பெரிய கதை

நீலக்காகம் 3

விறகுத் தொட்டிக்காரர், வீட்டை விட்டுக் கிளம்பும்போது காகம் கரைந்தது. ஒரு கணம் நின்றார். திரும்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார். ‘இவளே, உன் தம்பி வாராப்புல இருக்கு. ஆழாக்கு அரிசி கூடப் போட்டு சமைச்சிரு’

விசாலாட்சி திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள். காகம் கரையும்போதெல்லாம் தம்பி வருவது வழக்கமாகியிருக்கிறது. இன்று நேற்றல்ல. திருமணமான நாளிலிருந்து இது நடக்கிறது. தற்செயலா, திட்டமிடப்பட்டதா என்று உறுதியாகச் சொல்ல முடியாத பொருத்தம் எப்படியோ இதற்கு மட்டும் வாய்த்துவிடுகிறது. அனைத்துக்கும் பொருந்தக்கூடிய உலகப்பொது சகுனமில்லை இது. தன் தம்பி வருகிற விஷயத்தில் மட்டும் காகத்தின் குரல் பொய்த்ததில்லை. கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அது கரைந்து முடித்த பத்து நிமிஷத்தில் ‘அக்கா’ என்று கூப்பிட்டுக்கொண்டு வாசலுக்கு வந்து நிற்பான். இரண்டு சீப் ரஸ்தாளி, உரித்த வேர்க்கடலை முடிந்த காசித்துண்டு, தூக்கு ஜாடி நிறைய தேன், நாலு படி மாங்காய் வற்றல் என்று என்னத்தையாவது தூக்கிக்கொண்டு வந்துவிடுவான். பஞ்சாயத்து ஆபீசில் பம்ப்புசெட் மோட்டாரைப் போட்டுவிட்டது மாதிரி இரண்டு மணி நேரத்துக்கு ஊர்க்கதை உலகக்கதை சொந்தக்கதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டு, தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து போடுவதை வழித்து நக்கித் தின்று சப்புக்கொட்டிக்கொண்டு எழுந்து வாசல் திண்ணைக்குப் போய் அரை மணி படுப்பான். எழுந்து முகம் கழுவிக்கொண்டு, ‘மாமாவ பாத்துட்டு அப்புடியே கெளம்புறேன்’ என்று சொல்லிக்கொண்டு செருப்பைத் தேய்த்து மாட்டிக்கொண்டு பதிலுக்குக் காத்திராமல் போய்க்கொண்டே இருப்பான்.

விசாலாட்சிக்கு மனோகரன் ஒரு தீராத வியப்பு. வேண்டாம் என்று வீடு தன்னை விரட்டியடித்து எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டன. அப்பன் ஆத்தா செத்துப் போய், உறவுகள் முகம் மறந்து போகத் தொடங்கிய காலம் கூட மறந்துவிட்டது. அரக்கோணத்துத் தொடர்புகள் முற்றிலும் அற்றுப்போய்விட்ட பிறகும் மனோகரன் மட்டும் விடாமல் வந்துகொண்டிருக்கிறான். காலக்கணக்கெல்லாம் கிடையாது. நினைத்தால் கிளம்பிவிடுவான். அவன் பெண்டாட்டியை விசாலாட்சி பார்த்ததுகூடக் கிடையாது. அவன் பிள்ளை பத்தாங்கிளாஸ் படிப்பதாகச் சொல்லியிருக்கிறான். இதுவரை அழைத்துவந்ததில்லை. ‘என்னைப் பத்தி உன் வீட்டுல பேசுவியாடா?’ என்று அவள் ஓரிரு சமயம் கேட்டபோது, ‘பொய் எதுக்குக்கா? நான் பேசினதில்லை. எம்பொண்டாட்டிக்கு உன்னைத் தெரிஞ்சி என்ன ஆவப்போவுது? எனக்கு பெரியம்மா பொண்ணுன்னு ஒருத்தி இருந்தா, ஓடுகாலின்னு ஒரு காலத்துல அடிச்சித் தொறத்தினாங்கன்னு சேதி தெரியும் அவளுக்கு. எங்கக்கா உலக உத்தமின்னு அவளுக்கு நான் நிரூபிச்சிட்டிருக்க அவசியமில்லைன்னு தோணிச்சி. யாருக்கு எதை நிரூபிக்கணும்? நிரூபிக்கறதுன்றதே ஒரு அசிங்கம். எனக்கு ஒன்ன புடிக்கும். பாக்கத் தோணிச்சின்னா பொறப்பட்டு வரேன். நீ வான்னு கூப்புடற வரைக்கும் வந்துக்கிட்டிருப்பேன். வராதன்னு சொன்னா வரப்போறதில்லை. ஒன்ன எனக்குப் புடிக்க நீ ஒறவுக்காரியாத்தான் இருந்தாகணும்னும் இல்லை. வெட்டிவுட முடியாத ஒறவாவே இருந்தாலும் ஒருத்தர புடிக்காம போகக் காரணம் வேண்டியிருக்கறதில்லை இல்லியா?’ என்று கேட்டான்.

ஒரு வகையில் சரிதான். யோசித்துப் பார்த்தால் சிறு வயதில் விசாலாட்சிக்கு மனோகரன் அத்தனை நெருக்கம் இல்லை. கருணீகர் தெருவிலும் சுந்தர வாத்தியார் தெருவிலுமாகப் பக்கத்துப் பக்கத்து வீதிகளில் வசித்த குடும்பங்கள்தான் என்றாலும் இருக்கியா, இருக்கேன் என்னும் அளவில்தான் உறவுகள் இருந்தன. இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில்தான் படித்தார்கள். மனோகரனைவிட விசாலாட்சி இரண்டு வகுப்பு பெரியவள். பண்டிகை, விசேஷம் என்றால் இரு வீட்டிலிருந்தும் பலகாரத் தட்டுகளில் உறவின் மிச்சம் பரிமாறப்படுவது தவிர பெரிய தொடர்புகள் இருந்த நினைவில்லை. ஆனால் விசாலாட்சி ஒருத்தரைக் காதலிக்கிறேன் என்று சொன்னபோது அண்ணன் தம்பிகள் இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு ஓரணியில் நின்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். பொதுவில் நல்ல விஷயங்கள் பேசிக்கொள்ளக்கூட யோசிக்கும் ஓரகத்திகள் இரண்டு பேரும் கூப்பிட்டு உட்காரவைத்து புத்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.

விசாலாட்சிக்கு அதை நினைத்தால் சிரிப்புத்தான் வரும். உறவுமில்லாமல் பகையுமில்லாமல் வெறும் வறட்டி மாதிரி கிடந்த சொந்தக்காரர்கள் ஒரு பொது விஷயத்தில் இணைவதற்குத் தானொரு காரணமாக இருப்போம் என்று அவள் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை.

‘தபாரு, வெறகுத்தொட்டி சண்முகசுந்தரம் நீ நெனைக்கறமாதிரி ஆள் இல்ல. களையா இருக்கான், சுருட்ட முடி வெச்சிருக்கான், சிரிச்சா பல்லு வரிசையா அளகா இருக்குது, என்பீல்டு புல்லட்டுல போறான், நாலு மோதரம் போட்டிருக்கான்னு மயங்கியிருந்தன்னா, ஒன்னவிட முட்டாள் ஆருமில்ல  விசாலாச்சி. அவன் பரம்பரையே தப்பு தண்டா பரம்பர. அவங்கப்பன் மேல இன்னிக்கும் மூணு கொலக்கேசு நிக்குது. எருக்கம்பட்டுல போன வருசம் நாப்பது குடிசை எரிஞ்சி கேசாச்சே தெரியும்ல? செஞ்சது ஆருன்னு நெனைக்குற? இவந்தான். இன்ஸ்பெக்டருக்கு ரெண்டு கிரவுண்டு எழுதிக்குடுத்து அமுக்கிட்டான். சேர்மன கேட்டுப்பாரு. கோடி கதை சொல்லுவாரு. ஆளுங்கச்சி எம்மெல்லே மூணு பேத்துக்கு ஒத்த ஆளா பின்னாடி நின்னு அடியாள் வேல பாத்துக்கிட்டிருக்கான். வெறகுத்தொட்டியெல்லாம் மேலுக்கு காட்றதுக்கு. வெவகாரம் புடிச்சவண்டி. வேணாம், சொல்லிட்டேன்.’ சித்தப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.

‘உங்ககிட்ட சொல்லிட்டுத்தான் செய்யுறாரா இதெல்லாம்?’ என்று விசாலாட்சி கேட்டபோது பின்புறம் வந்து நின்ற அப்பா, பின்னந்தலையில் இடதுகாலால் எட்டி உதைத்தார்.

‘நாயி, பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும். எங்களுக்கு இல்லாத அக்கற எவனுக்குடி இருக்கு? தபார், அவன் என்ன சாதின்றதெல்லாம்கூட எனக்கு முக்கியமில்ல. எளவு என்னவா வேணாலும் இருந்துட்டுப் போய்த் தொலையுது, பொட்டச்சி ஆசப்பட்டுட்டான்னு கட்டி வெச்சிருவேன். கிரிமினல்டி அவன். அவங்கப்பனே ஒரு கிரிமினல். கட்டிக்கிட்டு ஆயுசு முழுக்க மனு எழுதிக்குடுத்து செயிலுக்குப் போயி பாத்துக்கிட்டு நிப்பியா?’

விசாலாட்சிக்குப் புரியவில்லை. அவள் சண்முகசுந்தரத்திடம் வெளிப்படையாகவே இதைப் பற்றிப் பேசியிருக்கிறாள். நீ ஒரு கிரிமினலா? உன் அப்பா மூன்று கொலை செய்திருக்கிறாரா? நீ குடிசைகளை எரித்திருக்கிறாயா? பேர்ணாம்பட்டில் உனக்கு ஒரு தொடுப்பு இருக்கிறதாகச் சொல்கிறார்களே, உண்மையா?

சண்முகசுந்தரம் சிரித்தான். அவளை நெருங்கி, தலையைக் கோதி நெற்றி வகிட்டில் முத்தமிட்டான். ‘நான் ரெண்டு மூணு பேத்துக்கு பினாமியா வேல பாக்குறது நெசந்தான் விசாலாச்சி. பணம் சம்பாரிக்க அது ஒரு வழி. எருக்கம்பட்டு கேசுல எனக்கு சம்மந்தம் இருக்குது. நான் எரிக்கல. எரிக்க சொல்லவும் இல்ல. ஆனா எரிச்சவனுகள காப்பாத்தியிருக்கேன். நியாயம்னு சொல்லமாட்டேன். அநியாயம்தான். ஆனா அது என் வேலைல ஒரு பகுதி. அப்பால அந்த பேர்ணாம்பட்டு பொண்ணு. என்னாத்த சொல்லுறது? அவ எனக்கு சித்தி முறை. எங்கப்பாரு கூட்டிக்கிட்ட பொம்பள. வெளிய தெரியாத விசயம் இது. எம்மூலமாத்தான் அவளுக்கு வேண்டியத குடுத்தனுப்பி உடுவாரு. சனங்க வேற மாதிரியா புரிஞ்சிக்கிட்டாங்க. சொல்ல அசிங்கமாத்தான் இருக்குது. ஆனா எங்கப்பா இல்லியா? எனக்கு அவரும் முக்கியம் இல்லியா?’

விசாலாட்சிக்கு அவனது வெளிப்படையான தன்மைதான் மிகவும் பிடித்தது. என்ன ஆனாலும் இவன் தான் புருஷன் என்று அவள் முடிவு செய்தது அதற்குப் பிறகுதான். உறவு மொத்தமும் ஒன்று சேர்ந்து எதிர்த்தபோதும் வெட்டிக்கொண்டு வெளியே போய், சோளிங்கரில் திருமணம் முடித்து, அங்கேயே குடித்தனம் போட்டாள். அத்தனை பேரும் வேன் ஏற்பாடு பண்ணிக்கொண்டு தேடி வந்து வீட்டு வாசலில் நின்று காறித் துப்பிவிட்டு விடைபெற்றார்கள். அன்று அறுந்த சொந்தத்தில் மிச்சமிருப்பது மனோகரன் மட்டும்தான்.

‘ஏண்டா ஒனக்கு மட்டும் என்னப் புடிக்குது?’ என்று விசாலாட்சி கேட்டாள்.

‘தெரியலக்கா. நீ நல்லவ, அப்பாவி, பாவம், எல்லாரும் சேந்து ஒன்ன ஒதுக்கினது தப்புன்னு சின்ன வயசுலேருந்தே ஒரு நெனப்பு. அதுவுமில்லாம மாமா இவங்க சொன்ன மாதிரியெல்லாம் இல்லியே? நல்லவராத்தான இருக்காரு? நீ கரெக்டான ஆளத்தாங்க்கா செலக்ட் பண்ண. நம்ம சொந்தக்காரங்களுக்குத்தான் அது தெரியல.’

‘அவுரு தப்பான ஆளுதான்னு ஆயிருந்தா வந்திருக்க மாட்டல்ல?’

மனோகரன் சில வினாடிகள் யோசித்தான். ‘தெரியலக்கா. எனக்கு ஒன்ன புடிக்கும். அவ்ளோதான் போ’ என்று சொல்லிவிட்டான்.

விசாலாட்சிக்கு ஒரு வருத்தம் மட்டும் இருந்தது. பெற்றவர்களின் சாபம் கணவன் விஷயத்தில் பலிக்கவில்லையென்றாலும், தனக்கொரு குழந்தை இல்லாது போய்விட்டதே என்று எப்போதாவது நினைத்துக்கொள்வாள். திருமணம் முடிந்த புதிதில் அடிக்கடி அவளுக்கு அந்த எண்ணம் வரும். ஒரு குழந்தையைப் பெற்று எடுத்துக்கொண்டு, அதே மாதிரி ஒரு வேன் ஏற்பாடு பண்ணிக்கொண்டு புருஷன், மாமனார், கொழுந்தன் சகிதம் அரக்கோணத்தில் தன் வீட்டுக்கு முன்னால் போய் இறங்கி, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் குழந்தையை மட்டும் காட்டிவிட்டுத் திரும்ப அதே வேனில் ஏறி வருகிற காட்சியொன்று விழிப்புடன் இருக்கும்போதே கனவுபோல் விரியும். சுகமாக இருக்கும்.

‘விடு விசாலாச்சி. பூமிக்கு பாரமா நாம ஒண்ணு பெத்துப் போட முடியல. அவ்ளதான? என்ன இப்ப, ஊன்னு சொல்லு. ஒரு கொழந்தைய தத்து எடுத்துக்குவோம். ஆசப்பட்டதெல்லாம் அதுக்கு செய்யி. பெத்தாதானான்ன? பெத்தது யாரானாலும் கொழந்த கொழந்ததான?’ என்றான் சண்முக சுந்தரம்.

இல்லை. ஆழமாக யோசித்துப் பார்த்தால் அவளது கவலை குழந்தை இல்லாததுகூட இல்லை. அது ஒரு வெறும் பேச்சாகக் கூடத் தன் புகுந்த வீட்டில் குறிப்பிடப்படாதது அவளை மிகவும் பாதித்தது. அத்தனை பேரும் மிகக் கவனமாக அந்தப் பேச்சைத் தவிர்க்கும்படி தன் மாமனார் உத்தரவிட்டிருப்பது தெரிந்தபோது ரொம்பக் குற்ற உணர்ச்சியாக இருந்தது. இந்த மனிதரையா கிரிமினல் என்றும் பொறுக்கி என்றும் கொலைகாரன் என்றும் ஊர் சொல்கிறது? அவளால் நம்பமுடிந்ததில்லை. பாசத்தை உள்ளங்கையில் தேக்கி வைத்து அவர் தலை வருடி மகளே என்று கூப்பிடும்போதெல்லாம் விசாலாட்சிக்கு நெஞ்சு கொள்ளாத துக்கம் பொங்கும். யார் இந்த மனிதர்? திடீரென்று வந்த உறவு. எப்படி இத்தனைப் பாசம் காட்ட முடிகிறது? தெரியவில்ல. புரியவும் இல்லை. எந்த மாமனார் மருமகளை மகளாக நினைப்பார்? எந்த ஊரில், எந்த உலகத்தில் இது சாத்தியம்? ஆனால் இங்கே நடக்கிறது.

‘டேய், சுந்தரம்.. தீவாளி வருதுடா. எம்மவளுக்குத் துணியெடுக்க மெட்ராசுக்குக் கூட்டிக்கிட்டு போவப்போறேன். நீ வரியா?’

இது எந்த வகைப்பாசம்? தன் குற்றங்களை விமரிசிக்காமல், கூடியவரை உதவியாக இருக்கும் மகனுக்குக் காட்டும் பதில் மரியாதையா?

விசாலாட்சி அதைக்கூடத் தயங்காமல் அவரிடம் கேட்டிருக்கிறாள். ‘தப்பா எடுத்துக்காதிங்க மாமா. மகளேன்னு நீங்க கூப்புடறப்ப சந்தோசமாத்தான் இருக்கு. ஆனா எம்புருசன் உங்க விவகாரங்கள்ளேருந்து விலகி நிக்கணும்னு நான் ஆசப்படுறேன். என்னிக்கானா அவரை வெலக்கியும் வெப்பேன். அப்பமும் இந்தப் பாசம் இருக்குமா?’

வேறு யாராக இருந்திருந்தாலும் என்ன செய்திருப்பார்கள் என்று லேசில் சொல்லிவிட முடியாது. ஆனால் சண்முக சுந்தரத்தின் அப்பா அப்போதும் பாசத்தை இரு உள்ளங்கைகளிலும் தேக்கி அவள் தலையை ஏந்தி கண்ணை நேரே பார்த்து பதில் சொன்னார். ‘என் வம்சத்துல பொம்பளப் பொண்ணு பொறந்து நாலு தலமுறை ஆச்சி மகளே. எம்மூத்தபுள்ளைக்கு வரப்போற பொண்டாட்டி எவளா இருந்தாலும் அவ எம்பொண்ணுன்னு முப்பது வருசத்துக்கு முன்ன அவன் பொறந்த நிமிசம் முடிவு பண்ணேன். நாள மத்தாநா ஒனக்கும் அவனுக்கும் பிரச்னையாகி, நீயே அவனை வெட்டிப்போட்டாலும் எம்பொண்ண காப்பாத்த நா மொதல்ல நிப்பேன். உன்னிய காப்பாத்திட்டுத்தான் எம்புள்ள செத்ததுக்கு அழுவேன்.’

கதறிக்கொண்டு காலில் விழுந்தாள் விசாலாட்சி.

‘சேச்சே. எந்திரிம்மா. அளப்படாது. தபாரு. கண்ண தொடச்சிக்க. நான் இருக்கேன்.’

விசாலாட்சி, மனோகரனிடம் இதைச் சொல்லியிருக்கிறாள். சொல்லிச் சொல்லி வியந்திருக்கிறாள். ‘புரிஞ்சிக்க முடியாத பாசம்டா மனோ. நீ வெச்சிருக்கற மாதிரிதான். என்னமோ போ. ஆண்டவன் எனக்குக் குழந்தைய குடுக்கல. பதிலுக்கு ஒரு நல்ல புருசன, ஒரு நல்ல மாமனார, உன்னியமாதிரி ஒரு நல்ல தம்பிய குடுத்திருக்கான். போதும்போ.’

காகம் பொய்க்கவில்லை. பதினொன்றரைக்கு மனோகரன் வந்துவிட்டான். ‘அக்கா..’ என்று அவன் குரல் கேட்டதும் புன்னகையுடன் எழுந்து வெளியே வந்தாள் விசாலாட்சி.

மனோகரன் சிரித்தபடி வந்தான். இம்முறை கையில் வாழைச் சீப்போ, தேன் ஜாடியோ இல்லை. அவனருகே ஒரு பெண் நின்றிருந்தாள்.

‘யாருடா இது?’ என்று விசாலாட்சி கேட்டாள்.

‘பேரு பொற்கொடிக்கா. தெரிஞ்ச பொண்ணுதான். உள்ள வா. வெவரமா சொல்லுறேன்’ என்றான்.

Share

10 Comments

 • ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு wriiten style இருக்கும். முந்தைய புத்தகங்களில் பின்பற்றிய style ஐ கவனமாக தவிர்த்த ஆச்சர்யமூட்டும் எளிய நடை. புனைவுகள் காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. Superb பா.ரா

 • வாவ்! எவ்ளொ அடர்த்தியாய்க் கதை சொல்கிறீர்கள். ஆனால் ஒவ்வொரு அத்தியாயமும் வேறு வேறு களத்தினில் துவங்குகின்றதே? எப்போது, எப்படி சேர்க்கப்போகிறீர்கள் என்று இப்போதே ஆவலாய் உள்ளது.

 • அருமை. அருமை. சூப்பர் ஜெட் போல கதை பயணிக்கிறது.

  // ‘என் வம்சத்துல பொம்பளப் பொண்ணு பொறந்து நாலு தலமுறை ஆச்சி மகளே. எம்மூத்தபுள்ளைக்கு வரப்போற பொண்டாட்டி எவளா இருந்தாலும் அவ எம்பொண்ணுன்னு முப்பது வருசத்துக்கு முன்ன அவன் பொறந்த நிமிசம் முடிவு பண்ணேன்.//

  இந்த வரிமட்டும் கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கு.

 • பழைய கதை சொல்லும் பாணிதான் என்றாலும் கண்டுபிடிக்க முடியாதபடி நவீன கோட்டிங் கொடுத்திருக்கிறீர்கள். துள்ளலான உங்கள் நடை வாசகனை எங்கும் நிற்க விடாமல், அலைபாயவிடாமல் கதையோடு கட்டி இழுத்துச் செல்றுவிடுகிறது. ஆனால் உங்களின் முந்தைய நாவல்களில் இருந்து இந்நாவல் முற்றிலும் வேறு தோற்றம் கொடுக்கிறது. பூடகமாக எதையோ பேச முயற்சி செய்கிறீர்கள் என்பது புரிகிறது. அடுத்த அத்தியாயத்திற்காய் காத்திருக்கிறேன்.

 • இந்த அத்தியாயம் கொஞ்சம் பாலகுமாரன் சாயல் அடிக்கின்றது

 • இந்த பாகம் மிக அருமை. இத்தனை வரிக்குள் அனைத்து உணர்வுகளும் வந்துவிட்டன. இது எந்த பகுதி பேச்சு வழக்கு என்று கண்டுபிடிக்கவில்லை. எதையும் சாராமல் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சார். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்.

 • ஒரு நாளைக்கு 2 அல்லது 3 போஸ்ட்ஸ் போட மாட்டீர்களா சார் ???

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி