்டன. அவை மேம்படுத்தப்படுமானால், பிராந்திய மொழிகளுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிடுமானால் தமிழில் எழுத்தாளர்களின் தேவை அரிதாகிவிடும்.

எழுதுவோர் மொழிச் சுத்தம் பயில வேண்டிய நெருக்கடிக் கட்டத்துக்கு இப்போது வந்திருக்கிறோம். கடந்த சில மாதங்களாக ப்ரூஃப் ரீடர்களின் தன்னிகரற்ற அழிச்சாட்டியங்களைக் கண்டபின்னர் இந்த எண்ணம் மேலும் மேலும் உறுதிப்படுகிறது. இதனைப் பொருட்படுத்தாவிட்டால் நிகழக் கூடிய விபரீதங்கள் சிறிதல்ல.

இவ்வளவு சொன்னபின்னர் ஒன்றைச் சொல்கிறேன். என்னுடைய புத்தகங்களை எடிட்டிங்குக்கு நான் யாரிடமாவது தருவதுண்டு. ஆனால் ப்ரூஃப் படிக்கவென்று யாரையும் அண்டியதில்லை. பத்திரிகைகளுக்கோ பதிப்பகங்களுக்கோ அனுப்பும்போது ‘என் பிரதியில் பிழை இராது’ என்று தெளிவாகச் சொல்வேன். மீறியும் பிழை வருமானால் அது நான் செய்ததாக இராது. எது சரி என்று சரியாகத் தெரிந்துகொள்ளாத அந்நிறுவனத்தின் ப்ரூஃப் ரீடர் செய்யும் பிழையாக மட்டுமே இருக்கும்.

இதனை ஓர் ஆணவமாக எடுத்துக்கொள்வார்கள் என்பது குறித்து எனக்குச் சிறிதும் கவலையில்லை. ஏனெனில் என்ன எழுதுகிறேன் என்பதில் குவிக்கும் கவனத்துக்குச் சற்றும் குறைவின்றித்தான் எப்படி எழுதுகிறேன் என்பதிலும் கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு சொற்றொடரையும் குறைந்தது இரண்டு முறையாவது மீளப் பார்த்து, அதன் சரித்தன்மையை உறுதி செய்துகொள்ளாமல் அடுத்த வரிக்குச் செல்லும் வழக்கமே இல்லை. எனக்கு இலக்கணத்தின் அனைத்துப் பாடங்களும் தெரியும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் பிழைபட்ட ஒரு சொற்றொடரைக் கூட என் எழுத்தில் நீங்கள் காண முடியாது. விராட் கோலி ஆவதற்கு முதல் படி, பேட் பிடிக்கக் கற்பதல்லவா?

இந்தத் தன்னம்பிக்கை இருந்தாலொழிய எனக்கு ப்ரூஃப் ரீடரே தேவையில்லை என்று சொல்ல முடியாது. என் மாணவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதனைத்தான். எனக்கு ப்ரூஃப் ரீடர் தேவையில்லை என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter