காதலற்றவன்

இன்றெல்லாம் ஏராளமான காதல் குறிப்புகள், கவிதைகள், நினைவுச் சிதறல்கள் என்று சமூக வெளி எங்கும் ஊதுபத்திப் புகை போலக் காதல் மிதந்து ஊர்ந்துகொண்டே இருந்தது. தனக்கு வரும் மர்மப் பரிசுகளை மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து புகைப்படங்களாகவும் குறிப்புகளாகவும் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தார். தனக்கு யாரும் முத்தம் தரப்போவதில்லை என்று நிச்சயமாகத் தெரிந்தபடியால் மைலாப்பூர் ஜன்னல் கடையில் உருளைக் கிழங்கு பஜ்ஜி சாப்பிட்டுவிட்டுக் கடற்கரைக்குச் சென்று காற்றை முத்தமிட்டு அனுப்பியதாக செந்தூரம் ஜகதீஷ் எழுதியிருந்தார். இவற்றையும் இவை நிகர்த்த பிற குறிப்புகளையும் திகைப்புடனும் ஆர்வத்துடனும் படித்துக்கொண்டிருந்தேன்.

பன்னெடுங்காலமாக என் மனைவி என்னை ஒழுங்கான ஒரு காதல் கவிதையாவது எழுதச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருக்கிறார். இன்று வரை என்னால் அது முடிந்ததில்லை. பள்ளி நாள்களில் சில சந்தக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். நண்பர்கள் கேட்டதனால். அவை இலக்கணம் வழுவாத விருத்தங்களாக இருந்தபடியாலேயே அந்நண்பர்களின் காதல்கள் ஈடேறவில்லை. ஆனால் அக்கவிதைகளுள் ஒன்றைப் படித்துவிட்டு, நான் காதலில் விழுந்துவிட்டதாக எண்ணி என் வீட்டில் ஒரு சிறு கலவரம் நடந்திருக்கிறது. என்ன காரணத்தாலோ, என்னால் யாரையும் காதலிக்க முடிந்ததில்லை.

ஒரு மனிதனுக்குக் காதல் என்ற உணர்வு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்று சொன்னால் மிக நிச்சயமாக நீங்கள் நம்பத்தான் மாட்டீர்கள். ஆனால் என்ன செய்ய? நான் அப்படித்தான் இருந்திருக்கிறேன். ஆனால் ரசனை உண்டு. அழகான பெண் என்று குத்து மதிப்பாக யாரையும் மதிப்பிட்டதே இல்லை. என்ன அழகு, எதனால் அழகு, அந்த அழகுக்கு நிகரான அழகு எது, மேம்பட்ட அழகு எது என்று கவனமாக ஆராய்ந்து முடிவுகளை மனத்துக்குள் சேமித்துக் கொள்வேன். தேவைப்படும்போது கதைகளில் அந்த சொரூபத்தைக் கொண்டு வந்து உட்கார வைப்பேன். நடிகைகளின் காதல், நண்பர்களின் காதல், தினத்தந்தி காதல் அனைத்தையும் கவனமாகக் கேட்டும் படித்தும் அறிந்து கொள்வதுண்டு. உலகமே ஒரு முறையாவது அனுபவித்த ஓர் உணர்வு எனக்கு எப்போதும் இல்லாது போனது பற்றிய வியப்பின் ஈரம் என்றுமே உலர்ந்ததில்லை.

இதனால் நான் முற்றும் துறந்தவன் என்று பொருளல்ல. அனைத்துக்கும் ஆசைப்படும் எளிய மனிதன்தான். அதில் சந்தேகமில்லை. ஓர் உணர்வாக, உளக் கிளர்ச்சி தரத்தக்க அனுபவமாகக் காதல் எனக்குத் திரண்டு வந்ததில்லை. பள்ளி தினங்களில் உடன் படித்த சில பெண்கள் அழகிகள் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் காதலிக்கத் தோன்றியதில்லை. என் மகள் யுகேஜி படிக்கும்போது, உடன் படிக்கும் ஒரு மாணவனின் காதல் நடவடிக்கைகளைக் குறித்து ஒரு நாள் வீட்டில் வந்து சொன்னாள். ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு பல சமயம் தனது பள்ளித் தோழர்களின் காதல்கள் குறித்தும், காதல் முறிவுகள் குறித்தும், புதிய ஏற்பாடுகள் குறித்தும் சொல்லியிருக்கிறாள். எனக்கேகூட 96, விண்ணைத் தாண்டி வருவாயா, டைட்டானிக் போன்ற காதல் திரைப்படங்களைப் பார்க்கப் பிடித்திருந்தது. 96ஐப் பல முறை திரும்பத் திரும்பப் பார்த்தேன். அபத்தங்களை மீறியும் ஓர் அழகு காதலில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அழகைக் காட்டிலும் அபத்தத்தின் சதவீதமே அதிகம்.

இப்படித் தோன்றவும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும் அல்லவா? இளம் வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சில சாமியார்களின் பின்னால் திரிந்திருக்கிறேன். அது காரணமாக இருந்திருக்குமா என்றால், இல்லை. பெண் பித்தர்களான சாமியார்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை என்றபோதும் எதிர் பாலினம் சார்ந்த ஈர்ப்பைக் கொலை பாதகம் என்று சொல்லக்கூடியவர்கள் யாரும் எனக்கு எதிர்ப்பட்டதில்லை. சொரிமுத்து சித்தர் தொடங்கி தபஸ்யானந்தர் வரை எனது சன்னியாச சிந்தனைகளைப் பெருக்கித் தள்ளிவிட்டு, சம்சாரக் காட்டுக்கு அடித்துத் துரத்துவதில்தான் குறியாக இருந்தார்கள். சன்னியாசத்துக்குப் பொருந்தாதவன் என்று அவர்களும், சம்சாரத்துக்குப் பொருந்தாதவன் என்று குடும்பமும் தீர்ப்பளித்ததில் எனக்கு வியப்பே கிடையாது. ஒரு சிறந்த இரண்டுங்கெட்டானாகத்தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறேன்.

பிரச்னை அதுவல்ல. சன்னியாசத்தைக் கூட முழு மனத்துடன் என்னால் காதலிக்க முடிந்ததில்லை என்பதை நினைவுகூர்கிறேன். எப்போதும், எக்கணமும் ஓர் அலைபாய்ச்சல் இருக்கிறது. உறங்குவதைக் கூட விழிப்புணர்வுடன் மட்டுமே செய்கிறேன். அறியாமல் செய்த பிழை என்று என் வாழ்வில் எதுவுமே இல்லை. நற்செயல்களைப் போலவே அனைத்துப் பிழைகளையும் தெரிந்தேதான் செய்திருக்கிறேன். இது நானே பொருத்திக்கொண்ட விழிப்புணர்வு என்றுதான் நினைக்கிறேன். எதற்காக இவ்வளவு கவனமாக ஒரு வேலி அமைத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. அது என் இயல்பாக இருந்திருக்கிறது. மாபெரும் மனிதக் கூட்டத்துக்கு நடுவிலும் என்னால் தனித்திருக்கத்தான் முடிகிறது. அப்படி இருப்பதுதான் சௌகரியமாக இருக்கிறது.

இந்த விழிப்புணர்வுதான் காதல் உணர்வின் முதல் எதிரி என்று நினைக்கிறேன். ஒரு மகா நிர்வாண நிலைக்குச் சற்றும் குறைந்ததல்ல காதல் வயப்பட்ட மனநிலை. அப்படித்தான் அது இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உலகமே அதில் சிக்குண்டு கிடக்க விரும்பாது. மெய்ஞ்ஞானம் போல ஏதோ ஒன்றைத் தேடிக் கிடந்த காலத்தில்கூட உச்சத்தைத் தொடும் வழியைத் தெரிந்துகொள்ள விரும்பினேனே தவிர, அங்கே போய்ச் சேரும் வேட்கை இருந்ததாக நினைவில்லை. கேவலம், மூன்று நிமிடங்களுக்கு மேல் தியானத்தில்கூட இருக்க முடிந்ததில்லை. உட்கார்ந்தால், பளிச்சென்று ஒரு கதைக் கரு தோன்றிவிடும். அதன்பின் மனத்தை எங்கே கொண்டு குவிக்க?

ஒருவேளை இந்தப் பிறப்புக்காக அளந்து அளிக்கப்பட்ட மொத்தக் காதலையும் எழுத்தில் கொண்டு குவித்துவிட்டேனா என்றால் சத்தியமாக இல்லை. பத்தாண்டுக் காலம் பேய் பிடித்தாற் போல இசையில் மூழ்கிக் கிடந்திருக்கிறேன். பிறகு சில ஆண்டுகள் ரகசிய அரைகுறை ஆன்மிக முயற்சிகள். அதற்கும் பிறகுதான் எழுத வந்தேன். ஆர்வங்களை எல்லாம் காதல் என்று சொல்லிவிட முடியுமா? ஆனால் மொத்த வாழ்வையும் விழிப்புணர்வுடனேயே கடந்திருக்கிறேன். அற்புதங்கள் முதல் அபத்தங்கள் வரை அனைத்தையும் உணர்ச்சி வயப்படாமல் அணுகி வந்திருக்கிறேன். சித்தம் கலங்கி நின்ற தருணம் என்ற ஒன்று வந்ததே இல்லை. என் அப்பா இறந்த அன்று இரவு கூட இரண்டாயிரம் சொற்கள் எழுதிவிட்டுத்தான் படுத்தேன்.

நான் யாரையும் நெருங்கிச் செல்லாததற்கும் என்னை யாரும் நெருங்கி வராததற்கும் இதுதான் காரணமாக இருக்க வேண்டும்.

சிறிது உறக்கமோ, சிறிது மயக்கமோ இல்லாத ஒரு வாழ்வை வீணாகக் கற்பனை செய்து நேர விரயம் செய்யாதீர்கள். இந்த உலகுக்கு நான் ஒருவன் போதும்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!