தனி

மிகவும் உள்ளடங்கிப் போய்க்கொண்டே இருக்கிறேன். சக மனிதர்களிடமிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டுவிடும் வேட்கை என்னையறியாமல் ஆட்கொண்டிருக்கிறது. எவ்வளவு காலமாக இது, ஏன் இது என்பதற்கான காரணம் தெரியும். ஆனாலும் என் இயல்புக்கு எதிரானதொரு பாதையில் தெரிந்தே நடந்துகொண்டிருக்கிறேன். இதை விரும்பிச் செய்கிறேனா என்று தெரியாது. ஆனால் செய்கிறேன். அதில் சந்தேகமில்லை.

தற்செயலாக நேற்று என் மொபைல் போனில் யார் யாருடன் பேசியிருக்கிறேன் என்று கணக்கிட்டுப் பார்த்தேன். இரண்டு நாள் இடைவெளியில் மூன்று பேரை நானாக அழைத்திருக்கிறேன். அதில் இரண்டு அழைப்புகள் பணி சார்ந்தவை. ஒன்று, பழைய பாக்கி. அவர் பல முறை அழைத்து எடுக்காமல் இருந்த குற்ற உணர்வில் அழைத்துப் பேசியது. மற்றவை அனைத்தும் வந்த அழைப்புகள். அதிலும் பணி சார்ந்த அழைப்புகளை மட்டுமே எடுத்துப் பேசியிருக்கிறேன். பொதுவான அழைப்பு என்று தோன்றியவற்றை எடுக்கவில்லை.

வேலை, நேரமில்லை என்பதெல்லாம் சும்மா சொல்லிக்கொள்ள உதவும். உண்மையில் உரையாடல்களிலிருந்து விலகிவிடவே மனம் விரும்புகிறது. மாணவர்கள் அழைத்தால் பேசுகிறேன். வேறு யாருடனும் இல்லை. எழுத்துலக விவகாரங்கள், அரசியல்கள், அக்கப்போர்களில் ஆர்வம் இன்னும் இருக்கிறது. ஆனால் அதற்காகப் பேச அழைப்போரைத் தவிர்த்துவிடுகிறேன். வெறுமனே நலம் விசாரிப்பது என்பது வரவர எரிச்சலடையச் செய்கிறது. எல்லா மனிதர்களும் துயரங்களின் மீது வண்ண விரிப்புகளைப் பரப்பித்தான் அமர்ந்திருக்கிறார்கள். அதனதன் கனம் அவரவர் தாங்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. இதில் நலமா என்பதற்கும் நலமே என்பதற்கும் என்ன பொருள்?

எப்படி இருக்கிறாய் என்பதற்குச் சரியான பதில் இருக்கிறேன் என்பதுதான். கேட்டுவிட்டார்களே என்பதற்காக உற்சாகமாகக் காட்டிக்கொள்வது ஒரு பிரயத்தனம். அங்கே நடிப்பு சேர்ந்துவிடுகிறது. தொடர்ந்து அப்படியே நடித்துக்கொண்டிருந்தால் போரடித்துவிடும். அடுத்து அழைப்பவருக்கு நியாயமான சொற்களைக் கூட அளந்து தர முடியாமல் போய்விடுகிறது.

நான் பேசுவது மிகவும் குறைந்துவிட்டது என்று இன்று என் மனைவி சொன்னார். வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அது நானறியாததல்ல. மொழியைத் தகவல் தொடர்புக்கான கருவியாக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறேன். இதனாலெல்லாம் உள்ளுக்குள் ஒடுங்கி மோனத்துக்குக் காது கொடுக்கிறேன் என்று பொய் சொல்ல மாட்டேன். அங்கே எப்போதும் ஓயாத சத்தம்தான். நமது மனத்தைச் சுத்திகரிக்க நம்மாலல்ல; ஆண்டவனாலும் முடியாது. அப்பேர்ப்பட்ட குப்பைத்தொட்டியாகத்தான் வடிவமைத்து வைத்திருக்கிறோம். குறைந்தபட்சம் நான் அப்படி வைத்திருக்கிறேன்.

ஆனால் ஒதுங்கியும் ஒடுங்கியும் இருந்து பார்ப்பது ஒரு பயிற்சியாக உதவும் என்று தோன்றுகிறது. நிறைய பாடங்கள் இதில் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

பதினைந்தாண்டுகளுக்கும் மேலாகத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு நாள் விலகி நிற்க முடிவு செய்தேன். பணியில் இருந்து விலகிய கணத்திலேயே அந்த உலகின் மனிதர்களிடம் இருந்தும் விலகினேன். ஒரு முடிவு. நானாக யாரையும் அழைத்துப் பேசுவதில்லை. அவசியம் இருந்தால் யாராவது அழைக்கட்டும், பார்த்துக்கொள்ளலாம்.

இதில் நான் பெற்ற பாடம் மகத்தானது. அது என் பணிச் சூழலாக இருந்தது. பணியில் இருந்து விலகிய பின்பு யாருக்கும் என்னை அழைக்க அவசியம் இருக்கவில்லை. இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் என் நினைவுகூட யாருக்கும் வரவில்லை. பதினைந்தாண்டு கால நட்பு, அன்பு, பழக்கம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவரவர் அவசரங்கள், அவரவருக்கான அவசியங்கள். அவ்வளவுதான்.

நான் ரொம்ப யோக்கியமா என்றால் நிச்சயமாக இல்லை. உண்மையில் இந்த உலகில் வாழும் அத்தனை பேரினும் பெரிய அயோக்கியன் நானாகத்தான் இருக்கிறேன். நான் ஏன் யாரையும் அழைத்துப் பேசவில்லை? என்றால், பணிக்கு அப்பால் அவர்களிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை. சிறிய, எளிய உணர்ச்சிகளுக்குக் கூட என்னைத் தந்துவிடக் கூடாது என்று எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். மற்றவர்களும் அப்படித்தானே இருக்க முடியும்?

நட்பு-பாசம்-அன்பு இதெல்லாம் பணிச்சூழலுக்குப் பொருந்தாதவை என்பது நான் பெற்ற பாடம். யோசித்துப் பார்த்தால் என் மாணவர்களிடம் மட்டும் சிறிது பரிவு மிச்சம் இருக்கிறது. அவர்களிடம் மட்டும்தான் கோபம் வருகிறது என்பதிலிருந்து இதனைப் புரிந்துகொள்கிறேன். திட்டிக்கொண்டே தவறுகளைத் திருத்திக் கொடுக்கிறேன். அதுவும் சமயத்தில் சலிப்பாகிவிடுகிறது. அமைதியாகப் போய்விடுகிறேன்.

பெருங்கூட்டத்தில் ஒருவராகத்தான் எல்லோரும் வசிக்கிறோம். ஆனால் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத் தனிதான். அந்தத் தனிக்குள்ளும் தனியொரு இன்னொருவனாக இருப்பதுதான் என் சிக்கல். சிக்கல் என்று இப்போது தோன்றுகிறது. இதுவே சொகுசு என்று நாளை தோன்றிவிடுமானால் தீர்ந்தது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி