குளிர்

பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது. எனவே ஃபேனை அணைத்துவிட்டு எழுதுவேன். எழுதாமல், யோசிக்கும்போது ஃபேன் போட்டுக்கொள்வேன். அதாவது குளிர்ச்சி, சூடு என்பது பொருட்டல்ல. சத்தம், சத்தமின்மையே பேசுபொருள்.

இப்படித்தான் சென்ற ஆண்டு வரை வாழ்ந்து வந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. இந்த வருடம் பிறந்தது முதல் பகலெல்லாம், இரவெல்லாம் குளிர்வது போலவே இருக்கிறது. தாங்க முடியாத அளவுக்கு அல்ல. ஆனாலும் குளிர்தான். ஏசி, ஃபேன் இரண்டின் ஸ்விட்ச்களையும் இந்நாள்களில் தொடுவது கூடக் கிடையாது. மின் வாரியக் கப்பத் தொகை குறையும் என்பது ஒருபுறம் இருந்தாலும் எனது தோல் ஏன் சிறியதொரு பருவ நிலை மாற்றத்தைக்கூட ஏற்க மறுக்கிறது என்று வியப்பாக இருக்கிறது.

இங்கிருந்து எவ்வளவோ பேர் துருவ தேசங்களுக்குப் பணி நிமித்தம் செல்கிறார்கள். குளிரைக் குறித்து முதலில் சிறிது பேசினாலும் மிக விரைவில் அதற்குப் பழகிக்கொண்டுவிடுகிறார்கள். அதே போலத்தான் மத்தியக் கிழக்கு நாடுகளிலில் இருந்து இங்கே வருவோரும். காலநிலை மாற்றம் குறித்தெல்லாம் அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதேயில்லை. ஒரு சில அமெரிக்கவாசிகள் மட்டும் லேசாகச் சலித்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அதுகூடக் காலநிலை சார்ந்ததாக இராது. ஜெட்லாக் குறித்ததாகவே இருக்கும்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஆண்டு தவறாமல் உலகத் திரைப்பட விழாக்களுக்குச் செல்வது வழக்கம். ஓராண்டு புதுடில்லியில் நடக்கும். அடுத்த ஆண்டு வேறு எங்காவது நடக்கும். மீண்டும் புதுடில்லி. மீண்டும் வேறெங்காவது. இப்போது எப்படி என்று தெரியாது. போவதை, பார்ப்பதை நிறுத்திப் பல வருடங்களாகிவிட்டன. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. உலகத் திரைப்பட விழாக்கள் ஜனவரியில்தான் நடக்கும். புதுடில்லியின் ஜனவரிக் குளிர் என்பது நான் தாங்கக்கூடியதே அல்ல. இரண்டு மூன்று உடைகள், அதற்கு மேல் ஸ்வெட்டர், அதற்கும் மேலே பஞ்சடைத்த கோட்டு என்று என்னென்னவோ மாட்டிக்கொண்டு தியேட்டருக்குள் ஒடுங்கிவிடுவேன். உள்ளே இருக்கும்வரை குளிர் பெரிதாகத் தாக்காது என்பதுதான முதன்மைக் காரணம். உலகப் பட ஆர்வமெல்லாம் அப்புறம்தான். ஆனால் ஒரு நாளில் திரையிடப்படும் ஐந்து காட்சிகளையும் நான் அசையாமல் அமர்ந்து பார்ப்பது குறித்து நண்பர்கள் வாய் ஓயாமல் சிலாகிப்பார்கள். சினிமாவை ஒரு தியானம் போலப் பயில்பவன் என்று நம்பத் தொடங்கினார்கள். தமாஷாக இருக்கும். பணியின் ஒரு பகுதி என்பதற்கு அப்பால் எனக்கு சினிமா ஆர்வம் பெரிதாகக் கிடையாது.

யோசித்துப் பார்த்தால் குளிர் அளவுக்கு வெயில் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அல்லது பிரச்னை தருமளவு வெயிலை இன்னும் அனுபவிக்கவில்லை. பிறந்தது முதலே ஒரு நடுவாந்தர சொகுசு சுந்தர வாழ்வைத்தான் ஆண்டவன் கொடுத்திருக்கிறான் என்று நினைத்துக்கொள்கிறேன். ஓர் உயிர் உடலைத் தேடிக்கொள்ளும்போதே அதன் வாழ்நாள் முழுவதற்குமான வசிப்பிடம், காலநிலை தொடங்கி, இச்சைகள், மனநிலை வரை வரையறுக்கப்பட்டுவிடும் போலிருக்கிறது. அல்லது அப்படி எண்ணிக்கொள்வது வசதியாக இருக்கிறது. வாழ்வின் தீரா ருசி என்பது எளிய சமாதானங்களில் உள்ளது.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு முஸ்லிமுக்கு வகுக்கப்பட்ட கடமைகளைக் குறிப்பிட்டு ஓர் ஏழை, முஹம்மது நபியிடம் கேட்டான், ‘ஐயா, பணக்காரர்களுக்கு வசதி இருக்கிறது. அவர்கள் அடிமைகளை விடுவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டு விடுகிறார்கள். இருக்கும் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்து தாராளமாக தான தருமங்கள் செய்துவிடுகிறார்கள். இந்த வகையில் எங்களைப் போன்ற ஏழைகள் எவ்வளவுதான் இறைவனுக்கு உண்மையானவர்களாக இருந்தாலும் பந்தயத்தில் பிந்தி வர வேண்டியதாகிவிடுகிறதே.’

இதற்கு நபியின் பதில்: ‘நியாயம். ஆனால் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் தொழுது முடித்ததும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுங்கள். அல்ஹம்துலில்லாஹ் என்று அதே முப்பத்து மூன்று முறை சொல்லுங்கள். அல்லாஹூ அக்பர் என்று முப்பத்து நான்கு முறை சொல்லுங்கள். கடைசியாகப் பத்து முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் உங்களை முந்திவிட்டவர்களை நீங்கள் எட்டிப் பிடித்துவிடலாம்.’

எளிய மனங்களுக்கு எளிய தீர்வுகள் போதும். போர்த்திக்கொண்டு குளிரைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். சுகமாக இருக்கும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி