- சார் வணக்கம். தயக்கத்துடன் இதைக் கேட்கிறேன். உங்களின் அருமையான அரசியல் வரலாற்று நூல் நிலமெல்லாம் ரத்தத்தையே இலவசமாகக் கொடுத்தீர்களே. யதி, இறவானுக்கு மட்டும் ஏன் தடை? (என் பெயரை வெளியிட்டுவிட வேண்டாம்.)
இது சற்று நீண்ட விளக்கம் கோரும் வினா. சரி பரவாயில்லை.
அடிப்படையில் நான் கதாசிரியன். என் பிரத்தியேக விருப்பத்துக்காக மட்டும் நாவல்கள் எழுதுபவன். வாசகர்களுக்கும் அவை பிடித்துப் போனால் மகிழ்ச்சி. பிடிக்காது போனாலும் வருந்தமாட்டேன். ஏனெனில் நாவல்களில் என் நோக்கம், என்னை மறுபரிசீலனை செய்துகொள்வது மட்டுமே. இதனால்தான் நாவல் வெளியீட்டு விழாக்கள், விமரிசனங்களுக்குப் பத்திரிகைகளுக்குப் பிரதிகள் அனுப்புவது, இலக்கியக் கூட்டங்களுக்குப் போய் மார்க்கெடிங் செய்வது போன்ற காரியங்களை நான் செய்வதில்லை. என் மிக நெருங்கிய சில நண்பர்கள் ஊரார் கொண்டாடும் எனது சில நாவல்களை மோசம் என்று தூக்கிக் கடாசியிருக்கிறார்கள். எனக்குச் சிறிது கோபமும் வந்ததில்லை. நான் எவ்வளவு மோசமானவன் என்பதைச் சரியாகப் பதிவு செய்துவிட்டேன் என்ற சந்தோஷம் மட்டுமே அப்போது இருக்கும். இதனாலெல்லாம் எனக்கும் என் நாவல்களுக்குமான உறவென்பது ஓர் அழகிய இளம் பெண்ணுக்கும் அவள் வளர்க்கும் பூனைக்குட்டிக்குமான உறவைப் போல வளர்ந்து வருகிறது. இது ஒரு பிரத்தியேகம். விவரிக்கவே முடியாத அந்தரங்கம். வாசகர்களை மதித்து நான் என் அந்தரங்கத்தைத் திறந்து வைக்கிறேன் என்றால் குறைந்த பட்ச பதில் மரியாதை, அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பது மட்டுமே. விருப்பமில்லாவிட்டால் வேண்டாம். இருக்கவே இருக்கிறது, மாதமொருமுறை இலவச வாரம்.
என் நாவல் முயற்சிகளின் இடையே பத்தாண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு நான் எழுதிய நான் – ஃபிக்ஷன்கள் அப்போது இலவசமாகக் கிடைக்கும். (நான் ஃபிக்ஷன்கள் மட்டும். நாவல்கள் அல்ல.) 20 சதத் தள்ளுபடி, 60 சதத் தள்ளுபடி, 90 சதத் தள்ளுபடி என்று அமேசானே வழங்குவது தவிர நானும் அவ்வப்போது 0 விலைக்குத் தருவேன்.
என்ன ஒன்று அத்தகைய அபுனை அரசியல் / வரலாற்று நூல்கள் உங்களுக்கு வாசிக்க சுவாரசியமாக இருக்குமே தவிர தரிசனம் எதையும் தராது. வாழ்வினை மதிப்பிடக் கற்றுத் தராது. இருக்கும் இடத்தில் இருந்து அரை அங்குலமேனும் உங்களை உயர்த்தி வைக்குமா என்றால் செய்யாது. புனைவின் எல்லையற்ற சாத்தியங்களுக்கும் அபுனை நூல்கள் விரைந்தோடி முட்டிக்கொண்டு நிற்கும் எல்லைகளுக்குமான இடைவெளியை நீங்கள் இந்தப் பக்கம் வந்தால் மட்டுமே தரிசிக்க முடியும்.
இதற்கு மற்றுமொரு காரணம் உண்டு. இந்த அபுனை நூல்களின் விற்பனையின் விளைவான ராயல்டியைக் கொண்டே தமிழ்நாட்டில் முதல் முதலில் கார் வாங்கிய எழுத்தாளன் நான். நான் எந்தளவு பணியில் தீவிரமாக இருந்தேனோ, அதே அளவு ராயல்டியும் நன்றாக வந்தது. டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை, ஹிட்லர், 9/11, பிரபாகரன், ஆர்.எஸ்.எஸ் போன்ற நூல்கள் திரும்பத் திரும்பப் பல பதிப்புகள் கண்டன. எண்ணிக்கை நினைவில்லாத அளவுக்கு அவை விற்றிருக்கின்றன. எனவே இவற்றை நான் இப்போது கிண்டிலில் இலவசமாகத் தருவதில் எனக்கு எவ்வித மனச்சிக்கலும் இல்லை. புதிய கிண்டில் வாசகர்களை ஈர்க்கவும் தக்க வைக்கவும் இவை உதவுமானால் எனக்கு மகிழ்ச்சியே. அவர்கள் வெகு விரைவில் நல்ல நாவல் வாசிக்க இடம் மாறி வந்தே தீருவார்கள் என்னும் நம்பிக்கையில் செய்வது இது.
எந்த இலவசமும் நெடுநாள் தங்காது என்பது தமிழர் அறியாததா? விளையாட்டாகத் தொடங்கிய இந்த இலவச வாசிப்பு, உங்களை ஒரு நேர்த்தியான, காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகராக மறு உருவாக்கம் செய்யுமானால் நல்லது. இல்லாவிட்டாலும் அதில் நான் கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதும் போல எழுதிக்கொண்டுதான் இருப்பேன். என்ன தோன்றுகிறதோ அது. எப்படி வருகிறதோ அப்படி. புனைவெழுத்தில் எனக்குள்ள ஒரே கவலை, என்னிடம் இருந்து வரும் படைப்பு எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான். விவரம் தெரிந்த நண்பர்கள் அப்படித் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் – என் Fake Id கதைக் களத்தைக் கேட்டு. ஐந்நூறு பக்கங்கள் எழுதிவிட்டு எதனால் அதை நான் நகர்த்தி வைத்திருப்பேன் என்று எண்ணிப் பாருங்கள். புரிந்துவிடும்.
ஒரு நாவல், அதை எழுதுபவன் உடலில் ஓடும் ரத்தத்தைக் கொண்டு எழுதப்படுவது. தயவுசெய்து அதில் இலவசம் எதிர்பார்க்காதீர்கள். குறைந்தது என்னிடம்.
[ஃபேஸ்புக் மெசஞ்சரில் ஒரு வாசகர் கேட்டதற்கு பதில்]Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.