நீலக்காகம் 2

அவர் சோளிங்கரிலிருந்து வருவதாகச் சொன்னார். சாமி, மாடியில் இருக்கிறது என்று சீடன் கை காட்டினான். காட்டிய கரத்தில் ஒரு வெள்ளைத் துணி சுற்றியிருந்தது. இன்னொரு கையில் குழவிக் கல் மாதிரி ஒன்று வைத்திருந்தான். அதன் முனையில் மிளகாய்ப் பொடி இடித்த நிறத்தில் என்னவோ ஒட்டிக்கொண்டிருந்தது.

முதல் கட்டுக் கதவு பாதி திறந்திருக்க, மூன்று பேர் உள்ளிருந்து எட்டிப் பார்த்தார்கள். வந்தவர் அவர்களைப் பாதி பார்த்தபடி மரப்படிகளில் வேகமாக ஏறினார். மாடிப்படிகளின் கைப்பிடி தொளதொளவென்று இருந்தது. ஏறுகிற அதிர்வை எதிரொலித்து ஆடியது. இருபது படிகள் ஏறியபிறகு படி வளைந்து இன்னும் பத்து படிகளைக் காட்டியது. நல்ல இருட்டு. ஒரு விளக்குப் போடலாம் என்று ஏன் சாமிக்குத் தோன்றவில்லை? எங்கோ தொலைவில் மாடத்தில் எரிந்துகொண்டிருந்த ஒற்றை அகல் வெளிச்சத்தில் தடம் கவனித்து ஏறவேண்டும். புராதனமான வீடு.  வாசலில் நின்று பார்த்தால் வீட்டின் உச்சியில் ஸ்தாபிதம் 1893 என்று எழுதப்பட்டிருப்பது லேசாகத் தெரியும். யாரோ பிரிட்டிஷ்காரத் துரை இலவசமாக நிலத்தையும் கொடுத்து வீட்டைக் கட்ட பணமும் கொடுத்ததாகத் தன் தந்தை சொல்லுவாரென சாமி ஒரு சமயம் சொல்லியிருக்கிறது.

துரையின் பிள்ளைக்கு ஆறு நாளாக வயிற்றால் போய்க்கொண்டிருந்தது. காட்டாத வைத்தியரில்லை, செய்யாத வைத்தியமில்லை. நிற்பேனா என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. இங்கிலீஷ் மருந்து கொடுக்காதீர்கள், இந்திய சீதோஷணத்துக்கு அதெல்லாம் ஒத்துக்கொள்ளாது என்று அக்கம்பக்கத்தில் யாரோ சொல்லிவைக்க, பச்சிலை, சூரணம், லேகியம், பட்டினி, வெறுந்தண்ணீர் என்று இரண்டொருநாள் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். பிள்ளை நினைவு தப்பிப் படுத்துக்கிடந்தான். பிழைப்பது கஷ்டம் என்று யார் யாரோ பேசிக்கொண்டது துரையின் காதில் விழுந்தது. இந்தியாவுக்கு வந்து பிறந்த பிள்ளை. வீட்டில் முதல்முதலாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டவனும்கூட. டாடின்னா அப்பன், மம்மின்னா ஆத்தா. வாடின்னா கம் ஹியர். ரெடின்னா தயார். வெளியே கற்றுக்கொண்டு வந்து வீட்டில் சொல்லிக்கொடுப்பான். பிழிந்து உலர்த்திய துண்டு மாதிரி கிடந்தவனை யாரோ சொல்லித் தூக்கிக்கொண்டு சாமியின் பாட்டனாரிடம் ஓடிவந்தார் துரை.

நாடி பிடித்துப் பார்த்தவர் உள்ளே போய் நாலு நிமிஷம் கழித்துத் திரும்பி வந்து, படுத்துக் கிடந்த பையனின் நெற்றியில் விபூதியைப் பூசினார். அவன் சட்டையைக் கழற்றச் சொல்லி நெஞ்சிலிருந்து அடி வயிறுவரை மோதிர விரலால் நீளமாக ஒரு கோடு போட்டார். தொப்புளில் ஒரு விரல் வைத்து, திரும்பவும் மந்திரம் சொன்னார்.

சாமியின் தகப்பனார் அப்போது பாலியத்தில் இருந்தார். தன் தந்தையின் பிரதம சீடனாகக் கட்டளைக்குக் காத்து நின்றுகொண்டிருந்தார். அவர் சில வினாடிகள் கண்மூடிப் பேசாதிருந்தார். பிறகு விழித்தவர், மகனைத் திரும்பிப் பார்த்துக் கண்ணால் கட்டளையிட்டார்.

