ஒசாமா, அமெரிக்கா, மற்றுமொரு தோழர்

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கிறார். பத்து வருட காலம் அமெரிக்கப் படைகள் காடு மலையெல்லாம் தேடித் திரிந்ததற்குப் பலன். பாகிஸ்தான் உளவுத் துறையின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்பது குழந்தைக்கும் தெரியும். எத்தனை பில்லியன் அல்லது ட்ரில்லியன் டாலர் பேரம் என்பதெல்லாம் காலக்ரமத்தில் விக்கிலீக்ஸில் வெளிவரலாம்.

ஒரு விடுதலை வீரராக, சுதந்தர வேட்கை மிக்க புரட்சியாளராக ஒசாமா மலர்ந்திருக்கவேண்டும். மத்தியக் கிழக்கின் எண்ணெய் வளத்தை உறிஞ்சிக் குடிப்பதற்காக அம்மாபெரும் நிலப்பரப்பைத் தன் காலனியாக்க அமெரிக்கா முனைந்தபோது அதை எதிர்த்ததன்மூலம் வெளிச்சத்துக்கு வந்தார் ஒசாமா. முன்னதாக, அதே அமெரிக்காவின் உதவியைப் பெற்று ஆப்கனிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிராக அவர் யுத்தத்தில் பங்குகொண்டபோதெல்லாம் பிரபலம் கிடையாது. பணக்கார சவூதி ஷேக். தன் சொத்தையெல்லாம் ஜிஹாதுக்கு அள்ளிக்கொடுக்கிறார் என்று ஆப்கனிஸ்தான் எல்லைவரை மட்டுமே அவர் அறியப்பட்டிருந்தார். போராளிகளோடு போராளியாக நாட்டுத் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு ஜலாலாபாத் வெட்டவெளிகளில் அவர் நடந்துபோகிற புகைப்படங்களை வைத்துக்கொண்டு பின்னால்தான் கதைகள் உருவாக்கப்பட்டன.

சவூதி அரேபியாவிலிருந்தும் மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்திலிருந்தும் அமெரிக்கப் படைகளை வெளியேற்றவேண்டும் என்கிற அவரது நோக்கம், அந்நிலப்பரப்பின் அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமானதாகவே இருந்தது. ஆனால் ஓர் ஆழமான மதவாதியாக, தீவிரமான அடிப்படைவாதியாக அவர் முன்வைத்த அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியக் கனவு – ஒருவேளை நனவானால் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு ஆப்கனிஸ்தானில் தாலிபன்கள் ஆண்ட கொஞ்ச காலம் பதில் சொல்லிவிட்டது. ஒசாமாவைத் தீவிரமாக ஆதரித்த சூடான் போன்ற தேசங்களே பார்த்து பயந்து, பின்வாங்கும்படியான ஒரு பொற்கால ஆட்சி அது.

அவரது அமெரிக்க எதிர்ப்புக்கு ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும், அல் காயிதாவின் ஜிஹாத், அரசியல் ரீதியிலானதாக இல்லாததும், வெறும் கொலைவெறி வேட்கை கொண்டதாக மட்டுமே அமைந்திருந்ததும், அரசியலைக் காட்டிலும் மதக்காரணங்களே பிரதானமாக முன்வைக்கப்பட்டதும்தான் ஒரு புரட்சியாளராக மலர்ந்திருக்க வேண்டியவரைத் தீவிரவாதியாகத் தேக்கமுறச் செய்தன. உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான அப்பாவி முஸ்லிம் மக்களை, முஸ்லிம் அல்லாதோர் சந்தேகக் கண்ணோடே நோக்கத் தொடங்கியதில் ஒசாமாவுக்கும் அவரது இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் மிகப்பெரும் பங்குண்டு. ஏராளமான சிறு தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் உருவாகி, ஆங்காங்கே குண்டுகள் வைத்து, முடிந்தவரை மரணங்களை உற்பத்தி செய்ததற்கும் அல் காயிதா பெற்ற பல வெற்றிகள் தூண்டுதல்களாக இருந்திருக்கின்றன.

ஒரு வரியில் சொல்வதென்றால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து, இன்றுவரை மக்களை அதிக அளவு அச்சமூட்டி வந்திருப்பது அல் காயிதாவும் அதன் செயல்பாடுகளும்தான். ஒசாமாவின் மரணம் இந்த அச்சத்தின் சதவீதத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தச் சமயத்தில், ஒசாமா செய்ததெல்லாம் அநியாயம் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் அவரைக் கொல்ல அமெரிக்கா யார்? அமெரிக்கா செய்யாத அநியாயங்களா, அட்டூழியங்களா, அராஜகங்களா? ஒரு யோக்கியனல்லவா அயோக்கியனைத் தட்டிக்கேட்க முடியும் என்று கேட்டிருக்கிறார் மருதன். இது ஓர் அர்த்தமில்லாத, விதண்டாவாத நோக்கத்தில் எழுப்பப்படும் குரல். அமெரிக்க அயோக்கியத்தனங்கள் குறித்து யாருக்கும் விளக்கங்கள் தேவையிருக்காது. ஆனால், ஒரு வல்லரசாகத் தன்னை முதலிடத்தில் எப்போதும் வைத்துக்கொள்வதற்காக அத்தேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுள் ஒருசிலவாவது உலக நாடுகளுக்குக் கொஞ்சம் உபயோகப்பட்டுவிட்டுப் போவதில் என்ன பிழை? வேண்டுமானால் அமெரிக்கத் தீவிரவாதங்களுக்கு எதிரான யுத்தம் என்று தனியாக ஒன்று ஆரம்பித்து பத்து நூறு வருஷங்கள் நடத்திக்கொள்ளலாமே ஒழிய, கேங்-வாரில் ஒரு தரப்பை இன்னொரு தரப்பு போட்டுத்தள்ளுவது மக்கள் நலப்பணியே அல்லவா?

தீவிரவாதத்துக்கு எதிரான உலகு தழுவிய யுத்தத்தை அமெரிக்கா தொடங்குவதற்கு முன்னாலேயே அதை ஆரம்பிப்பதற்கான நியாயங்கள் இந்தியா உள்பட பல்வேறு தேசங்களுக்கு இருந்தன. ஆனால் யாரும் செய்யவில்லை. இதற்கான காரணங்கள் பல.

*    பொருட்செலவு. அமெரிக்கா தவிர மற்ற எந்த தேசத்துக்கும் இது கட்டுப்படியாகக் கூடியதல்ல.
*    தொழில்நுட்ப பலம். அமெரிக்காவுக்குப் பின்னால்தான் மற்றவர்கள் அணிவகுக்கிறார்கள்.
*    நினைத்ததும் செயலில் இறங்கக்கூடிய வல்லமை. அங்கும் கேள்வி கேட்கும் நாடாளுமன்றம், எதிர்க்கட்சிகள் உண்டென்றாலும் ஒரு தேசியப் பிரச்னையில்கூட கட்சி அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் அபத்தங்கள் அரிது. தவிரவும் மக்களின் ஒருமித்த ஆதரவு.
*    கணப்பொழுதில் அத்தனை தேசங்களையும் அச்சமூட்டியாவது ஓரணியில் திரட்டிவிடக்கூடிய திறன் அமெரிக்கா தவிர மற்ற தேசங்களுக்குக் கிடையாது.

இவை அனைத்தையும் செய்ய அமெரிக்கா கடமைப்பட்ட தேசமும்கூட என்பதும் இங்கே முக்கியமானது. அல் காயிதா போன்ற தீவிரவாத இயக்கங்கள் பலவற்றை வளர்த்த பாவம் அவர்களுடையதே அல்லவா? எனவே அவர்களின் செயல்பாடுகளை நிறுத்தச் செலவழிக்கவும் அவர்களே கடமைப்பட்டிருக்கிறார்கள்.

என்னைக் கேட்டால், ஊர் வம்பு எதற்கும் வரமாட்டேன் என்று ஒதுங்கியிருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கிவிட்டு உள்ளுக்குள் ஏகப்பட்ட கெட்ட காரியங்களை ஆத்ம சுத்தியுடன் செய்யும் சீனாவைவிட அமெரிக்கா எத்தனையோ தேவலை என்பேன்.

மனித குலமே வெறுக்கத்தக்க ஆட்சியை ஆப்கனிஸ்தானில் வழங்கிக்கொண்டிருந்த தாலிபன்களுக்கு சக இஸ்லாமிய தேசங்களே ஆதரவளிக்க மறுத்துக்கொண்டிருந்த நிலையில், அவர்களோடு ரகசிய ராணுவ பேரம் பேசியது சீனா. ஆப்கனிஸ்தான் முழுதும் ராணுவத்துக்கான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு நெட் ஒர்க் அமைப்பதற்குச் சீனாவின் ஹுவாவேய் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சூடான் உள்பட ஒசாமாவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளித்துக்கொண்டிருந்த அத்தனை தேசங்களுக்கும் ஆயுதம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைச் சீன அரசு செய்துவந்திருக்கிறது. இன்றுவரை அல் காயிதாவின் எந்த ஒரு அழிவு நடவடிக்கையையும் வெளிப்படையாகக் கண்டித்திராத சீனாவுக்கு, [செப்டெம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகுகூட, அமெரிக்க அழைப்புக்கு இணங்கினார்களே தவிர, அல் காயிதாவைக் கண்டித்து ஒரு அறிக்கைகூடக் கிடையாது.] அதற்கான ஒரே நியாயம் ஆயுதம் விரும்பும் தேசங்களுடனான வர்த்தக உறவும் மத்தியக் கிழக்கின் பிசினஸ் தாதாவாகத் தான் நிலைத்திருக்கும் விருப்பமும் மட்டுமே.

இந்த வகையில் அல் காயிதா இன்னும் எத்தனை ஆயிரம் பேரைக் கொன்று குவித்தாலும் சீனாவுக்குப் பிரச்னையில்லை. அல் காயிதாவைப் போல் எத்தனை இயக்கம் இத்திருப்பணியில் இறங்கினாலும் பிரச்னையில்லை.

அமெரிக்கா இவர்களை வளர்த்துவிடுவதும் இதே பிசினஸ் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத்தான். ஆனால் எல்லை மீறும்போதாவது தடுத்து நிறுத்த முன்வரும் குறைந்தபட்ச தார்மிகம் அவர்களிடம் இருக்கிறது. ஹிந்து புராணக் கடவுள்கள் நினைவுக்கு வருகிறார்கள். அசுரர்களுக்கு வரம் கொடுத்து ஆடவிட்டுவிட்டுப் பிற்பாடு சம்ஹாரம் செய்கிறேன் பேர்வழி என்று கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் கடவுள்கள்.

அமெரிக்கா நிச்சயமாகக் கடவுள் இல்லை. கொஞ்சமே கொஞ்சம் கருணையுள்ள சாத்தான். அந்தக் கருணையும்கூட சுயநலக் காரணங்களால் விளைவதென்றாலும் அமெரிக்காவுக்கு வெளியிலும் அதன் பலன் சற்று சிந்துவதை நினைவுகூரத்தான் வேண்டும்.

அந்தக் கருணையும் இல்லாத ஒரு தேசத்தை எப்போதும் ஒரு ரஜினி ரசிகர் மாதிரி பார்த்து விசிலடித்து வியப்போர், அமெரிக்காவை இவ்விஷயத்தில் பழிப்பது அடாது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் இனி ஏகப்பட்ட குண்டுகள் வெடிக்கவிருக்கின்றன. யுத்தத்துக்குப் பிந்தைய ஓராண்டுக்கால இராக்கைக் காட்டிலும் மோசமான சம்பவங்கள் அங்கே நடைபெறுவது தவிர்க்க முடியாததாகப் போகிறது. பாகிஸ்தானுக்கு நிச்சயமாக அமெரிக்கா உதவி செய்யப்போகிறது. தோழர்கள் அப்போதும் தம் ‘தோழமை தேசத்’துக்கு உதவ முன்வருவார்களா, அல்லது தோழர்களின் முன்னாள் தோழர்களுக்கு உதவப் போகிறார்களா என்பது விக்கிலீக்ஸ் இல்லாமலும்கூட வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது.

எனக்கு நண்பரும் மற்றவர்களுக்குத் தோழருமான மருதனுக்கு நான் சிபாரிசு செய்யும் பக்கங்கள்:

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

Share

16 comments

  • ஏ, அமெரிக்க கைக்கூலியே..

    ஜனாப் ஒசாமா செய்த தியாகங்கள் பற்றி உனக்குத் தெரியுமா?

    இப்படியெல்லாம் கமெண்ட் வரும்…

    அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

    மருதனின் உளரல்தான் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அவருக்கு கம்யூனிசம் குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் கிழக்கில் யாராவது பாடம் நடத்துங்களேன். இப்படி தீவிரவாதிகளை பாராட்டுவது சாதாரண முஸ்லிம்களிடம் நன்மதிப்பையும், வருமானத்தையும் பெற்றுத்தரும் என நினைக்கிறார்களோ இந்த போலி அறிவுஜீவிகள்?

  • புரிகிறது!!!
    நமக்கு விதிக்கப்படதெல்லாம்,Devil or Deep sea choice தான் !!!
    எதாவது ஒன்றை ஆதரித்து தொலைக்க வேண்டியதுதான்!
    சும்மாவா?
    ஐந்து தேர்தல் அனுபவம் ஆயிற்றே!!

  • மதிப்பிற்குரிய பா.ரா அவர்களே உங்களிடம் இருந்து சீனாவை பற்றி ஒரு புத்தகத்தை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்

  • அட்டகாசமான, அமக்களமான பதிலடி! கடினமான விடயங்களை லாவகமாக எழுதிவிடுகிறீர்கள். இந்த ஒரு அம்சம் தான் திரும்ப திரும்ப உங்களை நோக்கி ஓடிவரவைத்துவிடுகிறது. திரு மருதன் மட்டுமல்ல. இணையத்தில் பல பேருக்கு இப்பதில் புதிய வாயில்களை திறக்கும்.

  • “” ஸ்ருதி பேதம் “”
    “” இப்படி தீவிரவாதிகளை பாராட்டுவது சாதாரண முஸ்லிம்களிடம் நன்மதிப்பையும், வருமானத்தையும் பெற்றுத்தரும் என நினைக்கிறார்களோ இந்த போலி அறிவுஜீவிகள்? “”
    எந்த வகையில்? பொத்தாம்பொதுவாக இப்படி சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
    “”” ஏ, அமெரிக்க கைக்கூலியே..
    ஜனாப் ஒசாமா செய்த தியாகங்கள் பற்றி உனக்குத் தெரியுமா?
    இப்படியெல்லாம் கமெண்ட் வரும்…”””

    பாராவின் வாசகர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்பது என் எண்ணம்.பார்க்கலாம்.ஆனால் அனானிகளின் கமெண்ட்டுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வழியில்லை.அது மாலேகான் வழிமுறையாக ஆக இருக்கக்கூடும் என்பதால்.

  • அருமையான கட்டுரை..!உங்கள் பதிலுரையில் ஒரு ”நேர்மை” தெரிகிறது. வாழ்த்துக்கள்…

  • சீனா ஒன்றும் ரஜினியில்லை, நானும் ராம்கியல்ல என்று மருதன் நிரூபிப்பார். புரட்சி வரும்… புரட்சி வந்தே தீரும்!

  • இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்

    basheer அவர்களே பா.ரா வின் எழுத்துக்களை படித்து சிந்தித்து பார்க்கும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் (என்னைப் போல்) இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    சிறுவர் முதல் பெரியவர் வரை பரதேசி முதல் பணக்காரன் வரை ஜனாப் ஒசாமா (ரஹ்) அவர்களை மனித குல எதிராயாக பார்க்கவைத்த விடையம் 11/9 தாக்குதல் தான். இங்கே ஒசாமாவை அவர்களை பற்றி பேசும் புத்திஜீவீகள்(?) அந்த 11/9 தாக்குதலுக்கு அவர் தான் காரணம் என்று ஆதாரபூர்வமாக கூறயிலலுமா?

    சரி அப்படி அவர் செய்தார் என்றே வைத்துக்கொள்வோம் அவரால் இது வரை 5000 பேர் இறந்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். அமெரிக்காவால் ஈராக்கில் ஒரு லட்சம் குழந்தைகள் இறந்தார்களே அது திவிரவாதம் இல்லையா? அமெரிக்க நாய்களின் உயிர்கள் என்ன விலைமதிப்பில்லாததா? ஈராக்கியர்களின் உயிர் என்ன ஒரு மூட்டை பூச்சியின் உயிருக்கு சமமா?

    அவர் இறந்ததில் எனக்கு சந்தோசம் ஏனெனில் அவர் வெற்றிபெற்றுவிட்டார். அவர் வாழ்வதர்க்காக நாடு துறந்து செல்லவில்லை செத்துமடிவதற்க்காக சென்றார் செத்துமடிந்துவிட்டார். அவர் இல்லை என்றாலும் இந்த உலகம் குர்ஆனின் கீழ் வரும் என்பது சத்தியம்.

  • அன்பு அண்ணன் பஷீர் அவர்களே, முதலில் சொந்தப் பெயரில் எழுதப் பழகுங்கள். அதன் பின்னர் எந்த வழிமுறை எனப் பார்த்துக்கொள்ளலாம்.

  • இந்திராவின் பிர‌ந்த‌ன்வாலா இவ‌ர். க‌த்தி எடுத்த‌வ‌ன் முடிவு அப்படியே தான்.
    அப்கொய்‌தாவின் ஆட்சி சாம்பிள் ஆப்கானில் அரங்கேறிய‌ அவ‌ல‌ம், உல‌க‌ம் அறிந்த‌து தான்.
    எடுத்த‌ காரிய‌ம் முடிப்ப‌தில், இஸ்ரேலும், அமெரிக்காவும் முத‌லிட‌த்திலிருக்கிற‌து. அந்த‌ நாட்டு ம‌க்க‌ளை வெறும் வாக்குறுதிக‌ளால் ம‌ட்டும் (இந்திய‌ர்க‌ளை மாதிரி)திருப்தி செய்துவிட‌ முடியாது.

    சொந்த‌ம‌ண்ணான‌ மும்பையை ந‌ம் அர‌சிய‌ல்வாதிக‌ள் துணையுட‌ன் (ச‌ர‌த்ப‌வார், காவல்‌/சுங்க‌த்துறை) தாக்கிவிட்டு, க‌ராச்சியில் தொழில் ந‌டத்தும் ஓடுகாலி தாவூத் இப்ராஹிம் ப‌ற்றிப் பேச‌ ந‌ம் நாட்டு அறிவுஜீவி‌ளுக்கு நேர‌மில்லை. நாட்டை வ‌ளைத்து ஒடித்து த‌ன்ன‌ல‌த்திற்கு
    ப‌ய‌ன்ப‌டுத்தும், ஆளும் வ‌ர்க்க‌த்தைப் பற்றிப் பேச‌ எழுத‌ ந‌ம்மால் முடிய‌வில்லை, ஆனால் அமெரிக்கா, சீனா, அல்க‌ய்தா, ஆப்கான் ப‌ற்றிய‌ ஆத‌ங்க‌ம் ம‌ட்டும் ப‌திவுக‌ளில் ப‌ர‌விக்கிட‌க்கிற‌து. நம்மை ப‌ற்றிய‌ பேச்சு எனில், ர‌ஜ்னியும், சினிமாவும், ர‌சிக‌னும் த‌விர‌ வேறு த‌க‌வ‌லக‌ளே அற்று போய்விடிகிற‌து. கூரையேறி கோழிபிடிக்க‌வே முடியாத‌ ந‌ம்க்கு ஏன், ஹெலிகாப்ட‌ர் ஏறி ஒசாமா பிடிக்கிற வேலை?‌

  • மாலேகான் என்ற ஒரு வார்த்தை உங்களைப்போன்றவர்களிடம் என்ன ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது?
    உண்மை சுடும் என்பது எவ்வளவு அனுபவித்து எழுதிய வார்த்தை?
    மற்ற பதிவுகளில் பின்னூட்டம் இடுகையில் என் பெயரை கிளிக்கினால் என் வலைப்பூவிர்க்கே அழைத்து சென்று விடுகிறது.இங்கு ஏனோ அப்படி நிகழ்வதில்லை.புரிகிறதா? நான் அனாமதேயம் அல்ல.என்
    நாமகரணமே இதுதான்.

  • பஷீர் அவர்கள் மாலேகான் என்றவுடன் ஜெயகுமாருக்கு கோவம் பொத்துகிட்டு வருது பாருங்க.

    மதகலவரங்கள் மூலம் நீங்கள் இந்தியாவில் அரசியல் பிழப்பு நடத்தலாமே தவிற. அகண்ட பாரதத்தையும் உருவாக்க முடியாது, அதில்ல் சிவாஜி ஆட்சியையும் அமைக்க முடியாது. மாராக உங்களால் ஆயிரம் ஆயிரம் ஒசாமாக்களை தான் உருவாக்க முடியும்.

  • America is not a devil. It’s one of the few countries in the world which understands that capitalism is the way forward. One of the few countries with deep drive towards being happy. From Thomas Jefferson to Barack Obama, they have a history of creating leaders with a purpose and difference. And above all, it is the only country which still debates about Objectivism.

    For all the stuff that’s being debated, Osama was chased till the end for 10 long years and it now allows a super power its freedom to tackle the economy and also releases a tension in middle east and south east asia. And Osama never even pretended to be a liberation leader. He was an outright fundamentalist and deserved the death he got. Kudos America. Hope our govt also takes note and teach the terrorists a lesson not to mess up with India.

    Between, Kasab is up and fine still !!

  • arasanaha irunthal ilatcham perai kondraalum avarhal nallvarhaL. aanal yaar thaakinaarhal yendru thriyamal oruvan mael palisumathi vittal avan payangaravathi.
    osama vai oruvaakiyathe amerika thaan villai vida ampu yeithvanuku thaan thandanai thara vaendum

  • மும்பை தீவிரவாத குண்டுவெடிப்பு தாக்குதுலக்குயார் காரணம் ? இந்திய மக்கள் மட்டுமே காரணம். போலி மத சார்புயின்மை பேசும் தலைவர்கள்,அதை கண்டிகாத மக்கள் ஆகிய நாம் மட்டுமே.பா.சி எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!