சுண்டல்

டாஸ்மாக் என்கிற அரசு நிறுவனமோ, அதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த காயத்ரி ஒயின்ஸ், குஷ்பு ஒயின்ஸ், ரஞ்சி ஒயின்ஸ் போன்ற களப்பிரர்களோ பேட்டைக்கு வருவதற்கு முன்னால் ரயில் நிலையத்துக்கு நேரெதிரே ஒரு சைக்கிள் ஸ்டாண்டும் அதனருகில் ஒரு சாராயக்கடையும் (Arrack Shop என்று ஆங்கிலத்திலும் எதற்கோ எழுதியிருப்பார்கள்.) இருந்தன. சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள் வழியாகவே சாராயக்கடைக்குள்ளே சென்றுவிட அந்நாளில் ஒரு சுரங்க வழி சௌகரியமும் இருந்தது.

ஆனால் உள்ளே நீராகாரம் அருந்தி முடித்தவர்கள் வெளியே வர நிச்சயமாக நேர் வழியைத்தான் பயன்படுத்துவார்கள். சைக்கிளை நிதானமாக மறுநாள்கூட எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் அருந்திய சாராயத்துக்கு கௌரவம் சேர்க்க வெளியே வந்து சுண்டல் தின்றால்தான் ஆயிற்று.

அந்த இடத்தில் அன்றைக்கு வானுயர்ந்த மரங்கள் இருக்கும். அடர்த்தியானதொரு ஆலமரமும் உண்டு. அந்த ஒரு சாராயக் கடையை நம்பி, நான்கைந்து தள்ளுவண்டி சுண்டல் கடைகள் போட்டிருப்பார்கள். மாலை ஐந்து மணிக்கு மெதுவாக ஆரம்பிக்கும் வியாபாரம், நேரம் ஆக ஆகச் சூடு பிடிக்கத் தொடங்கும். பேருந்துகள் அதிகம் வராத அக்காலத்தில் பெரும்பாலான பேட்டைவாசிகளின் முக்கியமான பொதுப் போக்குவரத்துச் சாதனம் மீட்டர் கேஜ் ரயில்தான். இந்தப் பக்கம் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்தும் அந்தப் பக்கம் செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்தும் ஒவ்வொரு ரயில் வந்து நிற்கும்போதும் எங்கோ புரட்சி நடப்பது போல மக்கள் பாய்ந்து இறங்கி ஓடி வருவார்கள். அப்படி வருவோரில் பாதிப் பேராவது மேற்சொன்ன சாராயக்கடை சுண்டல் வண்டிகளைக் கண்டதும் நின்றுவிடுவார்கள்.

வாயகன்ற மாபெரும் தாம்பாளத்தில் பட்டாணி சுண்டல் கொதித்துக்கொண்டிருக்கும். தாம்பாள விளிம்புகளில் மதில்சுவர் கட்டினாற்போல அதே பட்டாணி சுண்டலை நீர் சேர்க்காமல் குவித்து வைத்து, மேலே தக்காளிப் பழங்களையும் பச்சை மிளகாய்களையும் அழகுக்காகச் சொருகியிருப்பார்கள். (ஆனால் யாருடைய பிளேட்டிலும் தக்காளிப் பழம் விழுந்து பார்த்ததில்லை.)

ஓரடுப்பில் சுண்டல் வேகும்போதே இன்னோர் அடுப்பில் ஐம்பது பைசா அளவுக்கு மசால்வடை போடுவார்கள். ஒரு ஈடு மசால் வடை போட்டு இறக்கினால், அடுத்த ஈடுக்கு மிளகாய் பஜ்ஜி மற்றும் வெங்காய பஜ்ஜி.

அக்காலத்தில் (என்றால் 1985.) ஒரு பிளேட் சுண்டலின் விலை இரண்டு ரூபாய். ஒரு மசால்வடை அல்லது பஜ்ஜியின் விலை இருபத்தைந்து காசுகள். இரண்டு மசால்வடைகளை சுண்டலில் உதிர்த்துப் போட்டு, மேலுக்கு ஒரு பிடி வெங்காயம் தூவி, அதற்கும் மேலே ஒரு தகர டப்பாவில் இருந்து ஏதோ ஒரு பொடியை மூன்று விரல்களால் எடுத்துத் தூவிக் கொடுப்பார்கள். (அந்தப் பொடியின் சூட்சுமம் குறித்து ருசியியலில் எழுதியிருக்கிறேன்.)

பதினைந்து வயதில் அந்த சாராயக் கடை சுண்டலுக்கு நான் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். அநேகமாக வாரம் மூன்று முறையாவது எப்படியாவது மூன்று ரூபாய் தேற்றிக்கொண்டு மெயின்ரோடுக்குப் போய்விடுவேன். பாதி ப்ளேட் சுண்டலைச் சாப்பிட்ட பிறகுதான் ‘ஒரு வடை வைங்கண்ணே’ என்பேன். காரணம், வடையை உதிர்த்துப் போட்டுவிட்டு அதன் மேலே இரண்டு கரண்டி சுண்டல் ஜூஸ் ஊற்றித் தருவார்கள். முதலிலேயே வடையைக் கேட்டுவிட்டால் அந்தக் கூடுதல் இரண்டு கரண்டி ஜூஸ் இல்லாமல் போய்விடும். அதை எதற்கு விடவேண்டும்?

எண்பதுகளில் குரோம்பேட்டை அண்ணா சிலையை அடுத்த இந்த ஆலமரத்தடி சுண்டல் கடைகள் இதர அண்டை சமஸ்தானங்கள் வரை புகழ்பெற்றிருந்தன. ராதா நகர், நெமிலிச்சேரி, பல்லாவரம், சானடோரியத்தில் இருந்தெல்லாம் இங்கே சுண்டல் சாப்பிடவென்றே மக்கள் வருவார்கள். அப்பழுக்கில்லாத ருசி. குடிகாரர்களை நம்பித் தொடங்கப்பட்ட கடைகள்தாம். அதனால்தான் பேட்டையில் அது சாராயக்கடை சுண்டல் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஆனால் குடிக்காதவர்களும் அதற்கு ஆயுள் சந்தா விசுவாசிகளாக இருந்தார்கள். வீட்டில் இருந்து தூக்குச் சட்டியெல்லாம் எடுத்து வந்து வாங்கிப் போகிறவர்களைப் பார்த்திருக்கிறேன்.

பிறகு சாராயக்கடை மறைந்து ஒயின் ஷாப்புகள் வந்தன. சாஷே பாக்கெட்டுகளில் ஊறுகாய் விற்கத் தொடங்கினார்கள். டாஸ்மாக் வந்தது. வாழைப்பழமும் மிக்சரும்தான் சிறந்த சைட் டிஷ் என்று WHOவே அறிக்கை அளித்துவிட்டாற்போல டாஸ்மாக்கைச் சுற்றிப் பெட்டிக்கடைகள் ஆக்கிரமித்தன. அண்ணா சிலை அருகிருந்த மரங்கள் வெட்டப்பட்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப்பட்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. சுண்டல் கடைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அதன்பின் அந்த ருசிக்கலைஞர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு இதெல்லாம் நினைவுக்கு வரக் காரணம், வீட்டில் இன்றைய இரவுணவு பட்டாணி சுண்டல். அதுவும் அச்சு அசல் அந்தப் பழைய சாராயக்கடை சுண்டல் பதத்தில், அதே ருசியில். மசால் வடை மட்டும் இல்லை. மேலுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ்.

சிலவற்றுக்கெல்லாம் அழிவே கிடையாது. காலத்திலும் சரி, நினைவிலும் சரி.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter