ஓவியா அழுதிருக்கிறாள்
கோவிந்து வந்திருக்கிறார்
எப்போதுமில்லா வழக்கமாக
எங்களூர் ஏடிஎம்மில் பணம் இருந்திருக்கிறது
தக்காளி விலை ஏறி
ராயப்பேட்டை புத்தகக் காட்சியில்
விற்பனை சரிந்திருக்கிறது
விஜய் சேதுபதிக்கு இன்னொரு நல்லபடம்
பாதாம் நூறென்றால்
கிராமா நம்பரா
நேற்றும் குழுமத்தில்
கேட்டிருக்கிறார் யாரோ ஒருவர்
குறும்பட இயக்குநர் கைதாகி
சமூகப் பொதுவெளியில் பிரபலமாகியிருக்கிறார்
ஆந்திரத்தில் கஞ்சா கடத்தல்
தலைநகரில் செம்மரக் கடத்தல்
ஆடிப் பூரத்துக்கு மாவட்ட விடுமுறை
உங்கள் ஆதார்-pan இணைத்துவிட்டீர்களா?
இல்லாவிட்டால்
ரிட்டன் தாக்கல் சிக்கலாகும்
நாளுக்கொரு குறுஞ்செய்தியில்
வருமான வரித்துறை வேலை செய்கிறது
ராகு கேது பெயர்ச்சிப் பலனில்
ரிஷபத்துக்கு ஓஹோ
ரா.பா. சாரதி செத்தாலோ என்
ராத்திரித் தூக்கம் தொலைந்தாலோ
சுற்றாதிருப்பதில்லை
மண்ணுலகும்
மின் விசிறி மீறிய கொசுவும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.