தீர்மான காண்டம்

செயல் எதுவானாலும், எவ்வளவு முக்கியமானாலும் அது நடந்தேற அடிப்படைத் தேவைகள் என்று சில உண்டு. அதில் தலையாயது உடல் ஆரோக்கியம். சுண்டு விரல் நகம் சற்றுப் பெயர்ந்திருந்தாலும் அன்றைய பொழுதின் அனைத்துப் பணிகளும் கெடும். ஒரு சிறிய தலைவலி ஒரு மொத்த நாளையே புரட்டிப் போடக்கூடிய வல்லமை மிக்கது. காய்ச்சல், சளி, சுளுக்கு, கழுத்து வலி, முதுகு வலி தொடங்கி பெரும் உடல் உபாதைகள் வரை மனிதனின் உற்சாகமான செயல்பாட்டை முடக்கிப் போடக்கூடிய நானாவித நலக்கேடுகளையும் உள்ளடக்கிய ஒரு ஹார்ட்வேருக்குள் இருந்துகொண்டுதான் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். நாம் வெட்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது. ஆனால் இதைக் குறித்த உணர்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

என் பதினாறாவது வயது தொடங்கி வள்ளலாரைப் படிக்க ஆரம்பித்தேன். பத்தொன்பது வயதில் பல்வேறு சித்தர்கள் உடல் நலம் சார்ந்து எழுதி வைத்த குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வகையில் உடலைப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மிகத் தெளிவாக அறிந்தவன் நான். என்ன பிரச்னை என்றால், எதையும் படித்துச் செரிக்க முடிகிற அளவுக்குக் கடைப்பிடிக்க முடிந்ததில்லை. வெட்கப்பட வேண்டியது குறித்துச் சொன்னேன் அல்லவா? நீங்கள் எவ்வளவு வெட்கப்படுகிறீர்களோ அதன் நூறு மடங்கை நான் செய்ய வேண்டும். இந்த உலகில் என்னைக் காட்டிலும் மோசமான உடல் பராமரிப்பாளன் இன்னொருவன் இருந்துவிட முடியாது.

ஆனால் யோசித்திருக்கிறேன். என்னால் ஏன் உடல் சார்ந்த கவனத்தையோ, ஒழுக்கத்தையோ பேண முடியவில்லை? உட்கார்ந்து முழு நாளும் படிப்பேன். முழு நாளும் எழுதுவேன். ஏதாவது ஆய்வு என்று இறங்கிவிட்டால் வாரக் கணக்கில், மாதக் கணக்கில்கூட அனைத்தையும் மறந்து பணியுடன் இரண்டறக் கலந்துவிடுவேன். விரும்பி மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் வெறி கொண்டு ஈடுபடும் இயல்புள்ளவன் நான். ஆனால் நல்ல உடல் நலம், ஆரோக்கியம், குறைந்த எடை, நல்ல தூக்கம் என நான் விரும்பும் இந்தத் தரப்பு விவகாரங்களில் மட்டும் அரை அங்குலம் கூட என்னால் முன்னேற முடிந்ததில்லை.

சில வருடங்கள் உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டு ஓரளவு (28 கிலோ) எடைக் குறைப்பு செய்ய முடிந்தது உண்மையே. ரத்த சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்ற உபாதைகளும் அப்போது இல்லாதிருந்தது. ஓரளவு நன்றாக உறங்கவும் முடிந்தது. சிக்கல் என்னவென்றால், டயட் என்பதையும் ஒரு வேலையாக மட்டுமே என்னால் கருத முடிந்திருக்கிறது. வாழ்க்கை முறையாக்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, அது ஒரு குறுகிய காலச் செயல்பாடாக இருந்து, விடைபெற்றுவிட்டது.

ஆழ்ந்து யோசித்தபோது இந்த அனைத்துக்கும் காரணம் நாவென்ற ஓர் உறுப்பு மட்டுமே என்று புரிந்தது. பொதுவாக மனிதன் என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் மிக நிச்சயமாக நான் அதற்கு அடிமையாகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கிறேன். வள்ளலாரைப் படித்துவிட்டு நாவுக்கு அடிமையாக இருப்பது ஓர் அவலம்தான். வேறு வழியில்லை. எனது கட்டுமானம் அவ்வாறாகவே இருக்கிறது.

நேற்றிரவு வடபழனி முருகன் இட்லியில் சாப்பிடச் சென்றிருந்தேன். இட்லி சாப்பிடுவதுதான் திட்டம். அதைத்தான் செய்தேன் என்றாலும் சொல்லும்போது என்னையறியாமல் இட்லி வடை என்றே சப்ளையரிடம் சொன்னேன். இது ஓர் உதாரணம் மட்டுமே. தோசை என்று நினைத்துக்கொண்டு சென்றால் நெய் மசாலா என்று சொல்லிவிடுவதும், பூரிக்குக் கிழங்கு தவிர வடைகறி கேட்பதும் புளியோதரைக்குக் கூடப் பொரியல் என்ன இருக்கிறது என்று விசாரிப்பதும் மரபணு வழியே வந்திருக்க வேண்டும். பாதி வாழ்க்கைக்குப் பிறகு இதெல்லாம் மாறுமா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு புது வருடம் பிறக்கும்போதும் ஒவ்வொருவரும் ஏதேதோ செயல் திட்டங்கள் வகுப்பது வழக்கம். நானும் செய்வேன். ஆனால் அனைத்தும் எழுத்து சார்ந்தவையாக மட்டுமே இருக்கும். ஒரு மாறுதலுக்கு இம்முறை உணவு சார்ந்து ஒரு செயல் திட்டம் போடலாம் என்று பார்க்கிறேன். கடுமையான விதிமுறைகளை வகுத்துவிட்டுப் பிறகு நான்கு நாள்களில் பின்வாங்கிவிடக் கூடாது என்பதை நினைத்துக்கொள்கிறேன். என்னால் செய்யக்கூடியவை என்று தோன்றுகிறவற்றை மட்டும் இங்கே எழுதிப் பார்க்கிறேன்.

1. இட்லி என்றால் மூன்று மட்டும். கண்டிப்பாக வடை கிடையாது.

2. தோசை என்றால் இரண்டு மட்டும். நெய் ரோஸ்ட் கிடையாது. மசாலா கிடையாது.

3. சப்பாத்தி என்றால் இரண்டு மட்டும்.

4. ஓராண்டுக் காலம் பூரிக்கும் அப்பளம், வடாம் வகையறாக்களுக்கும் விடுமுறை.

5. பொதுவாகக் காப்பிக்கு சர்க்கரை, பால் சேர்ப்பதில்லை. வெளியே காப்பி குடிக்க நேர்ந்தாலும் இனி இதைக் கடுமையாகப் பின்பற்றுவது.

6. எண்ணெய் இல்லாத நொறுக்குத் தீனிகள் மட்டும். (உதா: வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை)

7. இனிப்பு, வாரம் ஒரு நாள் மட்டும். சாக்லெட்டாக இருந்தாலும் அவ்வளவுதான். இனிப்பு உண்ணும் நாளில் ஒருவேளை உணவைத் துறப்பது.

8. கண்டிப்பான முழுநாள் ஏகாதசி விரதம்.

9. நெல்லைக் குட்டன் வேர்க்கடலை மசாலாவை வாழ்வில் இருந்து அறவே ஒழிப்பது.

10. தினமும் 10000 அடிகள் நடப்பது.

ஜெயமோகன் ஓர் ஆண் பூஜா ஹெக்டே போல ஆகிவருவதைப் பார்க்கும்போது பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. டயட் என்று தனியாக ஒன்றில்லாமல் இந்த 2024 ஆம் வருடத்தில் எப்படியாவது இருபது கிலோ குறைக்க வேண்டும்.

இருங்கள். செய்துவிட்டு வருகிறேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter