எதிர்ப்பட்ட பெண்ணின் கையில் அரையடி உயரமுள்ள காகிதக் கோப்பை இருந்தது. கண்ணாடி மூடி போட்டு பாதுகாக்கப்பட்டிருந்த அதன் உள்ளே குளிர்ந்த காப்பியும் மேலாக மிதக்கும் ஐஸ் க்ரீமும் தெரிந்தன. நேர் வகிடு எடுத்த தலை மாதிரி அதன் உச்சியில் ஒரு ஓட்டை போட்டு ஸ்டிரா சொருகியிருந்தது. கவனித்ததில் அவள் கால் வாசி கூடக் குடித்திருக்கவில்லை. ஆனால் சுற்றி வரும்போது கையில் காப்பிக் கோப்பை இருக்க வேண்டியது அவசியம்.
அந்தப் பெண்ணைக் கடந்து இருபதடி தூரம் போவதற்குள் இன்னும் இரண்டு பெண்கள் காகிதத்தில் சுற்றிய சாண்ட்விச்களைக் கடித்தபடி கடந்து போனார்கள். காப்பி, தேநீர், சிறுதீனிகள் கிடைக்கும் கடை முழுதும் மக்கள் நிரம்பியிருந்தார்கள். டோனட்ஸ். இது இன்றைய தலைமுறையின் தேசிய உணவாகிக்கொண்டிருக்கிறது. பாதுஷா என்ற பெயரில் மேலே அடர்ந்த சர்க்கரைப் படலத்துடன் திருமண வீடுகளில் இலையில் போடுவார்கள். அப்போதெல்லாம் அதை ஒருவரும் தொடமாட்டார்கள். சிறிது அலங்கரித்து, மெதுவடைக்குப் போடுவது போல நடுவே ஒரு ஓட்டையும் போட்டுக் காகிதத் தட்டில் கொண்டு வந்து வைத்தால் விலை ரூபாய் நூற்று எண்பது. இன்னொன்றையும் காண முடிந்தது. ஏழெட்டு கல்லூரி மாணவர்கள் மொத்தமாக வருகிறார்கள். டோனட் காம்போ என்று ஆர்டர் செய்கிறார்கள். மேற்புறம் பலவித வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட பத்துப் பன்னிரண்டு டோனட்களை ஒரு நீண்ட அட்டைப் பெட்டியில் வைத்து மொத்தமாக வாங்கி மேசையில் கிடத்தி, ஆளுக்கு ஒன்றிரண்டாக அள்ளித் தின்கிறார்கள்.
பர்கர்கள். பீட்சாக்கள். க்ரில்டு அசைவாதி ஆகாரங்கள். எல்லோருக்கும் பசிக்கிறது. எல்லோரும் சாப்பிடுகிறார்கள். பசி இல்லாவிட்டாலும் கையில் ஏதேனும் ஓர் உணவுப் பொருளை வைத்திருக்கிறார்கள். அக்காலத் திரைப்படங்களில் தேவையற்ற காட்சிகளிலும் விரல் இடுக்கில் சிகரெட்டுடன் சிவாஜி கணேசன் நிற்பது போல.
காக்கடா ராம்பிரசாத் என்றொரு கடை. கண்ணெதிரே சுடச்சுட ஜிலேபி பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் சில வினாடிகள் ஊறப் போட்டுத் தருகிறார்கள். அந்த ஜிலேபிக்கு அறுபது பேர் கொண்ட வரிசை நிற்கிறது. கோட் சூட் அணிந்த கனவான்கள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள், பெண்கள், குழந்தைகள் வரை. அதே கடையின் இன்னொரு பக்கம் ஜிலேபிக்கு நிற்பதினும் மும்மடங்குக் கூட்டமும் ஐந்து வரிசைகளும் தென்படுகின்றன. அது பானிபூரி கவுண்ட்டர். ஐந்து வரிசைகளையும் ஒரு வட இந்தியப் பணியாள் லாகவமாகக் கையாள்கிறான். வரிசைக்கொருவராக முறை வைத்து ஒவ்வொரு பூரியாக எடுத்து உடைத்து உள்ளே மசாலாவைச் சொருகி, புளித்தண்ணீர் விட்டுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். ஒரு பிளேட் பானிபூரி என்பது ஐந்து உருப்படிகளைக் கொண்டது. ஐந்து வரிசைக்காரர்களும் தலா ஐந்தைந்து பூரிகளை விழுங்கிவிட்டு நகர்ந்தால் அடுத்த நபர் முதல் வரிசைக்கு வருவார். ஒரு நாளில் எத்தனை பூரிகள் படியளக்கிறான் இம்மனிதன். முதலாளி யாரோதான். வாங்கி உண்பவர்களும் காசு கொடுத்துத்தான் வாங்குகிறார்கள். இருந்தாலும் அள்ளிக் கொடுக்கும் கரம் அவனுடையதாக இருக்கிறது. புண்ணியம் சேராதிருக்காது.
பிஸ்கட் கடைகள். சாக்லெட் கடைகள். ஐஸ் க்ரீம் கடைகள். குளிர்பானக் கடைகள். அதைச் சொல்ல வேண்டும். முன்னொரு காலத்தில் சோடா இருந்தது. பன்னீர் சோடா, கலர் என்றிருந்தது. கோலி உடைத்து, ஏப்பம் வரும் அளவுக்குக் குடித்து முடித்துவிட்டுப் புத்துணர்ச்சியுடன் வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.
இன்றும் எல்லாம் இருக்கின்றனதான். ஆனால் வண்ணம் வேறு. வெளிர் நீல நிறத்தில் ஒரு சோடா. மேலே இரண்டு புதினா இலைகள் மற்றும் அரைத் துண்டு எலுமிச்சையுடன் ஒரு ஐஸ் கட்டியை மிதக்கவிட்டுக் கொடுக்கிறார்கள். விலை நூற்று எழுபத்தைந்து ரூபாய். கண்ணில் படும் கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரும் இதை விரும்பி அருந்துகிறார்கள். ஒரு துண்டு ஃப்ரெஞ்ச் ஃப்ரை தின்ன வேண்டியது. ஒரு வாய் நீலச் சோடா அருந்த வேண்டியது. மீண்டும் ஒரு துண்டு ஃப்ரெஞ்ச் ஃப்ரை. மீண்டும் ஒரு வாய் நீலச் சோடா.
குக்கிமேன். கேக் ஹவுஸ். டிக்காவாலா. சாய்கிங். ஒரு வர்த்தக வளாகத்தின் முதலிரு தளங்களைச் சுற்றி வருவதற்குள் முப்பது நாற்பது சிறுதீனிக் கடைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. மூன்றாவது தளத்தில்தான் பெருந்தீனி உணவகங்கள். பல தேசத்து உணவுகள். கூப்பன்கள், கவுண்ட்டர்கள், க்யூக்கள். நாற்காலி, மேசைகளில் இடம் பிடிக்கப் போட்டாபோட்டி.
உணவகங்கள் இவ்வளவு பெருகிவிட்டதற்குப் பசியோ ருசியோ காரணமில்லை என்று ஒவ்வொரு முறை மால்களுக்குச் செல்லும்போதும் தோன்றுகிறது. ஏதோ ஒரு விரக்தி இருக்கிறது. எதையோ பழிவாங்கும் வெறி இருக்கிறது. ஒரு ஆற்றாமை. அல்லது கோபம். அல்லது அம்மாதிரி ஏதோ ஒன்று. உணர்ச்சியின் துருப்பிடித்த முனைகளை இப்படி எதையெதையோ உண்டு கூர் தீட்டிக்கொள்கிறார்களா?
எதுவும் பெரிதல்ல, எதுவும் கவலைக்குரியதல்ல என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பெரிதாகக் கவலை கொள்ளத்தக்க ஏதோ ஒன்று அல்லது ஒரு சில அவலங்கள் எல்லாருடைய வாழ்வுக்கும் இக்காலத்தால் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் இருந்து தப்பிக்கக் குளத்துக்குள் குதிப்பது போலத் தின்று தணிக்கப் பார்க்கிறார்கள் மக்கள்.
நான் ஒரு சிறந்த உணவு ரசிகன். விதவிதமாக ருசி பார்ப்பதில் சலிப்பே இல்லாதவன். ஆனால் கொறித்துக்கொண்டே இருப்பது என் குணமல்ல. நிற்கும்போது, நடக்கும்போது, உரையாடும்போது, கடைகளில் பொருள் வாங்கச் செல்லும்போதெல்லாம் என்னால் உண்ண முடியாது. ஒரு துண்டு சாக்லெட்டைக் கொடுத்து, தின்றுதான் தீரவேண்டும் என்பீரானால் ஒரு ஓரமாக நின்று அதைத் தின்று முடித்துவிட்டுத்தான் உங்களுடன் பேசவே ஆரம்பிப்பேன்.
முன்பெல்லாம் எழுதும்போது எதையாவது தின்னும் வழக்கம் இருந்தது. அப்போதுகூட எழுதுவதை நிறுத்திவிட்டு ஒரு முறுக்கையோ, ஒன்றிரண்டு கடலை மிட்டாய்களையோ தின்று தண்ணீர் குடித்துவிட்டுத்தான் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன். இரண்டையும் ஒரே சமயத்தில் செய்ய மாட்டேன். சமைப்பது போலவே உண்பது ஒரு கலை. அது நூறு சதம் கவனம் கோரும் கலையும்கூட.
இன்று பல தேச உணவுப் பொருள்கள் இங்கே எளிதாகக் கிடைக்கின்றன. கலையுணர்வுடன் அலங்கரித்து விற்கிறார்கள். விலையை யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவதேயில்லை. எண்ணிய கணத்தில் வாங்கி உண்டுவிட முடிகிறது. ஆனால் உண்ணும் கலை காகிதக் கோப்பைகளாகவும் தட்டுகளாகவும் கசக்கி எறியப்பட்டுவிட்டது. உண்ணுதல் என்னும் செயல்பாடு ஒரு வியாதியாகி இருக்கிறது.