ஒரு நாயும் காகமும் பேசிக்கொள்ளும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதைவிட வியப்பு, அவை இரண்டும் பேசியது எப்படி எனக்குப் புரிகிறது என்பது.
நாய்தான் முதலில் உரையாடலைத் தொடங்கியது. ‘நேத்துலேருந்து சரியா சாப்பிடல. என்னமோ தெரியல. எதுவுமே கிடைக்கல.’
காகம் சிறிது வருத்தப்பட்டது. ‘ஏன், யாரும் சோறு வெக்கலியா?’
‘இல்ல.’
‘நான் எதாவது கொண்டு வந்து தரவா?’
‘ரெண்டு பிஸ்கட் இல்ல பொற இருந்தா நல்லாருக்கும். ஒரு பிடி சோறுன்னாலும் சரி.’
‘ஐய… பிஸ்கட், பொறையெல்லாம் டப்பாவுல இருக்கும். நான் எங்கேருந்து எடுக்க? சோறுன்னாலும் ரெண்டு பருக்கைதான் என்னால முடியும்.’
‘ஆமால்ல?’
‘வட தின்றியா? பன்னீர் கடைல இந்நேரம் மசால் வடை போட்டிருப்பான்.’
‘சரி.’
‘இரு வரேன்’ என்று சொல்லிவிட்டு அந்தக் காகம் பறந்து சென்றது. நாய் அங்கேயே படுத்துக்கொண்டது. நம்ப முடியாமல் நான் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். இரண்டு நிமிடங்களில் காகம் ஒரு வடையைக் கொத்திக்கொண்டு வந்து நாயின் எதிரே போட்டு, ‘தின்னு’ என்று சொன்னது.
‘ரொம்ப தேங்ஸ்.’
‘பாரு. அந்த பக்கி நீ தின்றதையே பாத்துட்டிருக்கான். வயித்த நோவப் போகுது. பாதி தின்னுட்டு பாதிய வெச்சிட்டுப் போயிடு.’ என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது காக்கை.
கனவல்ல கற்பனை…. அருமை பா ரா அவர்ளே…
என்னவோ நடிகர் விவேக் ஞாபகம் வருது.
அந்த பக்கி பாக்கறான்..செம.