நீலக்காகம் 1

ஒரு கொலை செய்யவேண்டும் என்று உத்தரவாகியிருந்தது.

செல்லியம்மன் கோயில் பூசாரி சாமியாடி முடித்து, கற்பூரம் காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டு கூட்டம் கலைந்த பிற்பாடு ரங்கநாத ஆச்சாரி கங்காதரன் தோளைத் தட்டி சட்டைப் பைக்குள் துண்டுச் சீட்டை வைத்தார்.

‘என்னாது?’ என்று சைகை காட்டியபடியே கேட்டான் கங்காதரன்.

‘தெரியல. லெட்ரு. சாமி குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லிவிட்டு குங்குமம் பட்டிருந்த பாதி தேங்காய் மூடியைக் கண்ணில் ஒற்றி, மஞ்சள் பையில் போட்டுக்கொண்டு, ‘அப்ப நா வரேன் பூசாரி’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

மடித்திருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்தபடி கங்காதரன் செல்லியம்மன் அருகே இருந்த அகல் விளக்கை நெருங்கினான். உதிரிப்பூக்களும் வேப்பிலையும் சிந்திய எண்ணெய்ப் பிசுக்குமாக அரச மரத்தடி சிறு மேடையில் செல்லியம்மன் ஒரு கல்யாணப் பெண் மாதிரி இருந்தது. வருஷத்துக்கு ஒருதரம் இப்படியொரு தினம் அம்மனுக்கு வாய்த்துவிடுகிறது. யாராவது சீரியல் பல்ப் போட்டுவிடுகிறார்கள். நாலு பேர் காசு போட்டு எழுத்துப் பிழைகளுடன் நோட்டீஸ் அடித்துவிடுகிறார்கள். அஞ்சாயிரத்துக்குக் குறையாமல் நிதி சேர்த்து ஆடியை மட்டும் குறைவைக்காது கொண்டாடிவிட்டால் ஆண்டு முழுக்க மிச்சத்தை செல்லியம்மன் பார்த்துக்கொள்ளும். திருவிழா முடிந்த மறுநாள் முதல் தன்னை யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பதைப் பெரிது படுத்தாத அம்மன். பூசாரி மட்டும் பழகிய விசுவாசத்துக்கு மாலை வேளைகளில் வந்து விளக்கேற்றிவிட்டுப் போவான்.

இந்த முறை சீரியல் பல்ப் இல்லாமல் போய்விட்டது. சிவப்பும் பச்சையும் நீலமுமாக இரவெல்லாம் மினுங்கும் வெளிச்சம். அதைப் போட்டால்தான் திருவிழா என்று நம்பமுடிகிறது. ஓர் உற்சாகம் வருகிறது.  கூம்பு வைத்து செல்லாத்தா செல்ல மாரியாத்தா என்று எல்லாரீஸ்வரி கூப்பிட்டதும்தான் கோயிலில் திருவிழா என்று மக்களுக்கே நினைப்பு வருகிறது. அவசரத்தில் அம்மன் அடிக்கடி மறந்துவிடுகிறது. தவிரவும் மாலை வேளைகளில் மின்சாரம் இருப்பதில்லையாதலால் உள்ளொளி ஏந்தி வந்து ஊர்த்திருவிழா நடத்துமளவு யாருக்கும் பொறுமை இருப்பதில்லை.

யாரையும் குறை சொல்வதற்கில்லை. கங்காதரன் கன்னத்தில் போட்டுக்கொண்டு கடிதத்தை அகலுக்கு அருகே எடுத்துச் சென்று படித்தான். இடது பக்கமாகச் சாய்ந்த எழுத்துகள். ற, ந எல்லாம் ஒரு ஜன்னல் கொக்கி மாதிரி கீழ்ப்புறம் நீட்டி நீட்டி வளைத்து எழுதப்பட்டிருந்தது. நாலே வரி. படித்து முடித்ததும் கிழித்துப் போட்டுவிடச் சொன்னது அதில் முதல் வரி. சாமி இப்படித்தான். விளைவுகளை யோசித்து முடித்தபிற்பாடுதான் செயல்பாட்டைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கும். அதன் திட்டங்களில் ஏராளமான நபர்கள் எங்கெங்கோ கண்ணியாகச் சொருகப்பட்டிருப்பார்கள். ஏதாவது விபரீதமானால் முதல் கண்ணியும் கடைசிக் கண்ணியும் மட்டும் வெளியே தெரியும். இடையில் இருக்கிறவர்களுக்கு எந்த ஆபத்தும் எப்போதும் வந்ததில்லை.

‘நீங்கதாண்டா முக்யம். உங்க உசுருதான் எனக்கு முக்யம். பணக்காரன் தப்பிச்சிருவான். பஞ்சத்துக்குப் பொழைக்க வந்தவனத்தான் பேண்ட உருவி சூத்தாமட்டைல போடுவான். இது இப்பம் நடக்கறதில்ல. பணம் பொறந்தநாளா நடக்குறதுதான். போபோ. வேலைய பாரு.’

ஏதேதோ சொல்வார். எல்லாம் புரிந்த மாதிரியும் ஒன்றும் புரியாத மாதிரியும் இருக்கும். ஒன்று மட்டும் தெளிவாக இருக்கும். சாமி லேசுப்பட்ட ஆளில்லை. ஆயிரம் இரண்டாயிரம்தான் என்றாலும் கேட்கும்போதெல்லாம் பணம் தர மறுக்காத சாமி. அவரது வைத்தியசாலையின் பின்புறக் கூரைச் சரிவில் கிளிக்கூண்டுக்குப் பக்கத்தில் சொருகியிருக்கும்  பச்சை நிற சுருக்குப் பையை என்றாவது ஒருநாள் எடுத்துப் பார்த்துவிடவேண்டும் என்று கங்காதரனுக்கு அங்கே போகும்போதெல்லாம் தோன்றும். சாமி அதிலிருந்துதான் பணத்தை எடுக்கும். எப்போது அதில் பணம் வைக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கேட்கும்போதெல்லாம் அதிலிருந்தே எடுக்கும். காது குடையும் பேப்பர்ச் சுருள் மாதிரி சுருட்டி வைக்கப்படும் ஐம்பதுகளும் நூறுகளும்.

சாமிக்குப் பிரம்புக்கூடையில் பணம் வருகிறது என்று ஊருக்குள் ஒரு பேச்சு இருக்கிறது. யார் கொண்டுவருகிறார்கள் என்று யாருக்கும் தெரிந்ததில்லை. யாரிடமிருந்து வருகிறது என்றும் தெரிந்ததில்லை. வைத்தியசாலையில் அவன் பிரம்புக்கூடைகளையும் பார்த்ததில்லை. அகன்ற விசாலமான காரை பூசிய வீடு. முன்பக்கத்துத் தாழ்வாரத்தில்தான் சாமி இருக்கும். செப்பும் தாமிரமும் பூசிக்கொண்டு அதனைச் சுற்றியிருக்கும் கிண்ணங்களெல்லாம் உண்மையில் தங்கக்கிண்ணங்கள் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. அதுவும் ஊர்ஜிதமாகாத வதந்திதான். சாமி அவற்றில் கலர் கலராக மருந்துகளைக் குழைத்து வைத்துக்கொண்டு வருகிறவர்களுக்கெல்லாம் கண்ணை மூடி மந்திரம் சொல்லி ஆ திறக்கச் சொல்லி வாயில் ஒரு ஸ்பூன் விடும். சிஷ்யர்கள் இருக்கிறார்கள். வீட்டின் இரண்டாம் கட்டு இருட்டில், பிறவி எடுத்ததே மருந்து இடிக்கத்தான் என்பதுபோல் எப்போதும் இடித்துக்கொண்டிருக்கிற பையன்கள். சாமி அவர்களுடன் அதிகம் பேசி கங்காதரன் பார்த்ததில்லை. மலைப்பக்கம் மூலிகை பறிக்கப் போகும்போது சிஷ்யர்கள் உலகைப் பார்க்க வருவார்கள். சாமி நகர்ந்து போனால் அவசரமாகப் பாறை மறைவுகளில் ஒதுங்கி சொக்கலால் ராம்சேட் பீடி குடிப்பார்கள். நாலு இழுப்பு இழுத்துவிட்டு கற்பூரவல்லி இலைகள் நாலை மென்றபடி திரும்பி வருவார்கள்.

பறிக்கும் மூலிகைகளை சாமி ஈரத் துணியில்தான் முடிந்து எடுத்து வரச் சொல்லும். வைத்தியசாலையின் கம்பியடித்த முற்றத்தில் அவற்றை மொத்தமாகக் கொட்டி, இனம் பிரித்துக் காயவைக்கும். மருந்து இடிப்பது ஒரு வேள்வி என்று அடிக்கடி சொல்லும். ஒருவேளை சாமி ரகசியமாக கஞ்சா பயிரிட்டு விற்கிறதோ என்று கங்காதரனுக்கு அடிக்கடி தோன்றும். வைத்தியசாலைக்குப் போகும்போதெல்லாம் மூலிகைகளை உற்று உற்றுப்பார்ப்பான். எடுத்துக் கசக்கி முகர்ந்து பார்ப்பான். ஓரிரு சமயங்களில் கையில் கொஞ்சம் அள்ளி வந்து தனியே பிரித்தும் ஆராய்ந்திருக்கிறான்.

இன்றுவரை எந்த யூகமும் சாமி விஷயத்தில் மெய்யென்று நிரூபணமானதில்லை. அவரிடம் எப்படியும் நூறு, நூற்றைம்பது கோடி ரூபாய் பணம் இருக்கும் என்று பிராந்தியத்தில் பேசாதவர்களே கிடையாது. ஆனால் வைத்தியசாலையில் பத்தாயிரத்துக்குமேல் பணம் இருந்து கண்டதில்லை என்று கணக்கப்பிள்ளை சூடம் அணைத்து சத்தியம் செய்தார் ஒருதரம்.

‘கணக்கு, உன்ன நிச்சயமா போட்டுக்குடுக்க மாட்டேன். நெசத்த சொல்லு. சாமி உண்மைல என்ன பிசினஸ் பண்ணுது?’

பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தை ஒட்டியிருக்கும் மாந்தோப்பில் வைத்து ஒருநாள் செல்லியம்மன் கோயில் பூசாரியும் பெரிய வீட்டு மேனேஜர் கதிர்வேலுவும் சுற்றி வளைத்துக் கேட்டார்கள்.

‘மருந்து பிசினசுதான்’ என்றார் கணக்கப்பிள்ளை.

‘யோவ், பயப்படாதய்யா. நாங்க யாராண்டயும் சொல்லமாட்டோம். சும்மா ஒரு இதுக்குதான் கேக்குறது. நாட்ல எந்த மருந்து விக்கிற வைத்தியனத் தேடி காருலயும் தேருலயும் பணக்காரங்க வருதாங்க? சிட்டுக்குருவி லேகியம் வாங்க வாரவன்னாக்கூட திருட்டு முழி காட்டிக்குடுத்துரும். அப்பிடி அதுதான் தேவைன்னு நினைக்கறவன் வேலக்காரன அனுப்பாம அவனேவா காரு ஏறி வரப்போறான்? சாமி என்ன தம்பிய இளுத்தி வெச்சி சர்ஜரி பண்ணி பெரிசாக்கியா விடுதாரு? தபாரு.. நாலாநாள் நைட்டு ரெண்டு மணிக்கு குவாலிஸ்ல ஆறு பேர் வந்தாங்கல்ல? அவுங்க யாரு? அத்த மட்டுமானா சொல்லிடு.’

‘நீ ரெண்டு மணிக்கு அங்க எதுக்கு வந்த?’ என்று கேட்டார் கணக்கப்பிள்ளை.

‘மோகினி புடிச்சி இட்டாந்துச்சி. அதா முக்கியம்? ஆறு பேர் வந்தாங்கல்ல? கையில பெருசா சூட்கேசு இருந்திச்சில்ல? அதுக்குள்ளார பணம்தான?’

அவர்கள் பபுவா நியூகினியாவிலிருந்து வந்த கப்பலில் இருந்து மூலிகை எடுத்து வந்தவர்கள்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டுக் கணக்கப்பிள்ளை திரும்பிப் பாராமல் போய்விட்டார்.

மறுநாள் கங்காதரனைத் தற்செயலாகப் பழனி போகும் பேருந்தில் பார்த்தபோது இதைச் சொல்லிப் புலம்பினார்.

‘நாட்ல நல்லவனா ஒருத்தன நடமாட விடமாட்டேங்குறானுக கங்காதரா. சாமி சொக்கத் தங்கம். முப்பது வருசமா அதுங்கூட இருக்கேன். ஒரு தப்புதண்டா கிடையாது. அதிர்ந்து ஒருவார்த்த பேசாது. தா உண்டு, மருந்துக உண்டு, சூரணம் உண்டு, வெளக்கு வெச்சா திருவருட்பா உண்டுன்னு கெடக்குது. பெரிய எடத்து மனுசங்கள்ளாம் பாக்க வாராகன்னா, அது சாமியோட வித்தைக்கு இருக்கற மகிமை. ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்க. சோறு போடறவனையும் சொஸ்தமாக்குறவனையும் சுத்திவர எப்பமும் ஒரு கூட்டம் இருக்கத்தாஞ்செய்யும். இந்த ரெண்டுதாண்டா எல்லாத்துக்கும் அடிப்படெ. இது புரியல நம்மூரு சோம்பேறிகளுக்கு.’

கங்காதரன் வேறுபுறம் திரும்பிச் சிரித்துக்கொண்டான். முப்பது வருடங்களாகக் கூட இருக்கும் கணக்குப் பிள்ளைக்கு மட்டுமல்ல. சாமிக்கு இரண்டு வருஷம் தள்ளிப் பிறந்த அதன் தம்பிக்குக் கூட சாமியைப் பற்றி ஏதும் தெரியாது. தனக்கு மட்டும் தெரியுமா என்ன? கொஞ்சம் தெரியும். தன்னைப் போல் சிலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருக்கும். அந்தச் சிலர் யார் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் தெரியாது. தனக்கு, தன்னைத் தவிர வேறு யார் யார் என்று இன்றுவரை தெரியாதது போல. யாருக்கும் முழுக்கத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுத்தமாகத் தெரியாது. ரங்கநாத ஆச்சாரிக்குக் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் கண்டுபிடிக்க முடியாது. செவிட்டு முண்டம் . கேட்கிற எதுவும் காதில் விழாது. சாமியின் உத்தரவுகளை மட்டும் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போய்விடும். சாமி பெரிய ஆள்தான். ரங்கநாத ஆச்சாரி மாதிரி ஒரு ஆளைத் தனது பர்சனல் அசிஸ்டெண்டாக வைத்துக்கொள்ள வேறு யாருக்குத் தோன்றும்?

கங்காதரன், அந்தத் துண்டுச் சீட்டைத் திரும்பவும் ஒருமுறை படித்தான். நாலே வரிகள். படித்ததும் கிழித்தெறிந்துவிட வேண்டும் என்பது அதில் முதல் வரி. மிச்ச மூன்று வரிகளில் விஷயத்தைச் சொல்லியிருந்தார். ஒரு கொலை செய்யவேண்டும். மிகவும் அவசரம். திருவிழா முடிந்த பிற்பாடு இரவு ஒரு மணிக்குமேல் தன்னை வந்து பார்க்கட்டும்.

– தொடரும்

Share

11 comments

  • ரைட்டு, கதை எப்படிப் போகும்னு ஒரு ஐடியா கிடைச்சிருச்சி..அப்படித்தான் போகுமானு பாக்கத்தான் இனிமே படிக்கனும்.

  • ஆஹா, இதென்ன? ப.ரா. எழுதி இதுவரைக்கும் ஒரு பின்னூட்டம் கூடக் காணோம்? நான் தான் முதலா? இப்பொது தான் எழுதி சூடாக வலையில் ஏற்றியிருப்பாரோ?

    அட்டகாசமான ஆரம்பம் தான். ஜமாயுங்கள். வட்டாரப் பேச்சு, கொஞ்சம் விஷமமான வார்த்தைப் பிரயோகங்கள்…

  • அநாயாசமான ஸ்டைல். என்ன ஒரு வேகம். சாமி யாராயிருக்கும் என்று இப்போதே யோசிக்க வைத்துவிட்டீர்கள். தொடருங்கள் பாரா!

  • சுவாரசியமாக இருக்கிறது. கதை ஆரம்பத்தில்தான் சற்று குழப்பமாக இருக்கிறது. செல்லியம்மன், சாமி இருவருக்கும் அஃறிணை, அதனால் கொஞ்சம் குழப்பம். அதன்பிறகு நன்றாக உள்ளது. மிக்க நன்றி பா. ரா அவர்களே.

  • செம ஸ்பீட் ஆரம்பம். எங்கள் சேலத்தில் இதே மாதிரி ஒரு நாட்டு வைத்தியர் இருக்கிறார். மாதம் பத்து நாள் அல்லது பதினைந்துநாள் கோட் அணிந்து வெளியூர் கான்ட்ராக்டுக்களில் புறப்பட்டுவிடுவார். மீதி நாட்களெல்லாம் காவி வேட்டி கட்டி நீங்கள் சொல்வதுமாதிரி மருந்து இடித்துக்கொண்டுருப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த கதை சித்த வைத்தியர்களைப் பற்றியதுதானா என்று சந்தேகமாக இருக்கிறது. நல்ல ஆரம்பம். விடாமல் தொடருங்கள்.

  • இந்த கதைக்கான அறிவிப்பே ஒரு ஆர்வத்தை தூண்டியது. முதல் பாகம் நல்ல ஆரம்பம். பொதுவாக கதைகள் படிப்பதில் எனக்கு ஆர்வம் இருப்பது இல்லை. பாரா என்பதற்காக மெனக்கெட்டு படித்தேன். ஏமாற்றம் இல்லை இதுவரை.

  • நல்ல ஆரம்பம் தந்திருக்கிறீர்கள். கதை விறுவிருப்பாக போகிறது. அடுத்த அத்தியாயங்களுக்கு காத்திருக்கிறேன். முதல் முறையாக உங்கள் தளத்தினில் புதிதாக வாசகர்களான எங்களுக்காக தொடர்கதை எழுதுகிறீர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இடை இடையே வழக்கமான கட்டுரைகளையும் எழுதத் தவறாதீர்கள்.(நான் உங்கள் நகைச்சுவை இழையோடும் கட்டுரைகளின் தீவிர வாசகன். ஓம் ஷின்ரிக்கியோ புத்தகம் மூலம் உங்களைப் பற்றி தெரியவந்து அதன்பின் உங்களுடைய பல புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். சமீபத்தில் வாசித்த “காஷ்மீர்” அற்புதமாய் இருந்தது. உங்களின் அலகிலா விளையாட்டு புத்தகம் பல கடைகளில் இல்லை என்றே சொல்கிறார்கள். அப்புத்தகம் கிடைக்க வழி உண்டா?

    அன்பன்
    S. உப்பிலி

  • Really a good start for a story. I think you are trying to portray the life and time of somebody to whom you don’t want to disclose the identity. As if the story is too good to read, i am not interested in filling up the blanks. Please do continue posting chapters regularly.

    thanks and regards
    R. Ravichandran

  • சிறுகதை இலக்கணத்தில் தொடர்கதை.அமர்க்களமான துவக்கம்.
    முதல் வரி knot 5 அத்தியாயத்திற்காவது வரும்..அதற்குள் சாமியின் பணம் வரும் வழி,கங்காதரன் போன்ற பலர் என்று சொருகல்,அவனுக்கும் அவர்கள் யார் என்று தெரியாது என்று ஒரு முடிச்சு,வாய் பேச முடியாத கையாள் என்று பல ட்விஸ்ட்களுக்கான முகாந்திரங்களும் இருக்கும் முதல் அத்தியாயம்..

    பறக்கும் துவக்கம்..

    தலைக்குள் இருக்கும் நமைச்சல்களை சீக்கிரம் இறக்கி வைத்து விடுங்கள்..நாங்களும் சீக்கிரம் படித்து விடலாம். :))

    • கருத்து சொன்ன, பாராட்டிய, வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி