உன் மீது ஒரு புகார்

தன்னுடன் படித்த நண்பர்களில் பலர் புத்தக சகவாசமே இல்லாதிருப்பது குறித்து நண்பர் மகுடேசுவரன் எழுதிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் படித்தேன். நியாயமாக அவர் தம் நண்பர்களுக்க நன்றி சொல்ல வேண்டும்.

நேற்று ஒரு சம்பவம் நடந்தது. இரவு ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தது ஒரு பெண். எடுத்த எடுப்பில், ‘நீங்க பா. ராகவன்ங்களா? நான் மதுரவாயில் போலிஸ் ஸ்டேசன்லேருந்து பேசறேங்க. உங்க மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கொஞ்சம் விசாரிக்கணும்.’

கணப் பொழுது குழப்பமானது உண்மை. ஆனால் சட்டென்று தெளிவுற்று, ‘சொல்லு வளர்மதி, எப்டி இருக்க?’ என்றேன். அவளும் அதற்கு மேல் விளையாடவில்லை. நலம் விசாரித்துப் பிற விஷயங்களைப் பேசத் தொடங்கிவிட்டாள்.

சேதி என்னவென்றால், வளர்மதி என்னுடன் படித்த பெண். கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை இருவரும் பி செக்‌ஷன். என்னுடைய பல சிறுகதைகளிலும் கால் கிலோ காதல் நாவலிலும் நீங்கள் அவள் பெயரைக் கண்டிருக்கலாம். வளர்மதி, புஷ்பலதா, சுமதி, ஜெயலலிதா, க்ளாரா, ராஜாத்தி எல்லோரும் பெயர்களாக மட்டும் நினைவில் தங்கிவிட்டவர்கள். என்ன கதை எழுதத் தோன்றினாலும், பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டும் கட்டத்தில் இவர்களுடைய பெயர்கள்தாம் முதலில் நினைவுக்கு வரும். அதனாலேயே எல்லாக் கதைகளும் இவர்களுடைய கதைகள் என்பதல்ல. முற்றிலும் தொடர்பற்றுப் போய்விட்டவர்கள் என்பதால் இதுவரை சிக்கல் ஏதும் இல்லாதிருந்தது.

நேற்று மாட்டிக்கொண்டேன். ‘ஏன் ராகவா, என்னைய வெச்சி எதோ கதை எழுதியிருக்கியாமே நீ? என்னாது அது?’ என்று கேட்டாள்.

‘சேச்சே. உன் பேர்தான் அதுல இருக்கும். நீ இருக்க மாட்ட. விடு. என்ன பண்ற நீ? எப்டி இருக்க?’

‘சொன்னனே. மதுரவாயில் ஸ்டேசன்ல ஹெட் கான்ஸ்டபிள். என் சித்தி உன் புக்க படிச்சிருக்காங்கப்பா. ஏய் ஒன்னைய பத்தி, ஊர்ல நம்ம ஓட்டல பத்தியெல்லாம் எழுதியிருக்குடின்னாங்க. என்னா எழுதி வெச்சிருக்க நீ?’

எனக்கு அவளைவிட அவளது சித்தியை நினைத்தால்தான் களேபரமாக இருந்தது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை. இப்போது அதற்கு இப்படி ஒரு நினைவுகூரல் நேரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.

‘உன் சித்திட்ட இருக்கா அது?’

‘ஆமா. வெச்சிருக்கேன்னாங்க. நான் புக்கெல்லாம் படிக்கறதே இல்லடா. பழக்கமே இல்ல.’

‘நீ உன் சித்தி மாதிரி இல்ல. ரொம்ப நல்லவ. அத விடு. என் நம்பர் யார் குடுத்தாங்க? பன்னீரா?’

‘நேத்து புஷ்பலதா பேசிச்சாமே? அவ மக கல்யாணத்துக்கு வருவ இல்ல? அப்ப கண்டிப்பா பாப்போம். எனக்கு உங்க எல்லார் மூஞ்சியும் மறந்தே போச்சு’ என்றாள்.

முப்பத்தாறு வருடங்கள்!

என்னிடம் பேசியதற்குப் பிறகு எங்கள் பேட்சின் இன்னொரு நண்பன் பன்னீர் செல்வத்திடம் பேசியிருக்கிறாள். இதையேதான் அவனிடமும் சொல்லியிருக்கிறாள். யார் முகமும் நினைவில்லை.

‘உனக்கு மட்டும் எப்படிடா பேரு, மூஞ்சி, நடந்த சம்பவம் எதும் மறக்காம இருக்கு?’ என்று இன்று பன்னீர் கேட்டான்.

எதையும் மறக்கத் தெரியாமல், ஆங்காங்கே சிறிது சிறிதாக இறக்கி வைக்க மட்டும் அறிந்தவனே எழுத்தாளன் ஆகிறான். இந்தக் கதையில் இடம்பெறும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. எதையும் யாரையும் குறிப்பிடுவதில்லை என்று திவசச் சடங்கு போல ஒரு முன்குறிப்பு வைக்கும் வழக்கம் என்றுமே எனக்கில்லை. எந்தக் கதையையும் எந்தப் பெயரையும்  கற்பனையில் கண்டெடுத்துப் போட்டதே இல்லை. இடம் மாற்றிப் போட்டு அடையாளம் வேண்டுமானால் மாற்றி இருப்பேன். கால் மாட்டில் தலைவைத்துப் படுத்துக்கொண்டு தலைகீழாகக் கிடப்பதாக நினைத்துக்கொள்வது போல.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter