தூங்கி எழுந்து பார்த்தபோது
ஒரு
காதைக் காணவில்லை
பதறித் தேடி வீடு முழுதும்
கலைத்துப் போட்டேன்
படுக்கையில் பார்த்தாயா
என்றாள் மனைவி
மடித்து வைத்ததை உதறிப் பார்த்தால்
காது அதில் இல்லை
காலை இருந்தது
வாக்கிங் போகையில் குடைந்த
நினைவிருக்கிறது
குளிக்கும்போது தேய்த்துக் குளிக்க நினைத்து
சோம்பலில் செய்யாமல் விட்டது
நினைவிருக்கிறது
குளித்து முடித்து ஈரம் துடைக்கையில்
காதின் பின்புறம் ஒரு கட்டி வரப்போகும்
அறிகுறி தெரிந்தது
சாப்பிடும்போது மனைவி அழைத்து ஏதோ
சொன்னபோது
காதுல விழல என்றது
நினைவிருக்கிறது
ஒருவேளை அப்போதே கழன்று
விழுந்திருக்குமோ?
சாப்பாட்டு மேசையின் அடியில் தேடினேன்
சிதறிக்கிடந்த பருக்கைகளில் தெரிந்ததென்
ஒழுங்கீனம்
காதைத் தேடிப் போய்
பருக்கைகளை அப்புறப்படுத்தினேன்
எங்கே போனதென் ஒரு காது?
வான் காபோல
நானே பிய்த்து எறிந்திருக்க வாய்ப்பில்லை
கமர்ஷியல் போராளிக்குக் காது அவசியம்
யாரும் திருடிப் போயிருக்க வாய்ப்பில்லை
ஆபரணங்க ளேதுமதில் இல்லை
கேட்டுச் சேர்த்த சொத்தொன்றும்
பெரிதில்லை
வெற்றுச் சண்டைகள் வம்பு வழக்குகள்
அக்கப்போர் கிசுகிசுக்கள்
அடாவடிப் பேச்சுக் குப்பைகள்
அவ்வப்போது கொஞ்சம் பாட்டு
அதிகம் போனால் மனைவியின் வசவுகள்
பெரிய நஷ்டம் இல்லையென்றாலும்
காணாமல் போன காதில் மட்டுமே
காலம் உறைந்து போகிற
தென்பதால்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
தொலைந்த காதை.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.