சட்னி

வளர்மதிக்குத் தலையெல்லாம் வலித்தது. நெடுநேரமாக அவளைச் சுற்றி எல்லோரும் கூடி நின்று பேசிக்கொண்டே இருந்தார்கள். கணப் பொழுது இடைவெளிகூட இல்லை. அதெப்படி முத்துராமன் அப்படி ஒரு காரியத்தைச் செய்யப் போகலாம்? இவளுக்கு என்ன குறைச்சல்? கண்ணுக்கு லட்சணமான பெண். தவிர அவன் நினைப்பதற்கு முன்னால் எதையும் செய்து தருபவள். திருமணமாகி இந்த ஊருக்கு வந்த நாளாக ஊர்க்காரர்கள் அத்தனை பேரும் பார்த்து ஆச்சரியப்படும்படியான பெண்ணாகத்தான் அவள் இருக்கிறாள்.

‘ஏ பெரிசு, ஆம்பிளைங்க அசந்து போவுறதுல என்னா இருக்கு? பொட்டச்சிங்களே பாத்து பொறாமப்படுற சென்மம்யா அவ’ என்று திலகவதியம்மை சொன்னாள்.

கிராமத்தில் ஒவ்வொரு புருஷனும் தன் பெண்டாட்டி வளர்மதியைப் போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணாத பொழுதில்லை. இதை சில அக்காக்களே வளர்மதியிடம் சொல்லவும் செய்தார்கள்.

‘என்னக்கா நீங்க. நான் அப்டியென்ன செஞ்சிட்டேன்? வாழ வெச்ச மனுசனுக்கு வடிச்சிப் போடுறது தவிர?’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவாள்.

எண்ணி ஆறு மாதம்தான் ஆகிறது அவள் முத்துராமனைக் கட்டிக்கொண்டு வந்து. பத்து நாள் முன்பு நடவுக்கு ஆள் பிடித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு கள்ளக்குறிச்சிக்குப் போனான். மூன்றாம் நாள் சேதி வந்தது, அங்கே அவனுக்கு இன்னொருத்தியுடன் இன்னொரு கல்யாணம் ஆகிவிட்டதென்று.

‘எனக்குத் தெரியும்டி. இங்க கிடைக்காத ஆளுகளா, நமக்கு செய்யாத கூலிக்காரங்களா. இவன் ஒவ்வொரு விசையும் கள்ளக்குறிச்சிக்கு ஆள் பிடிக்கப் போறேன்னு போனப்பவே சந்தேகப்பட்டேன். இப்பிடித் தலைல கொள்ளியப் போட்டானே பாவி’ என்று முத்துராமனின் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

எல்லோரும் மணிக் கணக்கில் பேசி அங்கலாய்த்துவிட்டு, ‘அந்த சாமிதாம்மா ஒன்னய காப்பாத்தணும்’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள். வளர்மதி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள். எல்லோரும் போனதும் ஒரு காப்பி போட்டுக் குடித்துவிட்டு, ‘அத்த உங்களுக்குக் காப்பி தரவா?’ என்று கேட்டாள். கிழவி நொறுங்கிவிட்டிருந்தாள். ‘தப்பு பண்ணிட்டனே கண்ணு. உன் கையால என் கழுத்த நெறிச்சிக் கொன்னுடேன். அநியாயமா உன் வாழ்க்கைய அழிச்சிட்டனே பாதகத்தி’ என்று கதறினாள்.

அன்றிரவு பதினொரு மணிக்குமேல் முத்துராமன் வீட்டுக்கு வந்தான். வளர்மதிதான் கதவைத் திறந்தாள். ஒன்றுமே நடக்காதது போலப் புன்னகை செய்தான். வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை அவளிடம் கொடுத்தான். ‘அம்மா தூங்கிருச்சா?’ என்று கேட்டான்.

‘நீங்க எதுனா சாப்ட்டிங்களா?’

‘இல்லடி. கொலப்பசி பசிக்குது.’

‘தோசமாவு இருக்கு. ரெண்டு நிமிசம் இருந்திங்கன்னா ஒரு சட்னி அரைச்சிடுறேன்.’

‘சீக்கிரம் செய்யி.’ என்று சொல்லிவிட்டு முகம் கழுவப் போனான். அவளுக்கு துக்கம் தொண்டையில் நிரம்பி வலித்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டாள். பிடி கடலையை அள்ளி அம்மியில் வைத்து இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு தேங்காயுடன் ஏழெட்டு அரளி விதைகளைச் சேர்த்து அரைத்தாள்.

முத்துராமன் முகம் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்ததும் ‘அம்மா எப்ப தூங்கிச்சி?’ என்று கேட்டான்.

அவள் பதில் சொல்லவில்லை.

‘ஆளுங்களுக்கு சொல்லிட்டேன். நாள கழிச்சி வந்திருவாங்க. அப்றம், சொல்ல மறந்துட்டனே.. விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்ல உங்கப்பாவ பாத்தேண்டி. நீ போனடிச்சே பத்து நாளாச்சின்னாரு? பெத்தவங்க நெனப்பே வராத அளவுக்கு எம்மவள பாத்துக்குறிங்க மாப்ளன்னு கண் கலங்கிட்டாரு தெரியுமா…’

அவள், இரண்டு தோசைகளை ஒரு தட்டில் எடுத்து வந்து வைத்தாள். இட்லிப் பொடியில் எண்ணெய் ஊற்றிக் கலந்து கொண்டு வந்தாள்.

‘சட்னி அரைக்கறேன்ன?’

‘அது நல்லா வரல’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். இன்னும் இரண்டு தோசை சுட்டு எடுத்து வந்து அவனுக்குப் போட்டுவிட்டுத் தனக்கு தனியே ஒன்று சுட்டு எடுத்துக்கொண்டாள். சட்னியைப் போட்டுக்கொண்டு சமையல் கட்டிலேயே சாப்பிட உட்கார்ந்தாள்.ச்

Share

5 comments

  • புரியல பாஸ்.. அரளிச் சட்னியா!! டவுட்டு

  • உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் கணவனோ மனைவியோ துரோகம் செய்தால் விவாகரத்தில் முடியும். நம்மூரில் மட்டும் தான் சைக்கோத்தனமாக கொலை அல்லது தற்கொலை செய்கிறார்கள்.

  • அப்போதும் அவனுக்கு நல்லதையே யோசிக்கிறாள். என்ன டிசைன் இது.
    அவனுக்கு சட்னி ய போட்டுட்டு, நிதானமா ஒரு காபி குடிச்சிருந்தா சிறப்பு.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!