புளியோதரை செய்வது எப்படி?

சசிகலா விடுதலையும் ஜெ நினைவிடத் திறப்பும் ஒரு பிரச்னையா? புளி சாதத்தில் வேர்க்கடலை போடும் கலாசாரத்தைக் கண்டுபிடித்தவனைக் கண்டுபிடித்துக் கட்டி வைக்கச் சொல்லி இன்று காலை வண்ணநிலவன் ஒரு ஸ்டேடஸ் போட்டிருக்கிறார். இலவம்பஞ்சை நிகர்த்ததொரு மனதர் (எழுத்துப் பிழை இல்லை) இவ்வளவு சீற்றம் கொள்ள நேர்ந்தது தமிழ்ச் சூழலின் துரதிருஷ்டமே. என்ன செய்ய? தமிழ் நாட்டில் தொண்ணூறு சதமானப் பெண்களுக்குச் சரியான புளி சாதம் செய்ய வராது. புளி சாதத்துக்கும் புளியோதரைக்கும் தொண்ணூற்றொன்பது சதமானம் பேருக்கு வித்தியாசம் தெரியாது. போதாக் குறைக்கு எதிலும் உள்ள இன்ஸ்டண்ட் பொடி இதிலும் வந்துவிட்டது. இந்த இன்ஸ்டண்ட் பொடி என்பது ஒரு சர்வ நாச பட்டன். தொட்டால் முடிந்தது.

ஏதோ என்னால் முடிந்தது, உருப்படியாக ஒரு புளியோதரைக்கு வழி சொல்லித் தருகிறேன். அந்த அலங்காரச் சேர்மானங்கள் பற்றிய தனிக் குறிப்பு கடைசியில் வரும். அவசரப்படாதீர்கள்.

புளியோதரை உருவாக்கம் என்பது புளிக் காய்ச்சல் என்னும் கலைப் பணியில் தொடங்குகிறது. இந்தப் புளிக் காய்ச்சல் என்பது சாராயக் காய்ச்சல் போன்றே வளமான கலை மனத்தையும் கடும் பணி நேர்த்தியையும் ஒருங்கே கோருவது.

நல்ல கனமான இரும்பு வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நாலு கரண்டி. அதுவும் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கச் செய்க. பிறகு கடலைப் பருப்பு சேர்மானம். பருப்பு சிவக்கும் பதம் வந்தபின் பெருங்காயம், வெந்தயம். இந்தப் புளிக் காய்ச்சலின் கவர்ச்சி இளவரசி, நல்ல காரம் மிக்க ஆந்திரத்து குண்டு மிளகாய். கஞ்சத்தனமில்லாமல் மிளகாய் வற்றலை அள்ளியெடுத்துக் கிள்ளிப் போட்டு நாலு புரட்டி புரட்டுங்கள்.

அது மணக்கத் தொடங்குவதற்குள் நல்ல பெரிய சைஸ் உருளைக் கிழங்கு அளவுக்குப் புளியைப் பந்தாக எடுத்து வெந்நீரில் கரைக்கவும். இந்தப் புளி பழைய புளியாக இருப்பது அவசியம். பொதுவாகவே புதுப் புளிக்கு ருசி கிடையாது. 

இந்தப் புளிக் கரைசல் என்பது ஒரு வத்தக் குழம்பைப் போல இருக்க வேண்டும். தொளதொளப்பே கூடாது. டிகிரி காப்பி டிக்காஷன் பதத்தை நினைவில் கொள்க. (டிகிரி காப்பி பதம் எது என்பது தனிக் கட்டுரைக்கான சங்கதி. இங்கே முடியாது.) 

அடுப்பில் மிளகாய் வற்றலும் மற்றதும் எண்ணெயில் குளித்துக்கொண்டிருக்கிறதல்லவா? அதன் தலையில் இந்தப் புளிக் கரைசலைக் கொட்டுக. தேவையான அளவு உப்பு என்னும் மாய யதார்த்தச் செயல்பாட்டினை மறக்காமல் செய்யவும். (ஆனால் ஒரு விஷயம் கவனத்தில் இருக்க வேண்டும். புளிக் காய்ச்சலுக்குத் தேவையான அளவு உப்பு என்பது மற்ற தேவையான அளவினும் சிறிது கூடுதல். கைப்பழக்கத்தால் மட்டுமே அந்தப் பதம் வரும். பெரும்பாலான பெண்கள் தோற்றுப் போவது இந்தக் கட்டத்தில்தான்.)

முடிந்ததா? சிறிது கிளறி விடவும். மிதமான தீயில் கரைசல் கொதிக்கட்டும். இந்தக் கொதியல் என்பது ஃபேஸ்புக் அறச் சீற்றம் அளவுக்கு இருப்பது அவசியம். நன்கு கொதித்துக் கொதித்துத் தணிந்து, இறுகத் தொடங்கும்போது மஞ்சள் பொடி மறக்காமல் சேர்க்கவும். புளி சாதத்துக்கான கரைசலில் நாட்டுச் சர்க்கரை, உளுத்தம்பருப்பு சேர்மானம் இருக்கும். புளியோதரையில் அவை கிடையாது. அதே போல கடுகு வெடித்தவுடனேயே சில வீடுகளில் கருவேப்பிலையை உதிர்த்துப் போட்டுக் கிளறுவார்கள். அதுவும் புளி சாத ஸ்டைல். புளியோதரையில் கருவேப்பிலை பின்னால் வரும்.

சரி. திரும்பக் கிளறவும். புளிக் கரைசலின் நீர் அளவு முக்கால் வாசி ஆவியாகி அது உருண்டு திரண்டு கிட்டத்தட்ட உப்புள்ள பெப்ஸொடண்ட். பதத்துக்கு நெருங்கும்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதுதான் சரியான புளிக் காய்ச்சல். ஆனால் இதோடு முடிவதில்லை. இந்தக் கலவையைத் தயார் செய்து வைத்துக்கொண்டு மீண்டும் பிடி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, பெருங்காயம், நாலு மிளகாய் வற்றலை எடுத்து வறுத்து அம்மியில் போட்டு அடித்துத் துவைத்துப் பொடித்துக் கொள்க. மிக்ஸிதான் முடியும் என்றால் ருசி சற்று பங்கப்படும். ஆனாலும் பரவாயில்லை. வறுத்து இடிக்கும் இந்தப் பொடி மூக்கில் ஏறித் தும்மல் வரவழைக்க வேண்டும். அதுதான் பதம்.

அடுத்து சாதம். இதற்கு குக்கர் உதவாது. கஞ்சி வடித்த சாதமே சரி. உதிர் பதத்தில் சோற்றை வடித்து எடுத்து ஃபேனுக்கு அடியில் தாம்பாளத்தில் கொட்டி, ஆற விடவேண்டும். சுடச்சுட புளிக்காய்ச்சலைக் கொட்டிக் கலந்தால் ருசிக்காது. முக்கால் வாசி ஆறிய பின்பு நாலு கரண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும். அதற்கு மேலே புளிக் காய்ச்சலைக் கொட்டிக் கலந்தால், சரக்கு தயார்.

நாம் தனியே ஒரு பொடி இடித்து வைத்திருக்கிறோம் அல்லவா? அது இங்கே பயன்படும். புளிக் காய்ச்சலை சோற்றில் கலந்த பின்பு அந்தப் பொடி சேர்மானத்தை அதன்மீது தூவி மீண்டும் கிளற வேண்டும். பரவலாக எல்லா பருக்கைகளுக்கும் பொடி போய்ச் சேர வேண்டும். 

இவ்வளவையும் செய்த பிறகுதான் அலங்கார வினோதங்களின் பக்கம் திரும்ப வேண்டும்.

புளியோதரைக்கு நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்புதான் சரி. உடைத்த முந்திரியாக இல்லாமல் அது முழு முந்திரியாக இருப்பது தரம். நல்ல உயர் ரக வால்நட்டையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். வேறு எதுவும் பொருந்தாது. இலக்கணம் வழுவாத வடகலை ஐயங்கார் பெண்கள் இப்படித்தான் செய்வார்கள். புளியோதரையில் வேர்க்கடலை சேர்க்கும் வழக்கம் என்பது பின்னாள்களில் தென்கலை ஐயங்கார் குலப் பெண்களால் சொருகப்பட்ட ஒரு பின்னவீனத்துவக் கூறு. இது பொருளாதார ரீதியில் சுலபமானது என்பதால் கல்யாண சமையல் கலைஞர்கள் இதையே பின்பற்றத் தொடங்கி, புளியோதரைக்கு வேர்க்கடலை என்பதை ஒரு கட்டாயமாக்கிவிட்டார்கள். உண்மையில் அது கலையிடைக் களை. எனவே, வேண்டாம்.

இதற்கெல்லாம் பிறகு கருவேப்பிலையை வறுத்து மேலே தூவி, நாலு ஸ்பூன் நெய் ஊற்றி, கபாலென்று மூடி வைத்து விடுக. பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு திறந்தால் காதில் ஒரு அசரீரி கேட்கும். அது பகவான் கிருஷ்ணனின் குரல். உணவில் நான் புளியோதரையாக இருக்கிறேன் என்பான் அவன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி