தொலைக்காட்சிக்கு எழுதுவதை நிறுத்தி எட்டு மாதங்கள் ஆகின்றன. இந்நாள்களில் நான் என்ன செய்கிறேன் என்று கேட்காத நண்பர்களே கிடையாது. எதையாவது செய்துகொண்டிருப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் எல்லோருக்கும் இருந்தது. அனைவருக்கும் சொல்வதற்கு ஒரு பதில் இருந்தாலும் அது உருத் திரண்டு ஒரு வடிவம் கொண்டு வெளிப்பட இவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது.
நண்பர்களே, உங்கள் வாழ்த்தோடு ஒரு புதிய பத்திரிகை தொடங்குகிறேன். மெட்ராஸ் பேப்பர். சற்றும் சமரசமின்றி, தமிழில் ஒரு சர்வதேசப் பத்திரிகையாக இது இருக்கும் – இயங்கும் என்பது ஒன்றே உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி.
இணைய இதழா, அச்சிதழா, செயலி இதழா என்ற வினாக்களுக்கெல்லாம் இக்காலத்தில் ஒற்றை பதில் சொல்வது சிரமம். எந்தக் கணமும் எவ்வடிவமும் எடுக்கலாம். இந்தக் கணம் இது இணைய இதழாக உருப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்தப் பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திராத கரங்கள் இந்தப் பத்திரிகையில் எழுதப் போகின்றன. ‘இந்த நடிகைக்கு இப்படி ஒரு பிசினஸா? அலறும் நெட்டிசன்கள்’ என்பது போன்ற அருவருப்புகளுக்கோ, ‘ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும் அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும் கோட்பாட்டு ஜிலேபிகளுக்கோ’ இதில் இடம் இராது.
வாழ்க்கை எந்தளவு எளிதாக உள்ளதோ, வாசிப்பும் அந்தளவுக்கு இருக்க வேண்டும். ஒன்றைப் படித்து முடித்தால், ஒரு நிமிடமாவது அதில் நின்று லயித்து மீள வேண்டும். எனக்குச் சொல்லித் தந்தவர்கள் இதைத்தான் வலியுறுத்தினார்கள். எளிய பதங்கள். எளிய சந்தம். பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு என்று தனது பாக்களுக்கு பாரதி வகுத்த இலக்கணத்தை எடுத்துக் கொள்கிறேன். இந்தப் பத்திரிகை உங்களைக் கருத்தளவில் சிந்திக்கத்தான் வைக்குமே தவிர, மொழி அளவில் பல்லை உடைக்காது.
எவ்வளவோ பத்திரிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. தவிரவும் சமூக ஊடகங்களின் காலமாக இது இருக்கிறது. ஒரு புதிய பத்திரிகை, இவற்றில் இல்லாத வேறு எதைச் சாதித்துவிடும்?
உங்களுக்கு வரக்கூடிய இந்த வினா எனக்கு வந்தபோது நானே எனக்குச் சொல்லிக்கொண்ட பதில்: செய்திகளுக்கும் ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் பரபரப்புக்கும் விருப்பு வெறுப்பு சார்ந்த நிலைபாடுகளுக்கும் கட்சி அரசியல்- காழ்ப்பரசியல்களுக்கும் இடையில் நமக்கு நின்று மூச்சு விட கணப் பொழுதாவது கிடைக்கிறதா? படித்துப் பதற ஆயிரம் இருக்கிறது. ரசித்து அனுபவிக்க என்ன உள்ளது?
இந்தப் புதிய பத்திரிகை உங்கள் ரசனைக்கு ஒரு விருந்தாக இருக்கும்.
அண்டார்டிகா நீங்கலாக உலகின் அனைத்துக் கண்டங்களில் இருந்தும் ஒரு புதிய அணி புறப்பட்டு வருகிறது. முறையாக எழுதப் பயின்ற – மொழியைச் சிதைக்காத ஒரு தரமான அணி. நம்மைச் சுற்றி உள்ள உலகுடன் நம்மை மேலும் நெருக்கமாக்கவும், நம்மைச் சூழும் பிரச்னைகளின் அடியாழம் வரை தோண்டித் துருவிச் சுட்டிக்காட்டவும் நல்லதைக் கொண்டாடவும் நாமறிந்த உண்மைகளை நேர்மையுடன் மக்கள் முன் எடுத்து வைக்கவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு இவர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். இவர்கள் தவிர நான் மதிக்கும் சில மூத்த எழுத்தாளர்களும் எழுத ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் உண்டு சொல்வதற்கு. இப்போதைக்கு இன்னும் ஒன்றை மட்டும் சொல்லி, இங்கே நிறுத்துகிறேன்.
இது இணைய இதழாகத்தான் ஆரம்பமாகிறது. ஆனால் இலவச இதழ் அல்ல.
-நாளை தொடர்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.