‘மாந்தாளிக்கள்ளி, சதுரக்கள்ளி, வெள்ளெருக்கு வேர்ப்பட்டை. மூலம் இந்த மூணும். நல்ல காத்தோட்டமா உலர்த்தி எடுத்து, அஞ்சு பலம் குழித்தைலம் சேத்து சுரைக்குடுக்கையிலே போட்டு ஊறவெச்சிட்டு,பெருங்காயம், அபின், லிங்கம் மூணையும் சேர்த்து அரைக்கணும். குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோஜனை, பச்சைக் கல்ப்பூரம், கூகைநீறு – அஞ்சாச்சா? சேத்து தைலம் விட்டு எட்டு சாமம் அரைச்சா தீர்ந்தது. விழுது சேர்ந்ததும் மாத்திரையாக்கி மூங்கில் குழாய்ல அடைச்சி பூமிக்கடில நாப்பதுநாள் வெக்கணும்னு சாஸ்திரம். நாப்பத்தோராவது நாள் அது அமிர்தமாகும். அன்னிக்கு அமாவாசையா இருந்தா இன்னும் விசேஷம். மணிக்கு மூணு கட்டி. தேன் சேர்த்துக் குடுத்தா வாந்தி பேதி வந்த சுவடு தெரியாம போயிடும். அதவிட பெரிசு, இந்த சூரணம் சாப்பிட்ட யாருக்கும் சாகறமட்டும் திரும்ப அது வரவே வராது. புரியிதா ஒனக்கு? வயித்த ஆகாசமாட்டம் ஆக்கிடும்.’

‘அபினெல்லம் உண்டுமா சாமி?’ என்றபோது ஹெஹ்ஹெஹ்ஹே என்று சிரித்தது. ‘நீலகண்ட மணின்னு பேரு இதுக்கு. சித்த வைத்தியன்னு போர்டு மாட்டிக்கிட்டு சூட்கேசோட ஊர் ஊரா மேயுற பய ஒருத்தனுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லே. நாடியிலே சொல்லியிருக்கற ஃபார்முலா. எங்கப்பன் சாகறப்ப எனக்குக் கடைசியா கத்துத் தந்த வித்தை.’

அந்த வித்தைதான் சாமியின் பாட்டனாருக்கு அந்த வீட்டைக் கொடுத்தது. ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிவைத்த ரயில் பெட்டி மாதிரி நாலு கட்டுக்கு நீள்கிற வீடு. வாசலில் நின்று நேராகப் பார்த்தால் பின் கட்டுக் கிணறு நூறடி தூரத்தில் தெரியும். நடந்து போனால் வலமும் இடமுமாகத் தலையிடிக்கிற கதவுகளுக்குப் பின்னால் ஏகப்பட்ட அறைகள் உண்டு. மூட்டைகளில் கட்டிவைத்த மூலிகைகளும் தகர டின்களில் நிரம்பிய சூரணங்களும் உளுத்துப் போய் உதிரும் புராதனமான புத்தகங்களும் துணிமணிகளுமாக நிரம்பிய அறைகள். இரண்டாம் கட்டு தாண்டியதும் விரியும் முற்றத்தில்தான் சாமி பச்சிலைகளைப் பிரித்து உலர்த்தும். அங்கேயே கிட்டங்கி உண்டு. கிளி சோசியக்காரன் பெட்டி மாதிரி சதுரம் சதுரமாக சுவரெங்கும் நீண்டிருக்கும் மரச்சட்டங்களின் இடையே வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒவ்வொரு விதமான மூலிகை இருக்கும். சீடர்கள் முற்றத்துக்கு வந்து உலர்த்தும் வேலையில் உதவி செய்வார்கள். ஆனால் பெட்டிகளின் அருகே வர அவர்களுக்கு அனுமதியில்லை. சாமியின் மூலிகைப் பெட்டிகளுக்குப் பின்னால் சுவரில் ரகசியக் கதவு ஒன்று உண்டு என்றும் அதைத் திறந்தால் கட்டுக்கட்டாகப் பணமும் தங்கமும் வைர வைடூரியங்களும் இருக்குமென்றும் ஊருக்குள் ஒரு வதந்தி நெடுநாளாக உலவிக்கொண்டிருந்தது.

‘ஏஞ்சாமி, ஊன்னு ஒரு வார்த்த சொன்னீகன்னா வீட்டை இடிச்சிப் புதுசாக் கட்டிரலாமில்லே? காசு பணத்துக்கு என்ன குறைச்ச? இப்புடிக் கரையான் அரிச்சி அரிச்சி உத்தரத்துக் கட்டையெல்லாம் உளுத்து விளுதுங்களே?’

கரையான் மட்டுமில்லை. பெரிய பெரிய எலிகளும் ஆகி வந்த பல்லிகளும் இரண்டு கடுவன் பூனைகளும் ஒரு நாயும் புற்று கட்டி வாழும் சிற்றெறும்புகளும் தோட்டத்துக்கு வந்துபோகும் பாம்புகளுமாக சாமியின் வீடு பிராந்தியத்தில் தனித்துவமானது. சீடர்களுக்கு முதலில் அச்சமாக இருந்தது. நல்ல வெயில் பொழுதுகளில் பின் கட்டுக்குள்ளிருந்து தோட்டத்துக்கு சாரைப் பாம்பு சாவகாசமாக ஊர்ந்து போவதைப் பார்த்து அலறிக்கொண்டு ஓடி வந்து சாமியிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒண்ணும் பண்ணாது. நீங்க ஒண்ணும் பண்ணாம இருந்தாப் போதும்’ என்று சொல்லிவிடும்.

சாமி காசு செலவு செய்யவேண்டுமென்ற அவசியம்கூட இல்லை என்று சிஷ்யர்கள் நினைத்தார்கள். ஒரு வார்த்தை சொன்னால் மாயாஜாலம் மாதிரி வீட்டை இடித்துப் புதுப்பித்து மதன மாளிகையாக்கிவிட எத்தனையோ பெரிய இடத்துத் தொடர்புகள் அவருக்கு உண்டு என்பது அவர்கள் அனுமானம். ஆனாலும் அது சம்மதித்ததில்லை.

‘விடப்பா. என் பாட்டன் காலத்துலேருந்து அதுகளும் வாழுது. இருந்துட்டுப் போகட்டும்’ என்பதுதான் பதிலாக இருந்திருக்கிறது.

மூன்றாம் கட்டில் சீடர்கள் புழங்கும் அறைக்கு மட்டும் சாமி ட்யூப் லைட் போட்டுக் கொடுத்திருக்கிறது. மற்றபடி அத்தனை பெரிய வீட்டுக்கு மொத்தமே நான்கு பல்புகள். எல்லாம் அறுபது வாட்ஸ் பல்புகள். மாடியில் சாமிக்குத் தனியே ஓர் அறை உண்டு. அங்கு அந்த பல்பும் கிடையாது. அகல் விளக்கு வெளிச்சத்தில்தான் சாமி ஆராய்ச்சிகள் செய்யும். புத்தகம் படிக்கும். பழைய பனை ஓலைகளைத் தூசு தட்டி எடுத்து மீள வாசிக்கும். விளக்கை அணைத்த பிறகு நெடுநேரம் அது தூங்குவதில்லை என்று சீடர்கள் தனியே கிசுகிசுத்துக்கொள்வார்கள். பெரும்பாலும் அது விளக்கணைத்துப் படுத்த பிறகுதான் ரங்கநாத ஆச்சாரி வெளிவாசலில் வந்து நின்று கதவை இடிப்பார். தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து திறந்துவிட்டதும் ஒருவார்த்தை பேசாது நேரே படியேறி மேலே போவார். இரவு பதினொரு மணிக்குப் பிறகு அவர்கள் பேச என்ன இருக்கும், எத்தனை நேரம் பேசுவார்கள், என்ன செய்வார்கள் என்று சீடர்களுக்குத் தெரியாது. கீழிருந்து அவர்கள் பேசுவது கேட்காது. படியேறி மேலே போய் ஒட்டுக்கேட்க முனைந்தபோதும் அது முடிந்ததில்லை. செவிட்டு ஆச்சாரிக்கு சாமி எழுதிக்காட்டித்தான் விளங்கவைக்கும் என்பது வெகுநாளுக்குப் பிறகுதான் தெரியவந்தது. எழுதிய பிரதிகளாவது கிடைத்தால் பார்க்கலாம் என்று அவர்கள் முயற்சி செய்தபோது அதற்கும் வழியில்லாது போனது. சீடர்களை அவர் மாடி அறைக்கு வரவிடுவதேயில்லை. வெளியே போகும்போது கதவை இழுத்துப் பூட்டிவிட்டு, சாவியை இடுப்பில் சொருகிக்கொண்டுதான் இறங்குவார்.

நிச்சயமாக சாமி பெரிய ஆள்தான். வெறும் வைத்தியரில்லை. வேறென்னவோ. சமயத்தில் ரங்கநாத ஆச்சாரி அழைத்து வருகிற பலபேரை சீடர்கள் எப்போதாவது பேப்பரில் பார்த்திருக்கிறார்கள். யாரென்று சரியாகத் தெரியாது. முகத்தை உற்றுக் கவனிப்பதற்குள் மாடிப்படியேறிவிடுவார்கள்.

இன்று ரங்கநாத ஆச்சாரி வரவில்லை. அவர் சொல்லி வந்ததாக, வந்தவர் அறிமுகப்படுத்திக்கொண்டு சாமியைக் கேட்டார். மாடியில் இருக்கிறார் என்று சொன்னதும் மரப்படிகள் அதிர மேலே ஏறினார். சீடர்கள் கதவைச் சாத்திவிட்டு உள்ளே போனார்கள்.

வந்தவர் படியேறி மேலே சென்று சாமியின் அறைக் கதவைத் தொட்டு, தட்டி உள்ளே சென்றபோது சாமி அகல் வெளிச்சத்தில் ஏதோ ஓலைதான் படித்துக்கொண்டிருந்தது. ‘வர்றது’ என்று சொல்லிவிட்டு ஓலையைச் சுருட்டி உள்ளே வைத்துவிட்டு, ‘பொற்கொடிக்கு ஒரு நல்ல வரன் பாத்திருக்கேன்னு சொன்னேனே, அதுங்கிட்ட சொன்னீரா? பதிலயே காணம்?’ என்று கேட்டது.

– தொடரும்

Share

5 comments

  • கங்கிராட்ஸ் பாரா! உங்களுக்குள் இருக்கும் நாவலாசிரியர் இறந்துவிடவில்லை என்பதை நிரூபித்துவிட்டீர்கள். கதை அற்புதமாய் போகிறது. காட்சிகள் கண்முன் அப்படி அப்படியே வந்து நிற்கின்றன. சித்தவைத்தியர் கதை மாதிரிப் பாவனையில் எதை சொல்ல வருகின்றீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு சில க்ள்ஊக்கள் தருகிறீர்கள் என்பதை உணரமுடிகின்றது. நான் இப்போது தலையைப் பிய்த்துகொள்ளப் போவதில்லை. பத்து பாகங்கள் போய்விட்டால் பூனைக்குட்டி தன்னால் வெளியே வந்துவிடாதா என்ன! ;)))

  • வாவ். என்ன ஒரு எழுத்து நடை! இணையத்தில் நான் படிக்கும் முதல் சூப்பர் தொடர்கதை இதுதான். இலக்கிய மேதாவி போல் பந்தா காட்டாமல்; கமர்சியல் குப்பையில் விழுந்துவிடாமல் பேலன்சிங்காக எழுதுகிறீர்கள். வைத்தியர் வீட்டுக்கு நேரே போய்விட்டு வந்ததுபோல் உணர்ந்தேன். அதிரும் மரப்படியின் சப்தம் இன்னும் காதில் கேட்கிறது. அதுசரி, வைத்தியர் உண்மையில் கட்டு கட்டாய் பணம் வைத்திருக்கிறாரா இல்லையா? அதைமட்டும் சொல்லிவிடுங்கள் 😉

    பகிர்வுக்கு மிக்க நன்றி பாரா அவர்களே.

  • பா.ரா அவர்களுக்கு…
    இது ஒரு விந்தையான உலகமாக இருக்கிறது.நடக்கும் காலகட்டம் கொடுக்கும் கிளர்ச்சி
    சொல்லிலடங்காதது.பின் புலம் அதைவிட அருமையாக இருக்கிறது.உங்கள் பாஷையில் சொல்லப்பார்த்தால்
    “நீலகண்ட மணி” ஒரு இழுப்பு இழுத்தாற்போலிருக்கிறது.வாழ்த்துக்கள்

  • இந்த கதையை எழுத்தாளர் மாமல்லன் விமர்சித்தால் எப்படி இருக்கும்?

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி