தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான யுத்தமாக தண்டனைக்காக தன்னைக் கொண்டு செல்லும் மரணக் கப்பலில் இருந்து தப்பிக்க வேண்டுமென சூனியன் நினைக்கிறான். அதற்கான வாய்ப்புகளை தேடுகிறான். தன்னைப் போல நிலக்கடலை ஓட்டிற்குள் அடைபட்டு வரும் கைதிகளை புரட்சிக்குத் தூண்டலாமா? என மானிடர்களைப் போல திட்டமிடுகிறான். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதைப் போல சூனியனின் உடலில் காவலரால் பனிக்கத்திகள் இறக்கப்படுகின்றன. சாதாரண குளிரே தனக்கு ஒவ்வாது என்ற நிலையில் இரண்டு பனிக்கத்திகளை தன் உடல் தாங்கி நின்ற போதும் தன் பக்க நியாயத்தை நிலை நிறுத்த “தப்பித்தல்” மட்டுமே அவனுக்கான ஒரே வழியாய் இருக்கிறது.
தன் எண்ணத்தில் தீவிரம் கொள்பவன் கிடைக்கும் வாய்ப்புகளை தனக்குச் சாதகமாக்குகிறான் என்ற வாக்கியம் சூனியனுக்கும் கை கொடுக்கிறது. அந்த வாய்ப்பு நீலநகரம் வழியே வருகிறது. மரண கப்பலுக்கே மரணம் நிகழப்போகிறது என மீகாமன் உள்ளிட்ட காவலர்கள் பதறுகிறார்கள். அதற்குள் தான் தன்னுடைய தப்பித்தலுக்கான வாய்ப்பு ஒழிந்திருப்பதாக சூனியன் நினைக்கிறான். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தப்பித்தானா? என்பதை அறிய வைக்க நுனி சீட்டில் அமர வைத்து அத்தியாயத்தை ஆசிரியர் முடித்துவைக்கிறார்.
எலும்பு கூடுகளாலான கப்பல், எலும்பு கூடுகள் விற்கும் அங்காடி, பனிக்கத்தி, சனி, புதன் கோள்களின் உலகம், கப்பலின் மேற்கூரையை வேய்ந்திருக்கும் பேய்கள், நீல நகரம் என நாம் அறிந்தவைகளின் மீது அறியாத பிரமாண்டங்களை கட்டி எழுப்புகிறார். குறிப்பாக, பேய்கள் குறித்த விவரணைகளை வாசிக்கும் போது தமிழ் படங்களில் நாம் பார்த்து மிரண்ட பேய்கள் எல்லாம் “சப்பை” என்றே தோன்றுகிறது.
நிராசைகளை சூனியங்கள் எப்படி நிறைவேற்றிக்கொள்கின்றன என்பதைக் காட்ட சூனியனுக்கு மனைவி, அவளுக்கென அந்தரங்க காதலன் என விரித்த இடங்களை மர்லின் மன்றோ, முகமது அலி ஆகியோரை வைத்து இட்டு நிரப்பிவிடுகிறார்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.