ஜென் கதை

அவளுக்கு அவனை மிகவும் பிடித்தது. பார்க்க நன்றாக இருந்தான். படித்தவனாக இருந்தான். தரமான உத்தியோகமும் தாராளமான வருமானமும் இருந்தது. தவிர வீட்டுத் தொல்லைகள், தொந்தரவுகள் இருக்காது என்று தோன்றியது. அவனது வீட்டாரும் தன்மையாகப் பழகினார்கள். பெண் பார்க்க வந்துவிட்டு அவளைப் பிடித்திருக்கிறது என்று அனைவரும் சொன்னார்கள். தனியே அவனோடு பேசியபோது தவறாக எதுவும் தோன்றவில்லை. அழகாகப் புன்னகை செய்தான். எல்லாம் சரியாக அமைந்து திருமணம் நடந்தால் மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

திருமணத்தன்று அவளது பெற்றோர் திரும்பத் திரும்ப அவளிடம் சொல்லி மாய்ந்தார்கள். மிகவும் நல்ல குடும்பம். அத்தனைப் பேருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். நீ கொடுத்து வைத்தவள்.

அப்படியெல்லாம் அவள் நினைக்கவில்லை என்றாலும் அவனை மணந்துகொண்டதால் வாழ்வில் புதிதாக எந்தப் பெரிய சிக்கலும் வராது என்று உறுதியாகத் தோன்றியது. தாலி கட்டும்போது அவன் புன்னகை செய்தான். அவளும் புன்னகை செய்தாள்.

பிறகு இருவரும் ஜோடியாகப் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டார்கள். அவனை அவளுக்கு ஊட்டி விடச் சொன்னார்கள். அவன் ஊட்டி விட்டான். அவளை அவனுக்கு ஊட்டிவிடச் சொன்னார்கள். அவள் ஊட்டி விட்டாள். போட்டோ எடுத்தார்கள். விடியோ எடுத்தார்கள். கைதட்டினார்கள். எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது.

கல்யாண சாப்பாடு நன்றாக இருந்தது. அவள் சாப்பிட்டு முடித்துவிட்டு அவன் முடிப்பதற்காகக் காத்திருந்தாள். அவனும் சாப்பிட்டு முடித்தான். இலையில் கையைக் குழித்து வைத்து ஒரு பருக்கை, சாறு மிச்சமின்றி வழித்தான். பிறகு அதை நக்கினான். நக்கும்போது வ்ஜுர்ர்ர் என்று உதடு குவித்து உறிஞ்சவும் செய்தான். இதனைத் திரும்பத் திரும்பச் செய்து இலையை முற்றிலுமாகக் கழுவி வைத்தாற்போல ஆக்கினான்.

அவளுக்கு என்னவோ போல இருந்தது. ‘நக்காத. எனக்குப் பிடிக்காது’ என்று சொன்னாள்.

ஒரு வருடம் கழித்து அவர்கள் விவாகரத்து செய்துகொண்டார்கள்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

6 comments

  • ஒருவார்த்தையில் அடக்கம்,எவ்வளவு அர்த்தங்கள் அவரவர்மனதுக்குஏற்ப

  • அதற்கப்புறம் அவன் எது செய்தாலும் பிடிக்காமலே போய்விடும். என் தோழிகள் சிலர் முறுக்கை சத்தம் வராமல் கடிப்பவனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்றார்கள். எனக்கு பயமாக இருந்தது. கல்யாணத்துக்கு பிறகு பார்த்தால் அவள் முறுக்கு கடிக்கும் சத்தம் நன்றாகக் கேட்டது.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading